சவாலான இலக்கை அதிரடியால் எளிதில் எட்டிய ஆர்சிபி: அரைசதம் கண்ட கோலி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி 202 ரன் இலக்கை எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதாக எட்டி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
சன்ரைசர்ஸ் கேப்டன் இஷன் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி தரப்பில் ஜேக்கப் டஃபி, ரொமாரியோ ஷெபர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
ஜேக்கப் டஃபி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த டஃபி

பட மூலாதாரம், Getty Images
முதல் இரு ஓவர்களும் சன்ரைசர்ஸுக்கு நல்லபடியாக இருந்தன. அந்த அணி 2 ஓவர்கள் முடிவில் 18 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது ஓவரைப் பந்துவீச வந்த ஜேக்கப் டஃபி இரண்டு ஓப்பனர்களையும் அந்த ஓவரிலேயே வெளியேற்றினார்.
அபிஷேக் ஷர்மா 7 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நித்திஷ் குமாரை தான் வீசிய அடுத்த ஓவரில் (ஆட்டத்தின் ஐந்தாவது ஓவர்) ஆட்டமிழக்கச் செய்தார் டஃபி. அதனால் 29/3 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது சன்ரைசர்ஸ்.
சிறப்பாகப் பந்துவீசிய ஜேக்கப் டஃப், தன் 4 ஓவர்களையும் தொடர்ச்சியாக வீசி தன் ஸ்பெல்லை முடித்தார். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 22 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தன்னுடைய 4வது ஓவரிலும் கூட அவர் ஒருசில வாய்ப்புகளை உருவாக்கினார்.
சன்ரைசர்ஸை சரிவிலிருந்து மீட்ட கேப்டன்

பட மூலாதாரம், Getty Images
அதன்பிறகு நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷன், ஹெய்ன்ரிக் கிளாசன் இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து சன்ரைசர்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
கிளாசன் ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாட, இஷான் கிஷன் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆர்சிபி அணியின் அறிமுக பௌலர் அபினந்தன் சிங் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி, சிக்ஸர் என விளாசி தன் அதிரடியைத் தொடங்கினார் கிஷன். ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் எதிராக பவுண்டரிகள் விளாசிய கிஷன், 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
நிதானத்திலிருந்து அதிரடிக்கு மாறிய கிளாசனை பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் பிடித்து வெளியேற்றினார் ஃபில் சால்ட்.
கிளாசன் அவுட் ஆனதும் கூட இஷான் கிஷனின் அதிரடி குறையவில்லை. அவர் 38 பந்துகளில் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பவுண்டரி எல்லையில் ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து இஷன் கிஷனையும் சால்ட் தான் வெளியேற்றினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணிக்கு இலக்கு 202
கிஷன் அவுட்டான பிறகு வந்த வீரர்களில் அனிகேத் வெர்மா மட்டுமே பெரிய ஸ்கோர் எடுத்தார். 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள் விளாசிய அவர் 43 ரன்கள் எடுத்தார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச்சை கோலி தவறவிட்டிருந்தார். ஆனால், 19வது ஓவரின் கடைசிப் பந்தில் கோலியிடமே கேட்ச் கொடுத்து அனிகேத் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். ஆர்சிபி தரப்பில் ஜேக்கப் டஃபி, ரொமாரியோ ஷெபர்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் எளிய வெற்றி
202 என்ற இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி அணி இரண்டாவது ஓவரிலேயே ஃபில் சால்ட் விக்கெட்டை இழந்தது. அவர் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால், அதன்பிறகு இடைவிடாத அதிரடியை வெளிக்காட்டியது ஆர்சிபி அணி. வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்தார்.
வேகப்பந்துவீச்சு, ஸ்பின் என இரண்டையும் ஒரேபோல் எளிதாகக் கையாண்ட படிக்கல் மைதானத்தின் அனைத்து பக்கமும் ஸ்கோர் செய்தார். அதனால், ராயல் சேலஞ்சர்ஸின் ரன்ரேட் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது.
21 பந்துகளில் அரைசதம் கடந்த படிக்கல் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் விளாசினார்.
அதற்கடுத்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதார், படிக்கலைப் போலவே அதிரடியாக ஆடினார். 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்த அவர் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவர் அவுட் ஆன போது ஆர்சிபி அணியின் தேவைப்படும் ரன்ரேட் ஆறுக்கும் குறைவாக வந்துவிட்டது.
ஆரம்பத்தில் சற்று நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினார் கோலி. படிக்கல் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது அவர் சுமார் 150 ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடிக்கொண்டிருந்தார்.
அதன்பிறகு மெல்ல வேகமெடுத்த அவர் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஐபிஎல் வரலாற்றில் இது அவருடைய 64வது அரைசதம்.
கடைசி கட்டத்தில் இன்னும் அதிரடியாக் ஆடிய கோலி, ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
4 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 15.4 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் பட்டிதார், "100% மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து தங்கள் கடமையைச் செய்தனர். டஃபி விளையாடிய விதமும் எடுத்த விக்கெட்டுகளும்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தன" என்று கூறினார்.
தங்கள் அணியின் அதிரடி பேட்டிங் பற்றிப் பேசிய அவர், "இது திட்டமிட்ட கொள்கை அல்ல, நாங்கள் ஆடுகளத்தை கணித்தோம், அது நன்றாக இருந்தது. படிக்கல் மற்றும் கோலியின் இன்னிங்ஸ் ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தது. நான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினேன், இந்த இலக்கை விரைவாக எட்ட நினைத்தேன். நான் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன்." என்றார்.
அரைசதம் அடித்த விராட் கோலி, "மீண்டும் களத்திற்குத் திரும்பியது நன்றாக இருந்தது. நான் கடைசியாக (டி20 போட்டியில்) விளையாடியது கடந்த ஆண்டு இறுதிப் போட்டிதான். ஆனால் சமீபத்தில் ஒருநாள் தொடரில் நான் பேட்டிங் செய்த விதம் அதே வேகத்தைத் தக்கவைக்க எனக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். நான் வழக்கமாக விளையாடாத ஷாட்களை விளையாடவில்லை, அதனால் எனக்கு அந்த 'ரிதம்' இருக்கும் வரை, உடல் தகுதிக்காக நான் கடினமாக உழைத்திருந்தால் எல்லாம் சிறப்பாக அமையும் என்று எனக்குத் தெரியும். இன்றிரவு ஒரு வலுவான தொடக்கத்தைப் பெறுவதற்கும், அதை அப்படியே கொண்டு செல்வதற்கும் எனக்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாகும்." என்று கூறினார்.

பட மூலாதாரம், Abhishek Chinnappa/Getty Images
டாஸில் கேப்டன்கள் சொன்னது என்ன?
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார், "இது ஒரு சீசன் தொடக்க ஆட்டம். அதனால் பிட்ச் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கடந்த சீசனிலிருந்து நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளன. நாங்கள் எதையும் தற்காத்துக் கொள்ளப் போவதில்லை, ஐபிஎல் 2026-லும் நாங்களே வெற்றி பெறுவோம். [காயங்கள் பற்றி] அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர், அதேபோல் மாற்று வீரர்களும் சிறப்பாக உள்ளனர். வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள், மருத்துவக் குழு அவர்களைக் கவனித்து வருகிறது" என்று கூறினார்.
சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் இஷான் கிஷன் தற்காலிகமாக அந்த அணியின் கேப்டனாக செயல்படுகிறார். டாஸின் போது பேசிய அவர், "நாங்களும் முதலில் பந்துவீசவே (fielding) விரும்பினோம். எங்களின் உள்ளுணர்வை நம்பி விளையாட நினைக்கிறோம். இது ஐபிஎல் என்பதால் புதிதாக எதையும் தொடங்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினாலே போதும். பேட் கம்மின்ஸ் நிச்சயமாகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர், ஆனால் மற்ற அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது; இந்த முறை நாங்களே வெற்றி பெறுவோம் என்று உணர்கிறேன்." என்று கூறினார்.
இரு அணிகளிலும் இடம்பெற்றிருந்த வீரர்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபில் சால்ட், ரஜத் பட்டிதார் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி, சுயாஷ் ஷர்மா.
இம்பேக்ட் வீரர்கள்: தேவ்தத் படிக்கல், ஜேக்கப் பெதெல், ரஷிக் சலாம், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, அனிகேத் வெர்மா, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட்.
இம்பேக்ட் வீரர்கள்: ஷிவாங் குமார், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் பெய்ன், ஆர் ஸ்மரன், சகிப் ஹுசைன்.
ஆர்சிபி சார்பில் படிக்கலும், சன்ரைசஸ் சார்பில் பெய்னும் இம்பேக்ட் வீரர்களாகக் களமிறங்கினார்கள்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































