'14 கிரவுண்ட் நில வாடகை ரூ.1,400': மயிலாப்பூர் கோவில் நிலம் பற்றிய அம்ருதாஞ்சன் நிறுவன வழக்கில் தீர்ப்பு விவரம்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 14 கிரவுண்ட் நிலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெறும் 1,400 ரூபாய் வாடகையை செலுத்தி அம்ருதாஞ்சன் நிறுவனம் அனுபவித்து வந்தது. வாடகை உயர்வு அமலுக்கு வந்த நாளில் இருந்து எந்த தொகையையும் செலுத்தவில்லை'

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது இந்துசமய அறநிலையத்துறை இவ்வாறு வாதிட்டது.

நிலுவையில் உள்ள வாடகைத் தொகையை செலுத்த மறுத்து அம்ருதாஞ்சன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

வலி நிவாரண தைலம் தயாரிப்பில் புகழ்பெற்ற அம்ருதாஞ்சன் நிறுவனம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுமார் 132 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்நிறுவனம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 14 கிரவுண்ட் மற்றும் 910 சதுர அடி நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

'1901 ஆம் ஆண்டு 99 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் இந்த நிலத்தை பி.ஆர்.சுந்தர ஐயர் என்பவருக்கு கோவில் நிர்வாகம் வழங்கியது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்தது.

அப்போது மாத வாடகையாக 1,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு குத்தகை உரிமை வழங்கப்பட்டுள்ளது. தனக்குக் கிடைத்த குத்தகை உரிமையை ராமாயி அம்மாள் என்பவருக்கு பி.ஆர்.சுந்தர ஐயர் மாற்றிக் கொடுத்துள்ளதாக, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறினார்.

ராமாயி அம்மாளிடம் இருந்து குத்தகை உரிமையை அம்ருதாஞ்சன் நிறுவனம் பெற்றுள்ளது. அந்தவகையில், ஒரு நூற்றாண்டாக 1,400 ரூபாயை வாடகையாக செலுத்தி நிலத்தைத் தொடர்ந்து அம்ருதாஞ்சன் நிறுவனம் ஆக்கிரமித்து வந்துள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்தது.

பி.ஆர்.சுந்தர ஐயருக்கு வழங்கப்பட்ட 99 ஆண்டுகால குத்தகை உரிமை, கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. 'இதன்பின்னரும் நிலங்களை அம்ருதாஞ்சன் நிறுவனம் தொடர்ந்து ஆக்கிரமித்திருந்தது' என அரசுத் தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறினார்.

2001 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் தரப்பில் அம்ருதாஞ்சன் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'ஆனால், காலி செய்வதற்கு அந்நிறுவனம் முன்வரவில்லை' என நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை வாதிட்டது.

2005 ஆம் ஆண்டு கோவில் சொத்துகளுக்கு உரிய வாடகையை நிர்ணயிப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவினர், சென்னை நகரின் மையப்பகுதியான லஸ் சர்ச் சாலையில் உள்ள குறிப்பிட்ட 14 கிரவுண்ட் நிலத்துக்கு மாத வாடகையாக 3.3 லட்ச ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு முதல் இதனைக் கணக்கிட்டு வாடகையை செலுத்துமாறு, அம்ருதாஞ்சன் நிறுவனத்துக்கு கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அம்ருதாஞ்சன் நிறுவனம் வாடகையை செலுத்தவில்லை.

அந்தவகையில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு வாடகை நிலுவைத் தொகையாக 9.74 கோடி ரூபாயை அந்நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளதாக, நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்தது.

அம்ருதாஞ்சன் வாதம் என்ன?

முன்னதாக, '1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்துசமய அறநிலைத்துறைச் சட்டப் பிரிவு 34A (5)ன்படி இந்த உத்தரவு சட்டவிரோதமானது. அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது' என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதாஞ்சன் நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது.

அம்ருதாஞ்சன் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "உயர்த்தப்பட்ட வாடகையை முன்தேதியிட்டு வசூலிக்க முற்படும்போது பணத்தை முன்னரே செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை, தங்களுக்கு மிகப் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது' என வாதிட்டார்.

மனுவின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டபாணி, அம்ருதாஞ்சன் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தார்.

அம்ருதாஞ்சன் நிறுவனத்திடம் 2001ஆம் ஆண்டில் இருந்து வாடகைப் பாக்கியை வசூல் செய்யுமாறு இந்துசமய அறநிலையத்துறைக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் தனி நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதாஞ்சன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வு விசாரித்தது. வழக்கின் விசாரணையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், 1890 ஆம் ஆண்டு வருவாய் மீட்புச் சட்டத்தின்கீழ் (Revenue Recovery Act) அம்ருதாஞ்சன் நிறுவனம் மீது நடவடிக்கைகளைத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு அம்ருதாஞ்சன் வசம் இருந்த 14 கிரவுண்ட் கோவில் நிலம் மீட்கப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிலுவையில் உள்ள வாடகைப் பணத்தை அம்ருதாஞ்சன் நிறுவனம் செலுத்தவில்லை.

'அசல் குத்தகைதாரர் அல்ல'

வழக்கின் வாதத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் vs தமிழ்நாடு அரசு என்ற வழக்கை இந்துசமய அறநிலையத்துறை மேற்கோள் காட்டிது.

"இந்த வழக்கின் தீர்ப்பு முன்பணத்தை (Pre-deposit) செலுத்துமாறு வலியுறுத்தும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கும் சட்டப்பிரிவை உறுதி செய்திருந்தது" என வழக்கறிஞர் அருண் நடராஜன் வாதிட்டார்.

வாடகை நிர்ணயம் என்பது முற்றிலும் ஒப்பந்தம் சார்ந்த ஒன்றாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 2018 ஆம் ஆண்டு வரை கோவில் நிலத்தை அம்ருதாஞ்சன் நிறுவனம் தன்வசம் வைத்திருந்ததையும் தலைமை நீதிபதி அமர்வில் அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, 'அம்ருதாஞ்சன் நிறுவனம் அசல் குத்தகைதாரர் அல்ல' எனக் குறிப்பிட்டு, 'தனது குத்தகை உரிமையை அம்ருதாஞ்சன் நிறுவனத்திடம் அசல் குத்தகைதாரர் ஒப்படைத்துவிட்டார்' எனத் தீர்ப்பில் தெரிவித்தது.

'போதிய ஆவணங்கள் இல்லை' - தலைமை நீதிபதி அமர்வு

' அறநிலையத்துறை ஆணையரிடம் சட்டப்பூர்வ மேல்முறையீடு செய்யப்பட்டது குறித்தும் முன் நிபந்தனையாக கோரப்பட்ட வாடகையை செலுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியது குறித்தும் நிரூபிப்பதற்கு போதிய ஆவணங்களை அம்ருதாஞ்சன் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை' என தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது.

'வாடகையை நிர்ணயம் செய்வதற்கு முன்பு தங்கள் தரப்பை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை' என அம்ருதாஞ்சன் நிறுவனம் தரப்பில் வாதிடப்படவில்லை எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

'ஆனால், முன்பணம் செலுத்த வலியுறுத்தும் அதிகாரத்தை வழங்கும் சட்டப் பிரிவை மட்டும் அம்ருதாஞ்சன் நிறுவனம் எதிர்க்கிறது' என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

'இவ்வாறு தொகையை செலுத்துவதை கட்டாயமாக்கும் நிபந்தனை, தங்களுக்கு மிகவும் சுமையை ஏற்படுத்தும்' என அம்ருதாஞ்சன் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி அமர்வு, "இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அத்தகைய வாடகை வருவாயை பெரிதும் சார்ந்திருக்கும் சமய நிறுவனங்களால் தங்கள் சொத்துகளை பராமரிக்கவோ அல்லது சமயக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்' எனக் குறிப்பிட்டது.

அந்தவகையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாகக் கூறி, அம்ருதாஞ்சன் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

'அதிகரிக்கும் குத்தகை பிரச்னை'

கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுப்பது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை சட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ்.

" ஓர் இடத்தை ஐந்தாண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்றால் அரசாணை வெளியிட வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவான ஒப்பந்தம் என்றால் அறநிலையத்துறை ஆணையரே ஒப்புதல் அளிக்கலாம்" என்கிறார் அவர்.

"ஐந்தாண்டுகளுக்கு மேல் குத்தகை எடுத்துவிட்டு அதை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது சட்டவிரோதம்" எனக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "ஆனால், பணத்தைக் குத்தகைதாரர் பெயரிலேயே கோவிலுக்கு செலுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன" என்கிறார்.

'மேலும் சில சவாலான வழக்குகள்' - அறநிலையத்துறை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் கவேனிதாவிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் பேசியது.

" நீதிமன்ற உத்தரவு தொடர்பாக கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். அதில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்கிறார்.

"அம்ருதாஞ்சன் நிறுவனத்துக்கு உரிய கட்டணத்தை நிர்ணயித்தும் அவர்கள் அதை ஏற்கவில்லை" எனக் கூறும் கவேனிதா, "இது மிக முக்கியமான வழக்கு. அம்ருதாஞ்சன் நிறுவனம் போலவே மேலும் சில வழக்குகள் உள்ளன. அவை அனைத்துமே எங்களுக்கு சவாலானவை தான்" என்கிறார்.

நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக அம்ருதாஞ்சன் நிறுவனத்தின் விளக்கத்தைப் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அதற்கான முயற்சிகள் பலன் அளிக்காததால் அந்நிறுவனத்தின் இமெயில் முகவரிக்கு பிபிசி தமிழ் கேள்விகளை அனுப்பியுள்ளது.

தற்போது வரை விளக்கம் கிடைக்கவில்லை. அந்நிறுவனம் விளக்கம் அளித்தால் உரிய பரிசீலனைக்குப் பிறகு கட்டுரையில் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு