நேரலை, "நரகத்தின் கதவுகள் திறக்கும்" - இரான் எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. குவைத் மற்றும் பஹ்ரைன் இலக்குகளைக் குறிவைக்கும் இரானிய டிரோன்கள்

    இரான், பஹ்ரைன், குவைத்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    இரானின் டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து தனது சேமிப்பு கிடங்குகளில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக பஹ்ரைனின் பாப்கோ எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது என பிபிசி பாரசீக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஹ்ரைனின் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் பாப்கோ எனர்ஜியும் ஒன்று.

    முன்னதாக பிபிசி பாரசீக சேவை வெளியிட்ட செய்தியின்படி, இரானின் டிரோன் தாக்குதலில் குவைத்தின் இரு மின் நிலையங்கள் மற்றும் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை சேதமடைந்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

    தாக்குதலுக்கு உள்ளான மின் நிலையங்களும் சுத்திகரிப்பு ஆலையும் தற்போது மூடப்பட்டுள்ளது. முன்னர் நடந்த தாக்குதல்களில் குவைத் அரசு அலுவலக வளாகம் சேதமடைந்த நிலையில் குவைத் பெட்ரோலிய அமைச்சகத்தில் தீ உருவானது.

  2. லெபனான் மீது தொடரும் தாக்குதல் - இஸ்ரேல் புதிய எச்சரிக்கை

    இஸ்ரேல், சிரியா, லெபனான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மஸ்னா வழித்தடம் வழியாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் லெபனானிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ளனர்.

    லெபனான் மற்றும் சிரியா எல்லையில் அமைந்துள்ள மஸ்னா வழித்தடத்திலும் "எதிர்காலத்தில்" தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் அவிசாய் அட்ரேயி கூறுகையில், இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா "ராணுவ நோக்கங்களுக்காக" இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார். என்றார்.

    சிரியா உடனான லெபனானின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த வழித்தடம் இரு நாடுகளுக்கும் இடையே பயணிப்பதற்கான முக்கியமான வழித்தடமாக உள்ளது.

    இந்தப் போர் தொடங்கியது முதல் லெபனானிலிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சிரியாவுக்கு கடந்து சென்றதாக ஐநா அகதிகள் அமைப்பு முன்னர் தெரிவித்திருந்தது. இந்த மஸ்னா வழித்தடம் முழு நேரமும் அதிகாரப்பூர்வ வழித்தடமாக செயல்பட்டு வருகிறது.

  3. "நரகத்தின் கதவுகள் திறக்கும்" - இரான் எச்சரிக்கை

    இரான், அமெரிக்கா

    பட மூலாதாரம், IRNA

    படக்குறிப்பு, கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் காணொளி செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு காலக்கெடு விதிப்பதாக எச்சரித்திருந்த நிலையில் இரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் அதற்கு வலுவாக எதிர்வினையாற்றியுள்ளது.

    சனிக்கிழமை(நேற்று) டிரம்ப் இரானை மிரட்டும் விதமாக, "ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ள அல்லது ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க நான் இரானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்குகிறேன். நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மீது சீற்றத்தை நாம் கட்டவிழ்த்துவிட 48 மணி நேரம் மட்டுமே மீதமுள்ளது," என தெரிவித்திருந்தார்.

    பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, டிரம்பின் கருத்துக்கு இரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையக கமாண்டரான மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி எதிர்வினையாற்றி உள்ளார்.

    "அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அவர்களின் பயங்கரவாத ராணுவம் மற்றும் சீயோனிச ஆட்சிக்குச் சொந்தமான அனைத்து உள்கட்டமைப்புகளையும் நாங்கள் தொடர்ந்து தாக்குவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "நம் மீது திணிக்கப்பட்ட இந்தப் போர் தொடங்கியதில் இருந்து நாங்கள் சொன்ன அனைத்தையும் செய்துள்ளோம். இந்தச் செய்தியில் எளிய அர்த்தம் உங்களுக்கு நரகத்தின் கதவுகள் திறக்கும் என்பது தான்." என்கு குறிப்பிட்டார்.

    கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளரான கர்னல இப்ராஹிம் ஜுல்ஃபாகாரி காணொளி செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆனால் அவர் டிரம்பின் அச்சுறுத்தல் பற்றி குறிப்பிடவில்லை.

    பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, "தீயது பரவினால் ஒட்டுமொத்த பிராந்தியமும் உங்களுக்கு நரகமாக மாறும் என்பதை மறந்துவிட வேண்டாம். இரான் இஸ்லாமியக் குடியரசு தோற்றுவிட்டது என்கிற பிம்பம் உங்களுக்கு புதைகுழி போல ஆகிவிட்டது. நீங்கள் அதில் மூழ்கிவிடுவீர்கள்," என ஜுல்ஃபாகாரி பேசினார்.

  4. வணக்கம் நேயர்களே!

    இன்று (05-04-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது மோகன்.

  5. "48 மணி நேரம் மட்டுமே உள்ளது" - இரானுக்கு டிரம்ப் புதிய எச்சரிக்கை

    இரான், அமெரிக்கா, டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    ஒப்பந்தம் மேற்கொள்ள அல்லது ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க இரானுக்கு 48 மணி நேரம் இருப்பதாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

    "ஒப்பந்தம் மேற்கொள்ள அல்லது ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க நான் இரானுக்கு 10 நாட்கள் கொடுத்தது நினைவில் இருக்கிறதா? நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது," என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "அவர்கள் மீது சீற்றம் விழுவதற்கு 48 மணி நேரம் மட்டுமே மீதம் உள்ளது." என்றார்.

    மார்ச் 27-ஆம் தேதி அன்று இரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான எந்த தாக்குதல்களையும் அடுத்த 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

  6. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் கேள்வி

    திமுக, அனிதா ராதாகிருஷ்ணன்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் உள்ள திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் நேற்று முதல் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்செந்தூர் தொகுதி உடன்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்மறிகுளம் ஊராட்சி பகுதியில் உள்ள ராமசுப்ரமணியபுரம், வலசைகிணறு, கல்விளை, பூலி குடியிருப்பு, அனைத்தலை கிராமங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    திமுக பிரமுகர்களுடன் தேர்தல் பிரச்சார வாகனத்தில் கல்விளை கிராமத்திற்குள் சென்றபோது கிராம மக்கள் தங்களின் கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். கோவில் கட்டி தருவதாக கொடுத்த வாக்குறுதியை இதுவரையிலும் நிறைவேற்றி தரவில்லை என்றும் கூறினர். இதனால் திமுக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

  7. "சட்டமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?" - திருமாவளவன் விளக்கம்

    திருமாவளவன்

    பட மூலாதாரம், Thirumavalavan

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிடுகிறது.

    இதில் விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் விசிக வேட்பாளர் தேர்வு தொடர்பான விவாதங்கள் சமூக ஊடகங்களில் எழுந்தன.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.

    அதற்கான காரணத்தை விளக்கிப் பேசிய அவர், "சட்டமன்ற தேர்தலில் வென்று பேரவைக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன். என்னை திமுக கூட்டணியில் இருந்து பிரிக்க முயற்சித்தார்கள். திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க விசிகவும் திருமாவளவனும் முக்கிய காரணம் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்வேன். இந்தக் கூட்டணிக்காக பெரும்பங்கு செய்திருக்கிறேன்.

    "திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவனைப் பிரிக்க வலதுசாரிகள் முயற்சி செய்தனர். நான் போட்டியிடப் போகிறேன் என்றதும் பதவி ஆசை எனப் பல ஊகங்களை கட்டமைத்தார்கள். யூகங்களை எல்லாம் செய்தி ஆக்குகிறார்கள். கடந்த தேர்தலில் வென்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்காததற்கு அவர்கள் திமுகவிற்கு ஆதரவாக இருந்தது காரணம் என்றெல்லாம் செய்தி பரப்புகிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தான் முடிவாக இருந்தது." என்றார்.

    திருமாவளவனுக்கு கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் பதவி மீது அசை என வதந்தி பரவியதாகக் கூறும் அவர், "கூட்டணி ஆட்சியை நான் கோர மாட்டேன் என வெளிப்படையாக கூறிவிட்டேன். ஆனால் கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் பதவிக்காக தான் போட்டியிடுகிறேன் என வதந்தி பரப்பினார்கள். கூட்டணி ஆட்சி கோரிக்கையை சட்டமன்றம் சென்று தான் எழுப்ப வேண்டும் இல்லை, வெளியில் இருந்தே எழுப்பலாம்." என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சட்டமன்ற தேர்தல் போட்டி முடிவு குறித்து பேசிய திருமாவளவன், "நான் ஆசைப்பட்டேன். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல் சூழல் மாறும், அதனால் சட்டமன்றத்தில் இருந்தால் நல்லது என நினைத்தேன். தமிழ்நாடு குறிவைக்கப்பட்ட மாநிலம் ஆகியிருக்கிறது. எனவே சட்டமன்றத்திலும் இருப்பது நல்லது என நினைத்தேன். ஆனால் அதை வதந்தி யூகங்கள், வதந்திகள் பரப்பப்பட்டன. அதனால் நான் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குகிறேன். காட்டுமன்னார் கோவிலில் இளைய பெருமாள் அவர்களின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்." என்றார்.

  8. டெல்லி அணி வெற்றி பெற்ற 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை அணி

    ஐபிஎல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற 163 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 4வது இடத்திலும் மும்பை அணி 5வது இடத்திலும் உள்ளன.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக இன்று விளையாடாத நிலையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனான களமிறங்கினார். டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த தொடரில் பெரும்பாலான அணிகள் டாஸ் வென்றால் பந்து வீச்சையே தேர்வு செய்வதை உத்தியாக கடைபிடித்து வருகின்றனர்.

    மும்பை அணியின் தொடக்க வீரர் ரயன் ரிக்கில்டன் 9 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த திலக் வர்மா ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் ரோஹித் சர்மா நிதானமாகவே ஆட்டத்தை தொடர்ந்தார். பவர் பிளே முடிவில் மும்பை அணி 41 ரன்கள் எடுத்திருந்தது.

    கேப்டன் சூர்யகுமார் யாதவும் ரோகித் சர்மாவும் இணைந்து 40 பந்துகளில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். பவுண்டரிகள் வரும் வேகம் குறைந்த நிலையில் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாமல் மும்பை அணி தடுமாறியது. அரைசதம் அடித்த சூர்யகுமார் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ரோஹித் சர்மா 35 ரன்கள் சேர்த்தார்.

    20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழந்து 162 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். 4 ஓவர்கள் வீசிய அக்சர் படேல் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

  9. விண்வெளியிலிருந்து பூமியை புகைப்படம் எடுத்த ஆர்டெமிஸ் 2 குழுவினர்

    நாசா, ஆர்டெமிஸ்

    பட மூலாதாரம், Nasa/Reid Wiseman

    படக்குறிப்பு, இந்த புகைப்படத்திற்கு ஹலோ வேர்ல்ட் என தலைப்பிடப்பட்டுள்ளது.

    நிலவை நோக்கிய தங்களின் பயணத்தில் ஆர்டெமிஸ் குழுவினர் எடுத்த பூமியின் உயர் தெளிவுத்திறன் (High resolution) கொண்ட புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது..

    நாசா, ஆர்டெமிஸ்

    பட மூலாதாரம், Nasa/Reid Wiseman

    படக்குறிப்பு, இரவில் சூரியனை முழுவதுமாக பூமி மறைத்திருக்கும் புகைப்படம்

    "ஹலோ, வேர்ல்ட்." என தலைப்பிடப்பட்ட முதல் புகைப்படத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் மங்கலாக ஒளிர்வது தெரிகிறது. பூமி சூரியனைப் பகுதியளவு மறைப்பது போல் தோன்றுகிறது, மேலும் இரு துருவங்களிலும் பச்சை நிற துருவ ஒளிகள் தென்படுகின்றன.

    இந்தப் புகைப்படத்தில் பூமி தலைகீழாக தெரிகிறது. இடதுபுறம் மேற்கு சஹாரா மற்றும் ஐபீரியன் தீபகற்பம் தெரிகின்ற நிலையில் வலதுபுறம் தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி தெரிகிறது.

    நாசா, ஆர்டெமிஸ்

    பட மூலாதாரம், NASA

    படக்குறிப்பு, அப்போதும் இப்போதும்: வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம்
  10. வணக்கம் நேயர்களே!

    இன்று (04-04-2026) இரவு வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது மோகன்.

  11. 'அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு' ரூ.139 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்

    டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை டிரம்ப் நீண்ட காலமாக வெளிப்படுத்தி வருகிறார்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, 2027ஆம் நிதியாண்டிற்கான 1.5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 139 லட்சம் கோடி) பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இது 42 சதவீதம் என்ற சாதனை அளவிலான உயர்வாக இருக்கும்.

    அமெரிக்க நாடாளுமன்றம், இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து அது நடைமுறைப்படுத்தப்பட்டால், இது நவீன அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு நிதி ஒதுக்கீடாக அமையும்.

    பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதற்கான டிரம்பின் இந்த நடவடிக்கை இரானுடனான தற்போதைய மோதலுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகும். மேலும் இது உள்நாட்டு உற்பத்தி மற்றும் பெரிய திட்டங்களில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுள்ள கவனத்தைப் பிரதிபலிக்கிறது.

    அடுத்த தலைமுறை வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, டிரம்ப் முன்மொழிந்த 'கோல்டன் டோம்' ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கான நிதி ஒதுக்கீடும் இதில் அடங்கும்.

    மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகம் பகிர்ந்த பட்ஜெட் திட்ட வரைவின்படி, கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் அறிவித்த, அதிக ஆயுதம் தாங்கிய புதிய அமெரிக்க கடற்படையின் ‘டிரம்ப்- க்ளாஸ்’ (Trump-Class) போர்க்கப்பல்கள் உட்பட, பல டஜன் ராணுவக் கப்பல்களுக்கான நிதி ஒதுக்கீடும் இதில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    டொனால்ட் டிரம்ப் முன்வைத்த இந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கையானது, இரானுடனான போர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கையிலிருந்து வேறுபட்டது. இரானில் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி'க்கு ஆதரவளிக்கவும், ஆயுதங்கள் மற்றும் விநியோகப் பொருட்களை மீண்டும் நிரப்பவும் பென்டகன் 200 பில்லியன் டாலரை (சுமார் ₹18.5 லட்சம் கோடி) முன்மொழிந்திருந்தது.

  12. இரான் போர்: இதுவரை 365 அமெரிக்கப் படை வீரர்கள் காயம்

    இரான் போர்: இதுவரை 365 அமெரிக்கப் படை வீரர்கள் காயம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, விளக்கப் படம்

    அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து மொத்தம் 365 அமெரிக்கப் படை வீரர்கள் போரில் காயமடைந்துள்ளனர்.

    அவர்கள் பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்:

    தரைப்படை - 247

    கடற்படை - 63

    கடற்படை வீரர்கள் - 19

    விமானப்படை - 36

    பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல மூத்த இரானிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கு பதிலடியாக இரானும் வளைகுடா நாடுகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

  13. ‘அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது’- டிரம்ப்

    டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரானுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் பாதிக்காது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக என்.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஒரு சுருக்கமான தொலைபேசி நேர்காணலில், நேற்றைய (ஏப்ரல் 3) நிகழ்வுகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அமெரிக்க அதிபரிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர், "இல்லை, சிறிதும் இல்லை. இது போர். நாம் போரில் இருக்கிறோம்," என்று பதிலளித்தார் என்றும் என்.பி.சி நியூஸ் தெரிவிக்கிறது.

    இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தெற்கு இரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அந்த அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

    அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    அமெரிக்க விமானத்தில் இருந்த இரண்டாவது நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நபரை தேடும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இரான் பாதுகாப்பு படைகளும் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக இரான் அரசு ஊடகம் கூறியுள்ளது.

  14. வணக்கம் நேயர்களே!

    இன்று (04-04-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது சிராஜ்.

  15. 'தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன்' - தனபால் கூறியது என்ன?

    "தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததை விட உடல்நலமின்றி இருக்கும் என்னை யாரும் பார்க்க வராதது தான் வருத்தமாக உள்ளது" என அதிமுகவின் அவிநாசி(தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான தனபால் எக்ஸ் தளத்தில் பதிவு

    'தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன்' - தனபால் கூறியது என்ன?
  16. 27 தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

    27 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

    பட மூலாதாரம், FACEBOOK

    2026 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    ஸ்ரீபெரும்புதூர்(தனி) செல்வப்பெருந்தகை

    கிள்ளியூர் - ராஜேஷ்குமார்

    காரைக்குடி - மாங்குடி

    வேளச்சேரி - ஹசன் மவுலானா

    பென்னாகரம் - தமிழ்க்குமரன் உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  17. குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்

    குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    குவைத்தில், டிரோன் தாக்குதலுக்குப் பிறகு மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குவைத்தில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மீது இரான் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய கிழக்கு நாடுகள் குடிநீரின் சுமார் 90 சதவீதத்தை இதுபோன்ற நிலையங்களை நம்பியே உள்ளன.

  18. இரானில் உள்ள பாலம் மீது அமெரிக்கா தாக்குதல்

    இரான்

    பட மூலாதாரம், X/Mamlekate

    இரானில் உள்ள 'மிகப் பெரிய பாலம்' மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இரான்

    இந்த தாக்குதலை இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இத்தகைய தாக்குதல்கள் இரானை சரணடையச் செய்யாது என அவர் கூறியுள்ளார்.

    இரான்
  19. அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக அறிவுறுத்தல்

    ராண்டி ஜார்ஜை

    பட மூலாதாரம், Getty Images

    பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை அவரது பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜார்ஜ் "41வது ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறார்" என்று கூறியுள்ளார்.

    ராணுவத் தலைமைத் தளபதி பொதுவாக நான்கு ஆண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார். வெஸ்ட் பாயிண்ட் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற, தொழில்முறை ராணுவ அதிகாரியான ஜார்ஜ், 2023-ல் முன்னாள் அதிபர் ஜோ பைடனால் இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

    இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் "மிக விரைவில்" முடிவுக்கு வரும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    ஜார்ஜ் முதல் வளைகுடாப் போரிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த சமீபத்திய மோதல்களிலும் காலாட்படை அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் ஏன் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

    "அவரது சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் ராணுவத்தில் ஒரு தலைமை மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது," என்று பெயர் குறிப்பிடப்படாத ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி சிபிஎஸ்ஸிடம் கூறினார்.

    பென்டகன் செய்தித் தொடர்பாளர் பார்னெல் கூறியதாவது: "ஜெனரல் ஜார்ஜ் நமது தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவைக்கு போர் துறை நன்றியுடையதாக உள்ளது. அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்."

    அமெரிக்க ஊடகங்களின்படி, அவருக்குப் பதிலாக ராணுவத் துணைத் தலைமைத் தளபதி ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் தற்காலிக ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பார்.

  20. அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் பேம் பாண்டி பதவி நீக்கம்

    பேம் பாண்டி

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நீண்டகால கூட்டாளியும், தனது நிர்வாகத்தின் தீவிர ஆதரவாளருமான அட்டர்னி ஜெனரல் பேம் பாண்டியைப் ( Pam Bondi) பணிநீக்கம் செய்துள்ளார்.

    அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் என்பவர் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அமலாக்க அதிகாரியாகக் கருதப்படுகிறார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், டிரம்ப் பேம் பாண்டியைப் பாராட்டியதுடன், அவர் இனி தனியார் துறையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

    நீதித்துறையில் பேம் பாண்டி வகித்த பதவிக்காலம், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிடுதல் மற்றும் அந்தத் தண்டிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி மீதான விசாரணை ஆகியவற்றைச் சூழ்ந்த சர்ச்சைகளாலேயே பெரும்பாலும் சூழ்ந்திருந்தது.

    சமீபத்திய வாரங்களில், டிரம்ப் நிர்வாகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் இரண்டாவது உயர் அதிகாரி இவராவார். கடந்த மார்ச் மாதம், கிறிஸ்டி நோம் என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். டாட் பிளான்ச், பேம் பாண்டிக்கு பதிலாக அப்பதவியை ஏற்கவுள்ளார்.

    தனது பொறுப்புகளை பிளான்ச்சிடம் ஒப்படைக்கும் பணியில் "சோர்வின்றி உழைப்பேன்" என்று பாண்டி கூறினார்; மேலும், இப்பதவியை வகித்தது தனது வாழ்வின் "பெருமைக்குரிய விஷயம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தனியார் துறையில் தான் ஏற்கவுள்ள புதிய பொறுப்பிலும், "அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்காகத் தொடர்ந்து போராடுவேன்" என்றும் அவர் தெரிவித்தார். எனினும், தனது புதிய பொறுப்பு என்னவாக இருக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.

Trending Now