You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு - யாருக்கு எத்தனை தொகுதிகள்?
(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது. )
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு இன்று முடிவு செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதில் பாமக , அமமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் இடம்பெற்றன.
இந்த கூட்டத்தின் முடிவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.
இதன்படி கூட்டணியில்
- பாஜகவுக்கு - 27 தொகுதிகள்
- பாமகவுக்கு - 18 தொகுதிகள்
- அமமுகவுக்கு - 11 தொகுதிகள்
ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?
கடந்த சில வாரங்களாகத் தொகுதிப் பங்கீடு குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
தொகுதி பங்கீடு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "இன்னும் எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் பேச்சுவார்த்தை முடிவுற்று அந்த கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும்" என்று கூறினார்.
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் சில கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இதன் முடிவில் அந்த விவரங்களை தெரிவிப்போம்" என்றார்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்ற மாநிலங்களில் தோற்கடிக்கப்பட்டது போன்றே தமிழ்நாட்டிலும், திமுக, காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்படும்" என கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை "வருங்கால முதலமைச்சர்" என குறிப்பிட்ட பியூஷ் கோயல், "இவரது தலைமையிலான ஆட்சியை தமிழ்நாடு மக்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது.
இதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இதன் பின்னர் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே களம் கண்டன. இந்த சூழ்நிலையில், 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு