ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா மனுக்கள் தள்ளுபடி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா மனுக்கள் தள்ளுபடி

பட மூலாதாரம், Reuters

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டுமென தமிழக அரசு விதித்த உத்தரவு நீடிக்குமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர்.

இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதற்குப் பிறகு அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 2018 மே 28ஆம் தேதி அந்த ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லையெனக் கூறிய உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனத் தெரிவித்தது.

இந்த வழக்கில் தொடர்ச்சியாக வாதங்கள் நடந்துவந்த நிலையில், எழுத்து மூலமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஜனவரி 8ஆம் தேதியன்று தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு இன்று (ஆகஸ்டு 17) தீர்ப்பளித்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆலைக்கு மின் இணைப்பு தர வேண்டும், குடிநீர் இணைப்பு தர வேண்டும் என்ற மனுக்களும் தள்ளுபடி செய்தனர்.

பேராசிரியர் ஃபாத்திமா ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு சிப்காட்டில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ளது. ஆகவே ஃபாத்திமா தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை. இந்த இரு வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் பொறுமையாக வாதாடிய வைகோ, வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், வைகை, யோகேஷ்வரன், பூங்குழலி, அப்துல் சலீம், மாசிலாமணி, சி.எஸ்.வைத்தியநாதன், மோகன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்களுக்கும் வாதாடியதற்கு நீதிபதி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வைகோ

இந்தத் தீர்ப்பில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறோம். அதைப் பாருங்கள் என நீதிபதி சிவஞானம் தெரிவித்தார். இதற்குப் பிறகு, இந்தத் தீர்ப்பை 2 வார காலம் நிறுத்திவைக்க வேண்டுமென வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் கோரப்பட்டது. ஆனால், நீதிபதிகள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். இதுவே இறுதியான தீர்ப்பு என்றும் தெரிவித்துவிட்டனர்.

815 பக்கங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பின் விவரங்கள் பிற்பகலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.

வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்வார்கள் என்பதால், கேவியட் மனுக்களை தாக்கல் செய்யவிருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மில்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டுமென தமிழக அரசு விதித்த உத்தரவு நீடிக்குமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

"தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவிய ஸ்டெர்லைட் ஆலை, நிலம், நீர், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய காரணத்தால் மக்கள் தொடர்ந்து போராடி வந்தோம். கடந்த 26 ஆண்டுகளாக போராடினோம். இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆலையை மூடியது செல்லும் என தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்திருக்கும் வெற்றி. இந்தத் தீர்ப்பின் காரணமாக தூத்துக்குடி வட்டாரம் இதுவரை நாசமான நிலை மாறி பாதுகாக்கப்படும். இந்தப் போராட்டக் களத்தில் உயிர் நீத்த 13 பேரின் ரத்தத்திற்குக் கிடைத்த நீதியாகவே கருதுகிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், VEDAnta Offical website

இதற்கு முன்பு ஆலைக்கு ஆதரவாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்த தமிழக அரசு, மக்கள் உள்ளம் எரிமலையாக வெடித்ததால், சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டார்கள்" என உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு ம.தி.மு.க பொதுச் செயலாலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் மற்றும் வழக்குகள்

ஸ்டெர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாக குற்றஞ்சாட்டி, நேஷனல் ட்ரஸ்ட் ஆஃப் க்ளீன் என்விரான்மென்ட், உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து வழக்குகள் பதியப்பட்டன.

1997-2012 ஆம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதுதான் இந்த நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு.

1996ன் பிற்பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்ததிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இதனை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2013 மார்ச் 23ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்களுக்கு மூச்சுத் திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. அப்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஒப்புதலையடுத்து மீண்டும் இந்தத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது.

2018-ஆம் ஆண்டு இந்த ஆலையை மூட கோரி ஏராளமான போராட்டங்கள் நடந்தன. மார்ச் மாதத்தில் நடந்த போராட்டம் நாடு முழுவதிலும் பலரின் கவனத்தை ஈர்த்தது.

மிகவும் முக்கிய நிகழ்வாக மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசால் ஆலை மூடப்பட்டது.

2018 மே மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஏராளமான கண்டனங்கள் மற்றும் கேள்விகள் எழுந்தன. நீதிமன்றமும் துப்பாக்கிசூடு தொடர்பாக வினவியது.

அதேவேளையில் போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், கலவரத்திற்கு காரணமாக இருந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் 200க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: