நேரலை, உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்…பிரதமர் பொய் சொல்கிறார்’- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

    ‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்…பிரதமர் பொய் சொல்கிறார்’- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

    பட மூலாதாரம், X/@RahulGandhi

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு ஏமாற்றி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    பிரதமரும் அவரது அமைச்சரவையும் பொய் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    "வங்கதேசத்திற்கு, அமெரிக்காவிற்கு ஆடை ஏற்றுமதி செய்வதற்கு 0% வரிச் சலுகை வழங்கப்படுகிறது. அதற்கான ஒரே நிபந்தனை, அது அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதுதான். இந்திய ஆடைகள் மீது 18% வரி அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது, மோதி அரசின் அமைச்சர், 'நமக்கும் இந்தச் சலுகை வேண்டுமென்றால், நாமும் அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும்’ என பதிலளித்தார்” என ராகுல் காந்தி கூறினார்.

    "நாம் அமெரிக்கப் பருத்தியை இறக்குமதி செய்தால், நம்முடைய சொந்த விவசாயிகள் அழிந்து போவார்கள். அதை நாம் இறக்குமதி செய்யாவிட்டால், நமது ஜவுளித் தொழில்துறை சீரழிந்துவிடும். இப்போது வங்கதேசம், இந்தியாவிலிருந்து பருத்தி இறக்குமதியைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது."

    “ஜவுளித் தொழில் மற்றும் பருத்தி விவசாயம், இந்தியாவில் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இவற்றைச் சார்ந்துள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

    பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் என இரு தரப்பினரின் நலன்களையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கூறிய ராகுல் காந்தி, “இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் இந்த இரு துறைகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றும் குறிப்பிட்டார்.

  2. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா

    யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு

    உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை மத்திய கிழக்குப் பகுதியில் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) டிரம்ப் இதை உறுதிப்படுத்தினார். “விமானம் தாங்கி கப்பல் மிக விரைவில் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும். இரானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு தேவைப்படும்” என்று அவர் கூறினார்.

    பிபிசி பாரசீக சேவையின்படி, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியன் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி நகர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

    இரானில் அதிகார மாற்றம் குறித்தும் டிரம்ப் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

    ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகார மாற்றம் 'இரானில் நடக்கக்கூடிய சிறந்த விஷயம்' என்று கூறினார்.

    டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கிற்கு வந்த ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதன் பணிக்குழுவுடன் இணையும்.

    ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கப்பல் அணு உலை மூலம் இயங்குகிறது மற்றும் F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள் மற்றும் A-2 ஹாக் ஐ விமானங்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அக்கப்பலால் சுமந்து செல்ல முடியும்.

    விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வழிசெலுத்தலுக்கான மேம்பட்ட ரேடார்களையும் கொண்டுள்ளது.

  3. வங்கதேச தேர்தல்கள் குறித்து ஷேக் ஹசீனா கூறியது என்ன?

    ஷேக் ஹசீனா

    பட மூலாதாரம், Peerapon Boonyakiat/SOPA Images/LightRocket via Getty

    படக்குறிப்பு, வங்கதேச அவாமி லீக் கட்சி, ஷேக் ஹசீனாவின் அறிக்கையை வெளியிட்டுள்ளது (கோப்புப் படம்)

    வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 'வஞ்சகம் மற்றும் போலித்தனத்தின் தேர்தல்' என்று கூறியுள்ளார்.

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, ஷேக் ஹசீனா தேர்தல்கள் குறித்து, "வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் யாரும் இல்லை, ஆனால் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் வாக்குகள் குவிந்தன" என்று கூறினார்.

    "பிப்ரவரி 12 அன்று, வங்கதேசம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, மோசடியான மற்றும் போலியான தேர்தலைக் கண்டது. இந்தத் தேர்தல் வங்கதேசத்தின் ஜனநாயக வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான அத்தியாயமாகப் பதிவு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

    ஷேக் ஹசீனா தேர்தல் தரவுகள் குறித்து கேள்வி எழுப்பி "கடுமையான முறைகேடுகள்" நடந்ததாக குற்றம் சாட்டினார். பல புள்ளிவிவரங்கள் "சீரற்றதாகவும் பொய்யாகவும்" தோன்றியதாக அவர் கூறினார்.

    "வாக்களிப்பு விகிதம் பொதுவாக காலையில், குறிப்பாக காலை 11 மணிக்கு முன்பு மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், அந்த நேரத்தில் 14.96% வாக்குகள் மட்டுமே பதிவாகின, நண்பகலில் அது திடீரென 32.88% ஆக அதிகரித்தது. ஒரே மணி நேரத்தில் இந்த உயர்வு அசாதாரணமானது" என்று அவர் கூறினார்.

    "தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை நாட்டின் கள நிலவரத்துடன் பொருந்தவில்லை. காலியான வாக்குச் சாவடிகள், செயல்படாத பூத்கள் மற்றும் வாக்காளர்கள் வருகையின்மை ஆகியவை காணப்பட்டன" என்று ஷேக் ஹசீனா கூறினார்.

    இது தவிர, வாக்கெடுப்பு செயல்முறை மற்றும் அதன் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கேள்விகளை எழுப்பினார்.

  4. ‘அமெரிக்காவின் போர், ஐரோப்பாவின் போர் அல்ல’- ஜெர்மன் தலைவர் கூறியது என்ன?

    ஜெர்மன் அதிபர்

    பட மூலாதாரம், EPA/Shutterstock

    படக்குறிப்பு, ஃபிரீட்ரிச் மெர்ஸ்

    ஒரு முக்கியமான பாதுகாப்பு உச்சிமாநாட்டில், “விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு என்பது இனி இல்லை" என்று ஜெர்மன் தலைவர் எச்சரித்துள்ளார்.

    வருடாந்திர மியூனிக் பாதுகாப்பு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய ஃபிரீட்ரிச் மெர்ஸ், பெரும் வல்லரசு அரசியலின் சகாப்தத்தில் "நமது சுதந்திரத்திற்கு உத்தரவாதம் இல்லை" என்றும், ஐரோப்பியர்கள் "தியாகம்" செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் பிற உலகத் தலைவர்களிடம் கூறினார்.

    "ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

    ஆர்க்டிக் பகுதியை இணைப்பதாக உறுதியளிப்பதன் மூலம் கிரீன்லாந்து மீதான டென்மார்க்கின் இறையாண்மையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்துவது மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதிகள் மீதான அவரது வரிகள் ஆகிய பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மெர்ஸின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ சனிக்கிழமையன்று (பிப்ரவரி 14) தனது உரையை நிகழ்த்தவுள்ளார். முன்னதாக ‘புவிசார் அரசியலில் ஒரு புதிய சகாப்தம்’ பற்றி அவர் பேசியிருந்தார்.

    இந்த ஆண்டு மாநாட்டில் சுமார் 50 உலகத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ‘டிரான்ஸ்அட்லான்டிக்’ (Transatlantic) உறவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும்.

    நேட்டோ (Nato) ராணுவக் கூட்டணியில் அமெரிக்காவின் உறுதிப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ள நேரத்தில் இது வருகிறது. கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டிரம்பின் லட்சியம், பல ஐரோப்பிய தலைவர்களால் அவர்களது மிகப்பெரிய கூட்டாளியான அமெரிக்காவுடனான நம்பிக்கையைச் சிதைத்த ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "கிரீன்லாந்து எங்களை விரும்பப் போகிறது... நாங்கள் ஐரோப்பாவுடன் நன்றாகப் பழகுகிறோம். அது எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்போம். நாங்கள் இப்போது கிரீன்லாந்துக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்."

    ரஷ்யா-யுக்ரேன் போர், மேற்கத்திய நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்கள் மற்றும் சாத்தியமான இரான்-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவையும் இந்த வருடாந்திர கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

    விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு சரிந்து வருவதாக விடுக்கப்பட்ட பல எச்சரிக்கைகளைக் குறிப்பிட்டு, மாநாட்டில் பேசிய மெர்ஸ், "ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு விரிசல், ஒரு ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு மியூனிக்கில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இதை மிக வெளிப்படையாகக் கூறினார்".

    "அவர் சொன்னது சரிதான். மகா (Make America Great Again) இயக்கத்தின் கலாசாரப் போர் நம்முடையது அல்ல. பேச்சு சுதந்திரம் என்பது மனித கண்ணியம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிராகச் செல்லும்போது எங்களிடம் முடிவுக்கு வருகிறது. நாங்கள் வரிகள் மற்றும் பாதுகாப்புவாதத்தை நம்பவில்லை, மாறாக தடையற்ற வர்த்தகத்தை நம்புகிறோம்." என்று அவர் கூறினார்.

  5. வணக்கம் நேயர்களே!

    இன்று (பிப்ரவரி 14) பிற்பகல் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை தொகுத்து அளிப்பது சிராஜ்.

  6. பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோதி தொலைபேசியில் வாழ்த்து

    பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோதி தொலைபேசியில் வாழ்த்து

    பட மூலாதாரம், Getty Images

    பிரதமர் நரேந்திர மோதி, வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோதி சமூக வலைதளமான எக்ஸ்-ல் இது குறித்து தெரிவித்துள்ளார்.

    “தாரிக் ரஹ்மானுடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வங்கதேசத் தேர்தலில் அவரது சிறப்பான வெற்றிக்காக நான் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். வங்கதேச மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அவரது முயற்சிக்கு எனது நல்வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தேன்,” என அவர் கூறியுள்ளார்.

    வங்கதேசப் பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றுள்ளதுடன், 297 இடங்களில் 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக வங்கதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  7. சேலம் தவெக கூட்டத்திற்கு வந்திருந்த நபர் மரணம்

    சேலம் தவெக கூட்டத்திற்கு வந்திருந்த நபர் மரணம்

    சேலத்தில் த.வெ.க தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தை காண வந்திருந்த சூரஜ் என்பவர் உயிரிழந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் சேலத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

    த.வெ.க கூட்டத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சூரஜ் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  8. வங்கதேச தேர்தல் முடிவுகள், பிஎன்பி-யின் வெற்றி குறித்து சீனா கூறியது என்ன?

    பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான்

    வங்கதேசத்தில் "அமைதியான மற்றும் வெற்றிகரமான" நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதற்காக அந்த நாட்டுக்கு அங்குள்ள சீன தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வங்கதேச தேசியவாதக் கட்சிக்கு (பிஎன்பி) சீனத் தூதரகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

    புதிய அரசுடன் இணைந்து பணியாற்றவும், "சீனா-வங்கதேச உறவுகளின் புதிய அத்தியாயத்தை எழுதுவதை" எதிர்நோக்கி இருப்பதாக பேஸ்புக்கில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு பதிவில் தூதரகம் தெரிவித்துள்ளது.

  9. டி 20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே

    டி 20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே

    பட மூலாதாரம், Getty Images

    டி-20 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

    கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.

    இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆரம்பத்திலிருந்தே தடுமாறாத் தொடங்கி வெறும் 29 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

  10. வங்கதேச தேர்தல்: தாரிக் ரஹ்மான் 2 தொகுதிகளில் வெற்றி

    வங்கதேச தேர்தல்: தாரிக் ரஹ்மான் இரண்டு தொகுதிகளில் வெற்றி

    பட மூலாதாரம், Parvez Ahmad Rony/Drik/Getty

    வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

    இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில், பிஎன்பி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களை வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

    வங்கதேச நாளிதழான 'டெய்லி ஸ்டார்' தகவலின்படி, தாரிக் ரஹ்மான் டாக்கா-17 மற்றும் போகுரா-6 ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

    பிபிசி வங்க மொழி சேவையின்படி, பிஎன்பி தலைமையிலான கூட்டணிக்கு 207 இடங்கள் கிடைத்துள்ளன.

  11. ‘தமிழ்நாடு தான் என் வீடு’- சேலம் தவெக கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?

    ‘தமிழ்நாடு தான் என் வீடு’- சேலம் தவெக கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?

    பட மூலாதாரம், TVK

    சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு இன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன் இந்த நிகழ்விற்கு காவல்துறையின் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    அதேபோல, கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அனுமதிச் சீட்டு பெறாத கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனவும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “என்னை வீட்டை விட்டு வெளியே வா, பனையூரை விட்டு வெளியே வா என்கிறார்கள். அவர்களுக்கு என் வீடு எது, எங்கு இருக்கிறது என தெரியுமா? தமிழ்நாடு தான் என் வீடு, என் வீட்டில் மொத்தம் எட்டு கோடி பேர் இருக்கிறார்கள். அனைவரும் என் உறவு, என் சொந்தம்” எனக் கூறினார்.

    “நான் வாக்குகள் கேட்டு மட்டும் வரவில்லை நீதி கேட்டு வந்துள்ளேன். உங்களுக்காக நீதி கேட்க வந்தேன், இப்போது உங்களிடம் நீதி கேட்டு நிற்கிறேன். மற்ற கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி மற்றும் இடம் கொடுப்பார்கள், ஆனால் நமக்கு கொடுக்க மறுக்கிறார்கள், கொடுக்கவும் விடமாட்டார்கள். அனுமதி கேட்டால் நமக்கு மட்டும் ஸ்டாலின் சார் வழிகாட்டு நெறிமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது” என்று கூறினார்.

    தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அப்படி இருந்தால் போராட்டங்கள் ஏன் நடக்கின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    "அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி செய்ய முடியும் என கேட்கிறார்கள். பணத்தை கொள்ளையடிப்பதை தவிர அவர்களுக்கு வேறு அனுபவம் இருக்கிறதா?. கொள்ளை அடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை" என்று பேசினார்.

  12. வங்கதேச தேர்தல் : பாகிஸ்தான் பிரதமர் கூறியது என்ன?

    ஷாபாஸ் ஷெரீப்

    பட மூலாதாரம், FAYEZ NURELDINE/AFP via Getty

    வங்கதேச பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) பெற்ற வெற்றிக்கு தாரிக் ரஹ்மானுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    "வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சியை மகத்தான வெற்றிக்கு வழிநடத்தியதற்காக தாரிக் ரஹ்மானை மனதார வாழ்த்துகிறேன். தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதற்காக வங்கதேச மக்களையும் வாழ்த்துகிறேன்" என்று ஷாபாஸ் ஷெரீப் கூறினார்.

    "நமது வரலாற்று, சகோதரத்துவ மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான நமது பகிரப்பட்ட இலக்குகளை முன்னேற்றவும் வங்கதேசத்தின் புதிய தலைமையுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

    முன்னதாக, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    பிபிசி வங்க மொழி சேவையின்படி, வங்கதேச தேசியவாதக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 151 இடங்களைத் தாண்டியுள்ளது. வங்கதேச தேசியவாதக் கூட்டணி தற்போது 182 இடங்களை வென்றுள்ளது.

  13. ‘இந்த ஆண்டு மட்டும் தான் கோடைக் காலம் வருகிறதா’- மகளிர் உரிமைத்தொகை குறித்து விஜய் விமர்சனம்

    விஜய்

    பட மூலாதாரம், TVK

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று (பிப்ரவரி 13) காலை 5 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் ஒரு காணொளி மூலமாக அறிவித்தார்.

    மேலும், “பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், “புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும் தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

    “வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம் தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.” என்றும் விஜய் கூறியுள்ளார்.

    “தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க-வை தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்" என அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  14. வங்கதேச தேர்தல்: பிஎன்பி இதுவரை எத்தனை இடங்களை வென்றுள்ளது?

    தாரிக் ரஹ்மான்

    பட மூலாதாரம், MD Abu Sufian Jewel/NurPhoto via Getty

    படக்குறிப்பு, முன்னாள் வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் கட்சியான பி.என்.பி., அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் தாரிக் ரஹ்மான் தலைமையில் செயல்படுகிறது.

    வங்கதேசத்தில் நேற்று (பிப்ரவரி 12) பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பெரும்பான்மையை நோக்கி நகர்கிறது.

    உள்ளூர் ஊடகங்கள், பிஎன்பி கட்சி நாடாளுமன்ற இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வெல்லக்கூடும் என்று கணித்துள்ளன.

    பிபிசி வங்க சேவையின்படி, பிஎன்பி தலைமையிலான கூட்டணி இதுவரை 109 இடங்களை வென்றுள்ளது, அதே நேரத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 43 இடங்களை வென்றுள்ளது.

    பிற வேட்பாளர்கள் இதுவரை ஐந்து இடங்களைப் பெற்றுள்ளனர்.

    வங்கதேசத்தில் அரசாங்கத்தை அமைக்க 151 இடங்கள் தேவை.

  15. மகளிர் உரிமைத் தொகை- ரூ.5,000 வரவு வைப்பு

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், @mkstalin

    திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தமது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள் என அந்த பதிவில் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், இதனை முந்திக் கொண்டு அளித்திருப்பதாக தமது பதிவில் கூறியுள்ளார்.

  16. வங்கதேசத்தில் வாக்கு எண்ணிக்கை: வெற்றியை நோக்கி முன்னேறும் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி

    தாரிக் ரஹ்மான்

    பட மூலாதாரம், Syed Mahamudur Rahman/NurPhoto via Getty

    வங்கதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது, இதில் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) முன்னிலை வகிக்கிறது என்றும், ஜமாத்-இ-இஸ்லாமி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

    ஊடகங்களின் கூற்றுப்படி, பிஎன்பி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்படுகிறது.

    பிஎன்பி, முன்னாள் வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் கட்சி ஆகும். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் தாரிக் ரஹ்மான் அதன் முக்கிய தலைவராகக் கருதப்படுகிறார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கட்சிகள் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.

    2024ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு காரணமான இளைஞர் இயக்கத்தை, தேசிய குடிமக்கள் கட்சி (NCP), பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த கட்சி வாக்கு எண்ணிக்கை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.

    பிப்ரவரி 12ஆம் தேதி வியாழக்கிழமை வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மாலை 4:30 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பின்னர், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மீதான தடைக்குப் பிறகு, இந்த முறை பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி இடையே போட்டி நிலவுகிறது.

  17. வணக்கம் நேயர்களே!

    இன்று (பிப்ரவரி 13) பிற்பகல் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை தொகுத்து அளிப்பது சிராஜ்.

  18. டி20 உலகக் கோப்பை: இந்தியா நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

    டி20 உலகக் கோப்பை: இந்தியா நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

    பட மூலாதாரம், Getty Images

    டி20 உலகக் கோப்பையின் 18வது போட்டியில் நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    முதலில் ஆடிய இந்தியா 209 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நமீபியா 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், ஹார்டிக் மற்றும் அக்சர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

    இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தார்.

    இதன் பிறகு, ஹார்டிக் பாண்ட்யா 52 ரன்கள் எடுத்து இந்தியாவை இந்த ஸ்கோரை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    நமீபியா கேப்டன் ஜெரார்ட் எராஸ்மஸ் நான்கு ஓவர்களில் 20 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்காக ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  19. டி20 உலகக் கோப்பை: நமீபியாவுக்கு இந்தியா 210 ரன்கள் இலக்கு

    டி20 உலகக் கோப்பை: நமீபியாவுக்கு இந்தியா 210 ரன்கள் இலக்கு

    பட மூலாதாரம், Getty Images

    டி20 உலகக் கோப்பையின் 18வது போட்டியில், நமீபியா அணிக்கு 210 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

    இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தார். இதன் பிறகு, ஹார்டிக் பாண்ட்யா 52 ரன்கள் எடுத்து இந்தியாவை இந்த ஸ்கோரை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    நமீபியா கேப்டன் ஜெரார்ட் எராஸ்மஸ் நான்கு ஓவர்களில் 20 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  20. வங்கதேச தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவடைந்தது

    பெண் வாக்காளர்கள் வாக்களித்த பிறகு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

    பட மூலாதாரம், Tarekuzzaman Shimul/BBC Bangla

    படக்குறிப்பு, பெண் வாக்காளர்கள் வாக்களித்த பிறகு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

    வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. 13வது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வாக்கெடுப்புக்கு வாக்களித்த பிறகு, வங்கதேசத்தில் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தேர்தலுடன் சேர்த்து அரசியலமைப்பைத் திருத்துவதற்கான வாக்கெடுப்பும் இன்று நடைபெற்றது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குப் பெட்டிகள் எண்ணுவதற்காக எடுத்துச் செல்லப்படுவதை பிபிசி செய்தியாளர்கள் கண்டனர்.

    நாடாளுமன்றத் தேர்தல்கள் அமைதியாக நிறைவடைந்ததற்கும், வாக்கெடுப்புக்கும் நாட்டின் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    பட மூலாதாரம், Chief Adviser Press Wing

    படக்குறிப்பு, நாடாளுமன்றத் தேர்தல்கள் அமைதியாக நிறைவடைந்ததற்கும், வாக்கெடுப்புக்கும் நாட்டின் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
    13வது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வாக்கெடுப்புக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, 13வது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வாக்கெடுப்புக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது.
    வங்கதேசத்தின் பல பகுதிகளில் வாக்காளர்களின் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வங்கதேசத்தின் பல பகுதிகளில் வாக்காளர்களின் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது.

    பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் தொடங்குவதை பிபிசி செய்தியாளர்கள் கண்டனர்.

    இந்த ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வாக்கெடுப்பு வாக்குச்சீட்டுகள் ஒரே பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச்சீட்டுகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும், வாக்கெடுப்பு வாக்குச்சீட்டுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் உள்ளன.

    முதலில், இந்த இரண்டு வண்ணங்களில் உள்ள வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு பின்னர் தனித்தனியாக எண்ணப்படும்.

    சிட்டகாங்-13 தொகுதியில் உள்ள குவாபஞ்சக் உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி. இந்தத் தொகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் எட்டு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
    படக்குறிப்பு, சிட்டகாங்-13 தொகுதியில் உள்ள குவாபஞ்சக் உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி. இந்தத் தொகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் எட்டு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
    ஜமாத்-இ-இஸ்லாமி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி, டாக்கா-8 உட்பட மூன்று தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியுள்ளது.
    படக்குறிப்பு, ஜமாத்-இ-இஸ்லாமி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி, டாக்கா-8 உட்பட மூன்று தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியுள்ளது.
Trending Now