'ஒரே ஏவுகணையில் 20 - 80 குண்டுகள்' – இந்த ஆயுதம் மூலம் இஸ்ரேலை இரான் தாக்குவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லூசி வில்லியம்சன்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு வயதான தம்பதியினரின் குடியிருப்பின் கூரை வழியாக இரானிய கிளஸ்டர் குண்டு உள்ளே புகுந்து, அவர்களின் சிறிய வரவேற்பறையில் வெடித்து சிதறியபோது நள்ளிரவு நேரமாக இருந்தது. இதில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
குண்டு வந்த பாதை, சாம்பல் படிந்த இடிபாடுகளுக்கு மத்தியில் இன்னும் தெளிவாகத் தெரிந்தது.
அவர்கள் வசித்த மேல் தள குடியிருப்பின் கூரையில் இருந்த ஒரு பெரிய துளை, குண்டு எப்படி கான்கிரீட் மற்றும் உலோகக் கம்பிகளை உள்நோக்கித் தள்ளிக்கொண்டு நுழைந்தது என்பதைக் காட்டியது.
பின்புறச் சுவர்கள் முழுவதும் இருந்த சிதறல் துளைகள் வெடிப்பின் வலிமையைக் காட்டின. இது குடியிருப்பின் முன்பகுதியை அழித்து திறந்த நிலையில் விட்டுச் சென்றது.

பட மூலாதாரம், Getty Images
"நாங்கள் மூன்று இரைச்சலான இடைமறிப்புகளைக் கேட்டோம், ஆனால் நான்காவது முறை கேட்டபோது, அது எங்கள் வீடு என்று எங்களுக்குத் தெரிந்தது," என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் சிகல் அமீர் கூறினார்.
வெடிப்பு நிகழ்ந்தபோது அவர் தனது பாதுகாப்பு அறையில் தஞ்சம் புகுந்திருந்தார்.
"அங்கு ஒரு மிகப்பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது, அந்த அதிர்ச்சியால் என் காதில் வலியை உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.
"அண்டை வீட்டார் எங்கள் வீட்டிலிருந்து ஐந்து மீட்டர் தொலைவில் வசிக்கிறார்கள். அவர்களின் கதவு தூக்கி வீசப்பட்டது மற்றும் அவர்களின் வீடு தூசியால் நிறைந்திருந்தது."
தம்பதியினரில் ஒருவருக்கு நடப்பதில் சிக்கல் இருந்ததால், குண்டு தாக்கியபோது அவர்கள் பாதுகாப்பு அறையில் இருக்கவில்லை என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஏவுகணையில் பல குண்டுகள்
இரான் நடத்தும் தினசரி ஏவுகணைத் தாக்குதல்களில் பெரும்பாலானவற்றை வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்துவிடுவதால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் அரிதாகவே உள்ளன.
ஆனால் கிளஸ்டர் குண்டுகள் பரந்த பகுதியில் சிதறுகின்றன. மேலும் அவற்றை எடுத்துச் செல்லும் ஏவுகணை சுடப்பட்டாலும் கூட, கிளஸ்டர் குண்டுகளில் இருந்து பாதுகாப்பது மிகவும் கடினம்.
போர் நீடிக்க நீடிக்க, இரான் அவற்றை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
"மிகப் பெரிய ஏவுகணையில் இரான் நாட்டிலிருந்து முழுவதுமாகப் பறந்து வந்து, டஜன் கணக்கான துண்டுகளாக உடைந்த அந்த ராக்கெட் நுழைந்த இடத்தை நீங்கள் காணலாம்," என்று அந்த இடத்தைப் பார்வையிட்ட இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி கூறினார்.
"மத்திய இஸ்ரேலில் இது போன்ற டஜன் கணக்கான தாக்கப்பட்ட இடங்கள் உள்ளன."
கிளஸ்டர் குண்டுகளை ஏந்தி வரும் ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்தாலும், ஒவ்வொன்றும் 20 முதல் 80 குண்டுகளை கொண்டுள்ளதாகவும், அவற்றை "நிறுத்துவது மிகவும் கடினம்" என்றும் அவர் கூறினார்.
நாங்கள் அங்கு இருந்தபோது, மற்றொரு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, ஏவுகணைகள் வருவதை எச்சரித்தது.
அண்டை வீட்டாரான சிகல், எங்களைத் தனது பாதுகாப்பு அறைக்குள் வருமாறு சைகை காட்டினார்.
இஸ்ரேலில் இரானிய ஏவுகணைகளால் ஒப்பீட்டளவில் குறைவான உயிரிழப்புகளே ஏற்பட்டுள்ளன. இதுவரை 14 பேர் நேரடித் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் ஒன்பது பேர் போரின் ஆரம்ப நாட்களில் பெட் ஷேமேஷில் நடந்த ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
20 நாளாக தொடரும் போர்
இரான் நாட்டிற்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதல் இப்போது 20வது நாளை எட்டியுள்ளது.
இது இரான் முழுவதும் உள்ள ராணுவத் தளங்கள், எண்ணெய் ஆலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அழித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம்', போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 1354 பொதுமக்கள் மற்றும் 1138 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இரான் நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களில் 70%-க்கும் அதிகமானவற்றைத் தான் அழித்துவிட்டதாகவும், இஸ்ரேலுக்கு எதிரான இரான் நாட்டின் தாக்குதல்கள் இப்போது பலவீனமடைந்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலின் மக்கள் மீண்டு வரும் வலிமையுடன் உள்ளனர். மேலும் போருக்கான ஆதரவு இன்னும் வலுவாக இருப்பதாகத் தோன்றுகிறது.
ஆனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் இஸ்ரேலியர்களைப் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பும் வழக்கமான எச்சரிக்கைகளும், கிளஸ்டர் குண்டுகளின் அதிகரித்து வரும் பயன்பாடும் இது எப்போது, எப்படி முடியும் என்று இந்தப் போரினால் சோர்வடைந்த மக்களில் சிலரை கேட்கத் தூண்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு சமமற்ற போர்
"உண்மையைச் சொல்லப்போனால், நான் நம்பிக்கையைச் சற்று இழந்து வருகிறேன்," என்று நாங்கள் பாதுகாப்பு அறையில் தஞ்சம் புகுந்திருந்தபோது சிகல் கூறினார்.
"இதற்கு முடிவே இல்லை என்று நான் உணர்கிறேன், எந்தத் திசையும் இல்லை, சுரங்கப் பாதையின் முடிவில் ஒளியை எங்களால் பார்க்க முடியவில்லை. இதை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும், [அல்லது] இங்கிருந்து நாம் எங்கே செல்கிறோம் என்று எனக்குத் தெரியவில்லை."
இந்தப் போர், பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலின் எதிரிகளுக்கு எதிரான நீண்ட போரின் உச்சக்கட்டம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சித்தரித்தார்.
தற்போதைய மோதல் ஏற்கனவே மத்திய கிழக்கை மாற்றிவிட்டதாகவும், இஸ்ரேல் இப்போது ஒரு பிராந்திய சக்தியாகவும், சில அம்சங்களில் உலகளாவிய சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் கூறி, அவர் தனது நாட்டின் ராணுவ மேன்மையில் பெருமிதம் கொள்கிறார்.
ஆனால் இது ஒரு சமமற்ற போர். மேலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை வற்புறுத்தும் நோக்கில் எண்ணெய் விலைகள், உயிரிழப்புகள் மற்றும் அதன் வளைகுடா நட்பு நாடுகளின் பாதிப்பு போன்ற அமெரிக்காவின் உணர்வுப்பூர்வமான விஷயங்களில் இரான் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த மோதலுக்கான இஸ்ரேலின் சாத்தியமான காலக்கெடு அமெரிக்காவின் காலக்கெடுவை விட நீளமானது என்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
லெபனானில் தாக்குதல்
இஸ்ரேல் இப்போது இரு போர்களில் ஈடுபட்டு வருகிறது. வடக்கு எல்லையில் நன்கு ஆயுதம் ஏந்திய இரானிய ஆதரவு அமைப்பான லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவுக்கு எதிராகவும், இரானுக்கும் எதிராகவும் இஸ்ரேல் போரிட்டு வருகிறது.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, பல்லாயிரக்கணக்கான லெபனானியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் இஸ்ரேலிய நடவடிக்கைகளில் 912 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வாரம், மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்ட பிறகு, இஸ்ரேலிய தரைப்படை தெற்கு லெபனானில் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் சூழ்நிலையைத் தணிக்க லெபனான் அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா ஏற்கெனவே தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் "தோளோடு தோள்" நின்று போரிட்டு, இரான் நாட்டின் பிராந்திய வலைப்பின்னலுக்கு எதிராக உண்மையான தாக்குதல்களை நடத்த இந்தத் தருணத்தை ஒரு பொன்னான வாய்ப்பாக நெதன்யாகு கருதுகிறார்.
போர் நீடித்த மாற்றத்தைத் தரும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
ஆனால் அவரது வல்லரசு நட்பு நாட்டின் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும் ஒவ்வொரு உயிரிழப்பை ஏற்படுத்தும் ஏவுகணைத் தாக்குதலும் உள்நாட்டில் வெற்றியைப் பிரகடனப்படுத்துவதை கடினமாக்குகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












