'தூக்கத்தில் எழுந்து காட்டுக்குள் சென்ற பெண்': தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா?

தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இஃப்திகார் அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உங்களுக்கு அருகில் உறங்கும் நபர் திடீரென தூக்கத்தில் பேசவோ அல்லது முணுமுணுக்கவோ தொடங்குவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இத்தகையவர்கள் "தூக்கத்தில் பேசுபவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

சில நேரங்களில் இந்த எண்ணங்கள் மிகவும் விசித்திரமானவையாகவோ அல்லது தனிப்பட்டவையாகவோ இருப்பதால், அவை உறவுகளில் தேவையற்ற பதற்றத்தையோ அல்லது தவறான புரிதலையோ உருவாக்கக்கூடும். மருத்துவ ரீதியாக இது 'சோம்னிலோக்வி' (somniloquy) என்று அழைக்கப்படுகிறது.

தூக்கத்தில் முணுமுணுப்பது அருகில் அதைக் கேட்பவரின் தூக்கத்தைக் கெடுப்பது மட்டுமின்றி, பேசுபவர்களின் உடல்நிலையைப் பற்றியும் நிறைய கூறுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தூக்கத்தில் பேசுவது ஒரு சாதாரண நிலையாகக் கருதப்படுகிறது. ஆனால், நீங்கள் தூக்கத்திலேயே முணுமுணுப்பது அதிகரித்தால் (அதாவது தூக்கத்தில் அதிக முறை மீண்டும் மீண்டும் பேசினால்) அதைப் புறக்கணிப்பது பாதகமாகலாம்.

பலர் முணுமுணுப்புடன் சேர்ந்து தங்கள் கைகளையும் கால்களையும் அசைக்கவோ அல்லது கத்தவோகூடத் தொடங்குகிறார்கள்.

தூக்கத்தில் பேசுவதுடன் மட்டுமின்றி, சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் உண்டு. தூக்கத்தில் நடப்பது, பேசுவதைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.

இது ஏன் நிகழ்கிறது, அதைத் தவிர்ப்பதற்கான வழிகள் யாவை என்பதைப் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

தூக்கத்தில் பேசுதல்

நாம் உறங்கும்போது, மூளையில் ஒரு பாதுகாப்பு அமைப்பு செயல்படத் தொடங்குகிறது. இது கனவுகளுடன் தொடர்புடைய நரம்பியல் செயல்பாடுகள் பேச்சாகவோ அல்லது உடல் அசைவுகளாகவோ வெளிப்படுவதைத் தடுக்கிறது.

ஆனால், இந்த அமைப்பு முழுமையானதல்ல. சில நேரங்களில் அந்த நரம்பியல் சமிக்ஞைகள் தப்பி வெளியேறி விடுகின்றன. இது முணுமுணுத்தல், முனகுதல், தெளிவாகப் பேசுதல் மற்றும் சில நேரங்களில் தூக்கத்தில் நடத்தல் போன்ற செயல்களுக்கு வித்திடும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, இதற்குப் பல உடல் மற்றும் உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, மது அருந்துதல், காய்ச்சல் போன்ற நிலைமைகள் தூக்கத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்.

டெல்லியில் உள்ள 'சர் கங்கா ராம் மருத்துவமனை'யின் மருத்துவர் மோஹ்சின் வாலி, தூக்கத்தில் பேசுவது பொதுவாக ஏதேனும் தீவிர நோயின் அறிகுறியல்ல என்றும், ஆனால் இது மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

அதுகுறித்து அவர் பேசுகையில், "மன அழுத்தத்துடன் உறங்குபவர்கள் அல்லது அன்றாடப் பணிகளைத் தேவைக்கு அதிகமாகவே தீவிரமாக எடுத்துக்கொள்ளும் நபர்களிடம் தூக்கத்தில் பேசும் பழக்கத்தைக் காண முடியும். இத்தகைய நபர்கள் பெரும்பாலும் தூக்கத்தில் ஒரே விஷத்தையே திரும்பத் திரும்பப் பேசத் தொடங்குகின்றனர்," என்று விளக்கினார்.

இந்நிலையில், ஒரு நபர் தூங்கும்போது எதை வேண்டுமானாலும் பேசக்கூடும். சில நேரங்களில் கனவில் எதையேனும் கண்டு அஞ்சும் போது கூட அவர் பேசத் தொடங்கிவிடுவார்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, இதற்கெனத் தனி சிகிச்சை முறை ஏதுமில்லை. மாறாக, இதற்குப் பின்னாலுள்ள உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்வதே மிக முக்கியம்.

தூக்கத்தில் பேசப்படும் பேச்சுகள் பெரும்பாலும் இலக்கணப் பிழையின்றி அமைந்திருக்கும். அவை சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் அல்லது அனுபவங்களுடன் தொடர்புடையவையாக இருக்கலாம். அதே நேரம், சில நேரங்களில் அவை விசித்திரமாகவும், அர்த்தமற்றதாகவும் தோன்றக்கூடும்.

தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா?

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தூக்கத்தில் பேசுவது என்பது ஒரு மருத்துவக் குறைபாடாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும், மன அழுத்தம், உணர்வுரீதியான நெருக்கடிகள் அல்லது உளவியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்போது, தூக்கத்தில் பேசும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும்.

மெட்ரோ மருத்துவமனை குழுமத்தின் மூத்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் சோனியா லால் குப்தா, தூக்கத்தில் பேசுவது என்பது ஒரு பொதுவான பிரச்னை என்றும், குறிப்பாக குழந்தைகளிடம் இது அதிகம் காணப்படுவதாகவும் விளக்குகிறார். இந்தப் பிரச்னை தீவிரமடையும் பட்சத்தில், அது கவலைக்குரிய விஷயமாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தூக்கத்தில் நடத்தல்

தூக்கத்தில் நடப்பது ஆபத்தானது. செப்டம்பர் 14, 2024 அன்று இரவு, அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்த பெய்டன் என்ற இளம்பெண், தனது வீட்டை விட்டு வெளியேறி காட்டுக்குள் சென்றுவிட்டாள்.

அந்தப் பெண் காணாமல் போன போது, அவரது குடும்பத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தேடுதல் வேட்டை தொடங்கியது. அந்தப் பெண்ணை எங்கும் காணாததால், டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

தூக்கத்தில் பேசுவது பொதுவாக ஒரு நோய் அல்ல, ஆனால் தூக்கத்தில் நடப்பது விபத்துக்கான அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர் மொஹ்சின் வாலியும் நம்புகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இதில் அந்த நபர் உண்மையில் எழுந்து, அதை உணராமல் நடக்கத் தொடங்கிவிடுகிறார். அத்தகைய சூழ்நிலையில், கீழே விழுவதற்கோ அல்லது எதன் மீதும் மோதுவதற்கோ ஆபத்து நிறைய உள்ளது."

தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா?

பட மூலாதாரம், Getty Images

மருத்துவர் வாலி தனது மாணவர் காலத்து அனுபவத்தையும் நினைவுகூர்ந்தார். 1968இல் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, ஒரு அறிவியல் தேர்வுக்கு முன்பு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், முந்தைய நாள் இரவு தூங்கிய பிறகு, அதிகாலை 4 மணியளவில் எழுந்து நடக்கத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார். அப்போது, அவரது தந்தை அவரைத் தடுத்துள்ளார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, இரவுத் தூக்கம் பல நிலைகளில் நிறைவடைகிறது. நாம் தூங்க முயலும்போது, முதலில் லேசான தூக்கத்தை அனுபவிக்கிறோம். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, இந்தத் தூக்கம் படிப்படியாக ஆழமாகிறது.

இதற்குப் பிறகு, தூக்கம் சிறிது நேரத்திற்கு லேசாக இருந்து, பின்னர் அந்த நபர் மிக ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறார். இது விரைவான கண் அசைவுத் தூக்கம் (REM) என்று அழைக்கப்படுகிறது.

தூக்கத்தின் இந்த நிலைகள் இரவு முழுவதும் பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. ஒவ்வொரு சுழற்சியிலும், ஆர்.இ.எம் எனப்படும் மிக ஆழ்ந்த தூக்கத்தின் கால அளவு அதிகரிக்கிறது. இது நீங்கள் காலையில் விழிக்கும் வரை தொடர்கிறது.

ஆர்.இ.எம் தூக்கத்தின் போதுதான் நாம் பெரும்பாலும் கனவு காண்கிறோம். இந்த நிலையில், உடல் கிட்டத்தட்ட முழுமையாகத் தளர்வாக இருப்பதால் கனவு போன்ற செயல்பாடுகளுக்கு உடல் செயலாற்றுவதில்லை.

இந்தச் சூழலில், தூக்கத்தில் நடத்தல் என்பது தூக்கத்திற்கும் விழிப்புநிலைக்கும் இடையிலான சமநிலையின்மையின் விளைவு என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா?

பட மூலாதாரம், Getty Images

எப்போது கவலைப்பட வேண்டும்?

மருத்துவர் சோனியா லால் குப்தாவின் கூற்றுப்படி, தூக்கத்தில் பேசுவது கவலைப்பட வேண்டிய ஒரு விஷயமல்ல.

"தூக்கத்தில் பேசுவோர் அல்லது முணுமுணுப்பவர்கள், முந்தைய இரவில் தாங்கள் என்ன பேசினோம் என்பதைப் பெரும்பாலும் நினைவில் கொள்வதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குறிப்பாக குழந்தைகளிடம், இதற்கு சிகிச்சை அவசியமில்லை. ஏனெனில், அவர்கள் வளர வளர இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும்," என்று கூறுகிறார் அவர்.

பெரியவர்களைப் பொறுத்தவரை, தூக்கத்தில் பேசுவதற்கு என்ன காரணம் என்பதையும், அது அவர்களின் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கிறதா என்பதையும் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று மருத்துவர் குப்தா குறிப்பிடுகிறார்.

ஒருவர் தூக்கத்தில் திரும்பத் திரும்பப் பேசுவது, கத்துவது அல்லது வன்முறை செயல்களில் ஈடுபடுவது போன்ற பிரச்னைகளைக் கொண்டிருந்தால், இது அவரது தூக்கத்திற்கு இடையூறாக அமைந்தால், அதன் பின்னணியில் உள்ள காரணத்தை ஆராய்வது மிகவும் அவசியம் என்று அவர் கூறுகிறார்.

மருத்துவர் வாலியின் கூற்றுப்படி, இன்றைய சமூகத்தில் பலர் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive Sleep Apnea) எனப்படும் நிலையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தூக்கத்தின்போது மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு போதுமானதாக இருப்பதில்லை, இது உடலுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தம், தூக்கமின்மை, பதற்றம் அல்லது ஏதேனும் ஒரு நோய் ஆகியவற்றின் காரணமாகவும், தூக்கத்தில் நடப்பது அல்லது தூக்கத்தில் பேசுவது போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா?

பட மூலாதாரம், Getty Images

சிகிச்சைகள் என்ன?

ஒழுங்கற்ற உறக்க அட்டவணை அல்லது மன அழுத்தம் காரணமாகவும் நீங்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகக்கூடும். இவற்றைச் சரிசெய்வது, இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட உதவுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உறக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது குறித்து மருத்துவர் சோனியா லால் குப்தா இவ்வாறு கூறுகிறார்: "உறங்குவதற்கும் விழிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டும். பிற்பகல் 3 மணிக்கு மேல் கேஃபின் (Caffeine) உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உறங்குவதற்கு முன்பு செல்போனை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்."

மேலும் பேசிய அவர், "ஒருவர் மிகுந்த மன அழுத்தத்துடன் உறங்கச் சென்று, இந்தப் பிரச்னை தீவிரமடைந்து கொண்டே இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்," என்றார்.

உறக்கத்தின்போது ஒருவர் வன்முறை சார்ந்த செயல்களில் ஈடுபட்டால், உதாரணமாக, உறங்கும்போது தங்கள் துணையை எட்டி உதைப்பது போன்றவற்றைச் செய்தால், அது ஏதேனும் நரம்பியல் சார்ந்த பிரச்னையின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்றும் மருத்துவர் குப்தா குறிப்பிடுகிறார்.

தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது ஒரு நோயா?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"உறக்கம் தொடர்பான புகார்கள் குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகின்றன. ஏனெனில், அவர்களின் மூளை இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. இருப்பினும், ஒரு குழந்தை பகல் நேரங்களில் அளவுக்கு அதிகமாக உறங்கினாலோ அல்லது பள்ளியில் இருக்கும்போது அடிக்கடி உறங்கி விழுந்தாலோ, அது கவலைக்குரிய விஷயமாகும். எனவே, அதுகுறித்து உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று அவர் விளக்கினார்.

மருத்துவர் வாலியின் கூற்றுப்படி, இந்தப் பிரச்னைக்கென நேரடியான சிகிச்சை முறை எதுவுமில்லை. பொதுவாக ஓர் உளவியலாளரால் வழங்கப்படும் உளவியல் சிகிச்சை இதற்குப் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன், போதுமான அளவு உறக்கத்தைப் பெறுவதும் மிக முக்கியம்.

இரவு நேரங்களில், மனித உடலில் 'மெலடோனின்' (Melatonin) என்னும் ஹார்மோன் இயற்கையாகவே சுரப்பதாக அவர் கூறுகிறார். தேவைப்படும் பட்சத்தில், ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அது மருந்தாக வழங்கப்படலாம்.

அதோடும், இத்தகைய சூழல்களில், பொதுவாக நினைவாற்றல் திறனில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு