சனி - வியாழன் சேர்க்கை: பல நூறுஆண்டுகளுக்குப் பிந்தைய அதிசயத்தை காணும் உலகம்

சனி, வியாழன்

பட மூலாதாரம், EPA/YONHAP SOUTH KOREA OUT

    • எழுதியவர், ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சூரிய குடும்பத்தின் சனி - வியாழன் ஆகிய கோள்கள் பூமியில் மனிதர்களின் பார்வை கோணத்தில் மிகவும் அருகே தோன்றி நேர்க்கோட்டில் இருப்பது போன்ற அரிய வானியல் நிகழ்வு, திங்கட்கிழமை (டிசம்பர் 21) மாலை 6 மணி முதல் 7 மணிவரை நிகழ்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி, இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த அரிய நிகழ்வை பார்க்க முடிந்ததாக வானியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் சூரிய அஸ்தமனத்தின் தென்மேற்கு திசையில் இந்த அரிய நிகழ்வு தென்பட்டதாக கூறிய வானியல் நிபுணர்கள், அந்தந்த பகுதியில் உள்ள வானிலையைப் பொறுத்து இந்த வானியல் அதிசயத்தை பைனாகுலர் உதவியுடனோ கோளரங்க தொலைநோக்கி மூலமோ பார்க்க முடிந்ததாக தெரிவித்தனர்.

சென்னையில் பிர்லா கோளரங்கம், டெல்லியில் நேரு கோளரங்கம், ஜந்தர் மந்தரில் உள்ள வானியல் கோளரங்கம், பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் ஆகியவற்றில் இந்த அரிய நிகழ்வை சமூக இடைவெளியுடன் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வானில் 800 ஆண்டுகளுக்குப் பிந்தைய இந்த அரிய நிகழ்வு தொடர்பான பல கேள்விகளுக்கு விடை தருகிறார் அறிவியலாளர் சௌந்தரராஜ பெருமாள். தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குநராக உள்ள இவர் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழப் போகும் இந்த அதிசயம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அவரது பேட்டியில் இருந்து:

நம்முடைய பார்வைப் புலம் (Line of sight) இருக்கும் திசையில், இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவை (Great Conjunction) இந்த வானியல் அதிசயத்தின்போது காண முடியும்.

சாதாரணமாக இந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான ஒருங்கமைவு, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றாலும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், சரியாக சொல்ல வேண்டுமானால் 397 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இரு கோள்களும் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன.

The 'Great' Conjunction of Jupiter and Saturn december 21 jupiter and saturn

பட மூலாதாரம், NASA/JPL-Caltech

அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு (Angular Distance) புள்ளி ஒரு டிகிரியாக (0.1 Degree) இருந்துள்ளது. இதே அளவு தொலைவிலான பார்வைக் கோண நெருக்கம், டிசம்பர் 21 ஆம் தேதி அமைகிறது.

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒருங்கமைவில் இரு கோள்களுக்கு இடையில் தோன்றும் கோணத் தொலைவை ஒப்பிடும்போது இப்போது தோன்றும் ஒருங்கமைவில், இடைவெளி வெறும் பத்தில் ஒரு மடங்குக்கும் குறைவுதான் என்கிறார் சௌந்தரராஜ பெருமாள்.

அடுத்து நிகழ்வு?

இது போன்ற நிகழ்வு மீண்டும் எப்போது நடக்கும் என்பது குறித்தும் அவர் பேசினார்.

"இதே போன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்ததாக 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இந்தியாவில் தோன்றிய வானியல் அதிசயம்

வியாழன், சனி ஆகிய இந்த இரண்டு கோள்களையும் பிரகாசமான புள்ளியாக காண முடியும். ஆனால் அந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு படிப்படியாக குறைந்து டிசம்பர் 21 ஆம் தேதி புள்ளி ஒரு டிகிரியாக மாறும். அப்போது இந்த கோள்கள் ஒரே புள்ளியில் சேர்ந்து காட்சியளிக்கும் என்றார். சூரியன் மறைந்த பிறகு இதை பார்க்கலாம் என்பதால் இதை வெறும் கண்களால் காணலாம்.

ஆனால் உண்மையில் அந்த இரண்டு கோள்களும் அருகில் இருக்காது. அவற்றின் தூரம் மிக அதிக அளவில் இருந்தாலும் அவை நேர்கோட்டில் இணைவதால் அவ்வாறு தோன்றும்.

நிஜத்தில் வியாழன் கோளானது பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், சனி கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. எனவே இவற்றிற்கு இடைப்பட்ட உண்மையான தொலைவு 74 கோடி கிலோ மீட்டரைவிட அதிகம்.

பூமியின் மீது தாக்கம் எப்படி இருக்கும்?

வியாழன் - சனி சேர்க்கை டிசம்பர் 21: 397 ஆண்டுகளுக்கு பின் சூரிய மண்டல விண்வெளி அதிசயம்
படக்குறிப்பு, சௌந்தரராஜ பெருமாள்.

இவ்வளவு தொலைவில் இவை இருப்பதால், இந்த நிகழ்வு நடைபெறும் சமயத்தில் இந்த கோள்கள் நம் பூமி மீது ஏற்படுத்தும் தாக்கம் மிக மிக குறைவாகவே இருக்கும்.

நம் பூமி மீது அதிகபட்சமாக ஆற்றலை செலுத்தி நம் பூமியில் சற்று மாற்றத்தை உண்டாக்கக்கூடிய விண்பொருள் என்றால் அது நிலவு மட்டுமே. கடல் ஓதங்களை உண்டாக்க நிலவின் ஈர்ப்பு விசையால் முடிகிறது. ஆனால் இந்த இரண்டு கோள்களின் ஈர்ப்பு விசை புவியின் மீது செயல்படும் அளவு நிலவின் ஈர்ப்புவிசையால் ஏற்படும் தாக்கத்தைவிட 10 லட்சம் மடங்கு குறைவாக இருக்கும் என்பதால், அது எந்த ஒரு தாக்கத்தையும் புவியின் மீது செலுத்த முடியாது.

great conjunction 2020, the great conjunction 2020 astrology 21 december 2020

வரும் 21 ஆம் தேதி நடைபெறும் இந்த இரண்டு கோள்களுக்கு இடையிலான கோண ஒருங்கமைவு போல மற்ற கோள்களுக்கு இடையேயும் அவ்வப்போது நடைபெறும். கடந்த மார்ச் மாதத்தில் கூட செவ்வாய் (Mars) மற்றும் வியாழன் (Jupiter) கோள்களுக்கு இடையேயும், செவ்வாய் (Mars) மற்றும் சனி (Saturn) ஆகிய கோள்களுக்கு இடையேயும் ஒரே மாதத்தில் ஒருங்கமைவு நடைபெற்றது.

இவற்றில் சில ஆண்டுதோறும் கூட நடைபெறும். ஆனால் வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகிய இந்த இரண்டு கோள்களின் ஒருங்கமைவு மிக அரிய நிகழ்வு என்பதால் இதை காண உலகெங்கிலும் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார் சௌந்தரராஜ பெருமாள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :