"எப்ஸ்டீனை 3 அல்லது 4 முறை சந்தித்திருக்கிறேன்" - ராகுல் காந்திக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் பேசியது என்ன?

பட மூலாதாரம், Sansad TV
நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 11) பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், அனில் அம்பானி, அதானி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விவகாரங்களை எழுப்பினார்.
அனில் அம்பானி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
ராகுல் காந்தி 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை' சுமத்துவதாகக் குற்றம் சாட்டிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "அவரது உரையில் உள்ள தவறான விஷயங்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும்" என்றார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி பேசியது என்ன?
இன்று, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து அவர் பேசினார்.
"அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார். அவர் ஏன் சிறையில் இல்லை என்று நான் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் எப்ஸ்டீன் ஆவணங்களில் அவரது பெயர் உள்ளது. ஹர்தீப் பூரியிடம் 'எப்ஸ்டீனை அவருக்கு அறிமுகப்படுத்தியது யார்?' என்று நான் கேட்க விரும்புகிறேன். யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று எனக்குத் தெரியும், யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று ஹர்தீப் பூரிக்கும் தெரியும்" என ராகுல் காந்தி கூறினார்.
அதன் பிறகு பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், "நமது பாதுகாப்பு பட்ஜெட்டில், அதானியின் அழுத்தம் தெளிவாகத் தெரிகிறது" என்று கூறினார்.
இருப்பினும், அவையில் இல்லாத ஒரு நபரின் பெயரை எடுக்கக்கூடாது என்று கூறி, அவைக்கு தலைமை ஏற்றிருந்த ஜெகதாம்பிகா பால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோதி 'அழுத்தத்தின் கீழ் இந்தியாவை விற்றுவிட்டார்' என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
"நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் சொல்கிறேன். எங்களது பாரத மாதாவை நீங்கள் விற்றுவிட்டீர்கள்." எனக் கூறினார் ராகுல் காந்தி.
தொடர்ந்து பேசிய அவர், "சாதாரண சூழ்நிலையில் பிரதமர் இந்தியாவை விற்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் தெரியுமா? ஏனெனில் அவர்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்கள் அவரது கழுத்தை தங்கள் கைகளில் வைத்துள்ளனர்... பிரதமரின் கண்களில் உள்ள பயத்தை எங்களால் பார்க்க முடிகிறது. எப்ஸ்டீன் ஆவணங்களில் பல ஆவணங்கள் இன்னும் திறக்கப்படவில்லை" என்றார்.

பட மூலாதாரம், @USAmbIndia
டிரம்ப் குறித்து என்ன சொன்னார்?
"எங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்தால், 'அதிபர் டிரம்ப், நீங்கள் எங்களுடன் சமமாகப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்கள் வேலைக்காரர்கள் என்பது போல நீங்கள் எங்களிடம் பேச முடியாது' என்று சொல்லியிருப்போம்'"
"இரண்டாவதாக, நாங்கள் டிரம்பிடம் சொல்ல விரும்புவது, 'தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், எங்களது எரிசக்தி பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். எதுவாக இருந்தாலும், எங்களது எரிசக்தி பாதுகாப்பை நாங்கள் விடமாட்டோம். மூன்றாவதாக, அதிபர் டிரம்ப், உங்களுக்கு ஒரு வாக்காளர் தளம், குறிப்பாக ஒரு விவசாய வாக்காளர் தளம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் விவசாயிகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் நாங்களும் எங்கள் விவசாயிகளைப் பாதுகாப்போம்." என்று கூறினார் ராகுல் காந்தி.
அமெரிக்க விவசாயப் பொருட்களுக்காக இந்தியா தனது கதவுகளைத் திறந்துவிடுவதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, 'இது நமது ஏழை விவசாயிகளை அழித்துவிடும்' என்றார்.
பாஜக கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
ராகுல் காந்தி பொய் சொல்வதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி குற்றம் சாட்டியுள்ளார்.
"முதலில் ஒரு விஷமத்தனமான பொய்யைச் சொல்லிவிட்டு, பிறகு வெளிநாட்டுக்கு பறந்து செல்வீர்கள்" என்று அவர் ராகுல் காந்தியை விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் கருத்துகள் தொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை' சுமத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், "அவரது உரையில் உள்ள தவறான விஷயங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்" என்றார்.
"பட்ஜெட் குறித்து உரை நிகழ்த்தும்போது, ராகுல் காந்தி எந்த தர்க்கமும் இன்றி, எந்த ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார். அவர் சொன்ன தவறான விஷயங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் மற்றும் அவர் பயன்படுத்திய நாடாளுமன்றத்திற்குப் புறம்பான சொற்களும், பொய்ககளும் நீக்கப்பட வேண்டும்." என்று ரிஜிஜு கூறினார்.
"இந்த நாட்டை யாராலும் விற்க முடியாது, யாராலும் வாங்க முடியாது என்று நான் அவருக்கு நினைவூட்டினேன். பிறகு யாரோ இந்தியாவை விற்றார்கள், யாரோ இந்தியாவை வாங்கினார்கள் என்று ராகுல் காந்தி கூறினார். இந்தியாவை வாங்குவது அல்லது விற்பது பற்றி எவரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது" என்றார் ரிஜிஜு.

பட மூலாதாரம், BJP
ஹர்தீப் சிங் பூரி கூறியது என்ன?
எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹர்தீப் பூரி, "இன்று அவர் (ராகுல் காந்தி) சபை நடவடிக்கைகளின் போது எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பாக எனது பெயரை குறிப்பிட்டார்" என்றார்.
எப்ஸ்டீன் தொடர்பான மோசமான விவகாரங்களில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், நியூயார்க்கில் சர்வதேச அமைதி நிறுவனத்தில் தான் பணியாற்றியபோது மூன்று அல்லது நான்கு முறை குழுவாக எப்ஸ்டீனை சந்தித்ததாகவும் ஹர்தீப் பூரி கூறினார்.
மின்னஞ்சல் மூலம் நடந்த உரையாடல்கள் அனைத்தும் பொதுவெளியில் இருப்பதாகவும் அவர் கூறினார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












