காணொளி: இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தினாலும் சரி செய்ய வேண்டிய ஒரு விஷயம்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் ஓரளவாவது சவால் கொடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில், 61 ரன் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி.
தடாலடி அதிரடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை தொடக்கத்திலேயே இந்தியா பக்கம் திருப்பிய இஷான் கிஷன், சரியான நேரத்தில் துபே காட்டிய அதிரடி, இரு கேப்டன்களின் செயல்பாடு என பல விஷயங்கள் இந்த போட்டியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. பாகிஸ்தானுக்கு எதிராக இந்த போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தினாலும் இந்திய அணி சரி செய்ய வேண்டிய ஒரு விஷயமும் இருக்கவே செய்கிறது.
இந்தப் போட்டியில் இந்தியா 4 கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டிருக்கிறது. அது ஏன் கேள்வியாகிறதெனில், முதல் இரண்டு ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுகள் எடுத்துவிட்டது. இந்தப் போட்டியில் பெரும் நெருக்கடி இல்லை. அப்படி நெருக்கடி இல்லாத போட்டியில் 4 கேட்ச்களைத் தவறவிடுவது என்பது சற்று கவலையளிக்கும் விஷயம் தானே?
சரிதான். நம்பர்கள் வைத்துப் பார்க்கும்போது இது ஆதிக்கம் செலுத்தப்பட்ட போட்டிதான். ஆனால், முழுமையான செயல்பாடா என்று யோசிக்கும்போது இங்கே அந்த கேள்வி எழுகிறது. திலக் வர்மா முதலில் உஸ்மான் கான் வாய்ப்பைத் தவறவிட்டார். அது மிகவும் கடினமான வாய்ப்பு. திலக் தவறவிட்ட இரு வாய்ப்புகளுமே கடினமானவை. இஷான் கிஷன் கேட்ச் விடும்போது ஹர்திக் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார். அடுத்த பந்தே குல்தீப் கேட்ச் டிராப் செய்து சிக்ஸர் போனது.
இதுபோன்ற சூழ்நிலையில் ஃபீல்டிங்குமே சவாலான விஷயம் தான். பெரிய பவுண்டரி என்பதால் நீங்கள் 'angles cut' செய்வது, அதிக தூரம் கடப்பது போன்றவை சற்று சவாலானாவை. ஏனெனில், இப்போதுதான் இந்தியா அங்கே சென்றிருக்கிறது. குறைவான நேரமே அங்கு பயிற்சி செய்திருக்கிறார்கள். சில மைதானங்களில் விளக்குகளுமே வித்தியாசமாக இருக்கும். அதுவும் இரவு நேரங்களில் ஃபீல்டிங் செய்வதற்கு சவாலாக அமையும். இப்படியான பல விஷயங்கள் இருக்கின்றன.
இருந்தாலும், இந்தியா போன்ற ஒரு அணியிடம் இந்த சாக்குகளை ஏற்க முடியாது. ஒரு இடத்தில் அவர்கள் முன்னேற்றம் காணவேண்டும் என்றால் அது ஃபீல்டிங் என்று சொல்லலாம். ஆனால், பார்த்திருக்கிறோம் இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் என்று. நிச்சயம் அவர்கள் இதுபற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள். நிச்சயம் இதில் முன்னேற்றமும் ஏற்படும்.
இதுகுறித்து பிபிசி தமிழின் பிரதீப் கிருஷ்ணா மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பகவதி பிரசாத் இருவரும் கலந்துரையாடுகின்றனர். வீடியோவில் முழுமையாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



