தூத்துக்குடி மாணவி கொலை: புகாரை பதிவு செய்யாமல் காவல்துறை ஒரு நாள் தாமதித்ததா? தந்தை தகவல்

தமிழ்நாடு, தூத்துக்குடி
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(குறிப்பு: இக்கட்டுரையின் சில பகுதிகள் சங்கடம் தரலாம்)

"பிளஸ் 2 முடித்துவிட்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுதான் அவளுடைய கனவாக இருந்தது. அதற்குள் இப்படியொரு கொடூரத்தை யார் செய்தார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறி அழுகிறார், கொல்லப்பட்ட மாணவியின் சகோதரி.

'குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படாததால், சடலத்தைப் பெற மாட்டோம்' எனக் கூறி கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை, சாட்சிகளிடம் விசாரணை என விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாக, நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெற்றோர் கடந்த 10-ஆம் தேதி இரவு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்கச் சென்றனர்.

'இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற தங்கள் மகள் வீடு திரும்பவில்லை' என அங்கிருந்த காவலர்களிடம் கூறியுள்ளனர்.

"சம்பவம் நடந்த நாளில் வீட்டில் இருந்து ஆறு மணிக்கு மகள் கிளம்பிச் சென்றார். ஆறே முக்கால் வரை வராதால் மனைவியும் இன்னொரு மகளும் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை" என, மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

"ஏழு மணியளவில் வீட்டுக்கு வந்தேன். மகள் காணாமல் போனதை அறிந்து ஊரில் உள்ள சுமார் நாற்பது பேரைக் கூட்டிக் கொண்டு போய் தேடினோம்." என்கிறார்.

'அலைக்கழித்த போலீஸ்'

இதன்பிறகும் மாணவியைக் கண்டறிய முடியாததால், இரவு 10.30 மணியளவில் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளிக்கச் சென்றுள்ளனர்.

"காலை பத்து மணிக்கு வருமாறு காவலர்கள் கூறினர். மறுநாள் போனபோது, 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவி என்பதால் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினர்," என மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

அங்கும் மாணவியின் பெற்றோருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

"வழக்கை 'அந்த காவல்நிலைய அதிகாரிகள் விசாரிக்க மாட்டார்களா' என திட்டிவிட்டு அலட்சியமாக பதில் அளித்தனர்" என்கிறார் மாணவியின் தந்தை.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மேலும் சிலருடன் சேர்ந்து மாணவியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

மார்ச் 11-ஆம் தேதியன்று மதியம் சுமார் 3 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் மாணவியை சடலமாக கண்டறிந்துள்ளனர்.

இதன்பிறகே சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்துள்ளது என்கின்றனர் குடும்பத்தினர்.

'அந்த நபர் யார் எனத் தெரிந்தால் போதும்' - மாணவியின் சகோதரி

"வீட்டில் கழிப்பறை வசதியில்லை. அருகில் சித்தப்பா வீட்டில் கழிவறை இருந்தாலும் அதை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு செல்வது வழக்கம்," எனக் கூறுகிறார் மாணவியின் சகோதரி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இப்படியொரு கொடூர சம்பவத்துக்குக் காரணமான நபர் யார் எனத் தெரியவில்லை. காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த நபர் யார் என்று மட்டும் எங்களுக்குத் தெரிந்தால் போதும்." என்கிறார்.

மறுப்பு அறிக்கை வெளியிட்ட காவல்துறை

இந்தநிலையில், 'பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொல்லப்பட்டிருக்கலாம்' என்ற ரீதியில் தகவல் பரவியதால், மாணவி வசித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தகவலை மறுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'உடற்கூராய்வு அறிக்கை, தடயவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைக்குப் பின்னரே பாலியல் குற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது தெரியவரும்' எனத் தெரிவித்துள்ளது.

கனிமொழியை முற்றுகையிட்ட மக்கள்

தமிழ்நாடு, தூத்துக்குடி, கனிமொழி

மாணவிக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்ட பின்னரும் அதன் முடிவுகள் வெளியாகவில்லை.

'குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கைது செய்யும் வரை மாணவியின் சடலத்தை வாங்கப் போவதில்லை' எனக் கூறி கிராம மக்கள் ஆறு நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மாணவி மரணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "குற்றத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பதைக் கண்டறிவதில் காவல்துறை உறுதியாக உள்ளது. குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" எனக் கூறினார்.

மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக கனிமொழி எம்.பி வந்திருந்தார்.

'பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?' எனக் கேள்வி எழுப்பிய மக்கள், அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காவல்துறையின் விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், தனிப்படை போலீசார் மாணவி இறந்த கிராமத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் மாணவி வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாடு, தூத்துக்குடி

பட மூலாதாரம், TN Police

'5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை'

நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் திங்கள்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

மாணவி கொலை தொடர்பாக ஐந்து பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்துவதற்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பதிவான செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு காவல்துறை விசாரித்து வருவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

"சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை" எனக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், "அருகில் உள்ள 24 கண்காணிப்பு கேமராக்களில் இருந்த பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 212 பேர் வரை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்," எனக் குறிப்பிட்டார்.

மாணவி காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகாரை அலட்சியமாக கையாண்டதற்காக குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் பிரவீனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

"இதுபோதுமான தண்டனை அல்ல" எனக் கூறிய நீதிபதிகள், "புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

வழக்கின் விசாரணை சரியான முறையில் நடந்து வருவதாகக் கூறிய நீதிபதிகள், 'குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்துவது, அமைப்புகள் சார்பில் அழுத்தம் கொடுப்பது விசாரணையை பாதிக்கும்" எனக் கூறினர்.

"வழக்கின் விசாரணை தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான், தாலிபன் அரசு, காபூல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

'மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்'

"கிராமத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்கள் உள்பட சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவத்தால் கிராமத்து மக்களும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறுகிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.

"சம்பவம் நடந்த கிராமத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாணவியின் உறவினர்களையும் காவல்துறை விசாரித்துள்ளது. குற்றவாளியை தங்கள் கண்முன்னால் நிறுத்த வேண்டும் என்பது தான் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது'' என்கிறார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பூமயில்.

"காவல்துறை புகாரைப் பெற்ற உடனே விசாரிப்பதற்கு வந்திருந்தால் மாணவியைக் காப்பாற்றியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறும் பூமயில்,"கிராம மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு