ஆப்கானிஸ்தான் தலைநகரில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் - பிபிசி குழு நேரில் கண்டது என்ன?

பட மூலாதாரம், Wakil KOHSAR / AFP via Getty Images
திங்களன்று ஆப்கானிஸ்தானின் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் தாலிபன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலர் காயமடைந்திருக்கலாம் என்று பிபிசி பஷ்தோ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் அரசாங்கம் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
திங்கட்கிழமை மாலை அந்த மையம் தாக்கப்பட்டதாகவும், இதில் சிலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஆப்கான் தாலிபன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த மையம் குறிவைக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
காபூல் மற்றும் கிழக்கு ஆப்கான் மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் "பயங்கரவாத மறைவிடங்களை" குறிவைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அது கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், "பாகிஸ்தான் ராணுவம் இன்று இரவு (திங்கட்கிழமை) சுமார் 9 மணியளவில் ஓமிட் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. இது போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட 2,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தாக்குதலில் மையத்தின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது மற்றும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். அவர்கள் தீயைக் கட்டுப்படுத்தவும், இடிபாடுகளுக்குள் இருந்து உடல்களை மீட்கவும் பணியாற்றி வருகின்றனர்"என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் முன்னாள் தலைவர் அப்துல்லா அப்துல்லா, வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன், இதன் விளைவாக பொதுமக்கள் உயிர் இழந்துள்ளனர். அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான இந்தத் தாக்குதல்கள், சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது"என்று அப்பதிவு கூறுகிறது.
சம்பவ இடத்தில் பிபிசி குழுவினர் கண்டது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images
பிபிசி குழுவினர் அந்த மையத்துக்குச் சென்றனர்.
மையத்தின் சில பகுதிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. 30க்கும் மேற்பட்ட உடல்கள் ஸ்ட்ரெச்சர்களில் வெளியே கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சுவதாகவும் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், காபூலில் உள்ள ராணுவ மற்றும் பயங்கரவாத நிலைகளை இலக்கு வைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.
மையத்துக்கு அருகில் ராணுவ தளங்கள் எதுவும் இல்லை என்று ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் அமர்கெல் பிபிசியிடம் தெரிவித்தார்.
காபூலில் இரவு 8:50 மணியளவில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் சத்தங்கள் கேட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் குடும்பத்தினர் வெளியே கூடி, தங்களது உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிப்பதைக் காண முடிந்தது.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியதை அடுத்து, கடந்த மாதம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்தது. இந்தக் குற்றச்சாட்டை தாலிபன் அரசாங்கம் மறுக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் உதவிப் பணி அமைப்பு தகவல்படி, பிப்ரவரி 26 முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மோதல்களில் ஆப்கானிஸ்தானில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 193 பேர் காயமடைந்துள்ளனர்.
'இது ஒரு போர்க்குற்றம்' - கிரிக்கெட் வீரர் ரஷித் கான்
இந்த சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
"காபூலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழந்த செய்தி ஆழந்த வருத்தத்தை அளிக்கிறது. வீடுகள், கல்வி நிறுவனங்கள் அல்லது மருத்துவக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ குறிவைப்பது ஒரு போர்க்குற்றமாகும்"என்று அவர் பதிவிட்டுள்ளார்.
"குறிப்பாக, புனித ரமலான் மாதத்தில் மனித உயிர்கள் மீது இத்தகைய அலட்சியம் காட்டுவது மிகுந்த கவலைக்குரியது மற்றும் இது வெறுப்பையும் பிளவையும் தூண்டும். இந்த சமீபத்திய கொடூர சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் முழுமையாக விசாரித்து, இதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்"
"இந்தக் கடினமான நேரத்தில் நான் ஆப்கானிஸ்தான் மக்களுடன் நிற்கிறேன். ஆப்கானிஸ்தான் இந்த நெருக்கடியை சமாளித்து மீண்டும் நிமிர்ந்து நிற்கும். இன்ஷா அல்லாஹ்" என்றும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாலிபன் தலைவர் மௌனம்

பட மூலாதாரம், AFP via Getty Images
பிபிசி பஷ்தோ செய்தியின்படி, தாலிபன் உயர்மட்டத் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா திங்கள்கிழமை ஈத் அல்-பித்ருக்கான பொதுச் செய்தியை வெளியிட்டார். அங்கு நிலவும் பதற்றங்கள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
"ஆப்கானிஸ்தான் மக்களின் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் மதிக்க வேண்டும் என்றும், எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலகின் எந்தப் பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளையும், அவர்களின் உரிமைகள் மீறப்படுவதையும் இஸ்லாமிய எமிரேட் அநீதியாகக் கருதுகிறது மற்றும் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறது"என்று அவர் கூறியிருந்தார்.
முன்னதாக அவர் வெளியிட்ட செய்தியில், "இஸ்லாமிய ஷரியாவைப் பாதுகாக்கவும், நிர்வாகத்தின் உத்தரவுகளைப் பின்பற்றவும், இஸ்லாமிய அமைப்பின் நிலைத்தன்மைக்காகக் கடுமையாக உழைக்கவும், எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் தவிர்க்கவும்" கேட்டுக் கொண்டிருந்தார்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல் எப்போது தீவிரமடைந்தது?
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போரின் போது மேற்கத்திய நாடுகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததால், தாலிபன்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே கசப்புணர்வு நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிய குடியேறிகளை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டபோது, இந்த பதற்றம் மேலும் அதிகரித்தது.
சட்டவிரோத ஆவணங்களுடன் தங்கியிருக்கும் ஆப்கானியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தப் போவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான ஆப்கானிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக் குழுவினர் பாதுகாப்புப் படைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான புகலிடம் பெறுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
பிபிசி பஷ்தோவின் தாவூத் ஆஸ்மி கூறுகையில், ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல என்கிறார்.
பாகிஸ்தான் தனது முதல் வான்வழித் தாக்குதலை ஏப்ரல் 2022 இல் நடத்தியது, அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபரில், பாகிஸ்தான் காபூலில் ஒரு தாக்குதலை நடத்தியது. அத்தாக்குதலுக்கு பாகிஸ்தானே பொறுப்பு என்று ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியதுடன், பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
அதே மாதத்தில், தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, எல்லையில் மோதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.
"எந்தத் தூண்டுதலும் இன்றி" ஆப்கானிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், எல்லையில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தாலிபனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது படைகள் பதிலடி கொடுத்ததாகத் தெரிவித்தது.
அதிகரித்து வரும் பதற்றம் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. சௌதி அரேபியா மற்றும் இதர வளைகுடா நாடுகள் சமரசம் செய்ய முயற்சித்தன.
இதற்கிடையில், 2025 அக்டோபர் 15-ஆம் தேதி, கந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் தாலிபன் அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகச் செய்தி வந்தது,
இதில் 12 ஆப்கானிய குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த மோதலில் பல பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பல ராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஆயுதங்கள் மற்றும் டாங்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தாலிபன் அரசாங்கம் தெரிவித்தது. இந்த மோதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் நூற்றுக்கணக்கான தாலிபன்களும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
பல நாட்கள் நீடித்த சண்டைக்குப் பிறகு, இரு தரப்பும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
கத்தார் மத்தியஸ்தத்தின் கீழ் அக்டோபர் 19-ஆம் தேதி தோஹாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும், கடந்த சில மாதங்களாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன.
துரந்த் எல்லைக் கோடு குறித்த சர்ச்சை

பட மூலாதாரம், AFP via Getty Images
பயங்கரவாதம் தொடர்பான பிரச்னையில் தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருவதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே துரந்த் எல்லைக் கோடு தொடர்பான சிக்கலும் உள்ளது, இது இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது வரையப்பட்ட, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு இடையிலான இந்த எல்லைக் கோட்டை ஆப்கானிஸ்தான் ஏற்பதில்லை.
துரந்த் கோடு நடைமுறைக்கு வந்தது முதல், காபூலில் ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் இந்த எல்லைக் கோட்டிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டன.
அக்டோபர் 2025 சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில், கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 'எல்லை' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஆப்கானிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்தது, அதன் பிறகு 'எல்லை' என்ற வார்த்தை நீக்கப்பட்டது.
ஆனால், கடந்த சில மாதங்களில் பலுசிஸ்தானில் நடந்த தொடர் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் உயிரிழந்ததே தற்போதைய சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பலுசிஸ்தானில் நடந்த வன்முறையில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் அதனை இந்தியா மறுக்கிறது. இந்தியாவின் "பினாமி போரில்" ஆப்கானிஸ்தான் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












