"இட்லிக்கு பதில் பிரட்" - எல்பிஜி பிரச்னை மருத்துவமனைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?

    • எழுதியவர், ப.சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலின் பாதிப்பு, சென்னை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் எதிரொலிக்கிறது.

"சிலிண்டர் தட்டுப்பாடால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இட்லி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக அதனை ஈடு செய்யும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட வேறு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன" என்கிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மருத்துவர் கலாராணி.

அரசு மருத்துவமனைகள் எரிவாயு தட்டுப்பாட்டை "சந்திக்கவில்லை" என கூறும் நிலையிலும், மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

இட்லிக்கு மாற்றாக ரொட்டி

அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு காலை உணவுகளில் பெரும்பாலும் இட்லி, சாம்பார் ஆகியவை ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

"தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு நோயாளிகளுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், சாம்பார் போன்றவை வழங்கப்படும். ஆனால் தற்போது ரொட்டி (Bread), சென்னா மசாலா போன்றவை வழங்கப்படுகிறது" என்று கூறுகிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மருத்துவர் கலாராணி.

அதேநேரத்தில், "மதிய உணவில் சாம்பார் சாதம், தயிர் சாதம், கீரை, காய்கறிப் பொறியல் போன்றவை வழங்கப்பட்டன. தற்போது கீரை அல்லது காய் என ஏதாவது ஒன்று உணவுடன் வழங்கப்படுகிறது. இரவு நேரங்களில் வழங்கப்பட்டு வந்த சப்பாத்திக்கு மாற்றாக கிச்சடி - சாம்பார் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

"நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளுக்கு மாலை நேரங்களில் வழங்கப்படும் இட்லிக்கு மாற்றாக சம்பா ரவை உப்புமா வழங்கப்படுகிறது. ஆனால் வழக்கமாக வழங்கப்படும் பால், முட்டை, பழம், கஞ்சி போன்றவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை" என்றும் அவர் கூறினார்.

"இட்லியைப் பொறுத்தவரையிலும், எல்பிஜி அடுப்புகளை பயன்படுத்தி வேகவைக்கப்படுகின்றன. இதற்கு மாற்றான மின்னடுப்புகள் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. இதே போன்று சப்பாத்தி தயாரிப்பதற்கு அதிக அளவில் எல்பிஜி பயன்படுத்தப்படும். இதற்கு மாற்றாக கிச்சடி, உப்புமா போன்றவை மொத்தமாக தயாரிக்கப்படுவதால் குறைவான எரிவாயு செலவாகும்" என்கிறார் கலாராணி

"தினசரி 2000 நோயாளிகளுக்கு மூன்று வேளையும் உணவு தயாரிக்க, நாளொன்றுக்கு 8 சிலிண்டர்கள் தேவைப்படும். இப்போது அதனை 4 முதல் 5 ஆக குறைத்துவிட்டோம்" என்று குறிப்பிடும் கலாராணி, தற்போது வரை சிலிண்டர் தட்டுப்பாடு ஏதும் இல்லை, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கவே இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறோம் என்கிறார்.

உணவு முறைகள் மாறுவதால் நோயாளிகளுக்கு முன்பு கிடைத்த உணவின் சத்துகள் கிடைக்குமா என்ற கேள்வி எழும் நிலையில், அவற்றில் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் கலாராணி.

"உணவு முறைகள் மாறினாலும் நோயாளிகளுக்கு தேவையான கலோரி, மற்றும் புரதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. மாற்றுத்தேவைக்கு விறகு அடுப்பு மற்றும் மின்சார அடுப்பு போன்றவை தயாராக உள்ளன" என்றும் அவர் கூறினார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் என்ன நிலைமை?

வட சென்னை மக்கள் பெரிதும் பயன்பெறும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நிலைமை குறித்து பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜோதிக்கரண் , "எரிவாயு செலவை குறைக்கும் வகையில் உணவுப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எங்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 1300 முதல் 1500 வரையிலான நோயாளிகளுக்கு உணவுகள் தயாரிக்கப்படுகிறது, 3 சிலிண்டர் தேவைப்படும் இடத்தில் அதன் தேவையை பாதியாக குறைத்துள்ளோம். அதற்கு மாற்றாக விறகு அடுப்பையும் பயன்படுத்துகிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாடு முழுவதும் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் நிலைமையை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உணவியல் துறை நிபுணர்களோடு ஆலோசனை நடத்தி உணவுமுறைகளில் அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது" என்றார்.

"இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் இட்லி நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக ரவா பொங்கல் அல்லது கிச்சடி போன்றவை சாம்பாருடன் வழங்கப்படுகிறது" என்றார்.

"மதிய உணவுகளில் சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர் என வழங்கப்பட்டதை சாம்பார் சாதம், தயிர் சாதம் கீரை பொரியல் அல்லது காய் பொரியல் என வழங்குகிறோம், இரவு உணவுகளில் கிச்சடி, நியூட்ரிஷன் கஞ்சி போன்றவை வழங்கப்படுகிறது" என்றார்.

"சிலிண்டரின் தேவை, பயன்பாடு மற்றும் இருப்பு குறித்து 'LPG Crisis Management' என்ற வாட்சப் குழு மூலம் மருத்துவக்கல்வி இயக்குநரகத்துக்கு தெரிவித்து வருகிறோம்" என்றும் அவர் கூறினார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் நிலை என்ன?

இவ்விரு அரசு மருத்துவமனைகளில் உள்ள உணவு பட்டியல் மாற்றம் ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையிலும் கடைபிடிக்கப்படுகிறதா என விசாரித்தபோது "நாங்கள் வழக்கம் போல் அனைத்து உணவுகளையும் எங்கள் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம்" என்றார் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் மணி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கும், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கும் அவுட் சோர்சிங் முறையில் உணவு வருவதால் எங்கள் மருத்துவமனைகளுக்கு உணவுமுறைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை" என்கிறார்.

"வழக்கம்போல இட்லி, பொங்கல், கிச்சடி காலை நேரங்களிலும், மதிய உணவில் சாதம் , சாம்பார், ரசம், சாம்பார் சாதம், தயிர்சாதம், கீரை, காய் போன்றவற்றையும், இரவு நேரங்களில் சப்பாத்தி உள்ளிட்ட வழக்கம்போல வழங்கும் உணவுகளை எவ்வித பாதிப்புமின்றி வழங்கி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க என்ன செய்யப்படுகிறது?

நெருங்கி வரும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன என கேட்டபோது, 4 அரசுக்கல்லூரி முதல்வர்களும் சென்னை மாவட்ட ஆட்சியரை சந்தித்து சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்திடம் பேசி தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தியிருப்பதாக ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ஜோதிக்கரண் தெரிவித்தார்.

"சுகாதாரத் துறை செயலாளர் தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

மருத்துவமனைகளின் நிர்வாகத்தின் கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழ் சென்னை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள பல வழிகளில் முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

இட்லி ஏன் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது?

"உணவுப் பொருள்களில் அமினோ ஆசிட் முழுமையாக இருந்தால் அவை தரமான புரதம். அது இட்லியில் நிறைந்திருக்கிறது" என்கிறார் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பொதுவாக கோழி, மீன், முட்டை, பால் என இந்த உணவுகளையெல்லாம் சிறந்த புரதங்கள் என்று சொல்வோம். அரிசி- உளுந்து சரியான விகிதத்தில் கலக்கப்படும் போது அவை தரமான புரதச்சத்தை கொண்டுள்ளது" என்கிறார்.

"இட்லி மாவை அரைத்து புளிக்க வைத்து உண்ணும்போது உணவை எளிதில் செரிமானம் அடைய செய்வதோடு உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், "இட்லியில் கிடைக்கும் பெரும்பாலான நன்மைகள், 'புரோபயாடிக்' (probiotics) நுண்ணுயிரிகளால் கிடைக்கின்றன. அவற்றில் ஃபோலிக் அமிலம், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் (இதய ஆரோக்கியம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு உதவும் ஊட்டச்சத்து), கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் பல நுண்ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு