You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மக்களவையில் 850 எம்.பி.க்கள்' - புதிய மசோதாவுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு ஏன்?
- எழுதியவர், ஷுபாங்கி மிஸ்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
'மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து அதிகபட்சமாக 850 ஆக அதிகரிக்கப்படும், மேலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்' - இந்த இரண்டு முக்கிய மாற்றங்களை செவ்வாயன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்பட்ட மூன்று வரைவு மசோதாக்களில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இந்த மசோதாக்கள் ஏப்ரல் 16 முதல் 18 வரை கூடவிருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்படும்.
யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026, அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026 மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவையே அந்த மூன்று மசோதாக்களாகும்.
இவை 2023-இல் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதன் அமலாக்கத்தை எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைத்திருந்தது.
இந்த காரணத்தினால்தான், 2023-ஆம் ஆண்டு சட்டம் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு பத்தாண்டுகளுக்கும் மேலாகலாம் என்று பலர் கவலை தெரிவித்தனர்.
செவ்வாயன்று அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டால், 2029-ஆம் ஆண்டு நடக்க உள்ள அடுத்த பொதுத் தேர்தலில் இடஒதுக்கீடு கிடைப்பதற்கான வாய்ப்பைத் தரக்கூடும்.
இருப்பினும், செவ்வாயன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த மூன்று மசோதாக்களையும் விமர்சித்தனர்.
முதலில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தேர்தலைச் சந்திக்க சில நாட்களே உள்ள நிலையில், பெண் வாக்காளர்களைக் கவர முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் 'திருப்திப்படுத்தும் அரசியலில்' ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மக்களவையின் உறுப்பினர்களின் இடங்களை 850 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான அளவுகோல்கள், தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வழிவகுக்கும் என்று பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று மசோதாக்களில் உள்ள முன்மொழிவுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சர்ச்சைகள் என்ன?
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 வரை அதிகரிக்கப்படும்
அரசியலமைப்புச் சட்ட (131-வது திருத்தம்) மசோதா 2026, மக்களவையில் அதிகபட்சமாக 850 இடங்கள் இருக்க வேண்டும், அதில் மாநிலங்களில் இருந்து 815 மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 இடங்கள் இருக்க வேண்டும் என்று முன்மொழிகிறது.
தற்போது, மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் அரசியலமைப்பு அதன் எண்ணிக்கையை 550ஆகக் கட்டுப்படுத்தியுள்ளது.
1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை முடக்கி வைத்திருக்கும் அரசியலமைப்பின் 81வது பிரிவில் திருத்தம் செய்யவும் இந்த மசோதா முன்மொழிகிறது. 81-வது பிரிவின் விதிகள் காரணமாகவே 1976 முதல் மக்களவையின் எண்ணிக்கை மாறாமல் அப்படியே உள்ளது.
எனவே, மக்களவையின் தற்போதைய அளவிற்கு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக இருந்ததென்றால், விரிவாக்கப்பட்ட மக்களவைக்கு எது ஒப்பீட்டு அளவுகோலாக இருக்கும்?
இந்தக் கேள்விக்கான பதில், சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026 தொகுதி மறுவரையறை மசோதாவில் உள்ளது.
இந்த மசோதாவின் நோக்க அறிக்கையில், தொகுதி மறுவரையறைப் பணியானது "சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்" அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது 2011-இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒரு புள்ளியில்தான், தங்கள் பிரதிநிதித்துவம் குறையும் என்று தென்னிந்திய மாநிலங்கள் கவலை கொள்கின்றன.
இதுவரை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் அதன் தொகுதிகளுக்கும் இடையிலான விகிதம் அனைத்து மாநிலங்களிலும் தோராயமாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அளவுகோலின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்ப்புத் தெரிவித்துள்ள தென்னிந்திய மாநிலங்கள்
பல ஆண்டுகளாக, இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி சமச்சீரற்றதாக இருந்து வருகிறது.
பிறப்பு கட்டுப்பாட்டில் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. தற்போதைய சூழலில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதே அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டால், தென் மாநிலங்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன.
"முற்போக்கானவை எனக் கருதப்படும் தென்னிந்திய மாநிலங்கள், குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையை திட்டமிட்டுப் பின்பற்றி, சிறிய குடும்பங்களை உருவாக்க முயன்றன" என்று பிபிசியிடம் தெரிவித்த அரசியல் கட்டுரையாளர் அதிதி ஃபட்னிஸ், "மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த தாங்கள் எடுத்த விழிப்புணர்வு முயற்சி, தங்களுக்குப் பாதகமாக அமையும் என்று தென்னிந்திய மாநிலங்கள் உணரும்" என்றார்.
தற்போதுள்ள நாடாளுமன்ற அமைப்பில் மாநிலங்களின் விகிதாசார பங்கில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
ஆனால், இந்த மூன்று மசோதாக்களிலும் அதை உறுதிப்படுத்த எந்தக் கூறும் இல்லை என்று தேர்தல் ஆய்வாளரும் அரசியல் ஆர்வலருமான யோகேந்திர யாதவ் செவ்வாயன்று ஒரு எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று தென்னிந்திய மாநிலங்களின் தலைவர்களும் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.
மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் தொகுதி மறுவரையறையை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிப்பது "ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ உரையில் தெரிவித்தார்.
"மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், சிறிய குடும்பங்களை உருவாக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைபிடிக்கவும் மத்திய அரசு எங்களை வலியுறுத்தியபோது, நாங்கள் அதற்கு இணங்கினோம். எங்களிடம் சொல்லப்பட்டதை ஒழுக்கமான முறையில் செய்ததற்காக இப்போது வழங்கப்படும் தண்டனை இதுதானா?" என்றும் அப்பதிவில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாஜகவின் கூட்டணியை சேர்ந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், இடங்களை அதிகரிப்பதற்கான "விகிதாச்சார மாதிரிக்கு" எதிர்ப்பு தெரிவிக்க தென்னிந்திய மாநிலங்களுடன் ஒருங்கிணைந்த முயற்சியில் இணையுமாறு அவரை வலியுறுத்தினார்.
முன்மொழியப்பட்ட 850 இடங்களை மாநிலங்களுக்கு இடையே எப்படி மறுசீரமைப்பது என்பது குறித்து சரியான கட்டமைப்பு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தால் இது இறுதி செய்யப்படும் என்று மசோதா கூறுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், எதிர்காலத்தில் எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானிக்க அனுமதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
தற்போது, இதற்கு அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தேவைப்படுகிறது. அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்.
33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு
பெண்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை மகளிர் அமைப்புகளும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல ஆண்டு காலமாக எழுப்பி வருகின்றனர்.
தற்போது, நாடாளுமன்றத்தின் மக்களவையில் 78 பெண் உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 42 பெண் உறுப்பினர்களும் உள்ளனர். இது அந்தந்த சபைகளின் மொத்த எண்ணிக்கையில் முறையே 14 சதவீதம் மற்றும் 18 சதவீதம் மட்டுமே ஆகும்.
சமூக ஆராய்ச்சி மையத்தின் செய்திக்குறிப்பின்படி, இது உலகளாவிய சராசரியான 27.2 சதவீத பிரதிநிதித்துவத்தை விட மிகவும் குறைவாகும்.
2023-ஆம் ஆண்டில், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்தை இந்தியா இயற்றியது. ஆனால் அது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் தொடர்ச்சியான தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே அமலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நடைமுறை, "நமது ஜனநாயக அரசியலில் பெண்களின் திறமையான மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய பங்கேற்பைத் தாமதப்படுத்தும்" என அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா 2026 குறிப்பிடுகிறது
மேலும், "சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்", அதாவது மீண்டும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் இந்த மசோதா முன்மொழிகிறது.
இந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சாகேத் கோகலே, எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், "தனது உண்மையான நோக்கமான தொகுதி மறுவரையறையைத் திணிப்பதற்கு, அரசாங்கம் பெண்களை ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"2023-இல் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் எங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. எந்த அடிப்படையும் இல்லாத இந்தத் திடீர் தொகுதி மறுவரையறை யோசனையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சாத்தியமற்றது" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மா, இந்த நடவடிக்கையின் மூலம் மாநிலத் தேர்தல்களில் பாஜக பயனடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
"இந்த மசோதா அவர்களுக்கு நன்மையைத் தரும். இந்த நடவடிக்கை ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி, 10 சதவீத பெண் வாக்குகளைத் திருப்பினால் கூட அது ஒரு பெரிய நன்மையைத் தரும். 3-4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தேர்தல்களில் வெற்றி பெறும்போது, உங்களால் 1-2 சதவீத கூடுதல் வாக்குகளைக் கொண்டு வர முடிந்தால், அது முழுமையான வெற்றியாக அமையும்" என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு