காணொளி: தேர்தல் நடத்தை விதிகள் அமல் - முக்கியமான 13 விஷயங்கள்
தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்தை அடுத்து இந்த இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை எப்போது? தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யக் கூடாது என இந்த காணொளியில் பார்க்கலாம்.
தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடக்கிறது.
அசாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் மட்டும் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதை தொடர்ந்து தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் படம், அரசுத் திட்டம் தொடர்பான படங்கள் அகற்றப்பட்டன. அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்
தேர்தல் நடத்தை விதிகள் என்பது அரசுக்கானது மட்டுமல்ல. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அந்த வகையில், சில முக்கியமான கட்டுப்பாடுகள் குறித்து பார்க்கலாம்.
- பொதுமக்களுக்கு பொருத்தவரை பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் இருக்கும்.
- தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் அளவைத் தாண்டி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.
- பணத்தை பொருத்தவரை 50 ஆயிரம் ரூபாய் வரை ஆவணம் இன்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் இந்த முறை விதிக்கப்படுகிறது என்பது திங்கட்கிழமை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நடத்தும் செய்தியாளர் சந்திப்பு பிறகு தெரிய வரும்.
- அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை பொருத்தவரை சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்னைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
- பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது.
- தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரி பார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
- சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது.
- கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
- வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற நடவடிக்கைகளை கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வேறு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் பேச்சு, எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியோ, தங்கள் கட்சியின் துண்டறிக்கை விநியோகம் செய்தோ, தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
- கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும்.
- பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் ஒருவேளை தடை இருந்தால், அந்த தடையில் இருந்து விலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம்.
- பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.
இதே போல பல கட்டுப்பாடுகள் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



