டிரம்ப் வீட்டுக்குள் புகுந்த நபர் சுட்டுக்கொலை

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பாகிஸ்தான் தூதருக்கு தாலிபன் வெளியுறவு அமைச்சகம் சம்மன்

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், AFP via Getty Images

    ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து, தாலிபன்கள் பாகிஸ்தான் தூதரை சம்மன் செய்து அழைத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பாகிஸ்தான் தூதரிடம் ஒரு எதிர்ப்பு கடிதம் வழங்கப்பட்டது. பிபிசி பஷ்தூன் சேவை கூற்றுப்படி, தாலிபன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் படைகள் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல்களை நடத்தி டஜன் கணக்கான பொதுமக்களைக் கொன்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சகம் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆப்கானிஸ்தான் சார்பாக ஒரு எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பித்தது." என்று கூறப்பட்டுள்ளது.

    "ஆப்கான் மண்ணைப் பாதுகாப்பது ஷரியாவின் பொறுப்பு என்று பாகிஸ்தான் தரப்புக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களின் எதிர்மறை விளைவுகளுக்கு மறுபக்கம் பொறுப்பாகும்." என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஏழு பயங்கரவாத முகாம்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் கூறியது. இருப்பினும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பல பொதுமக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறுகிறது.

  2. டிரம்ப் வீட்டுக்குள் புகுந்த நபர் சுட்டுக்கொலை

    டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    டிரம்பின் மார்-எ-லாகோ வீட்டின் பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் நுழைந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ரகசிய சேவை தெரிவித்துள்ளது.

    அந்த நபர் வீட்டின் வடக்கு வாயிலுக்கு அருகில் ஒரு துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேனுடன் காணப்பட்டதாக ரகசிய சேவை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. மற்றும் ரகசிய சேவை அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

    அமெரிக்க ரகசிய சேவை ஏஜெண்ட்களும், பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு துணை அதிகாரியும் 20 வயதுடைய அந்த நபரை எதிர்கொண்டனர், மேலும் மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ரகசிய சேவை தெரிவித்துள்ளது.

    கொல்லப்பட்ட அந்த நபரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த வார இறுதியில் வெள்ளை மாளிகையில் தங்கியுள்ளார்.

  3. 'ஒரு தொகுதியை விட்டுத் தருமாறு திமுக கேட்டது' - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

    தமிழ்நாடு, திமுக, முஸ்லிம் லீக்

    பட மூலாதாரம், ANI

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், "தமிழ்நாட்டில் 60 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளோம்." என்றார்.

    "கலைஞர் இருந்த காலத்தில் 5 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதனால் தான் தற்போதும் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். 5 இல்லையென்றாலும் 4 தொகுதிகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்தோம்." என்றார்.

    ஒரு தொகுதியை விட்டுத் தருமாறு திமுக தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். " பேச்சுவார்த்தையின் போது, 'கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெல்லவில்லை. திமுக கூட்டணியை வலுப்படுத்தவே தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துள்ளோம். மேலும் சில கட்சிகளையும் சேர்க்க பேசி வருகிறோம். புதிய கட்சிகளுக்கு திமுக போட்டியிட்ட இடங்களை தானமாக வழங்க வேண்டிய சூழல் உள்ளது. கூட்டணி நலன் கருதி கூட்டணி கட்சிகளும் சில இடங்களை விட்டுத் தர வேண்டும். நீங்கள் 3 இடங்களில் போட்டியிட்டீர்கள், தொகுதியை குறைக்கச் செல்ல கேட்கவில்லை. ஆனால் ஏதாவது ஒரு தொகுதியை தானமாக கொடுத்தால் வெற்றிக்கு உதவும்' என்று திமுக தரப்பில் கூறினார்கள். அதை பரிசீலித்து விட்டு கூறுவதாக தெரிவித்துள்ளோம்." என்றார்.

    செய்தியாளர் சந்திப்புக்கு நடுவே காதர் மொகிதீன் திடீரென மயக்கமடைந்தார். அவருக்கு அங்கேயே உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

    2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மூன்று இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

  4. 'பயங்கரவாத சதி': தமிழ்நாட்டில் 6 பேரை கைது செய்த டெல்லி காவல்துறை

    தமிழ்நாடு, டெல்லி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு 'பயங்கரவாத சதியில்' ஈடுபட்டதாக சந்தேதிக்கப்படும் 6 நபர்களை தமிழ்நாட்டிலிருந்து கைது செய்துள்ளது.

    டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பால் பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் இந்த தகவலை உறுதிபடுத்தினார்.

    எனினும் பிடிஐ மற்றும் ஏஎன்ஐ செய்தி முகமைகள் சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.

    அந்த செய்திகளின்படி, தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்காக டெல்லி அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் வங்கதேச குடிமக்களும் இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

  5. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் திடீர் தாக்குதல்

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள 'ஏழு பயங்கரவாத மறைவிடங்களை' தாக்கியதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உளவுத் தகவலின் அடிப்படையில் அந்த இடங்களை குறி வைத்ததாக பாகிஸ்தான் கூறுகிறது.

    பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின்படி, பாகிஸ்தான் தாலிபன் மற்றும் அதனுடன் சேர்ந்த ஃபித்னா-அல்-கவார்ஜி மற்றும் கோரசான் மாகாணத்தின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆகியவற்றின் மறைவிடங்கள் மற்றும் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களுக்குப் பதில் நடவடிக்கையாக ராணுவத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    இந்தக் குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரி வந்ததாகக் கூறும் பாகிஸ்தான், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கிறது.

    ஆனால் ஆப்காகிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் அத்துமீறியிருப்பதாக தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் படைகளின் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

    "நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் நங்கர்ஹர் மற்றும் பக்திகா மாகாணங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வீசி பெண்கள் மற்றும் குழந்தகள் உட்பட பலரையும் கொன்றுள்ளனர்," என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    "பாகிஸ்தான் தளபதிகள் தங்களின் பாதுகாப்பு பலவீனத்தை இத்தகைய குற்றங்கள் மூலம் ஈடு செய்கின்றனர்," என்றும் அவர் விமர்சித்தார்.

  6. இரானில் அரசுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம்

    இரான், போராட்டம்

    பட மூலாதாரம், UGC

    இரானில் சில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த மாதம், போராட்டங்களை அதிகாரிகள் கடுமையாக ஒடுக்கியதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பெரிய அளவிலான போராட்டமாக இது அமைந்துள்ளது.

    சனிக்கிழமை தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷரிஃப் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் பேரணியாக சென்ற காணொளியை பிபிசி உறுதிபடுத்தியுள்ளது.

    அந்தக் காணொளியில் போராட்டக்காரர்கள் மற்றும் அரசாங்க ஆதரவாளர்கள் இடையே மோதல் நடந்ததையும் காண முடிந்தது.

    டெஹ்ரானில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் நகரத்தில், வட கிழக்குப் பகுதியில் பேரணி ஒன்று நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஜனவரியில் பெருந்திரளான போராட்டங்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இரானைச் சுற்றி தனது ராணுவ இருப்பை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. வரையறுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே செவ்வாய்கிழமை சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் இரானிய அதிகாரிகள் சந்தித்தனர். இரானின் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

  7. வணக்கம் நேயர்களே!

    இன்று (22-02-2026) மதியம் வரையிலும் நேரலைப் பக்கத்தில் செய்திகளை சுருக்கமாக தொகுத்து அளிப்பது மோகன்.

  8. 10 அல்ல 15 சதவிகிதம் - உலகளாவிய வரியை மீண்டும் உயர்த்திய டிரம்ப்

    டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய இறக்குமதி வரிகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், உலகளாவிய வரிகளை 15 சதவிகிதமாக உடனே அமலாகும் வகையில் விதிப்பதாகக் கூறியுள்ளார்.

    அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் டிரம்பின் வரிக் கொள்கையைத் தள்ளுபடி செய்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவிற்குள் வரும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% வரி விதிப்பதாக அதிபர் முன்பு கூறினார்.

    ஆனால் சனிக்கிழமை ஒரு ட்ரூத் சோஷியல் சமூகப் பதிவில், இது இப்போது 15% ஆக உயர்த்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

  9. பாகிஸ்தான் - நியூசிலாந்து சூப்பர் 8 ஆட்டம் மழையால் ரத்து

    பாகிஸ்தான் - நியூசிலாந்து

    பட மூலாதாரம், Getty Images

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடப்பதாக இருந்த சூப்பர் 8 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    கொழும்பு பிரமதேசா ஸ்டேடியத்தில் டாஸ் போட்ட சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியது. கனமாக மழை பெய்ததால் ஆடுகளம் முழுவதுமே கவர்களால் மூடப்பட்டது. மழை விடாமல் பெய்துகொண்டிருக்கவே சுமார் 9 மணி அளவில் ஆட்டத்தைக் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது.

    இந்தப் போட்டி நடக்காததால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. அடுத்ததாக பாகிஸ்தான் அணி 24-ம் தேதி இங்கிலாந்துடனும், நியூசிலாந்து அணி 25-ம் தேதி இலங்கையுடனும் மோதுகின்றன. நியூசிலாந்து - இலங்கை ஆட்டம் இதே பிரமதேசா மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி பல்லேகலேவில் நடக்கிறது.

  10. டி20 உலகக் கோப்பை: அபிஷேக் ஷர்மாவின் ஃபார்ம் குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

    அபிஷேக் ஷர்மா - சூர்யகுமார் யாதவ்

    பட மூலாதாரம், Santanu Banik/MB Media/Getty Images

    ஆமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேட்டர் அபிஷேக் ஷர்மா பற்றிப் பேசிய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "அபிஷேக் ஷர்மாவின் ஆட்டம் குறித்து கவலைப்படுபவர்களைப் பார்த்துதான் நான் கவலைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன்பு பேசிய அவர், "எதிர்காலத்தில் அவரை (அபிஷேக் ஷர்மா) எதிர்கொள்ளப் போகும் அணிகளைப் பற்றித்தான் நான் அதிகம் கவலைப்படுகிறேன். கடந்த ஆண்டு அவர் அனைத்தையும் செய்து காட்டினார், இப்போது அவருக்கு ஆதரவாக நிற்பது நமது முறை," என்றார்.

    இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் ஷர்மாவின் ஃபார்ம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே டக் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவர் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

  11. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் வரிக் கொள்கை பற்றிய தீர்ப்பு குறித்து இந்தியா என்ன சொன்னது?

    இந்தியா - அமெரிக்கா - வரி

    பட மூலாதாரம், Andrew Harnik/Getty Image

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரிக் கொள்கை குறித்த நேற்றைய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். இது தொடர்பாக அதிபர் டிரம்பும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அமெரிக்க நிர்வாகம் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இவற்றின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள இந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை மோசமானது என்று சாடிய டிரம்ப், வர்த்தகக் கொள்கையை ரத்து செய்த நீதிபதிகளை முட்டாள்கள் என்றார்.

    செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், "எதுவும் மாறவில்லை. இந்தியா வரிகளை செலுத்தும். நாங்கள் வரிகளைச் செலுத்த மாட்டோம்" என்று கூறினார்.

  12. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது இந்தியா

    ஸ்மிரிதி மந்தனா

    பட மூலாதாரம், Mark Brake/Getty Images

    ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடரைக் கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆஸ்திரேலியாவிற்கு 177 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்தது.

    ஆனால் ஆஸ்திரேலிய அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லி கார்ட்னர் 45 பந்துகளில் 57 ரன்களும், அவரைத் தொடர்ந்து ஃபீபி லிட்ச்பீல்ட் 17 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியாவிற்காக ஸ்மிருதி மந்தனா 55 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதும் வென்றிருந்தார்.

    இந்தத் தொடரில் முன்னதாக இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. அதனால் இந்தியா 2-1 என மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரைக் கைப்பற்றியது.

  13. ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் மீது நடவடிக்கை எடுக்க பிரிட்டன் அரசு முடிவு

    ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    அரசு வாரிசு வரிசையிலிருந்து ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன்-விண்டஸரை நீக்க சட்டம் கொண்டு வருவதற்கு பிரிட்டன் அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரசாங்கத்தின் இந்த நகர்வு ஆண்ட்ரூ அரசர் ஆவதை தடுக்கும். ஆண்ட்ரூ பிரிட்டன் அரசர் சார்லஸின் சகோதரர் ஆவார். கடந்த அக்டோபர் மாதம் அவரது "இளவரசர்" உள்ளிட்ட அரச பட்டங்கள் பறிக்கப்பட்டிருந்தாலும் வாரிசுக்கான பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.

    காவல் துறை விசாரணையின் முடிவு என்னவாக இருந்தாலும் இந்த நகர்வு தான் "சரியானதாக இருக்கும்" என பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லூக் பொல்லார்ட் பிபிசி ரேடியோவிடம் தெரிவித்தார்.

    "இதற்கு அனைத்து கட்சி ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். ஆனால் அது காவல்துறை விசாரணை முடிந்தபிறகு தான் நடக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

    பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு இருந்ததாக ஆண்ட்ரூ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

  14. வேடசந்தூர் தி.மு.க ஒன்றிய செயலாளரை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது

    திமுக, திண்டுக்கல்

    பட மூலாதாரம், Facebook/Veera Saminathan

    படக்குறிப்பு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரா. சாமிநாதன்

    திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவரைச் சந்திக்க வந்த நபர் கத்தியால் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் வீரா. சாமிநாதன். இவர் கல்வி நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

    காவல்துறை கூற்றுப்படி, 'இந்த நிலையில் இன்று காலை வீராசாமிநாதன் தமுத்துப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க வந்த எரியோடு மத்தனம்பட்டியைச் சேர்ந்த மணி என்பவர் சால்வைப் பொருத்த வந்தார்.

    அப்போது சால்வையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரா சாமிநாதனை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் அலறியடிக்க அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை தடுக்க முயன்ற வீராசாமிநாதனின் ஆதரவாளர் நாசிமுத்து என்பவரையும் மணி தாக்கியுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மணியைப் பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த வீராசாமிநாதன் மற்றும் நாச்சிமுத்துவை உடன் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.'

    அதன் பின்னர் வீராசாமிநாதன் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  15. இரான் மீது வரையறுக்கப்பட்ட ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமா?

    இரான், அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி

    இரானின் அணுசக்தி திட்டங்களை தடுத்து நிறுத்த அந்நாட்டின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு வரையறுக்கப்பட்ட ராணுவ தாக்குதலை நடத்த ஆலோசித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இரான் மீதான தாக்குதல் தொடர்பான தகவலை அதிகாரிகள் வெளியிட்ட சில மணி நேரங்களில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.

    இரான் உடன் ஒப்பந்தம் ஏற்படுமா அல்லது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பது "அடுத்த 10 நாட்களில் தெரிந்துவிடும்" என வியாழக்கிழமை டிரம்ப் தெரிவித்திருந்தார். சமீபத்தில் வாரங்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது ராணுவ இருப்பை அமெரிக்க அதிகரித்துள்ளது.

    'சாத்தியமான ஒப்பந்த வரைவை' இரான் தயாரித்து வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃபிடம் அது வழங்கப்படும் எனவும் வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தார்.

    இரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சித்து வருவதாக அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன, இந்தக் குற்றச்சாட்டை இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

  16. கூட்டணி கட்சிகளுடன் பேச திமுக சார்பில் குழு அமைப்பு

    காங்கிரஸ், திமுக, கூட்டணி, தமிழ்நாடு

    பட மூலாதாரம், X/DMK

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரி வந்தன.

    இந்தச் சூழலில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்படும் என திமுக தெரிவித்திருந்தது. பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் திமுகவின் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது.

    இந்தக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு இருப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கே.என்.நேரு, திருச்சி சிவா. ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

  17. வணக்கம் நேயர்களே!

    இன்று (21-02-2026) மதியம் வரையிலும் நேரலைப் பக்கத்தில் செய்திகளை சுருக்கமாக தொகுத்து அளிப்பது மோகன்.

  18. பாகிஸ்தான் முழுவதும் உணரப்பட்ட நிலநடுக்கம்

    பாகிஸ்தான் முழுவதும் உணரப்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

    பட மூலாதாரம், CSEM-EMSC

    பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.6 அளவில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது, மேலும் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

    பிபிசி உருது சேவையின் கூற்றுப்படி, இன்று (பிப்ரவரி 20) மாலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத், சுவத், பெஷாவர் மற்றும் அபோதாபாத் உள்ளிட்ட கைபர் பக்துன்க்வாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    ஆரம்ப செய்திகளின்படி, நிலநடுக்கத்தால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

  19. காஸா அமைதி திட்டம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

    ரந்தீர் ஜெய்ஸ்வால்

    பட மூலாதாரம், MEA India

    படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

    காஸா அமைதி வாரியக் கூட்டத்தில் இந்தியா ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 'காஸா அமைதித் திட்டத்தை' ஆதரித்துள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

    அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் நடந்த, “அமைதி வாரியக் கூட்டத்தில் இந்தியா ஒரு பார்வையாளராகப் பங்கேற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்முயற்சியான காஸா அமைதித் திட்டத்தை இந்தியா ஆதரித்துள்ளது” என அவர் கூறினார்

    இந்தியா-பாகிஸ்தான் மோதலைக் கருத்தில் கொண்டு டிரம்பின் கூற்று குறித்து கேட்டபோது, ​​இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே இதை தெளிவுபடுத்தியுள்ளது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

    “இது செயல்பாட்டுத் தகவல் என்பதால், இது தொடர்பாக நீங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

  20. 'சமரசம் செய்யத் தயார், ஆனால்…’- யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியது என்ன?

    'சமரசம் செய்யத் தயார், ஆனால்…’- யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியது என்ன?

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

    ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்குத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அது யுக்ரேனின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை விட்டுக்கொடுப்பதில் அமையக்கூடாது என்றும் அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ‘கியோடோ நியூஸ்’ முகமையிடம் பேசிய ஸெலன்ஸ்கி, "ஒரு தீர்வை எட்ட அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் ரஷ்யா தொடர்ந்து விடுக்கும் இறுதி எச்சரிக்கையை ஏற்க தயாராக இல்லை. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள். இதை அனைவரும் அங்கீகரித்துள்ளனர். இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே மத்தியஸ்தம் செய்யும் அல்லது மத்தியஸ்தம் செய்ய முயலும் பல நாடுகள், ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர் என்பதை அங்கீகரிக்கின்றன," என்று கூறினார்.

    "ரஷ்யா எங்களது நிலப்பரப்பில் சுமார் 20% ஆக்கிரமித்துள்ளது. இருந்தபோதிலும், 'நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அங்கேயே இருப்போம்' என்ற அடிப்படையில் இந்த நேரத்தில் அமைதி பற்றிப் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுவே ஒரு பெரிய சமரசம்." என்று அவர் கூறினார்.

    "சமரசம் செய்த பிறகும் ரஷ்யா எங்களுக்கு என்ன தருகிறது? உங்களின் பிற பகுதிகளை நாங்கள் ஆக்கிரமிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது பயங்கரவாதம். இத்தகைய பேச்சும் பயங்கரவாதமே," என்று ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.

    "’நான் உன்னைக் கொல்லத் தயாராக இல்லை, அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடு.' இதன் பொருள் என்ன? இது சமரசம் அல்ல. இது ஒரு இறுதி எச்சரிக்கை. அதனால்தான் நான் சொன்னேன், யுக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, எங்களது ராணுவம், எங்களது மக்கள் மற்றும் எங்களது குழந்தைகளை மதிக்கும் ஒரு சமரசத்திற்கு நாங்கள் தயார். ஆனால் நாங்கள் இறுதி எச்சரிக்கைக்குத் தயாராக இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

Trending Now