You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வருசநாடு அருகே புலிகள் வாழும் காப்புக்காட்டில் 5 பேருக்காக செயல்படும் வாக்குச்சாவடி
தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேகமலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.
"கற்கள் மட்டுமே நிறைந்துள்ள வனப்பகுதி வழியாக வாக்குச்சாவடியை அடையவே மூன்று மணிநேரத்துக்கு மேல் தேவைப்படும்" என ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் ஜாகீர் உசேன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் வசிக்கும் அந்த 5 வாக்காளர்கள் யார்? பிபிசி தமிழிடம் அவர்கள் கூறியது என்ன?
வெள்ளிமலை - அமைவிடம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டு வருசநாடு அருகே மேகமலை ஊராட்சியில் வெள்ளிமலை கிராமம் அமைந்துள்ளது.
வருசநாட்டில் இருந்து குமணன் தொழுவு கிராமத்திற்குச் சென்று அங்கிருந்து காப்புக் காடுகள் வழியாக (Reserved forest) வெள்ளிமலைக்குச் செல்ல வேண்டும். மேகமலையின் மையப்பகுதியாக சுமார் 1,650 மீட்டர் உயரத்தில் வெள்ளிமலை அமைந்துள்ளது.
'12 கி.மீ தூரத்தைக் கடக்க 3 மணிநேரம்'
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகவும் இந்த இடம் உள்ளது. வெள்ளிமலை சோதனைச்சாவடியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் வெள்ளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.
இதன் அருகில் உள்ள துரைசாமி மரகதம் அரசு உதவி பெறும் பள்ளி, தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடியாக செயல்படுகிறது. இந்த இடத்தை வாகனம் மூலம் அடைவது அவ்வளவு எளிதானது அல்ல.
"வாகனத்தில் செல்வது சற்று சிரமமானது. அங்கு பழைய பாதை ஒன்று உள்ளது. அதில் மெதுவாக சென்றாலே 12 கி.மீ தூரத்தைக் கடப்பதற்கு மூன்று மணிநேரத்துக்கு மேல் ஆகிவிடும்" எனக் கூறுகிறார், ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் ஜாகீர் உசேன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுதவிர, குறுக்கு வழி ஒன்றும் உள்ளது. அதற்காக மலைப்பாதை வழியாக காப்புக் காடுகளுக்கு நடுவே 4 கி.மீ தூரம் நடக்க வேண்டும்." என்கிறார்.
வெள்ளிமலையில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் எஸ்டேட்டுகள் இயங்கி வருகின்றன. இங்கு காபி, பீன்ஸ், தேயிலை, எலுமிச்சை உள்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வது பிரதான தொழிலாக உள்ளது.
இங்குள்ள எஸ்டேட்டுகளில் பணிபுரிய வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்கள், மாலையில் வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள்.
இங்குள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் பணிபுரியும் இரண்டு குடும்பத்தினர் மட்டும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர்.
ஐந்தாவது வாக்காளர் யார்?
"பவுல்ராஜ், சுதா, ஜெயராணி, செந்தில் ஆகியோர் இங்கு வசிக்கின்றனர். ஆனால், இந்த வாக்குச்சாவடியில் ஐந்து வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. இன்னொருவர் ஆன்லைனில் விண்ணப்பம் அளித்துள்ளார். அவர் குறித்த விவரம் தெரியவில்லை" எனக் கூறுகிறார், பார்த்தசாரதி.
இவர் வெள்ளிமலையில் உள்ள துரைசாமி மரகதம் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவனுக்கு மட்டும் கல்வி கற்பித்து வருகிறார்.
"2007 ஆம் ஆண்டு முதல் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறேன். வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே அங்கு தங்குவேன்" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
தேர்தலில் வாக்கு செலுத்த உள்ள ஐந்து பேரில் நான்கு பேர் தனியார் எஸ்டேட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான செந்திலிடம் பிபிசி தமிழ் பேசியது.
"எஸ்டேட்டில் சமையல் வேலை செய்வதற்காக என் அப்பா இங்கு வந்து குடியேறினார். நான் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். தற்போது தனியார் எஸ்டேட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன்" எனக் கூறுகிறார் அவர்.
'எந்த குறையும் இல்லை' - எஸ்டேட் தொழிலாளி
ஊட்டியை பூர்வீகமாகக் கொண்ட செந்திலின் பெற்றோர், வெள்ளிமலையிலேயே குடியேறிவிட்டனர். இவருக்குத் திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
"பிளஸ் 2 வரை என் மகள் படித்தார். அவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மகன் கல்லூரியில் படித்து வருகிறார்" எனக் கூறுகிறார் செந்தில்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தங்களைப் பற்றி பேசியதால் உற்சாகம் அடைந்ததாக கூறும் அவர், "சிறு வயதில் இருந்தே இந்தப் பகுதி பழகிவிட்டது. எஸ்டேட்டில் எந்தக் குறையும் இல்லை. தீவிர மருத்துவ சிகிச்சை தேவையெனில் தேனி செல்ல வாகனம் உள்ளது" என்கிறார்.
இங்கு வசிக்கும் ஏழு வயது சிறுவன் உள்பட ஐந்து பேருக்கும் தனியார் எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் சிறிய மருத்துவமனை ஒன்று கட்டித் தரப்பட்டுள்ளது.
ஆனால், வெள்ளிமலைக்கு வரும் பாதைகள் மோசமானதாக உள்ளதால் பயணிப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாகக் கூறிய அவர், "அதனை சீர்படுத்துவதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை" எனக் கூறுகிறார்.
இவருடன் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் பவுல்ராஜ், சுதா ஆகியோர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
ஐந்து பேருக்கு மட்டும் வாக்குச்சாவடி ஏன்?
"அவர்களில் யாரும் பழங்குடிகள் இல்லை. அவர்களின் பெற்றோர் அங்கே வசித்ததால் அவர்களும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர். முன்பு மிகப் பெரிய ஊராக இருந்துள்ளது. காலப்போக்கில் மக்கள் தொகை குறைந்துவிட்டது" என்கிறார், ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் ஜாகீர் உசேன்.
வெள்ளிமலை துரைசாமி மரகதம் அரசு உதவி பெறும் பள்ளியை வாக்குச்சாவடி எண் 245 என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து விவரித்த ஆண்டிப்பட்டி தாசில்தார் ஜாகீர் உசேன், "சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்துள்ளனர். பிறகு பல்வேறு காரணங்களால் அவர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்" என்கிறார்.
வெள்ளிமலையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அரசரடி கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு அரசரடி, வடக்கு அரசரடி, பொம்மராஜபுரம், மேலபொம்மராஜபுரம், நொச்சியோடை ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் தேர்தலில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
'அரசரடி வாக்குச்சாவடி மையத்துக்கு வெள்ளிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஐந்து பேரும் அரசுப் பேருந்தில் வந்து ஓட்டுப் போட்டுவிட்டுச் செல்வதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை' என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதைப் பற்றிப் பேசும் ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் ஜாகீர் உசேன், "தேர்தல் ஆணைய விதிப்படி, ஓர் ஓட்டு இருந்தால் கூட அங்கு வாக்குச்சாவடி அமைக்கலாம் என உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கு நான்கு ஓட்டுகள் தான் இருந்தன" எனக் கூறுகிறார்.
அண்மையில் தனக்கு 19 வயதாகிவிட்டதாகக் கூறி அங்கு வசித்த ஒருவர் வாக்கு செலுத்துவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து வாக்குச்சாவடிக்கு ஊழியர்களைத் தயார்படுத்துவது தொடர்பாக விவரித்தார்.
'முதலில் அனுப்பினாலும் கடைசி தான்'
"வாக்குப்பதிவு நாளன்று காலையில் வெள்ளிமலை கிளம்ப முடிவெடுத்தால் சரியாக இருக்காது என்பதால் முதல்நாளே பெட்டிகளை கொடுத்து அனுப்பிவிடுவோம். அவர்கள் மாலைக்குள் வாக்குச்சாவடி மையத்தை அடைந்துவிடுவார்கள்" என்கிறார் அவர்.
முதல்நாள் காலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொடுத்து அனுப்பினாலும் தொகுதியிலேயே கடைசியாக அவை சென்று சேரும் இடமாக வெள்ளிமலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இரவு நேரமாகிவிட்டால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துவிடும். ஆண் ஊழியர்கள் மட்டுமே மலைக்கு அனுப்பப்படுவார்கள். சிலர் விருப்பத்தின் பேரிலும் அங்கு பணிபுரிய செல்கின்றனர்" எனக் கூறுகிறார், வட்டாட்சியர் ஜாகீர் உசேன்.
புலிகள் சரணாலயம் என்பதால் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் மிக எச்சரிக்கையுடன் வெள்ளிமலைக்கு தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு