வங்கதேசத்தில் புதிய ஆட்சி: இந்தியா உறவுகளை மீட்பதில் உள்ள சவால்கள் என்ன?

வங்கதேசம் , இந்தியா பாகிஸ்தான், தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, தாரிக் ரஹ்மான்
    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) அமோக வெற்றி பெற்ற நிலையில், மிகவும் கவனமுடன் கூடிய இணக்கமான அணுகுமுறையை இந்தியா வெளிப்படுத்தியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானின் இந்த "தீர்க்கமான வெற்றிக்கு" தனது வாழ்த்துச் செய்தியை வங்க மொழியில் பதிவிட்டார்.

"ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய" அண்டை நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை அவர் உறுதி அளித்தார். மேலும், "நமது பன்முக உறவை" வலுப்படுத்த நெருக்கமாகப் பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வருங்காலத்தை நோக்கியதாக இருந்த இந்த அணுகுமுறை, அதே சமயம் எச்சரிக்கையுடனும் இருந்தது கவனிக்கத்தக்கது.

ஜென் ஸி தலைமையிலான ஜூலை 2024 எழுச்சிக்குப் பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், இரு தரப்பிலும் அவநம்பிக்கை அதிகரித்துள்ளது. நாட்டின் மிகப் பழமையான கட்சியான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதிகாரத்துவப் போக்குடன் செயல்பட்ட ஹசீனாவை ஆதரித்ததற்காகப் பல வங்கதேசத்தினர் இந்தியா மீது அதிருப்தியில் உள்ளனர்.

அது மட்டுமல்லாமல், எல்லையில் நடந்த கொலைகள், நீர்ப் பகிர்வுப் பிரச்னைகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் பேச்சுகள் போன்ற பழைய புகார்களும் சேர்ந்துள்ளன.

தற்போது விசா சேவைகள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளன, எல்லை தாண்டிய ரயில் மற்றும் பேருந்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் டாக்கா - டெல்லி இடையிலான விமானச் சேவைகளும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

இந்தியா யோசிப்பது என்ன?

இந்தியாவைப் பொறுத்தவரை, கேள்வி என்னவென்றால் பிஎன்பி அரசாங்கத்துடன் உறவு கொள்வதா என்பது அல்ல, மாறாக அது எப்படி என்பதுதான்.

கிளர்ச்சிகள் மற்றும் தீவிரவாதம் குறித்த தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அதேவேளையில், வங்கதேசத்தைப் பற்றி இந்தியாவில் பேசப்படும் கடுமையான அல்லது ஆக்ரோஷமான விமர்சனங்களைக் குறைப்பதற்கான வழியை கண்டுபிடிப்பதே இந்தியாவின் சவால்.

உறவைச் சீரமைப்பது சாத்தியம்தான் என ஆய்வாளர்கள் கூறினாலும், அதற்கு இரு தரப்பினரும் நிதானமாகவும், பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

"தேர்தல் களத்திலிருந்த கட்சிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் மிதமான அரசியல் போக்கைக் கொண்ட பிஎன்பி கட்சிதான், இந்தியாவின் எதிர்கால நகர்வுகளுக்குப் பாதுகாப்பான தேர்வாகும். ரஹ்மான் நாட்டை எப்படி ஆட்சி செய்வார் என்பதே இப்போதைய கேள்வி. அவர் இந்தியா-வங்கதேச உறவை நிலைப்படுத்தவே விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் இதைச் சொல்வது எளிது, நடைமுறைப்படுத்துவது கடினம்," என லண்டன் எஸ்ஓஏஎஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் துறைப் பேராசிரியர் அவினாஷ் பாலிவால் கூறுகிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், LightRocket via Getty Images

படக்குறிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் ஷேக் ஹசீனா

உறவு முன்பு எப்படி இருந்தது?

இந்தியாவைப் பொறுத்தவரை, பிஎன்பி கட்சி அறிமுகமில்லாத ஒன்று அல்ல.

தாரிக் ரஹ்மானின் தாயார் காலிதா ஜியா தலைமையிலான பிஎன்பி கட்சி, 2001-இல் இஸ்லாமியவாத அமைப்பான 'ஜமாத்-இ-இஸ்லாமி'யுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவுடனான உறவுகளில் இணக்கத்தன்மை குறைந்து சுணக்கம் ஏற்பட்டது.

பிஎன்பி - ஜமாத் ஆட்சிக் காலத்தில், இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கொந்தளிப்பும், ஆழமான பரஸ்பர அவநம்பிக்கையுமே பெருமளவில் காணப்பட்டது.

தொடக்கத்தில் சில மரியாதையான நகர்வுகள் இருந்தன. காலிதா ஜியாவை வாழ்த்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் இந்தியாவின் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை என்பது மிகவும் குறைவானதாகவே இருந்தது.

அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் பிஎன்பி பேணி வந்த நெருக்கமான உறவு, வங்கதேசம் உத்தி ரீதியாக இந்தியாவை விட்டு விலகிச் செல்கிறதோ என்ற சந்தேகத்தை இந்தியாவிற்கு வலுப்படுத்தியது.

வடகிழக்கு மாநிலக் கிளர்ச்சியாளர்களுக்கு வங்கதேசம் அளிக்கும் ஆதரவைக் கட்டுப்படுத்துவது மற்றும் இந்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பது ஆகிய இரண்டிலும் இந்தியா சவால்களை எதிர்கொண்டது.

தேர்தலுக்குப் பின், போலா மற்றும் ஜெசூர் போன்ற மாவட்டங்களில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்தியாவை கவலைப்படுத்தின. 2004 ஏப்ரலில் சிட்டகாங்கில் 10 லாரிகள் நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது அதைவிட மோசமான அதிர்ச்சியை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

இந்தியக் கிளர்ச்சிக் குழுக்களுக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்த ஆயுதக் கடத்தல், வங்கதேச வரலாற்றிலேயே மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார உறவுகளும் பெரிய முன்னேற்றம் காணவில்லை. டாடா குழுமம் முன்மொழிந்த 3 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டம், எரிவாயு விலை நிர்ணயப் பிரச்னையால் முடங்கி, 2008-இல் முழுமையாகக் கைவிடப்பட்டது.

இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்தன. 2014-ஆம் ஆண்டில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலிதா ஜியா, பாதுகாப்பு காரணங்களைக் கூறி அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்தார். இது இந்தியாவிற்கு இழைக்கப்பட்ட ஓர் அவமதிப்பாகவே பார்க்கப்பட்டது.

இந்தச் சங்கடமான வரலாற்றுப் பின்னணிதான், இந்தியா ஏன் பிற்காலத்தில் ஷேக் ஹசீனா மீது இவ்வளவு பெரிய அரசியல் முதலீட்டைச் செய்தது என்பதை விளக்க உதவுகிறது.

தனது 15 ஆண்டுகால ஆட்சியில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பாதுகாப்பு ஒத்துழைப்பு, மேம்படுத்தப்பட்ட தொடர்பு மற்றும் சீனாவை விட இந்தியாவுடன் இணக்கமாகச் செயல்படும் அரசாங்கம் என அண்டை நாடுகளிடமிருந்து இந்தியா எதை அதிகம் எதிர்பார்க்கிறதோ, அதை ஷேக் ஹசீனா வழங்கினார். இந்த உறவு அரசியல் ரீதியாக பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் உத்தி ரீதியாக மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது.

இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன

'இந்தியாவும் அல்ல, பாகிஸ்தானும் அல்ல'

தற்போது இந்தியாவில் தஞ்சமைடைந்து வாழ்ந்து வரும் ஷேக் ஹசீனா, 2024-ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய ஒடுக்குமுறைக்காக மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். அவர் ஆஜராகமலேயே விசாரணை நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த வன்முறையில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஐநா தெரிவிக்கிறது.

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க இந்தியா மறுத்து வருவது. ஏற்கெனவே சிக்கலாக இருக்கும் இரு நாட்டு உறவைச் சீரமைக்கும் முயற்சியை மேலும் கடினமாக்கியுள்ளது.

கடந்த மாதம், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த டாக்கா சென்றிருந்தபோது, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாரிக் ரஹ்மானைச் சந்தித்துப் பேசினார்.

சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான், "டெல்லியும் (இந்தியாவும்) அல்ல, பிண்டியும் (ராவல்பிண்டி, பாகிஸ்தானும் அல்ல) - எல்லாவற்றிற்கும் மேலாக வங்கதேசமே முக்கியம்" என்று முழங்கினார்.

இதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகமான ராவல்பிண்டியிடமிருந்து தனது நாடு சுதந்திரமாகச் செயல்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான உறவைச் சீர்செய்வதற்கு வங்கதேசம் சற்றும் தாமதிக்கவில்லை. 14 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு டாக்கா - கராச்சி இடையிலான நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

முன்னதாக, 13 ஆண்டுகளில் முதல்முறையாகப் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் வங்கதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளின் உயர் ராணுவ அதிகாரிகளும் பரஸ்பரம் மற்றொரு நாட்டிற்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 2024-25-ஆம் ஆண்டில் 27% அதிகரித்துள்ளது.

ஒருகாலத்தில் பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்திற்கும் இடையில் இருந்த உறவு கசந்து போயிருந்தாலும், இப்போது மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது.

"வங்கதேசம் பாகிஸ்தானுடன் உறவு வைத்திருப்பது இந்தியாவிற்கு கவலையளிக்கவில்லை - இறையாண்மை கொண்ட நாடு என்ற முறையில் அதற்கு அந்த உரிமை உண்டு," என டெல்லியைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தைச் (IDSA) சேர்ந்த ஸ்ம்ருதி பட்நாயக் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அசாதாரணமான விஷயம் என்னவென்றால், ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானுடன் உறவு முற்றிலும் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த நிலை மாறி, மறுதிசையில் மிகத் தூரம் செல்லும் அபாயம் உள்ளது," என்றார்.

 டாக்கா - கராச்சி இடையிலான நேரடி விமானச் சேவை

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, 14 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு டாக்கா - கராச்சி இடையிலான நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது

வங்கதேசத்துடனான உறவு மேம்பட வாய்ப்பு உள்ளதா?

அண்டை நாடான வங்கதேசத்துடனான உறவைச் சீரமைக்கும் எந்தவொரு முயற்சியிலும், ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருப்பது ஒரு முக்கியமான, ஒருவேளை மிகவும் தீவிரமான முட்டுக்கட்டையாக இருக்கக்கூடும்.

"ஹசீனா மீண்டும் வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்ற யதார்த்தத்தை பிஎன்பி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயம், ஹசீனாவை நாட்டிற்கு திரும்பக் கொண்டுவருமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு எதிர்க்கட்சிகள் வங்கதேச அரசை வற்புறுத்தும். ஹசீனாவின் இந்திய தஞ்சம் என்ற விவகாரம், வெளியுறவுக் கொள்கையில் பிஎன்பி-க்கு எதிரான வங்கதேச எதிர்க்கட்சிகளின் சில ஆயுதங்களில் ஒன்றாக இருக்கும்," என்கிறார் ஸ்ம்ருதி பட்நாயக்.

இது எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை. 2024 ஜூலை எழுச்சிக்குப் பிறகு, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இந்தியா தனது மண்ணிலிருந்து அவாமி லீக் கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றால், அது பெரும் சிக்கல்களை உண்டாக்கும். வங்கதேச பொதுத் தேர்தலுக்கு முன் இந்தியாவில் இருந்து ஹசீனா நடத்திய செய்தியாளர் சந்திப்புகள் குழப்பத்தை விளைவித்தன. அவர் தனது செயல்களுக்காக வருத்தம் தெரிவிக்காதவரை அல்லது தலைமை மாற்றத்திற்கு வழிவிட்டு ஒதுங்காதவரை, அவர் இந்தியாவில் இருப்பது இரு நாட்டு உறவுகளையும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது," என ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்கள் துறைப் பேராசிரியர் ஸ்ரீராதா தத்தா கூறுகிறார்.

"அடுத்ததாக, எல்லை தாண்டிய காரசாரமான பேச்சுகள் - இந்திய அரசியல்வாதிகள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் வெளிவரும் கருத்துகள், வங்கதேசத்தை ஓர் இறையாண்மை கொண்ட சமமான நாடாகப் பார்க்காமல், இந்தியா தனது விருப்பத்திற்கு இணங்கும் ஒரு இடமாக மட்டுமே பார்க்கிறது என்ற நம்பிக்கையை வங்கதேச மக்களிடையே வலுப்படுத்தியுள்ளது."

அவினாஷ் பாலிவால் குறிப்பிடுவது போல, இந்த "புதிய இயல்பு" என்பது இரண்டு விஷயங்களைச் சார்ந்து இருக்கும். வங்கதேசத்தின் புதிய தலைமை இந்தியாவுக்கு எதிரான மனநிலையைக் கட்டுப்படுத்துமா என்பது ஒன்று. மற்றொன்று, சமீபத்தில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வங்கதேச கிரிக்கெட் வீரருக்குத் தடை விதித்தது போன்ற நடவடிக்கைகளையும், ஆக்ரோஷமான கருத்துகளையும் இந்தியா குறைத்துக் கொள்ளுமா என்பது.

"தெரிந்தோ தெரியாமலோ, இதில் அவர்கள் தோல்வியடைந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகைமை என்ற வட்டத்திற்குள்ளேயே முடங்கிப் போய்விடும்," என்று அவர் கூறுகிறார்.

 வங்கதேசம், இந்தியா, விளையாட்டு உறவுகள்

பட மூலாதாரம், ICC via Getty Images

படக்குறிப்பு, வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான விளையாட்டு உறவுகள் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

யார் முதலில் அடி எடுத்து வைப்பது?

சீரற்ற நிலையில் இருக்கும் இரு நாட்டு உறவைத் தாங்கிப் பிடிக்கும் நங்கூரமாக பாதுகாப்பு ஒத்துழைப்பு இப்போதும் நீடிக்கிறது.

இந்தியாவும் வங்கதேசமும் ஆண்டுதோறும் ராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றன. ஒருங்கிணைந்த கடற்படை ரோந்து மற்றும் பாதுகாப்பு குறித்த வருடாந்திர பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன. மேலும், பாதுகாப்புத் தளவாட கொள்முதலுக்காக இந்தியா வழங்கிய 500 மில்லியன் டாலர் கடன் வசதியையும் வங்கதேசம் பயன்படுத்தி வருகிறது.

"இந்த ஒத்துழைப்பை பிஎன்பி திரும்பப் பெறும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், கட்சி தற்போது புதிய தலைமை, மாறுபட்ட கூட்டணி போன்ற விஷயங்களுக்கு மத்தியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்குத் திரும்பி இருப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்," என்கிறார் பட்நாயக்.

அனைத்து பிரச்னைகளுக்கும் மத்தியிலும், 4,096 கி.மீ நீளமுள்ள எல்லை, ஆழமான பாதுகாப்பு மற்றும் கலாசாரத் தொடர்புகள் என இரு நாடுகளையும் புவியியலும் பொருளாதாரமும் பிணைக்கின்றன.

தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி வங்கதேசம்தான். அதேபோல், ஆசியாவிலேயே வங்கதேசத்தின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இரு அண்டை நாடுகளும் விலகி இருப்பது சாத்தியமற்றது, சிதைந்துள்ள உறவைச் சீரமைக்க வேண்டியது கட்டாயமாகிறது.

"பிஎன்பி உடனான இந்தியாவின் கடந்தகால உறவு மிகவும் சிக்கலானது; அங்கு புரிதலை விட அவநம்பிக்கையே அதிகம் நிலவியது," என்கிறார் பாலிவால்.

"ஆனால் இன்றைய புவிசார் அரசியல் சூழலில், கடந்தகாலக் கசப்புகள் எதிர்காலத்தைப் பாதிக்காமல் இருக்க தாரிக் ரஹ்மான் காட்டியுள்ள அரசியல் முதிர்ச்சியும், நிதர்சனத்தில் அண்டை நாட்டுனான உறவை மேம்படுத்த இந்தியா தயாராக இருப்பதும் நம்பிக்கையூட்டும் அறிகுறிகளாக உள்ளன."

இப்போது கேள்வி என்னவென்றால், யார் முதலில் அடி எடுத்து வைப்பது என்பதுதான்.

"பெரிய அண்டை நாடு என்ற முறையில் இந்தியாதான் இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும். இந்தியாதான் முன்வந்து உறவை வளர்க்க வேண்டும். வங்கதேசம் ஒரு வலுவான தேர்தலை நடத்தியுள்ளது. இப்போது அவர்களுடன் இணைந்து செயல்பட்டு, நம்மால் எங்கு உதவ முடியும் என்று பார்க்க வேண்டும். கடந்தகால நிகழ்வுகளில் இருந்து பிஎன்பி பாடம் கற்றுக்கொண்டிருக்கும் என நான் நம்புகிறேன்," என்கிறார் தத்தா.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த உறவின் மறுதொடக்கமானது, வெறும் உணர்ச்சிகரமான பேச்சுகளைச் சார்ந்து இல்லாமல், இந்தியா அதிகப்படியான எச்சரிக்கையைத் தவிர்த்து, நம்பிக்கையுடன் கைகொடுக்க முன்வருகிறதா என்பதைப் பொறுத்தே அமையும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு