ஏற்றம் தரும் ஷ்ரேயாஸ்: தோல்வியே காணாத பஞ்சாப் கிங்ஸூக்கு வலு சேர்க்கும் 5 விஷயங்கள்

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நியூ சண்டிகரில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

2026 ஐபிஎல் சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. இன்னொரு போட்டி மழை காரணமாக தடைபட்டது. இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணி பஞ்சாப் கிங்ஸ் மட்டும்தான்.

அந்த அணியின் முதல் 4 வெற்றிகளுமே சேஸ் செய்தபோது வந்தவை. அதில் 2 போட்டிகளில் 200+ ஸ்கோரை எளிதாக சேஸ் செய்தது அந்த அணி. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 196 என்ற இலக்கை 21 பந்துகள் மீதம் வைத்து வென்றது.

இப்படி ஆதிக்கம் செலுத்தி சேஸ் செய்துகொண்டிருந்த அணி, லக்னௌவுக்கு எதிரான போட்டியில் தான் இந்த சீசனில் முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது. அதிலும் 254 ரன்கள் குவித்து இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். இந்த சீசனை வலுவாகத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் சில வேகத்தடைகளை சந்தித்திருக்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் யாருக்குமே தடுக்க முடியாத வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

அந்த அணி ஆதிக்கம் செலுத்துவதற்கான 5 காரணங்கள் என்ன?

1. நிலைத்தன்மை

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தான் மாற்றம் என்பதற்கான அர்த்தமாக விளங்குகிறது. சீசனுக்கு சீசன் புதிய பயிற்சியாளர்கள், கேப்டன்கள், வீரர்கள் என மாறிக்கொண்டே இருக்கும். வீரர்கள், அணுகுமுறைகள் போட்டிக்குப் போட்டி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு நிலைத்தன்மை நிலவுகிறது.

இந்த சீசனுக்கான ஏலத்துக்கு முன்பு பஞ்சாப் பெரிதாக வீரர்களை மாற்றவில்லை. கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்குச் சென்ற அணியின் வீரர்களில் 21 பேரைத் தக்கவைத்தார்கள். அதே நிலைத்தன்மையை தற்போது இந்த சீசனிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய 12 பேரில் 10 பேர் இந்த சீசனில் அப்படியே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ரிலீஸ் செய்யப்பட்ட ஜாஷ் இங்லிஸ்-க்கு பதிலாக கூப்பர் கானலியும், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய்க்கு பதிலாக ஜேவியர் பார்ட்லெட்டும் இந்த ஆண்டு அந்த அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற வீரர்கள் அனைவரும் அப்படியே தொடர்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த சீசனில் இதுவரை அந்த 12 பேர் மட்டுமே களத்தில் விளையாடியிருக்கிறார்கள். ஒரு போட்டியில் கூட ஒரு மாற்றம் கூட செய்யப்படவில்லை. ஒருசில போட்டிகளில் சில வீரர்கள் சொதப்பினாலும் கூட தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. இது அந்த வீரர்களின் நம்பிக்கைக்கு பெருமளவு உதவுகிறது.

லக்னௌவுக்கு எதிரான இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார் வைஷாக் விஜயகுமார். போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், "கடந்த 2 போட்டிகள் எனக்கு சிறப்பாக அமையவில்லை. பயிற்சியாளர்கள் மற்றும் வீடியோ அனலிஸ்ட்கள் தொடர்ச்சியாக எனக்கு உதவவில்லை என்றால் இந்த சூழ்நிலையை சமாளித்திருக்க முடியாது" என்று கூறினார்.

மும்பைக்கு எதிராக 3 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்த வைஷாக், சன்ரைசர்ஸுக்கு எதிராகவும் ரன்களை வாரிக் கொடுத்தார். ஆனால், அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் போது அந்த வீரரால் நன்கு செயல்பட முடிகிறது. முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் இந்த அணுகுமுறைக்காகப் போற்றப்பட்டிருக்கின்றன. அந்த அணிகளின் வெற்றிக்கு இந்த நிலைத்தன்மை முக்கியக் காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. தற்போது அது இந்த பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் காணப்படுகிறது.

2. அச்சம் இல்லாத நீண்ட பேட்டிங் வரிசை

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் யூனிட் அவர்களின் மிகப் பெரிய பலமாக விளங்குகிறது. ஒன்பதாவது வீரராகக் களமிறங்கும் பார்ட்லெட் வரையில் அவர்களின் பேட்டிங் வரிசை நீண்டிருக்கிறது. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, டி20 போட்டிகளில் சுமார் 125 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 16 என்ற சராசரியில் பேட்டிங் செய்திருக்கிறார் பார்ட்லெட். ஒவ்வொரு 7 பந்துக்கும் ஒரு பவுண்டரியோ அல்லது சிக்ஸரோ அடிக்கிறார். ஒன்பதாவது இடத்தில் விளையாடும் வீரரின் தரவுகளே இப்படி இருக்கிறது எனும்போது, அந்த அணியின் பேட்டிங் ஒட்டுமொத்தமாக பலமாகத்தானே இருக்கும்.

நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால், ஒவ்வொரு வீரரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடுவதற்கு அது வழிவகை செய்கிறது. ஒவ்வொரு வீரருக்குமே அந்த அதிரடிக்கான சுதந்திரத்தை அது வழங்குகிறது. பஞ்சாப் அணியும் அப்படியொரு அணுகுமுறையைத்தான் தங்கள் அணி கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால், அவர்களால் தங்களின் நீண்ட பேட்டிங் ஆர்டரை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் மிகச் சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார்கள். அதனால் அவர்களால் ஆரம்பத்தில் இருந்தே ரன்ரேட்டை சீராக உயர்த்த முடிகிறது.

பிரியான்ஷ், கானலி, நேஹல் வதேரா, மார்கோ யான்சன் என இடது கை பேட்டர்களும் சரிசம அளவில் இருப்பதால், வலது கை - இடது கை பேட்டர்கள் காம்பினேஷனையும் அவர்களால் கடைசி வரை தொடர முடியும். அதேசமயம், அப்படிச் செய்ய வேண்டும் என்று எந்தவித உந்துதலும் இல்லாமல், சூழ்நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு பேட்டர்கள் களமிறக்கப்படுகிறார்கள். பிரியான்ஷ் - கானலி என 2 இடது கை பேட்டர்கள் ஆடுவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. சிஎஸ்கே, மும்பை போன்ற அணிகளின் நிலைத்தன்மை ஒருபக்கம் பஞ்சாப் கிங்ஸிடம் தெரிகிறது என்றால், இந்தக் காலத்து டி20 கிரிக்கெட்டுக்கான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு அந்த சவாலை சந்திக்கும் தன்மையும் அந்த அணியிடம் இருக்கிறது.

3. முதிர்ச்சியான பௌலர்கள்

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் போட்டி பற்றி இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸி, "பஞ்சாப் கிங்ஸின் பௌலிங் யூனிட் சிறந்த டிஃபன்ஸிவ் பௌலிங் யூனிட்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்தப் போட்டிக்கு டிஃபன்ஸிவாக பந்துவீசினால் போதும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப அவர்கள் பந்துவீசினார்கள். இதில் என்ன சிறப்பெனில் அந்த அணியில் இருக்கும் பெரும்பாலான பௌலர்கள் மிகச் சிறந்த விக்கெட் டேக்கர்கள். அப்படியான பௌலர்கள் நன்கு டிஃபன்ஸிவாகப் பந்துவீசினார்கள்" என்று பஞ்சாப் பந்துவீச்சைப் பாராட்டினார்.

இன்றைய காலகட்டத்தில் 250 என்ற ஸ்கோர் சாதாரணமாக வந்துகொண்டிருக்கும் நிலையில், டிஃபன்ஸிவ் பந்துவீச்சு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. ஆனால், பெரும்பாலான அணிகள் விக்கெட் எடுக்க வேண்டுமென்று அட்டாக் செய்வதால் அதிகம் ரன்கள் கொடுத்துவிடுகின்றன. ஆனால், இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அப்படிச் செய்யாமல் டிஃபன்ஸிவாக பந்துவீசி வெற்றியை எளிதாக்கியது.

அதே நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, "எந்த இடத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மிகவும் முதிர்ச்சியான, உறுதியான, திறமையான பௌலிங் யூனிட்டாக இது தெரிகிறது" என்று கூறினார்.

ஒரு அணி ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் ஆதிக்கம் செலுத்த அவர்களின் பௌலிங் யூனிட் சீராக செயல்படுவது முக்கியம். பஞ்சாப் கிங்ஸுக்கு அது நடக்கிறது. ஆர்மபத்தில் அர்ஷ்தீப் விக்கெட் எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரும் தன் பழைய ஃபார்மை மீட்டிருக்கிறார். அதனால், டுப்ளெஸி, ராயுடு ஆகியோர் கூறியதுபோல் ஒரு முழுமையான பந்துவீச்சுக் குழுவாகத் தெரிகிறது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பௌலிங் யூனிட்.

4. ஏற்றம் தரும் ஷ்ரேயாஸ் கேப்டன்சி

திறமையான, நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்டர்கள் மற்றும் பௌலர்கள் நிறைந்திருக்கும் அந்த அணியை முன் நின்று வழிநடத்திக் கொண்டிருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வேகம், சுழல் என அனைத்து வகையான பந்துவீச்சையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், தன்னுடைய நம்பிக்கையையும், உறுதியையும் அவர் தன் அணிக்கும் கடத்திக் கொண்டிருக்கிறார்.

முக்கியமான தருணங்களில் தன் பேட்டிங் மூலம் பொறுப்பை ஏற்று ஆட்டத்தை மாற்றுகிறார். அதை, பேட்டிங்கில் மட்டுமல்லாது ஃபீல்டிங்கிலும் காட்டுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்த பவுண்டரி எல்லையில் அவர் பாய்ந்து பந்தைப் பிடித்து பார்ட்லெட்டுக்குத் தூக்கி வீசியது... ஒவ்வொரு போட்டியிலும் வர்ணனையாளர்கள் அதை ஆராதிக்கிறார்கள். அப்படியொரு செயல்பாடு ஒட்டுமொத்தமாகவே அணிக்கு உத்வேகம் கொடுக்கும்.

ஒரு கேப்டனாக அவர் களத்தில் எடுக்கும் முடிவுகளுமே அந்த அணியின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பௌலரான சஹலின் ஸ்பெல்லை முடிக்காமல் முன்கூட்டியே இம்பேக்ட் வீரரைப் பயன்படுத்த அவர் தயங்குவதில்லை. தன் திட்டங்களை உறுதியோடு எடுக்கிறார். தன் வீரர்களுக்கும் அந்த நம்பிக்கையைக் கொடுக்கிறார். ஒரு நல்ல சூழ்நிலை அணிக்குள் ஏற்படவும் முக்கியக் காரணமாக விளங்குகிறார்.

உதாரணமாக லக்னௌ போட்டியின் கடைசி கட்டத்தில் சஷாங்க் சிங் 3 கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டார். பயிற்சியாளர் பான்டிங் பெரும் விரக்தியோடு இருந்தார். ஆனால், சஷாங்க் மூன்றாவது கேட்சை விட்டபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே நின்றிருந்த தன் அணி வீரர்களிடம் அதைப் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார் ஷ்ரேயாஸ்.

அவர்கள் வெற்றி பெறுவது உறுதியாக இருந்ததால் அவரால் சிரிக்க முடிந்தது என்று சொல்லலாம். இருந்தாலும், அவர் அப்படி செய்தது, அந்த வீரரின் மனநிலை சீராக இருப்பதற்குப் பெருமளவு உதவும். போட்டி முடிந்த பிறகு சஷாங்க் தோளில் கைபோட்டு அவரோடு சிரித்துப் பேசினார் ஷ்ரேயாஸ். ஒரு வீரர் 3 கேட்ச்கள் தவறவிடுவது அவரை எப்படியான மனநிலைக்குள்ளும் தள்ளலாம். ஆனால், ஷ்ரேயாஸ் இதை அணுகிய விதம் எதிர்மறையான உணர்வுகள் அந்த வீரரை நெருங்காமல் இருப்பதற்கு உதவும்.

5. அணிக்குள் நிலவும் ஆரோக்கிய போட்டி

பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிலைத்தன்மை இருக்கிறது. அது அவர்களின் சீரான, தரமான செயல்பாட்டுக்கு உதவுகிறது. அதேசமயம் அந்த அணிக்குள் ஒவ்வொரு இடத்துக்குமே கடுமையான போட்டி இருக்கிறது. ஷ்ரேயாஸ், அர்ஷ்தீப், சஹல் தவிர்த்து வேறு எந்த வீரரையும் அவர்களால் எளிதாக மாற்ற முடியும். அந்த அளவுக்கு திறமையான வீரர்கள் அந்த அணியின் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள்.

கானலிக்குப் பதிலாக மிட்செல் ஓவன், ஸ்டாய்னிஸுக்குப் பதிலாக ஓமர்ஜாய், யான்சனுக்குப் பதிலாக துவார்ஷுய்ஸ், பார்ட்லெட்டுக்குப் பதிலாக லாகி ஃபெர்குசன் ஆகியோரை அவர்களால் எளிதாகக் களமிறக்கமுடியும். இந்திய வீரர்களிலும் அப்படி தரமான மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். டாப் ஆர்டருக்கு விஷ்ணு வினோத், மிடில் ஆர்டருக்கு சுயான்ஷ் ஷெட்கே, ஸ்பின்னுக்கு ஹர்ப்ரீத் பிரார், வேகப்பந்துவீச்சுக்கு யஷ் தாக்கூர் என தரமான ஆப்ஷன்கள் இருக்கின்றன.

இப்படி தரமான வீரர்கள் தங்கள் பின்னால் இருக்கும்போது எந்த வீரருக்குமே தாங்கள் சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அணியில் தங்கள் இடம் 100% உறுதியில்லை என்ற நிலை இருக்கும் போது, அது அந்த வீரரின் சிறப்பான செயல்பாட்டை வெளிக்கொண்டுவரும்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய அனலிஸ்ட் கௌரவ் சுந்தரராமன், "லக்னோ அணியின் வெளிநாட்டு வீரர்கள் அனைவருமே டாப் ஆர்டர் வீரர்களாக இருக்கிறார்கள். பூரன், மார்ஷ், மார்க்ரம் ஆகிய 3 பேருக்கு ஒரேயொரு மாற்று வீரர் தான் - பிரிட்ஸ்கி. தங்கள் இடங்களுக்குப் போட்டி இல்லாதபோது, சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க முடியாத வீரர்களுக்கு அது எந்த வகையிலும் உத்வேகம் கொடுக்காது" என்று கூறினார்.

இந்தப் பிரச்னை நிச்சயம் பஞ்சாப் கிங்ஸுக்கு வரப்போவதில்லை. ஒரு வீரர் அணியின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார் எனும்போது நிச்சயம் ஒவ்வொரு வீரரும் தங்களின் சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கும் முனைப்போடே விளையாடுவார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு