You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சியால் இந்தியாவில் வறட்சி' - 8,200 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?
உலகின் ஒரு மூலையில் நடந்த காலநிலை மாற்ற நிகழ்வால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள மற்றொரு நாட்டின் பருவமழைக் காலத்தில் தாக்கம் செலுத்த முடியும் என்பதைக் கேட்கும்போது வியப்பாகத் தோன்றலாம்.
ஆனால், சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியானதொரு சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் பீர்பால் சஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வடக்கு அட்லாண்டிக் பகுதியிலும் கிரீன்லாந்திலும் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சி, இந்தியாவின் பருவமழையை பலவீனப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் காலநிலை அமைப்பு தனித்தனியாக அன்றி, ஒன்றோடொன்று நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
காலநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் காலநிலையில் திடீரென ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதை விஞ்ஞானிகள் "8.2ka குளிர்ச்சி நிகழ்வு" என்று அழைக்கிறார்கள். இது ஹோலோசீன் காலகட்டத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான திடீர் குளிர்ச்சி நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆய்வறிக்கைப்படி, அந்தக் காலகட்டத்தில் கிரீன்லாந்தில் வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைந்தது. அதேநேரம், வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் அளவும் குறைந்தது. இவையனைத்தும், உலகளாவிய நீர்சுழற்சியிலும் காலநிலை அமைப்பிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டுவதாக பீர்பால் சஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் மகேஷ் தாக்கர் பிபிசி தமிழிடம் விளக்கினார்.
இந்த திடீர் மாற்றம் தொடங்கியது எப்படி என்ற கேள்விக்கான விடையைத் தேடிய ஆய்வாளர்கள், இந்தக் குளிர்ச்சி நிகழ்வு ஒரு சாதாரண வானிலை மாற்றம் இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.
வட அமெரிக்காவில் இருந்த மிகப்பெரிய பனிக்கட்டி ஏரியான அகஸ்ஸிஸ் திடீரென உடைந்து, அதிலிருந்த பெருமளவு தண்ணீர் ஹட்சன் விரிகுடா வழியாக வடக்கு அட்லாண்டிக் கடலுக்குள் பாய்ந்தது.
இந்த அதிகளவிலான நன்னீர் வரத்து, கடல் நீரின் உப்புத்தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் கடலின் நீரோட்ட அமைப்பில் மாற்றம் நிகழ்ந்தது. "கடலின் நீரோட்டம் மாறும்போது, உலகளாவிய காற்றோட்டமும் அதைத் தொடர்ந்து மாறும். இந்தத் தொடர் மாற்றங்கள் உலகின் பல பகுதிகளில் வானிலை மாற்றங்களுக்கு வித்திட்டது" என்று விவரித்தார் முனைவர் மகேஷ் தாக்கர்.
இந்த ஆய்வின் முடிவுகள் குவார்ட்டர்னரி இன்டர்நேஷனல் ஆய்விதழில் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பருவமழையில் ஏற்பட்ட மாற்றம்
வடக்கு அட்லாண்டிக்கில் நடந்த இந்த நிகழ்வால் ஏற்பட்ட உலகளாவிய மாற்றம் இந்தியாவிலும் தாக்கம் செலுத்தியது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் இதன் காரணமாக இந்திய நிலப்பரப்பில் பருவமழை பலவீனமடைந்தது. அதாவது, மழைப்பொழிவு குறைந்து, வறண்ட சூழல் நீடித்தது.
இந்தச் சமீபத்திய கண்டுபிடிப்பு, இந்தியாவின் மழைப்பொழிவு உள்ளூர் காரணங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவது இல்லை என்பதையும் உலகின் தொலைதூர பகுதிகளில் நிகழும் மாற்றங்களும் அதை பாதிப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
"இந்த ஆய்வு குறிப்பாக கிரீன்லாந்தில் நிகழ்ந்த ஒரு வானிலை நிகழ்வுதான் இந்தியாவில் மழைப்பொழிவு குறைந்ததற்குக் காரணம் என்று கூறவில்லை. மாறாக, இரண்டுக்கும் ஒரே உலகளாவிய காலநிலை மாற்றமே காரணமாக இருந்திருக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளது" என்று விவரித்தார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்.
அதுகுறித்துப் பேசிய மகேஷ் தாக்கர், "உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தவல்ல இப்படிப்பட்ட பெரிய குளிர்ச்சி நிகழ்வுகள் நடந்தால், அது கடல் நீரோட்டம், வளிமண்டலத்தில் நிலவும் காற்றோட்டம், காற்றிலுள்ள ஈரப்பதம் என அனைத்தையும் பாதிக்கும். அப்படியான பாதிப்புகளின் விளைவுகளை வெப்பமண்டலப் பகுதிகளின் வானிலைகளில் அதிகமாகக் காண முடியும்" என்று கூறினார்.
மண்ணுக்குள் மறைந்திருந்த காலநிலை வரலாறு
இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள பழங்காலத்தைச் சேர்ந்த துமன் ஏரியில் இருந்து தொல் எச்ச மண் மாதிரிகளைச் சேகரித்தனர்.
அந்த மண்ணுக்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டிருந்த மகரந்தத் துகள்கள், அவர்களுக்கு அக்காலத்தின் காலநிலையைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளன.
தாவரங்களில் ஒவ்வொன்றும் தனித்துவமான மகரந்தத் துகள்களை உருவாக்கும். எனவே, எந்த வகை தாவரங்கள் அதிகமாக இருந்தன என்பதை மகரந்தத் துகள்களைப் பகுப்பாய்வதன் மூலம் அறிய முடியும். அதன் மூலம், மழைப்பொழிவு அதிகமாக இருந்ததா அல்லது குறைவாக இருந்ததா என்பதைக் கணிக்கலாம்.
அதாவது, "மழைப்பொழிவு நன்கு இருக்கும் காலகட்டத்தில் வளரக்கூடிய தாவரங்களின் மகரந்தத் துகள்கள் அதிகம் இருந்தால், மழை செழிப்பாக இருந்தது எனப் பொருள். மழைப்பொழிவு குறைவாகவும் பற்றாக்குறையாகவும் இருக்கும் காலகட்டங்களில் வளரும் தாவரங்களின் மகரந்தத் துகள்கள் அதிகம் இருந்தால், அந்தக் காலகட்டத்தில் போதிய பருவமழை இருக்கவில்லை என்று பொருள்" என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
இந்த ஆய்வில், 8,200 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வறண்ட சூழல் நிலவியதைக் குறிக்கும் தாவரங்களின் மகரந்தத் துகள்கள் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் பருவமழை பலவீனமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவுகள் குவார்ட்டர்னரி இன்டர்நேஷனல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் விவரிக்கப்பட்டுள்ளன.
கிரீன்லாந்து, இந்தியா இடையிலான தொலைதூர இணைப்பு
இந்த ஆய்வின் மையக்கரு, 'தொலைதூர இணைப்பு (teleconnection)' என்ற கருத்தை வலியுறுத்துகிறது. வானிலை மற்றும் காலநிலை அறிவியலில், தொலைதூரத்தில் உள்ள இரண்டு பகுதிகளுக்கு இடையே ஏற்படும் காலநிலை மாற்றத் தொடர்பே இவ்வாறாகக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, உலகின் ஒரு மூலையில் ஏற்படும் மாற்றம், வேறொரு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகும்.
இந்தத் தொடர்பு, உலகின் காலநிலை அமைப்பு மொத்தமாகப் பிணைக்கப்பட்ட ஒரே வலையமைப்பாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுவதாகக் கூறுகிறார் மகேஷ் தாக்கர்.
இந்தச் சமீபத்திய கண்டுபிடிப்பு போலவே, முன்னரும் இதேபோன்ற முடிவுகளைச் சுட்டிக்காட்டும் சில ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி அறிவியல் விஞ்ஞானி யாமா தீக்ஷித் தலைமையிலான ஒரு குழுவின் ஆய்வில், வடமேற்கு இந்தியாவின் பழங்கால ஏரியான ரிவாசாவின் தொல்லெச்சங்களில் சேகரிக்கப்பட்ட ஆக்சிஜன் ஐசோடோப் தரவுகள், 8.2 குளிர்ச்சி நிகழ்வு காலகட்டத்தின்போது மழைப்பொழிவு குறைவாக இருந்ததைக் காட்டியுள்ளன.
அதேபோல, 2018ஆம் ஆண்டு புவி அறிவியல் விஞ்ஞானி ஷ்ரத்தா பேண்ட் உள்ளிட்ட ஆய்வாளர்கள் சத்தீஸ்கரில் உள்ள கோடும்சார் குகையில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்பீலியோதெம் எனப்படும் குகைக் கற்களை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவுகளும், 8,200 ஆண்டுகளுக்கு முன்பு மழைப்பொழிவு குறைந்திருந்ததை உறுதி செய்தது.
2024ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வில், கன்வார் ஈரநிலப் பகுதியை ஆய்வு செய்து, மண் துகள்களின் அளவும் காந்தப் பண்புகளும் கடந்த கால மழைப்பொழிவின் மாற்றங்களை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக இருப்பதை ஆய்வுக்குழு கண்டறிந்தது.
இந்த அனைத்து ஆய்வுகளுமே, அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பருவமழை பலவீனமாக இருந்ததற்கான மற்றும் சில ஆதாரங்களாகப் பார்க்கப்படுகின்றன. அதாவது 8,200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உலகளாவிய வானிலை நிகழ்வு ஒன்றின் விளைவாக, இந்தியாவின் மழைப்பொழிவு பாதித்தது என்பது தெளிவாகிறது.
உலகளவில் ஒரே அமைப்பு
முந்தைய ஆய்வுகள் மட்டுமின்றி, தற்போதைய ஆய்வு முடிவுகளும் ஒரு தெளிவான செய்தியை வெளிப்படுத்துகின்றன. அதாவது, உலகளாவிய காலநிலை வடிவங்கள் தனித்தனியாகச் செயல்படுவதில்லை, அனைத்தும் ஒரே அமைப்பாகச் செயல்படுகின்றன என்பதே அந்தச் செய்தி.
நாம் எதிர்கொள்ளும் "உள்ளூர் வானிலை" என்பது, உலகளாவிய காலநிலை அமைப்பின் ஓர் அங்கம்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது எனக் கூறிய பீர்பால் சஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் மகேஷ் தாக்கர், "இதுபோன்ற ஆய்வுகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை நிகழ்வுகளில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வது, மனிதத் தலையீடுகளால் தூண்டப்பட்டு துரிதமடைந்து வரும் இப்போதைய காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கணிப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும்," என்றும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?
இந்த ஆய்வு கடந்த காலத்தைப் பற்றியதுதான் என்றாலும், அதன் முக்கியத்துவம் இன்றைய சூழலிலும் பெரிதாகப் பொருந்திப் போவதாகக் கூறுகிறார் அவர்.
"புவி வெப்பமயமாதல் தீவிரமடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், கடல் நீரோட்ட அமைப்புகள் இதேபோல மாற்றமடையும் அபாயம் உள்ளது."
இதேபோன்ற மாற்றங்கள் மீண்டும் நடந்தால், வெப்பமண்டல நாடுகளின் வானிலை நிகழ்வுகள் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளில், பருவமழை என்பது வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமானது. எனவே இப்படிப்பட்ட ஆய்வுகள் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியாகக் கருதப்பட வேண்டும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
கிரீன்லாந்தில் ஏற்பட்ட குளிர்ச்சி, இந்தியாவில் மழை குறைந்தது ஆகிய இரண்டு நிகழ்வுகளும், உலகின் காலநிலை அமைப்பு எவ்வளவு தூரம் நுணுக்கமாக இணைக்கப்பட்ட அமைப்பாக இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த நிகழ்வு 8,200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றாலும், இன்று நாம் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவும் ஒரு முக்கியமான சான்றாகப் பார்க்கப்படுவதாகக் கூறுகிறார் மகேஷ் தாக்கர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு