காணொளி: ஹோர்முஸ் நீரிணை பற்றிய டிரம்ப் மிரட்டலுக்கு இரான் பதில் என்ன?
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு புதிய கெடு ஒன்றை விதித்திருக்கிறார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் இரானின் மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார். டிரம்ப் தனது மிரட்டலை செயல்படுத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குவோம் என இரானும் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. என்ன நடக்கிறது? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுடன் நடத்தி வரும் போர் நான்காவது வாரத்தை எட்டியிருக்கிறது. தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மட்டுமன்றி மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் மீதும் இரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கிருக்கும் அமெரிக்க தளங்களை குறிவைப்பதாக இரான் கூறுகிறது. ஆனால், பொதுமக்கள் இலக்குகளும் குறிவைக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட நாடுகள் கூறுகின்றன.
அதே போல உலகின் கடல்வழிப்போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக உள்ள ஹோர்மூஸ் நீரிணையையும் இரான் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு கச்சா எண்ணெய் முதல் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்த நிலையில், ஹோர்மூஸ் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு இந்த கெடுவை விதித்திருக்கிறார். ஆனால், இரானோ தங்கள் எதிரிகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறது.
ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) உள்ள இரானின் பிரதிநிதி, இரான் எதிரிகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது என கூறியதாக இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி முகமை கூறுகிறது.
இரானுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து ஹோர்மூஸை கடப்பது சாத்தியம் என்றும் அவர் கூறி உள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சில கப்பல்களிடமிருந்து, இரான் 2 மில்லியன் டாலர் கட்டணத்தை வசூலித்து வருவதாக இரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
இந்த நீரிணையில் ஒரு புதிய நிர்வாக முறை அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இது இரான் இஸ்லாமியக் குடியரசு கொண்டுள்ள அதிகாரத்தையும் உரிமையையும் பறைசாற்றுவதாகவும் அவர் கூறினார்.
எனினும், இந்தக் கட்டண வசூல் குறித்த தகவலை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
சரி, டிரம்ப் விடுத்த கெடுவுக்கு இரான் எப்படி எதிர்வினையாற்றும்?
தங்கள் மின்நிலையங்கள் தாக்கப்பட்டால் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுப்போம் என இரான் கூறியுள்ளது.
எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் இரானுடன் ஒருங்கிணைந்தால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த கருத்தை இரான் தொடர்ந்து கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் உளவுப்பிரிவு, பிராந்தியத்துக்கு அப்பாற்பட்டும் சிந்தித்து வருகிறோம் என கூறியதாக அதனுடன் தொடர்புடைய ஃபார்ஸ் (Fars) செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இது பற்றி கூறும் துபையில் இருந்து செய்தி சேகரிக்கும் பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் அஸாதே மோஷிரி, ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை இழப்பது, இந்தப் போரில் இரான் தனது முக்கிய பலத்தை இழப்பதற்கு சமம் என்கிறார்.
அதே நேரம், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என்ற தனது அச்சுறுத்தலை டிரம்ப் நிறைவேற்றினால், அது இரானுக்குப் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கிடையே சமீபத்திய தகவலாக புதிய எச்சரிக்கையையும் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ளது. இரானிய ஊடக செய்திகளின்படி, அமெரிக்கா இரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ஹோர்முஸ் நீரிணையைத் முழுமையாக மூடிவிடுவோம் என்றும், அழிக்கப்பட்ட மின் நிலையங்கள் மீண்டும் கட்டி முடிக்கப்படும் வரை ஹோர்மூஸ் திறக்கப்படாது என்றும் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை எச்சரித்திருக்கிறது.
முக்கிய கடல் வழித்தடமான ஹோர்மூஸை பொருத்தவரை, இயல்பான சமயங்களில் ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் செல்லும். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
மார்ச் 18 அன்று ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்ட கணக்கீட்டின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 21 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டுள்ளன அல்லது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



