"நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்" - இரானை கடுமையாக எச்சரித்த டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு இரானை அச்சுறுத்தி, தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மிக முக்கியமான அந்த கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் திறக்கப்படாவிட்டால், இரான் "நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பிப்ரவரி இறுதியில் போர் வெடித்ததில் இருந்து அந்தப் பகுதி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கட்கிழமைக்குள் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என இரானுக்கு டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவதற்கு முன்னதாக இந்தப் பதிவு வெளிவந்துள்ளது.
"செவ்வாய்க்கிழமை இரானில் மின் உற்பத்தி நிலையங்களுக்கான நாளாகவும், பாலங்களுக்கான நாளாகவும், எல்லாம் ஒன்றாகச் சேர்ந்த நாளாகவும் இருக்கும்." என கூறியுள்ள டிரம்ப், ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு இல்லை என்றால் "நீங்கள் நரகத்தில் வாழ்வீர்கள்" என எச்சரித்துள்ளார்.




















