You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் புதிய அச்சுறுத்தல் - இரான் பேச்சுவார்த்தைக்கு வருமா?
- எழுதியவர், லைஸ் டூசெட் , பால் ஆடம்ஸ்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இரான் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால், குண்டுவீச்சு நடத்த வேண்டிய நிலை வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்புவதைத் தவிர இரானுக்கு வேறு வழியில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி-க்கு அளித்த நேர்காணலில், அமெரிக்கா இறுதியில் "ஒரு சிறந்த ஒப்பந்தத்தைப் பெறும்" என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஒன்றும் "மிகவும் இனிமையானவர்களுடன் பேசிக் கொண்டிருக்கவில்லை" ஆனால் அதை "வெற்றிகரமாகச்" செய்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்கக் கடற்படை முற்றுகையை "பிரம்மாண்டமான வெற்றி" என்றும் அவர் அழைத்தார்.
பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைவது போல் தெரிந்தால் போர் நிறுத்தத்தை நீட்டிப்பீர்களா என்று கேட்டதற்கு, அமெரிக்க அதிபர், "நான் அதை செய்ய விரும்பமில்லை" என்று பதிலளித்தார்.
ஒப்பந்தத்தை எட்டுவதற்கு "அதிக நேரமில்லை" என்றும், அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டினால் இரான் "மிகவும் நல்ல நிலைக்கு" வர முடியும் என்றும் அவர் கூறினார்.
புதன்கிழமை முடிவடைய உள்ள போர் நிறுத்தம்
கடந்த 48 மணிநேரம் ஒரு ரோலர்-கோஸ்டர் பயணம் போலத் தத்தளிப்பாக இருந்தது. அமெரிக்க மற்றும் இரானிய தூதர்கள் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளைச் சந்தித்து வருகின்றனர்.
மீண்டும் வான்ஸ் மற்றும் காலிபாஃப் சந்திப்பார்களா? அல்லது சமூக ஊடகப் பதிவில் அவரே குறிப்பிட்டது போல, அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக வருவாரா?
வெளிப்படையாகப் பார்த்தால், அறிகுறிகள் அவ்வளவு நன்றாகத் தெரியவில்லை. ஆனால் எந்தத் தரப்பும் இஸ்லாமாபாத்திற்கு வந்துவிட்டு, இந்த நுணுக்கமான ராஜதந்திரச் செயல்முறை தங்கள் கண்ணெதிரேயே சிதைந்து போவதை விரும்பவில்லை. தற்போது நடந்து வரும் பரபரப்பான தொடர்புகள், திரைக்குப் பின்னால் ஏதோ ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டுகின்றன.
இரு தரப்பும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தாலும், இருவருமே அதைத் தங்கள் வெற்றியாகக் காட்டிக்கொள்ளக் கூடிய ஒன்றாக அது இருக்கலாம்.
இரண்டு வார கால போர் நிறுத்தம் புதன்கிழமை முடிவடைய உள்ள நிலையில், ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டால் அது பேச்சுவார்த்தைக்குக் கூடுதல் கால அவகாசத்தையாவது வழங்கும். இரான் மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர கடற்படை முற்றுகைகள் நீக்கப்படுவதை நாம் பார்க்க முடியுமா? அது ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கும்.
இரான் கூறுவது என்ன?
பிபிசி-யிடம் பேசிய இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், இந்த வாரம் அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு இரான் குழு செல்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா நடத்தும் கடற்படை முற்றுகை மற்றும் இரான் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியது குறித்தும், இரானின் உள்கட்டமைப்புகளை அழிப்பேன் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் குறித்தும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
"நாங்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு நல்லெண்ணத்துடனும், மிகுந்த தீவிரத்தன்மையுடனும் சென்றோம். ஆனால், எதிரே பேச்சுவார்த்தை நடத்தும் தரப்போ தனது தீவிரமற்ற தன்மையையும், நல்லெண்ணம் இல்லாத நிலையையும் காட்டியுள்ளது... அவர்கள் அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று பாகேய் கூறினார்.
இருப்பினும், பேச்சுவார்த்தை மேசைக்கு இரான் திரும்புவதற்கு என்ன நிபந்தனைகளை எதிர்பார்க்கிறது என்பது குறித்து அவர் விரிவாகப் பேச மறுத்துவிட்டார்.
இது குறித்து இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நாளை போர்நிறுத்தம் முடிவடைவதற்குள், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கான உரையாடல்கள் நடைபெற்று வருவதாக பிபிசி புரிந்துகொள்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு