"மதுரை வீரனை வழிபட முடியவில்லை" - கரூர் அருகே சாதி பாகுபாடு பிரச்னையில் பிபிசி நடத்திய கள ஆய்வு

'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்டு வரும் முயற்சியின் தொடர்ச்சியாக வெளியாகும் இரண்டாவது கட்டுரை இது.
தங்கள் பகுதிகளில் நிலவும் பல்வேறு சாதிப் பிரச்னைகள் குறித்த தகவல்களை பிபிசி தமிழிடம் மக்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில், "எங்கள் ஊரில் ஆலய வழிபாடு முதல் இடுகாடு வரை பல்வேறு துயரங்களை அருந்ததிய சாதி மக்கள் எதிர்கொள்கின்றனர்" என கரூர் மாவட்டத்தின் தெத்துப்பட்டி கிராமத்தில் இருந்து பிபிசி தமிழுக்கு தகவல் கிடைத்தது.
அந்தக் கிராமத்துக்கு பிபிசி தமிழ் குழு சென்று கள ஆய்வில் ஈடுபட்டபோது கிடைத்த தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள பள்ளபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் தெத்துப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஊராட்சியில் விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன.
தெத்துப்பட்டி ஊராட்சிக்குள் ஊத்துப்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. ஊரின் வலதுபுறத்தில் சுமார் 30 அருந்ததிய குடும்பங்களும் இடதுபுறத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாற்று சாதி குடும்பங்களும் வசித்து வருகின்றன.
இவர்களைத் தவிர ஐம்பதுக்கும் மேற்பட்ட பறையர் சாதி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், அருந்ததிய சாதி மக்கள் மட்டுமே பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
'மதுரை வீரனை கும்பிட முடியவில்லை'
மாற்று சாதியினர் வசிக்கும் பகுதியின் சாலையோரத்தில் அருந்ததிய மக்கள் வழிபாடு நடத்தும் மதுரை வீரன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. சாதிய பாகுபாடு காரணமாகக் கடந்த நான்கு வருடங்களாக தங்களால் சாமி கும்பிட முடியவில்லை எனக் கூறுகிறார், ஊத்துப்பட்டியில் வசிக்கும் ராஜா.
இவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " நீண்டகாலத்துக்கு முன்பு மதுரை வீரன் கோவிலுக்கு பின்புறம் ஐந்து அருந்ததிய குடும்பங்கள் வசித்து வந்தன. ஊருக்குள் வெள்ளம் வந்ததால் அவர்கள் மேட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்" என்கிறார் அவர்.
ஆண்டுதோறும் மதுரை வீரன் சாமிக்கு திருவிழாவை எடுப்பது அருந்ததிய சமூக மக்களின் வழக்கமாக உள்ளது. "கடந்த நான்கு வருடங்களாக கும்பிட முடியவில்லை. 'அந்தப் பகுதி பக்கமே வரக் கூடாது' என மாற்று சாதியைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்கின்றனர்" என அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என அனைவரிடமும் மனு கொடுத்தும் வழிபாடு நடத்த முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெத்துப்பட்டி ஊராட்சியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையில் செல்வதற்கு தார்ச்சாலையை அமைக்கும் பணியில் தெத்துப்பட்டி ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
மதுரை வீரன் ஆலயம் அமைந்துள்ள பகுதி வழியாக சாலையை அமைப்பது என முடிவெடுத்ததால், கோவிலை சற்று பின்பக்கமாக கட்டிக் கொள்ளலாம் என அனைத்து சாதியினரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் அது அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. "கோவிலைக் கட்டக் கூடாது என சிலர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் இடம் எனக் கூறி நீதிமன்றத்திலும் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால் கோவில் கட்டுமானம் பாதிக்கப்பட்டது" என்கிறார் ராஜா.
தனது பட்டா நிலத்தில் மதுரை வீரன் கோவிலைக் கட்டுவதாகக் கூறி நிலத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளதை இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தெத்துப்பட்டி ஊராட்சியில் அனைத்து சாதியினருக்கும் பொதுவான ஊராட்சி கிணறு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் கிணற்றை மூடி பிற சாதியினர் கோவில் கட்டுவதால் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகக் கூறுகிறார், இங்கு வசிக்கும் கீதா.
"கிணறு பற்றிப் பேசினால், 'உங்களை எல்லாம் வேண்டாம் என ஒதுக்கிவிட்டோம். எங்களிடம் பேசக் கூடாது' என பிற சாதியினர் கூறுகின்றனர். இதனால் போதிய குடிநீரின்றி அவதிப்படுகிறோம்" என்கிறார் கீதா.
4 சாதிகளுக்கும் சேர்த்து சுடுகாடு... ஆனால்?
இவைதவிர ஊத்துப்பட்டியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் பல்வேறு பாகுபாடுகளை அருந்ததிய சமூக மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
"தெத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தம்ம நாயக்கர் இருந்தபோது இங்குள்ள நான்கு சாதிகளுக்கும் சேர்த்து சுடுகாடு கட்டப்பட்டுள்ளது. அனைவரும் மேலே உள்ள மேடையில் வைத்து உடலை எரித்துக் கொள்ளலாம் எனக் கூறினர்" என்கிறார், ஊத்துப்பட்டியை சேர்ந்த ராஜா.
சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அருந்ததியர் சமூக ஆண் ஒருவரை பொது சுடுகாடு மேடையில் வைத்து எரித்துள்ளனர்.
"இதனால் பிற சாதியினர் கோபப்பட்டனர். இதன்பிறகு அங்கு வைத்து உடல்களை எரிப்பதில்லை. ஓடைக்கு அருகில் வைத்து உடல்களை எரித்து வருகிறோம்" என்கிறார் அவர்.
அங்கும் அடக்கம் செய்வதற்கு இரண்டு குழிகள் மட்டுமே உள்ளதாகக் கூறும் ராஜா, "எரிப்பதாக இருந்தால் அங்குள்ள பாறை மீது வைத்து எரிக்கிறோம். ஓடைக்குப் போகும் வழியும் சரியில்லை. அங்கு எந்த வசதிகளும் இல்லை. அவ்வாறு செய்து தர வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர்" என்று கூறினார்.
அருந்ததிய மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு பிபிசி தமிழ் சென்றது. சரியான பாதை வசதியில்லாமல் மக்கள் பயன்படுத்துவதைப் பார்க்க முடிந்தது.
"பிற சாதியினர் வசிக்கும் தெருவுக்குள் செருப்பைக் கழற்றிவிட்டுத்தான் போக வேண்டும்" எனக் கூறுகிறார் அருந்ததிய சாதியைச் சேர்ந்த பழனி, "கோவில் பிரச்னைக்குப் பிறகு நாங்கள் யாரும் அவர்கள் வசிக்கும் தெருவுக்குப் போவது இல்லை" என்கிறார் அவர்.

மாற்று சாதியினர் கூறுவது என்ன?
அருந்ததியர் சமூக மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மாற்று சாதி மக்களிடம் பேசுவதற்கான முயற்சிகளை பிபிசி தமிழ் மேற்கொண்டது. அவர்கள் சார்பாக பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தார், ஊர்ப் பிரமுகரும் அரவக்குறிச்சி கிழக்கு அ.தி.மு.க அவைத் தலைவருமான மோகன்குமார்.
இவரது மனைவி நாகராணி, தெத்துப்பட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார்.
"ஒவ்வொரு சாதிக்கும் சங்கங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் மோதல்களால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன" எனக் கூறும் அவர், "ஆனால், கிராமத்தில் சாதிய பாகுபாடுகள் என எதுவும் இல்லை. முந்தைய காலங்களில் இந்தப் பாகுபாடுகள் இருந்தன" என்கிறார்.
மதுரை வீரன் கோவில் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "போக்குவரத்தை எளிதாக மாற்றுவதற்காக தார்ச்சாலை அமைக்கும் பணியில் இறங்கினோம். கோவிலை மாற்றியமைக்க முன்வந்தும் கோவிலின் பின்புறம் உள்ள ஒருவர் பிரச்னை செய்ததால் சட்டரீதியாக சிக்கல் ஏற்பட்டது" என்றார்.
"வட்டாட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடத்தினால் பிரச்னையை எளிதாகத் தீர்க்க முடியும்" எனவும் அவர் பதில் அளித்தார்.

ஊருக்குள் மூன்று சுடுகாடுகள் உள்ளதாகக் கூறும் மோகன்குமார், "ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு சுடுகாடு உள்ளது. அரசு கட்டிக் கொடுத்தாலும் ஒரு சாதியினர் மட்டுமே அதைப் பயன்படுத்துகின்றனர். ஒரு பிரிவினர் சடலத்தை வைத்தால் மற்ற பிரிவினர் அதைப் பயன்படுத்துவதில்லை" என்கிறார்.

ஊருக்குள் செருப்பைக் கழற்றி வைத்துப் போவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, "தெத்துப்பட்டி ஊரில் தொட்டிய நாயக்கர் என்ற சாதி உள்ளது. அப்பகுதிக்கு வெளி ஆட்கள் வந்தாலும் செருப்பைக் கழட்டிவிட்டுத்தான் போவார்கள். அது அவர்களின் தெய்வத்துக்குக் கொடுக்கும் மரியாதையாக உள்ளது" என்றார்.
இவர் மறுப்பு தெரிவித்தபோதிலும், அருந்ததிய சமுக மக்கள் தங்களுக்கு எதிராக சாதிய பாகுபாடு நடப்பதாக உறுதியாகக் கூறுகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?
தெத்துப்பட்டி ஊராட்சியில் நிலவும் சாதிய பாகுபாடுகள் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
மதுரை வீரன் கோவில் பிரச்னை, சுடுகாடு விவகாரம், குடிநீர்ப் பிரச்னை, அரசுப் பேருந்து வசதியின்மை என பிபிசி தமிழ் பட்டியலிட்ட தகவல்களை மாவட்ட ஆட்சியர் குறிப்பெடுத்துக் கொண்டார்.
பிறகு பேசிய அவர், "மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்று 20 நாட்கள் மட்டுமே ஆகின்றன. நீங்கள் குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































