சிஎஸ்கே செய்த அதே தவறால் சறுக்கிய டெல்லி - பந்துவீச்சிலும் எழுச்சி காணும் ஹைதராபாத்

    • எழுதியவர், நிதிஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்த சீசன் தொடங்குவதற்கு முன் பலராலும் ப்ளே ஆஃப்-க்குள் நிச்சயம் நுழையக்கூடிய அணி என கணிக்கப்பட்டது டெல்லி. பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்த ராகுல், உள்ளூர் டி20 போட்டிகளில் ரன்களை குவித்திருக்கும் நிதிஷ் ராணா, ஐ.பி.எல்லில் பல்லாண்டுகாலமாய் ஆடிவரும் மில்லர், சுழலுக்கு அக்சர் படேல் - குல்தீப், வேகப்பந்து வீச்சுக்கு முகேஷ் குமார் - நடராஜன் - இங்கிடி என மேட்ச் வின்னர்கள் நிறைந்த அணி என்பதால் பலமிக்க அணியாக கருதப்பட்டது டெல்லி.

ஆனால், தொடர் தொடங்கிய பின் நிலைமை வேறுவிதமாக இருந்தது. டெல்லியால் மற்ற பலம்வாய்ந்த அணிகளை போல தொடர்ந்து ஜெயிக்க முடியவில்லை. இரண்டில் வெற்றி பெற்றால் இரண்டில் தோல்வி என ஏற்றத்தாழ்வுகளோடு இருந்தது டெல்லி அணியின் பயணம்.

மறுபக்கம் பேட்டிங்கில் நூற்றுக்கு நூறு, பவுலிங்கில் ஜஸ்ட் பாஸ் ஆவதே சந்தேகம் தான் என கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்ட சன்ரைஸர்ஸ் அணி பவுலிங்கை வைத்தே தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டது. இப்படி எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாய் விளையாடும் இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டம் நேற்று (ஏப்ரல் 21).

டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணிக்கு இது ஏழாவது போட்டி. ஏழிலும் முதலில் பேட்டிங் செய்துள்ளது அந்த அணி. டெல்லி அணியில் அக்யுப் நபிக்கு பதிலாக நிதிஷ் ராணா. ஹைதராபாத் அணியில், அறிமுகமான முதல் போட்டியிலேயே கவனம் ஈர்த்த ப்ரஃபுல் ஹிங்கேவுக்கு இடமில்லை. அவருக்கு பதில் ஹர்ஷ் தூபே.

2024-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள், கடந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் என நேற்றைய போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிட்ச் ஹைதராபாத் அணி ரன்களை குவிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பிட்ச். எனவே, போட்டி தொடங்கும் முன்பே இந்த ஆட்டத்திலும் ரன் வேட்டை நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

அதிரடி அபிஷேக்...

இந்தத் தொடரில் எதிரணிகளை மிரளவைக்கும் ஓப்பனிங் இணையை கொண்டது ஹைதராபாத். அபிஷேக் சர்மா - ட்ராவிஸ் ஹெட் இருவரும் சேர்ந்தால் சுட்டெரிக்கும் தெலங்கானா கோடையிலும் சிக்ஸர் மழை பொழியும். ஹைதராபாத் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டும் இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் மொத்தமாய் 34 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்கள். இதற்கு அப்படியே நேர்மாறான ஆட்டம் டெல்லியுடையது. அந்த அணியின் டாப் ஆர்டர் மூன்று பேரும் இணைந்தே ஐந்து போட்டிகளில் 12 சிக்ஸர்கள்தான் அடித்திருக்கிறார்கள்.

முதல் இரண்டு ஓவர்கள் பொறுமையாகவே பந்தை எதிர்கொண்டார்கள் அபிஷேக் சர்மாவும் ட்ராவிஸ் ஹெட்டும். மூன்றாவது ஓவரிலிருந்து தன் அதிரடியை காட்டத் தொடங்கினார் அபிஷேக். இதற்கு ஒருவகையில் டெல்லியின் கேப்டன் அக்சர் படேலும் ஒரு காரணம். அனுபவம் வாய்ந்த பவுலர்கள் அத்தனை பேர் இருந்தும் பார்ட் டைம் ஸ்பின்னரான நிதிஷ் ராணாவை பவர் ப்ளேயின் முதல் சில ஓவர்களை வீச வைத்தார்.

சென்னை கேப்டன் ருதுராஜ் மாத்யூ ஷார்ட்டை வைத்து செய்த அதே தவறு. நிதிஷ் வீசிய ஐந்தாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்த அபிஷேக் அதன் பின் நிறுத்தவே இல்லை. பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 67/0. அதில் அபிஷேக் மட்டும் 42 ரன்கள். பவர்ப்ளே கடைசி பந்தில் ஹைதராபாத் அணி அடித்த சிக்ஸ் இந்த தொடரில் அவர்களின் 70வது சிக்ஸ். அதிக சிக்ஸர்கள் அடித்த அணி பட்டியலில் இந்த சீசனில் இப்போது ஹைதராபாத் அணிக்குத்தான் முதலிடம்.

ஸ்பின்னர்கள் அக்சரும் குல்தீப்பும் வந்தவுடன் ஓரளவுக்கு மட்டுப்பட்டது ரன்ரேட். அடுத்த 11 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார் அபிஷேக். இதற்கிடையே, ஹெட்டும் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேற அபிஷேக்கோடு இணைந்தார் கேப்டன் இஷான் கிஷன். குல்தீப் வீசிய 11வது ஓவரில் மீண்டும் வேகமெடுத்தார்கள் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள். அந்த ஒரு ஓவரில் மட்டும் 22 ரன்கள். ஸ்கோர் 11 ஓவர்களில் 126/1.

எப்போதெல்லாம் ரன்கள் அதிகம் எடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு பவுலிங் சேஞ்ச்சை கொண்டு வந்தார் டெல்லி கேப்டன் அக்சர். அதற்கு ஓரளவுக்கு பயனும் இருந்தது. நடராஜன் வீசிய இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே. ஆட்டத்தின் போக்கை ஒப்பிடுகையில் நடராஜன் கொடுத்த ரன்கள் குறைவு.

பின் வழக்கம் போல நிதிஷ் ராணா வீசிய 15வது ஓவரில் எல்லாம் மாறியது. அந்த ஒரு ஓவரில் அபிஷேக் மட்டும் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள். சதத்தையும் கடந்தார். அவர் டி20 போட்டிகளில் அடிக்கும் ஒன்பதாவது சதம் இது. அதிக டி 20 சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இப்போது கோலியோடு இவருக்கும் முதலிடம். ஸ்கோர் 15 ஓவர்களில் 183/2.

ஒரு கட்டத்தில் 250 ரன்களை கடந்துவிடுவார்கள் என எல்லாரும் எதிர்பார்த்த நிலையில் இங்கிடி தன் கடைசி இரண்டு ஓவர்களில் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். ஆனாலும் முகேஷ் குமார் வீசிய 20வது ஓவரில் 20 ரன்கள் வர, அணியின் மொத்த ஸ்கோர் 242/2. டி20யில் முதல் ஓவரில் இறங்கி இறுதிவரை அபிஷேக் ஆட்டமிழக்காமல் இருப்பது இது இரண்டாவது முறை.

இந்த இமாலய இலக்கை எட்ட வேண்டுமென்றால் அதற்கு டெல்லி அணியின் ஓப்பனர்கள் மனம் வைக்க வேண்டும். ஆனால், நிசாங்கா மூன்றாவது ஓவரிலேயே 8 ரன்களுக்கு வீழ்ந்தார். இந்தத் தொடரில் இதுவரை பெரிதாக ரன்கள் எடுக்காத, அடிக்கடி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிதிஷ் ராணா மூன்றாவது இடத்தில்... பவுலிங்கில் தான் விட்டுக்கொடுத்த ரன்களை பேட்டிங்கில் எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்தோடு அதிரடியாய் தொடங்கினார்.

நிதிஷ் ராணாவுக்கு நிதிஷ் குமார் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் 16 ரன்கள். அதன்பின்னான இரண்டு ஓவர்களில் பெரிதாய் ரன்கள் வரவில்லை. ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 59/1.

ஷிவாங் குமார் வீசிய 8வது ஓவரில் மீண்டும் நிதிஷ் ராணா புயல். அந்த ஒரு ஓவரில் மட்டும் அவர் எடுத்தது 17 ரன்கள். அடுத்த ஓவரில் தனது 21வது ஐ.பி.எல் அரைசதத்தை அடைந்தார். இங்கிருந்து தொடங்கியது டெல்லியின் வீழ்ச்சி. ராகுல், ராணா, மில்லர் மூவரும் அடுத்த ஐந்தே பந்துகளில் அவுட்டானார்கள். ஸ்கோர் சட்டென 11 ஓவர்கள் முடிவில் 109/4 என்கிற மோசமான நிலைக்குப் போனது.

ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி என ஃபார்மில் இருக்கும் இரு பேட்ஸ்மேன்கள் தான் களத்தில். ஆனால், அவர்கள் களமிறங்கியபோது ஒன்பது ஓவர்களில் 134 ரன்கள் எடுக்க வேண்டியது இருந்தது. அதாவது, ஓவருக்கு கிட்டத்தட்ட 15 ரன்கள். முடிந்தவரை முயன்றார்கள் இருவரும். அடுத்த நான்கு ஓவர்கள் 46 ரன்கள். கடைசி ஐந்து ஓவர்களில் 88 ரன்கள் என்கிற நிலையில் இஷான் மலிங்கா பந்தில் அவுட்டானார் ஸ்டப்ஸ்.

மலிங்காவின் அடுத்த ஓவரில் அஸுதோஷும் அவுட்டாக, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது டெல்லி அணியின் சேசிங். 20வது ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒன்பது விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்களே எடுத்தது. 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. டெல்லிக்கு அதே ஐந்தாவது இடம்தான். ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா.

மலிங்கா மந்திரம்

இந்த போட்டியில் ஹைதராபாத் வெல்ல அபிஷேக் மட்டுமல்ல, இன்னொரு வீரரும் முக்கியக் காரணம். சொல்லப் போனால் கடந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் வெல்ல அவர்தான் மிக முக்கியமான ஆயுதம். இஷான் மலிங்கா. கடைசி மூன்று போட்டிகளில் மட்டும் ஒன்பது விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார்.

இன்றைய தேதியில் டி20யில் ரிவர்ஸ் ஸ்விங்கை கச்சிதமாக போடக்கூடிய சிறந்த பவுலர் இஷான் மலிங்கா தான். பொதுவாக இன்னிங்ஸ் தொடக்கத்தில் புதுப்பந்து இருபக்கமும் பளபளப்பாக இருக்கும். அதனால் பந்தை எந்த திசையில் வைத்து பவுலர் ஸ்விங் செய்கிறாரோ அதற்கேற்றாற்போல இன்ஸ்விங், அவுட்ஸ்விங் நடக்கும்.

ரிவர்ஸ் ஸ்விங் என்பது பந்து நன்றாக பயன்படுத்தப்பட்டபின் சொரசொரப்பான பின் நிகழ்வது. ஏதாவது ஒருபக்கத்தை மட்டும் எச்சில் தொட்டு பளபளப்பாக வைத்துக்கொள்வார்கள் பவுலர்கள். அந்த வழவழப்பான பக்கம் பந்து ஸ்விங் ஆவது ரிவர்ஸ் ஸ்விங் என்பதுதான் எளிய விளக்கம். பந்து இப்படி ஒருபக்கம் சொரசொரப்பாக ஆக, டி20 போட்டிகளில் குறைந்தது 10 ஓவர்கள் ஆகும்.

அதனால்தான் இஷான் மலிங்கா எப்போதுமே பத்தாவது ஓவருக்குப் பின் பவுலிங் போட வருகிறார். டெத் ஓவர்களில் அடிக்கக் காத்திருக்கும் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த அவருக்கு இந்த ரிவர்ஸ் ஸ்விங் பிரதான ஆயுதமாக பயன்படுகிறது. சென்னையுடனான போட்டியில் மிக முக்கியமான கட்டத்தில் அடுத்தடுத்து சர்ப்ராஸ் காலையும் மாத்யூ ஷர்ட்டையும் மலிங்கா வெளியேற்றியது இதே ரிவர்ஸ் ஸ்விங் மேஜிக்கினால் தான். இன்றைய போட்டியில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தியதும் இதே மேஜிக்கினால் தான். இவரின் குரு லஸித் மலிங்கா ஆயிற்றே.

ஹைதராபாத் இந்த சீசனில் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு இப்போது அபிஷேக் சர்மாவின் பேட்டில் மட்டுமல்ல, இஷான் மலிங்காவின் விரல்களிலும்தான் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு