You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்கிறதா? இரான், வளைகுடா நாடுகள் என்ன முடிவை விரும்புகின்றன?
- எழுதியவர், ஃப்ராங்க் கார்ட்னர்
- பதவி, பாதுகாப்பு செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
போரை முடிக்க இரானுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அமெரிக்கா கூறும்போது மறுபுறம் "இல்லை, அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று இரான் கூறியுள்ளது
''மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவுடன் மூலம் சில தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. ஆனால் அது உரையாடல் அல்லது பேச்சுவார்த்தை என்று சொல்ல முடியாது'' என இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் சொல்ல இரான் அஞ்சுவதாக கூறும் டிரம்ப், "தங்கள் சொந்த மக்களாலேயே கொல்லப்பட்டுவிடுவோம் என்று கருதுவதால், அதை வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் அஞ்சுகிறார்கள்" என்றும் குறிப்பிட்டார்.
யாரை நம்புவது? சமாதானம் விரைவில் வரப்போகிறதா? அல்லது இரு நாடுகளும் நீண்டகால போர் நடத்த தயாராகிறதா? இந்தப் போர் எரிசக்தி விலையை உயர்த்தி ஒட்டுமொத்த உலகையும் பாதிக்குமா?
தற்போதைய நிலைமை ரஷ்யா - யுக்ரேன் போர் முடிவுக்கு வருவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையைப் போலவே தெரிகிறது. இரு தரப்பும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பினாலும், அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள் மற்ற தரப்பு ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்குப் பெரிய இடைவெளியைக் கொண்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விரும்புவது என்ன?
பிப்ரவரி 28 அன்று இந்தப் போர் தொடங்கியபோது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இரான் நாட்டின் மீது இந்த இரு நாடுகளும் கொண்டுள்ள மிகப்பெரிய ராணுவ மேலாதிக்கம், இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினர்.
அது நடக்காவிட்டாலும், ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இரான், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பணிந்து வந்து அமைதிக்காக கெஞ்சும் என்று கருதினர்.
ஆனால் அது நடக்கவில்லை. எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்புவது அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஏனெனில் ஒவ்வொரு நாளும் இரான் அரசு பிழைத்திருப்பது அதற்கு அதிக துணிச்சலைத் தருகிறது.
இஸ்ரேலின் சேனல் 12 நெட்வொர்க் வெளியிட்ட அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்தின் விவரங்களில், இரான் நாட்டின் அணுசக்தித் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் ஏமனில் உள்ள ஹூத்திகள், லெபனானில் உள்ள ஹெஸ்பொலா போன்ற அமைப்புகளுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை அடங்கும்.
இதற்குப் பதிலாக, இரான் மீதான தடைகள் நீக்கப்படும் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையின் மீது சில கூட்டுக்கட்டுப்பாடுகள் வழங்கப்படும்.
இரான் விரும்புவது என்ன?
ஆரம்பத்தில், அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்தை "அதிகப்படியானது" எனக் கூறி இரான் நிராகரித்தது.
இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இது குறித்து அரசு தொலைக்காட்சியில் பேசுகையில், சில யோசனைகள் நாட்டின் மூத்த தலைவர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைப்பாடு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலாக, போரை முடிவுக்குக் கொண்டுவர ஐந்து நிபந்தனைகளை இரானின் அரசு ஊடகங்கள் பட்டியலிட்டுள்ளன.
'அதில் போர் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும், ஹோர்மூஸ் நீரிணையின் மீது அதிகாரம் செலுத்தும் இரான் நாட்டின் இறையாண்மை உரிமையை சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும் மற்றும் மீண்டும் தாக்கப்பட மாட்டோம் என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்' ஆகியவை அடங்கும்.
இந்த கோரிக்கைகள் அமெரிக்கா மற்றும் அதன் வளைகுடா அரபு நட்பு நாடுகளுக்கு விழுங்க முடியாத கசப்பான மாத்திரையாக இருக்கும்.
90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை மற்றும் வளைகுடாவின் நீண்ட கடற்கரையைக் கொண்ட பிராந்தியத்தின் மிகப்பெரிய நாடாக தான் இருப்பதால், "வளைகுடாவின் காவலன்" என்ற தனது உரிமையை மீண்டும் பெற வேண்டும் என்று இரான் நம்புகிறது.
1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு ஷா ஆட்சியில் இருந்த அந்தப் பாத்திரத்தை அது மீண்டும் கோருகிறது.
பஹ்ரைனைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது பிரிவு இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியா ஆதரவுடன் தான் வளைகுடாவின் முதன்மையான ராணுவ சக்தியாக மாற வேண்டும் என்றும் அது விரும்புகிறது.
அமெரிக்காவை நம்புவதில் தங்களுக்குப் பெரிய சிக்கல் இருப்பதாக இரான் கூறுகிறது. 2025-லும், இந்த ஆண்டு பிப்ரவரியிலும் பேச்சுவார்த்தைக்கு அமர்ந்த பிறகு, அமெரிக்கா அதிலிருந்து வெளியேறி ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியதாக அது சுட்டிக்காட்டுகிறது.
இரானை விமர்சிப்பவர்கள், அந்த நாடு வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாகவும், ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ள தனது திட்டங்களையும் கொள்கைகளையும் கைவிடும் எண்ணம் அதற்கு ஒருபோதும் இருந்ததில்லை என்றும் கூறுகின்றனர்.
வளைகுடா அரபு நாடுகள் விரும்புவது என்ன?
நடந்த நிகழ்வுகளால் வளைகுடா அரபு நாடுகள் ஏமாற்றமடைந்துள்ளன.
அவர்களுக்கு இஸ்லாமியக் குடியரசு அரசு மீது பெரிய விருப்பம் இல்லையென்றாலும், இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பு அவர்களுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டில் இருந்தனர்.
இப்போது அமெரிக்காவின் தாக்குதல்கள் இரான் ஆட்சியை வீழ்த்த தவறியதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாறாக, காயமடைந்தும் கோபமாகவும் இருக்கும் இரான், அண்டை நாடுகளான செளதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்றவற்றின் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் மத்திய ராணுவத் தலைமையின் ஏமாற்றத்திற்கு மத்தியில், ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது இரான் உத்தி ரீதியாக வலுவான நிலையில் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் மீது அது தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியுள்ளது.
இது உலகளாவிய எரிசக்தி சந்தையில் இரானுக்கு மிகப்பெரிய செல்வாக்கை வழங்குகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரிப்பதை அது நன்கு அறியும்.
வளைகுடா நாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைக்கே அனைத்தும் திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் அதற்குள் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன, மேலும் இரான் இப்போது பின்வாங்கும் நிலையில் இல்லை.
சுமார் 5,000 அமெரிக்கக் கடற்படையினர் மற்றும் அமெரிக்க 82-வது வான்வழிப் பிரிவின் வீரர்கள் இப்பகுதிக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும்.ஆனால் இதிலும் ஆபத்துகள் உள்ளன.
இவர்கள் இரான் நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு, ஹோர்மூஸ்கான் மாகாணத்தில் உள்ள கடற்கரை அல்லது செங்கடலின் தெற்கு நுழைவாயிலில் உள்ள பாப் எல் மண்டேப் நீரிணை எனப் பல இடங்களில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. அல்லது, இது இரான் மீது அழுத்தத்தைச் செலுத்துவதற்காகக் கூட இருக்கலாம்.
ஆனால், எந்தவொரு தரைவழி நடவடிக்கையும் அமெரிக்கப் படைகளுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது அந்த நாட்டில் (அமெரிக்காவில்) கடும் அதிருப்தியை உருவாக்கும்.
மேலும், பலரும் "தேர்ந்தெடுக்கப்பட்ட போர்" என்று அழைக்கும் இந்த மோதலில் அமெரிக்காவை இன்னும் ஆழமாக இழுத்துச் செல்லும் அபாயத்தையும் கொண்டுள்ளது.
இஸ்லாமியக் குடியரசு அரசு தொடர்ந்து பிழைத்திருப்பது அதன் உறுப்பினர்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் அதிகத் துணிச்சலைத் தந்துள்ளதோடு, காலமும் புவியியல் அமைப்பும் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
இரான் ஒரு ஒப்பந்தத்திற்காக ஏங்குகிறது என்று வெள்ளை மாளிகை உலகிற்கு எவ்வளவு அதிகமாகச் சொல்கிறதோ, அவ்வளவு குறைவாகவே இரான் ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு