You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், இந்த சம்பவம் "கொலை" என தீர்மானிக்கப்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி முத்துக்குமாரன் தீர்ப்பை வாசிக்கும் போது, தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் கொலை என தீர்மானிக்கப்படுவதாகக் கூறினார்.
உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறிய நீதிபதி, வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளின் அடிப்படையில், "குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்" எனத் தீர்ப்பளிப்பதாகக் கூறினார்.
"குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது" என்று நீதிபதி கூறினார்.
மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம்பெற்றார். உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
'லத்தியில் இருந்த ரத்தம்'
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் குற்றவாளிகளின் சொத்து மதிப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்து அந்தத் தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
தீர்ப்பைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரின் வழக்கறிஞர் ஜெபசிங், "வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி கூறியிருப்பது தங்களுக்கான வெற்றி'' என கூறியுள்ளார்.
நீதிபதி முத்துக்குமரன் தனது தீர்ப்பில் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறிய ஜெபசிங்,"லத்தியில் இருந்த ரத்தம் டிஎன்ஏ ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார்" எனக் கூறினார்.
மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் அழைத்துச் செல்லப்பட்ட தனியார் வாகனத்தில் எடுக்கப்பட்ட ரத்தமாதிரிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களும் வழக்கில் முக்கிய பங்காற்றியிருப்பதாக அவர் கூறினார்.
குடும்பத்தினர் கூறியது என்ன?
பென்னிக்சின் சகோதரி பெர்சி செய்தியாளர்களிடம் பேசுகையில்,"குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும்" என எதிர்பார்ப்பதாகக் கூறினர்.
தனது தம்பியையும் , தந்தையையும் இழந்து குடும்பம் பெரிய இழப்பை சந்தித்திருப்பதாகக் கூறிய அவர், "உச்ச பட்ச தண்டனை கிடைக்கும்போது இது போன்ற செயல்களில் எதிர் காலத்தில், அதிகாரிகள் ஈடுபட மாட்டார்கள்" என்றார்.
வழக்கின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் 58 வயதான ஜெயராஜும் 31 வயதான அவரது மகன் பென்னிக்சும் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர்.
பொது முடக்கத்தின் காரணமாக கடைகள் திறப்பதற்கு நேர வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்சுக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர். இதற்குப் பிறகு, ஜெயராஜை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரைத் தேடி அவரது மகன் பென்னிக்சும் அங்கே சென்றார். அவரும் அங்கே அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகு இவர்கள் இருவரையும் ஜூன் 21ஆம் தேதி கோவில்பட்டி துணைச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கட்கிழமை இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
"ஜூன் 22ஆம் தேதி, திங்கள்கிழமை மாலை நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பென்னிக்சை பணியில் இருந்த வார்டன்கள் மீட்டு துணைச் சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டார். அதற்கு சிறிது நேரத்திலேயே பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்" என சிறை அதிகாரிகள் அந்தத் தருணத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இருவர் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினார்.
காவல்துறையினர் மீது நடவடிக்கை
இந்த விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு துணை ஆய்வாளர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் பணியாற்றிய அனைவருமே முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. காவல்துறையினரால் தாக்கப்படுவது கொரோனா பெருந்தொற்றைப் போல பரவியிருக்கிறது என்றும் இந்த விவகாரத்தை தாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு அங்கிருந்த காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்பதோடு, ஒரு காவலர் அவரிடம் மிக மோசமாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நீதித் துறை நடுவர் பாரதிதாசன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார். பிறகு சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆதாரங்களை பாதுகாக்கவும், போலீஸ் தலையீட்டைத் தடுக்கவும், வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது. மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு