You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?
- எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மார்ச் 13, 2026.
ஐஆர்என்எஸ்எஸ் - 1எஃப் செயற்கைக்கோளில் இருந்த அணுக் கடிகாரம் செயலிழந்தது. இது, இந்தியாவின் சொந்த 'ஜிபிஎஸ்' எனப் பெயர் பெற்ற நாவிக் (NavIC) அமைப்பின் செயல்பாட்டை முடக்கியது. முன்னர் இந்த அமைப்பு இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு - ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional Navigation Satellite System - IRNSS) என்று அழைக்கப்பட்டது.
இந்தச் செயற்கைக்கோள் செயல் முடக்கத்துடன் இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டும் திறன் முடிவுக்கு வந்துள்ளது. கூடுதல் செயற்கைக்கோள் ஒன்றை ஏவி சமாளிக்க முடியாமா என விஞ்ஞானிகள் யோசனை செய்துவருகிறார்கள். ஆனால் இவை தற்காலிகத் தீர்வாக தான் அமைய முடியும்.
செயற்கைக்கோள் கூட்டமைப்பைப் பயன்படுத்தி ஜிபிஎஸ் போன்ற இருப்பிட அடையாளம் காணுதல் மற்றும் செல்லும் இடத்துக்கு வழிகாட்டும் சேவையை வழங்கக் குறைந்தபட்சம் நான்கு செயற்கைக்கோள்கள் தேவை.
ஆனால், 2013 முதல் ஏவப்பட்ட மொத்தம் 11 செயற்கைக்கோள்களில், ஏப்ரல் 2014-ல் ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1பி, ஏப்ரல் 2018-ல் ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எல், மற்றும் மே 2023-ல் ஏவப்பட்ட என்விஎஸ்-01 (இரண்டாம் தலைமுறை நாவிக் தொடரின் முதல் செயற்கைக்கோள்) ஆகிய மூன்று மட்டுமே தற்போது செயல்படுகின்றன.
செயற்கைக்கோள் வழிகாட்டும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
வழிகாட்டும் செயற்கைக்கோள்கள் நவீன காலத்துக் கலங்கரை விளக்கங்கள். ஒளிக்கற்றையை அனுப்புவதற்குப் பதிலாக, இவை தொடர்ந்து நேரக் குறியீடுகளையும் (timestamp) தங்களது இருப்பிடத்தையும் பதிவாக கொண்ட சமிக்ஞைகளை ஒலிபரப்புகின்றன. நம் கைப்பேசி அல்லது ஜிபிஆர்எஸ் அலைவாங்கி இந்தச் சமிக்ஞைகளைப் பிடித்து, ஒவ்வொன்றும் வந்து சேர எடுத்துக்கொண்ட நேரத்தை அளவிடுகிறது.
ரேடியோ அலைகள் ஒளியின் வேகத்தில் பயணிப்பதால், பயண நேரத்தில் உள்ள சிறிய வேறுபாடு கூடத் தூரமாக மாற்றப்படுகிறது. உதாரணமாக, ஒரு சமிக்ஞை உங்களை அடையச் சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அந்தச் செயற்கைக்கோள் தூரத்தில் இருக்கிறது என்பதை ஜிபிஎஸ் கருவி கணக்கிட்டுக் கொள்கிறது.
குறைந்தது மூன்று செயற்கைக்கோள்களிலிருந்து கிடைக்கும் தூரத் தகவல்களை வைத்து, முக்கோணவழி- அளவீடு (Triangulation) எனும் தத்துவத்தை கொண்டு இருப்பிடத்தை துல்லியமாக கணிப்பு செய்கிறது.
மூன்று நண்பர்கள் உள்ள இடம் நமக்கு துல்லியமாக தெரியும். அவர்கள் மூவரும் தங்களிடமிருந்து நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கணித்து கூறுகிறார்கள். இப்போது அந்த மூவரின் இடத்திலிருந்து அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள தொலைவை ஆரமாக கொண்ட வட்டத்தை வரையலாம்.
மூன்று வட்டங்களும் சந்திக்கும் புள்ளி தான் உங்கள் இருப்பிடம். அந்தச் சந்திப்புப் புள்ளிதான் உங்கள் அட்சரேகை, தீர்க்கரேகை, தரைப்பரப்பிலிருந்து உங்கள் உயரம். வழிகாட்டும் செயற்கைக்கோள்களும் அதே முறையைத்தான் பயன்படுத்துகின்றன. அவை அளவுகோல் கொண்டு அளவதற்குப் பதிலாக, சமிக்ஞை பயண நேரத்தை அளந்து தூரத்தைக் கணக்கிடுகின்றன.
முக்கோணவழி- அளவீடு செய்ய கோட்பாட்டில், மூன்று செயற்கைக்கோள்களின் சமிக்ஞைகள் போதுமானவைதான். ஆனால், நான்காவது செயற்கைக்கோள் மிக அவசியம். ஏனெனில், நம் கைப்பேசியின் கடிகாரம், செயற்கைக்கோள்களில் உள்ள அணுக் கடிகாரங்களைப் போல் துல்லியமானது அல்ல. அந்தக் கடிகாரப் பிழையைச் சரிசெய்வதற்கே நான்காவது சமிக்ஞை தேவைப்படுகிறது.
இப்போது மூன்று செயற்கைக்கோள்கள் மட்டுமே இயங்குவதால், நாவிக் அமைப்பு சரியாகச் செயல்படாமல் தடுமாறுகிறது.
சொந்தக்காலில் நிற்க வேண்டும்
கார்கில் போரின் முக்கிய கட்டத்தில், அமெரிக்கா ஜிபிஎஸ் தரவுகளைப் பகிர மறுத்ததோடு, வேண்டுமென்றே ஜிபிஎஸ் சமிக்ஞைகளில் குழப்பத்தை உருவாக்கியது. இது இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்குப் பெரும் தடையாக அமைந்தது.
அதேபோல், ஒரு முக்கிய ஏவுகணைச் சோதனையின் போதும், துல்லியமான ஜிபிஎஸ் சேவைகள் துண்டிக்கப்பட்டுச் சோதனை பாதிக்கப்பட்டது. இந்த அனுபவங்களே, சொந்தமான ஒரு பிராந்திய வழிகாட்டுதல் மற்றும் இருப்பிடக் கணிப்பு அமைப்பை உருவாக்க இந்தியாவைத் தூண்டியது. இஸ்ரோ இந்தச் சவாலை ஏற்று ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தை உருவாக்கியது.
நான்கு செயற்கைக்கோள்கள் குறைந்தபட்சத் தேவை என்றாலும் தொடர்ச்சியான 24 மணி நேர சேவை தர கூடுதல் செயற்கைக்கோள்கள் அவசியம். எனவே இந்தியாவை சுற்றி உள்ள பிராந்திய பகுதியில் சேவை வழங்க ஏழு செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ முடிவு செய்தது. ஆனால், முக்கியமான அணுக் கடிகாரங்களுக்கு வெளிநாட்டு வணிக நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது நான்கு உலகளாவிய வழிகாட்டும் அமைப்புகள் (GNSS) உள்ளன. அமெரிக்காவின் ஜிபிஎஸ் 30-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் சேவை வழங்குகிறது. ரஷ்யாவின் குளோனாஸ் (GLONASS) 24-க்கும் மேற்பட்ட இயங்கும் செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ (Galileo) அமைப்பு 30-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன், டெசிமீட்டர் அளவுக்குத் துல்லியமான சேவையை வழங்குகிறது.
சீனாவின் பெய்டோவ் (Beidou) உலகளாவிய அமைப்புக்கு 30 செயற்கைக்கோள்கள் செயல்படுகின்றன. தற்போது 35-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன. இந்தியாவின் நாவிக் தவிர, ஜப்பானின் QZSS என்பதும் ஒரு பிராந்திய வழிகாட்டும் அமைப்பாகும்.
அணுக் கடிகாரம்
ஒவ்வொரு வழிகாட்டும் செயற்கைக்கோளின் இதயமாக செயல்படுவது அதில் உள்ள அணுக் கடிகாரம். விநாடிகள் உருண்டு செல்வதன் மூலம் நேரம் அளக்கப்படாமல், அணுக்களின் இயற்கையான அதிர்வுகளின் மூலம் அளக்கப்படுகிறது. வழக்கமான குவார்ட்ஸ் கடிகாரங்கள் சில நாட்களில் ஒரு விநாடி தவறக்கூடும். ஆனால் அணுக் கடிகாரங்கள் மிகத் துல்லியமானவை. அவை சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு விநாடி கூடுதலாகவோ குறைவாகவோ பிழைபடும்.
வானத்திலிருந்து நம் கைப்பேசிக்குச் சமிக்ஞை வர எடுத்துக் கொள்ளும் நேரத்தை துல்லியமாக அளவிட இந்தக் கடிகாரம் உதவும். ஒரு சிறிய பிழை, ஒரு விநாடியின் பத்து லட்சம் பங்கில் ஒரு பங்கு தவறினால், நமது இருப்பிடம் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் தவறாகக் கணக்கிடப்பட்டுவிடும்.
துல்லியமாக செயல்படும் கடிகாரம் இல்லையென்றால், வழிகாட்டுதலும் இல்லை. அதனால்தான் செயற்கைக்கோள்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடிகாரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒவ்வொரு இஸ்ரோ செயற்கைக்கோளிலும் மூன்று கடிகாரங்கள் வைக்கப்பட்டன. ஒன்று செயலிழந்தால், மற்றவை பொறுப்பேற்றுக் கொள்ளும். இப்படித்தான் அமைப்பு தொடர்ந்து இயங்கும்.
இஸ்ரோவால் செயற்கைக்கோள்களை உருவாக்கி ஏவ முடிந்தது. ஆனால், முக்கியமான அணுக் கடிகாரத்தை உருவாக்குவது சவாலாக இருந்தது. பிராந்திய அளவிலான வழிகாட்டும் அமைப்பை விரைவாகச் செயல்படுத்த, இந்தியா அணுக் கடிகாரங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்தது.
அணுக் கடிகார நெருக்கடி
முதல் நாவிக் செயற்கைக்கோள்கள் சுவிஸ் நாட்டு ரூபிடியம் கடிகாரங்களைக் கொண்டிருந்தன. ஸ்பெக்ராடைம் (SpectraTime) நிறுவனத்திடமிருந்து இந்த கடிகாரங்கள் வாங்கப்பட்டன.
இந்த கடிகாரங்கள் முறையாக இயங்கவில்லை; சிக்கல்கள் ஏற்பட்டன.
ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, 1சி, 1டி, 1இ, 1ஜி, 1எஃப் ஆகிய செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்ட இறக்குமதி செய்யபப்ட்ட கடிகாரங்கள் திடீர், திடீரென செயலிழந்தன. இவற்றில் ஐந்து செயற்கைக்கோள்களில், மூன்று கடிகாரங்களுமே பழுதுபட்டன. மற்றவற்றில், ஒன்று அல்லது இரண்டு கடிகாரங்கள் செயலிழந்து, செயற்கைக்கோளின் ஆயுட்காலம் குறைந்தது.
இந்தியா மட்டும் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளவில்லை. ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் சிலவற்றிலும் இதே போன்ற செயலிழப்புகள் ஏற்பட்டன. ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) 2017-இல் இந்தத் தோல்விகளுக்கான காரணத்தை ஆய்வு செய்தது.
தரைசார் சோதனையின் போது ஏற்பட்ட குறுக்கு மின்சுற்றுகளே (short circuits) காரணம் என்று கண்டறியப்பட்டது. துல்லியமான நேர அளவீடுதான் வழிகாட்டும் அமைப்புக்கும் அடித்தளம். அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போல இந்த தொடர் பழுதுகள் இஸ்ரோவின் திட்டத்தை செயலிழக்க வைத்துள்ளன.
சீனா வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட வகை இறக்குமதி கடிகாரங்களை முதலில் பயன்படுத்தினார்கள். பின்னர் விரைவில் தாமே சொந்தமாக அணுக்கடிகாரங்களை உருவாக்கத் தொடங்கினர். இறக்குமதியை நிறுத்தினர்.
இந்தியா தனது சொந்த வழிகாட்டும் அமைப்பை உருவாக்கி இயக்க வேண்டுமெனில், தானே சொந்தமான அணுக் கடிகாரங்களை உருவாக்கியே ஆக வேண்டும். தனது காலில் நிற்கவேண்டும். எனவே சொந்த ரூபிடியம் கடிகாரத்தை உருவாக்கும் பணி 2010-களின் நடுப்பகுதியில் தொடங்கியது.
2022-23-க்குள், இந்திய ரூபிடியம் அணுக் கடிகாரத் தரநிலை (iRAFS) முழுமையாகத் தகுதி பெற்றது. இன்று, புதிய என்விஎஸ் தொடர் செயற்கைக்கோள்கள் இந்தச் சொந்தக் கடிகாரங்களைக் கொண்டு செல்கின்றன. தற்போது ஒரு செயற்கைக்கோளில் இந்திய அணுக்கடிகாரம் உள்ளது; அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தன்னிறைவு
வழிகாட்டும் செயற்கைக்கோளை உருவாக்க தொழில்நுட்பப் பணியாளர்களின் உழைப்பு அவசியம். நிதியும் முக்கியம். கடந்த காலங்களில் ஆழ்வெளித் திட்டங்கள், நிலா மற்றும் செவ்வாய்க்கான பயணங்கள், மனித விண்வெளிப் பயணங்கள், வணிகச் செயற்கைக்கோள் ஏவுதல்கள், புதிய தலைமுறை ஏவூர்திகளின் மேம்பாடு என இஸ்ரோவின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
வளர்ந்து வரும் பணிகளின் பட்டியல் காரணமாக பணிச்சுமை விரிவடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கையில் அதற்கேற்ற அதிகரிப்பு இல்லை. நிதியும் போதுமான அளவில் இல்லை. எனவே புதிய வழிகாட்டும் செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணி எதிர்பார்த்த வேகத்தில் இல்லை.
தன்னிறைவு இல்லையென்றால் இந்தியா சிக்கலில் சிக்கிக்கொள்ளும் என்பதை சமீபத்திய உலக நிகழ்வுகள் பட்டவர்த்தனமாக காட்டுகின்றன. எனவே இந்தியாவின் சொந்தச் செயற்கைக்கோள் வழி இருப்பிட மற்றும் வழிகாட்டும் அமைப்பு ஒரு ஆடம்பரமல்ல; வளர்ந்து வரும் சர்வதேசச் சூழலில் இது இன்றியமையாததாகிறது. 'தன்னிறைவு' என்ற கொள்கை காலாவதியான கருத்து அல்ல; இன்றைய கட்டாயத் தேவையாகிவிட்டது.
(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு