பாபரின் சிறுபடை டெல்லியின் பெரும்படையை தந்திரமாக வென்றது எப்படி? முகலாய பேரரசு வந்த கதை

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

தைமூர் மன்னர் இந்தியாவைத் தாக்கிய பிறகு 125 ஆண்டுகள் கழித்து அவரது ஆறாவது தலைமுறை வழித்தோன்றலான பாபர் இந்தியாவைத் தாக்கும் நடவடிக்கையை தொடங்கினார்.

12 வயதில் இருந்தே பாபரின் வாழ்க்கை சண்டைகளால் நிறைந்திருந்தது. பல முறை தோல்விகளைச் சந்தித்த அவர் ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை மட்டும் விடவில்லை.

அவருடைய ஃபெர்கானா அரசை (இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ளது) இழந்த பிறகு காபூலில் தன்னை நிறுவிக் கொண்டார். அங்கிருந்து பஞ்சாப் மீது பல தாக்குதல்களை நடத்தினார். அப்போது டெல்லி சுல்தானாக இருந்த இப்ராஹிம் லோதியின் பிரதிநிதியாக தௌலத் கான் பஞ்சாபை ஆட்சி செய்து வந்தார்.

தௌலத் கான் இப்ராஹிம் லோதிக்கு விசுவாசமாக இல்லை. ஒருநாள் லோதியின் ஆட்சியிலிருந்து விடுபடுவோம் என்கிற நம்பிக்கையில் அவர் ரகசியமாக பாபரை ஆதரித்து வந்தார். ஆனால் பாபர் அவரைத் தோற்கடித்து பஞ்சாபை தனதாக்கிக் கொண்டார்.

பிரபல வரலாற்றாசிரியரான ஜாடுநாத் சர்கார் தனது "இந்தியாவின் ராணுவ வரலாறு (Military history of India)" புத்தகத்தில் குறிப்பிடுகையில், "1517-இல் டெல்லி சுல்தானான இப்ராஹிம் லோதி மிகவும் தைரியமான மனிதர். ஆனால் அவரது உறவினர்களின் கலகத்தால் நிறைய பிரச்னைகளைச் சந்தித்து வந்தார்." என்கிறார்.

அதில், "அவர்கள் இப்ராஹிம் லோதியை அதிகாரத்திலிருந்து நீக்கி தங்களின் சொந்த அரசை நிறுவ முயன்றனர். அவரின் பிரச்னைகளுக்கு மற்றுமொரு காரணத்தை பாபரின் வரிகளில் குறிப்பிட வேண்டுமென்றால், அவரது 'அறியாமை' தான். அதனால் பாபரின் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக அவரால் எந்த ஆக்கப்பூர்வமான திட்டத்துடன் செயல்பட முடியவில்லை." எனத் தெரிவித்தார்.

பாபரின் வீரர்கள் கடும் ஒழுக்கத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்றும் திறம்வாய்ந்த தளபதிகளால் வழிநடத்தப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பாபரின் சிறிய ராணுவம்

பாபரின் பயணம் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரிலிருந்து தொடங்கியது. 1525-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி பாபர் சிந்து நதியைக் கடந்தபோது அவரின் படைகளைக் கவனமாக எண்ணினார்.

எண்ணி முடிக்கையில், எதிர்பார்த்ததைவிட படைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் அவரிடம் மொத்தம் 12,000 வீரர்கள் இருந்தனர். அதன் பிறகு முந்தைய இந்திய நடவடிக்கையின் போது விட்டுச் செல்லப்பட்ட வீரர்களும் அதிருப்தியிலிருந்த ஆப்கன் வீரர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர்.

இவை அனைத்தும் நிகழ்ந்ததால் பாபர் பானிபட்டை அடைந்தபோது அவரின் ராணுவம் 20,000 வீரர்களாக பெரிதாகியிருந்தது. அந்தச் சூழலிலும் அவரது ராணுவம் லோதியின் ராணுவத்தைவிட மிகவும் சிறியதாகவே இருந்தது. தனது ராணுவம் 1,00,000 என்கிற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என பாபர் கணக்கிட்டிருந்தார்.

அவரது படையில் ஆயிரம் யானைகளும் இருந்தன. லோதி படைகளின் எண்ணிக்கை பலத்தை எதிர்கொள்ள பாபரிடம் ஒரு திட்டம் இருந்தது. அது மேம்பட்ட ஆயுதங்கள். மேம்பட்ட ராணுவ நடவடிக்கை மூலமே லோதியின் படைகளை வீழ்த்த முடியும் என்று அவர் கணக்கிட்டார்.

"பாபர் மிக வேகமாக முன்னேறி வந்தாலும், லோதியின் படைகள் நாள் ஒன்றுக்கு 2-இல் இருந்து 3 மைல் தூரம் என்கிற ரீதியில் மிகவும் மெதுவாகவே நகர்ந்து வந்தன. இடையே இரண்டு நாட்களுக்கு நின்றுவிடுவார். ஒழுங்கில்லாமல் நகரும் ஒரு நகரத்தைப் போல அவரது ராணுவம் இருந்தது," என்கிறார் ஜாடுநாத் சர்கார்.

ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட போர்த்திறன்

அதற்கு முன்னதாக, பெரிய ராணுவங்கள் வர முடியாத மலைப்பாங்கான நிலப்பரப்பில் தான் தனது பெரும்பாலான போர்களை பாபர் வென்றிருந்தார். இந்தப் போர்கள் ராணுவத்தின் அளவைப் பொருத்து இல்லாமல் புத்திசாலித்தனம், நிலப்பரப்பின் உத்தி சார்ந்த பயன்பாடு மற்றும் எதிரியை புத்திசாலித்தனமாக வீழ்த்துவது ஆகியவற்றால் தான் தீர்மானிக்கப்படுகின்றன.

பானிபட்டில் முதல் முறையாக சமவெளிப் பகுதியில் பாபர் போர் புரிந்தார். இங்கு படைகளின் எண்ணிக்கை பலத்தை புறந்தள்ளிவிட முடியாது.

ஆப்ரஹாம் எராலி என்பவர் தனது "மயில் சிம்மாசனத்தின் பேரரசர்கள் ( Emperors of the Peacock Throne) புத்தகத்தில், "பாபருக்கு இருந்த மிகப்பெரிய சவால் லோதியின் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை தனது மேம்பட்ட ஆயுதம் மற்றும் ராணுவ திறன்களால் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பது தான். லோதியின் வீரர்கள் தனது சிறிய ராணுவத்தைச் சூழ்ந்துவிடாமல் இருக்க போர்க்களம் எவ்வளவு குறுகலாக இருக்கிறதோ அவ்வளவு சிறந்தது என்பதே பாபரின் உத்தியாக இருந்தது." எனத் தெரிவிக்கிறர்.

மேலும் தனது புத்தகத்தில், "போர்க்களம் குறுகலாக இருப்பது மட்டும் பாபருக்குப் போதுமானதாக இருந்திருக்காது. ஏனென்றால் லோதியின் நேரடி தாக்குதல்களை எதிர்கொள்ளும் அளவுக்கு பாபரின் ராணுவம் இல்லை."

"ஓர் உத்தியை உருவாக்க தனது மூத்த தளபதிகளை அழைத்து கூட்டம் நடத்தினார். அதில் பாரம்பரிய முகலாயர் போர்த் திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு பானிபட் போர்க்களத்தை ஆராய தனது உளவாளிகளை அவர் அனுப்பினார்." என்று குறிப்பிட்டுள்ளார்.

துணியால் கட்டப்பட்ட மாட்டு வண்டிகள்

பானிபட் சமவெளிகள் பாபரை விடவும் லோதிக்குத் தான் பொருத்தமானதாக இருக்கிறது என அவரது உளவாளிகள் தெரிவித்தனர். பாபருக்கு நன்மையளிக்கக் கூடிய எதுவும் அந்த சமவெளிப் பகுதிகளில் இல்லை. மிகவும் தட்டையான அந்த சமவெளிப் பகுதியில் சில மரங்கள் மற்றும் புதர்களே இருந்தன.

பானிப்பட்டை அடைந்த பிறகு பாபர் தனது ராணுவத்தை, பானிபட் நகரம் மற்றும் யமுனா நதிக்கு இடையேயான நகரத்தின் கிழக்குப் பக்கத்திற்கு அனுப்பினார். அப்போது யமுனா நதி நகரத்திற்கு அருகே பாய்ந்து கொண்டிருந்தது.

பாபர் தனது பாபர்நாமா என்கிற சுயசரிதையில், "நான் உஸ்தாத் அலி குலியிடம் 700 மாட்டு வண்டிகளைச் சங்கிலி கொண்டு அல்லாமல் தோல் கயிறுகளைக் கொண்டு கட்டுமாறு உத்தரவிட்டேன்." எனத் தெரிவிக்கிறார்.

"இரு மாட்டி வண்டிகளுக்கு இடையே 5 அல்லது 6 மரப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். அவற்றுக்குப் பின்னால், சேதத்தை ஏற்படுத்த வெடிமருந்துடன் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். பாபர் 5 அல்லது 6 நாள் போருக்கு முழுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்." என்றும் குறிப்பிட்டார்.

"அனைத்தும் தயாரான பிறகு அவர் தனது வீரர்களிடம் உரை நிகழ்த்தினார். 'ஒரு புறம் பானிபட்டின் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் நமது கேடயமாக செயல்படும். மறுபுறம் தோல் கயிறுகளால் கட்டப்பட்ட மாட்டு வண்டிகள் நம்மை பாதுகாக்கும். அவற்றுக்குப் பின்னால் நமது காலாட்படை தாக்குவதற்கு தயாராக இருக்கும்' என்று பேசினார். ஏப்ரல் 12-ஆம் தேதி பாபரின் தயாரிப்புகள் முழுமையடைந்தன."

லோதிக்காக காத்திருந்த பாபர்

பாபரின் ஒட்டுமொத்த உத்தியும் லோதி அவரைத் தாக்குவதை அடிப்படையாக வைத்து இருந்தது.

லோதியின் பகுதிக்குள் முகலாயர்கள் நுழைந்திருப்பதால் அவர்களை வெளியேற்றுவது தனது கடமை என்று நினைத்து லோதி முதலில் தாக்குவார் என பாபர் அனுமானித்திருந்தார்.

மறுபுறம், லோதி இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்.

"லோதி பாபரைத் தாக்கவில்லை. பாபர் டெல்லியை நோக்கி முன்னேறாமல் தடுப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. தற்காப்பு தான் சிறந்தது என அவர் எண்ணினார். அவரால் காத்திருக்க முடிந்தது. மறுபுறம் பாபருக்கு தனது படைகளின் மன உறுதி குறைந்துவிடாமல் இருக்க உடனடி முடிவுகள் தேவைப்பட்டன. ஏழு நாட்களுக்கு அவர் லோதியின் தாக்குதலுக்காக கவலையுடன் காத்துக் கொண்டிருந்தார்." என ஆப்ரஹாம் எராலி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "பாபர் தனது வீரர்களின் மன உறுதியை ஊக்குவிக்க லோதியின் போர் திறன்களைக் கேலி செய்தார். லோதியின் வீரர்களைத் தூண்டிவிட சிறிது தூரத்திலிருந்து அம்புகளை எய்தார். ஆனால் லோதியின் ராணுவம் அவரைக் கண்டுகொள்ளவில்லை." என்கிறார்.

பாபர் வைத்த பொறியில் விழுந்த லோதியின் வீரர்கள்

இறுதியாக பாபர் தனது உத்தியை மாற்ற நிர்பந்திக்கப்பட்டு, ஏப்ரல் 19-ஆம் தேதி நள்ளிரவு லோதியின் ராணுவத்தின் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தினார். பாபரின் இடது பக்கத்தில் இருந்து சுமார் 4,000 வீரர்கள் முதலில் தாக்கினர்.

தாக்குதல் நடத்தும் தனது படைகள் வெற்றியடைந்தால் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மீதமுள்ள படைகளைப் போருக்கு அனுப்பலாம் என்கிற நம்பிக்கையில் பாபர் படைகளுடன் நடுவில் நின்று கொண்டார்.

அவர்கள் வெற்றி அடையவில்லை என்றால் தனது வீரர்கள் பின்வாங்கி வரும் வீரர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார்.

பாபரின் தாக்குதல் தோல்வியடைந்தது. லோதியின் ராணுவத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்திருந்த பாபர், அவர்கள் தாக்குதலுக்கு தயாராக இருந்ததை கண்டார்.

ஆனாலும், இந்த தாக்குதல் தோல்வியடைந்தாலும், அவர் ஏற்கனவே எதிர்பார்த்ததை கொடுத்தது. லோதியின் படைகள் பாபரின் படைகள் நிலைகொண்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தின.

ஏப்ரல் 20-ஆம் தேதி அமைதியான நாளாகவே இருந்தாலும் ஏப்ரல் 21-ஆம் தேதி காலை, களத்தில் முன்னணியில் இருந்த முகலாய வீரர்கள் லோதியின் படைகள் முன்னேறி வரும் தகவலைக் கொண்டு சேர்த்தனர்.

முந்தைய இரவில் தோல்வியடைந்த பாபரின் தாக்குதல் முகலாயர்களை எளிதாக அடிபணிய வைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை லோதிக்கு ஒருவேளை வழங்கியிருக்கலாம்.

ஆனால் இது மிகப்பெரிய தவறாக முடிந்தது. பாபர் வைத்த பொறியில் லோதியின் வீரர்கள் விழுந்தனர்.

திரும்பி ஓடிய லோதியின் யானைகள்

அப்பாஸ் மல்தாஹியார் தனது "பாபர்: இந்தியாவுக்கான தேடல் - Babar the Quest for Hindustan' என்கிற புத்தகத்தில் , "அவர்களுக்காக (லோதியின் படைகள்) பாபர் தனது ஆயுதங்கள் மற்றும் மாட்டு வண்டிகளுடன் காத்துக் கொண்டிருந்தார். பின்னே, எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தனது ரிசர்வ் படைகளை பாபர் நிறுத்தியிருந்தார்." என்கிறார்.

அவர் இதைப் பற்றி மேலும் குறிப்பிடுகையில், "முன்னேறி வந்த லோதியின் படைகள் இடதுபுறம் பானிபட்டின் சுவர்கள் மற்றும் வலதுபுறம் முகலாயர்கள் தோண்டி வைத்த குழிகள் மற்றும் தடைகளுக்கு இடையே இருப்பதை உணர்ந்தனர். முகலாயர்களின் தடுப்புகளை லோதியின் படைகள் நெருங்கிய போது முகலாயர்கள் தாக்கினர்."

"அந்த குறுகலான பகுதியைக் கடந்து சென்ற ஆப்கன் வீரர்கள் சிதறினர். சிறிது நேரத்தில் லோதியின் ராணுவம் ஒரு ராணுவமாக அல்லாமல் ஒரு மக்கள் கூட்டமாக மாறிப்போனது. அவர்களால் முறையாக சண்டையிடவும் முடியவில்லை, பின்வாங்கிச் செல்லவும் முடியவில்லை." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபரின் உத்தரவுகள் தெளிவான இருந்தன. அதைப்பற்றி தனது சுயசரிதையில் அவர் குறிப்பிடுகையில், "எதிரி மீது அம்பு மழை பொழிய நான் உத்தரவிட்டிருந்தேன். எனது தளபதி மஹ்தி கவாஜா தொடர்ந்து அம்புகளைச் செலுத்தினார். அதனால் லோதியின் யானைகள் பின்வாங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டன." எனத் தெரிவிக்கிறார்.

"சிறிது நேரத்தில் எதிரிப் படைகளின் நிலை சிலந்தி வலையில் சிக்கிய இரையைப் போல ஆகிவிட்டது," எனக் குறிப்பிடுகிறார் பாபர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பாபர், லோதியின் ராணுவத்தை பின்பக்கம் இருந்தும் தாக்கினார்.

"ஆப்கானியர்கள் (லோதியின் வீரர்கள்) தைரியமாக சண்டையிட்டார்கள். ஆனால் அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. சூரிய உதயத்தில் சண்டை தொடங்கியது, மதியத்திற்குள் லோதியின் ராணுவம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது." என்றும் பாபர் தெரிவிக்கிறார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "எனது கணிப்பின்படி, 15,000-இல் இருந்து 16,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த போர்க்களமும் எதிரிகளின் பிணங்களால் மூடப்பட்டிருந்தது." என்றார்.

உயிரிழந்தவர்களில் இப்ராஹிம் லோதியும் ஒருவர். போர்க்களத்தில் கொல்லப்பட்ட ஒரே டெல்லி சுல்தான் அவர் தான்.

அதைப் பற்றி ஆப்ரஹாம் எராலி குறிப்பிடுகையில், "முகலாயர்கள் அவரது உடலைக் கண்டுபிடித்த போது பாரம்பரியத்ததின்படி அவரின் தலையைத் துண்டித்து பாபரிடம் நினைவுப்பரிசாக வழங்கினர். லோதி உடலுக்கு மரியாதை காட்டிய பாபர், 'உனது தைரியத்தை மதிக்கிறேன்' எனத் தெரிவித்தார். போருக்கு முன்பாக லோதியைப் பற்றி மோசமாகப் பேசிய பாபர் அவரின் இறந்த உடலுக்கு வணக்கம் செலுத்தினார். லோதியின் உடலை பட்டுத்துணியால் போர்த்த உத்தரவிட்டார்."

"இப்ராஹிம் லோதியின் உடலைக் சுத்தம் செய்து அவர் இறந்த இடத்தில் முழு மரியாதைகளுடன் அடக்கம் செய்யுமாறு தனது தளபதிகள் திலாவர் கான் மற்றும் அமீர் கலிஃபாவிற்கு பாபர் உத்தரவிட்டார்."

பாபர் பெயரில் பிரசங்கம்

இந்தப் போர் பற்றி பாபர் தனது சுயசரிதையில் மேலும் குறிப்பிடும் போது, "இந்திய பேரரசு வெறும் 5 மணி நேர சண்டையில் வெல்லப்பட்டது. நேரத்தை வீணடிக்காமல் லோதியின் தலைநகரான ஆக்ராவைக் கைப்பற்றி அவரது கஜானாவை கட்டுப்பாட்டில் எடுக்குமாறு நான் ஹுமாயூனை அறிவிறுத்தியிருந்தேன்." என்றார்.

அடுத்த நாள் பாபர் ஆக்ரா நோக்கி புறப்பட்டார். டெல்லியில் சில நாட்கள் தங்கினார். அப்போது கஜானாவைக் கைப்பற்றியதோடு நகரத்தின் அரண்மனைகள், தோட்டங்கள் மற்றும் புனித தலங்களுக்குச் சென்றார்.

அலாவுதீன் கில்ஜி மற்றும் கியாசுதீன் பல்தானின் கல்லறைகளுக்குச் சென்றார். அத்துடன் குதுப் மினார், ஹௌஸ் காஸ் மற்றும் சிக்கந்தர் லோதியின் தோட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

"அதிகாரத்தின் சின்னங்களை ஆராய்ந்த பிறகு, நான் படகு ஒன்றில் ஏறி எனது வெற்றியைக் கொண்டாட அரக் பருகினேன். இரவான பிறகு நான் யமுனா நதிக்கரையில் நின்று துக்ளகாபாத் கோட்டையைப் பார்த்தேன். கடந்த சென்ற ஒவ்வொரு நாளும் இந்தியா மீதான எனது பிடி வலுவானது," என பாபர் எழுதுகிறார்.

பாபர் தனது ஆட்சியை சட்டப்பூர்வமாக்க நகரின் முக்கியமான மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின்போது தனது பெயரில் பிரசங்கம் வாசிக்கப்படுவதை உறுதி செய்தார். இந்தப் பணியை மௌலானா மஹ்மூத் மற்றும் ஷேக் ஜெயின் செய்து முடித்தனர்.

பானிபட்டிலிருந்து 280 கிமீ பயணத்தை இரண்டு வாரங்களில் முடித்த அவர் மே 4-ஆம் தேதி ஆக்ராவிற்குள் நுழைந்தார். நகரின் வெளிப்புறத்தில் உள்ள திறந்தவெளியில் ஒரு வாரத்திற்கு முகாமிட்டார்.

மே 10-ஆம் தேதி மிகப்பெரிய பேரணியாக ஆக்ராவுக்குள் நுழைந்தார் பாபர். இப்ராஹிம் லோதியின் அரண்மனை முன் தனது குதிரையில் இருந்து இறங்கி ஹிந்துஸ்தானின் பேரரசராக அரியணை ஏறினார்.

அந்த நேரத்தில் 43 வயதான பாபர் இந்தியாவிலே நிரந்தரமாக இருந்துவிட முடிவெடுத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு