You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன?
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்திய உளவுத்துறை (RAW - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தடை விதிக்கக் கோரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) அறிக்கையை இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அதனை நிராகரித்தும் உள்ளது.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே சமயம், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை குறித்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் இதுவரை எதுவும் கூறவில்லை.
ஆர்எஸ்எஸ்-ன் டெல்லி தலைமையகமான கேசவ் குஞ்சின் ஊடகப் பிரிவு பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், "இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை" என்று கூறியது.
இது தொடர்பான பிபிசியின் கேள்விக்கு ஆர்எஸ்எஸ்-ன் இந்திய விளம்பரப் பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் பதிலளிக்கவில்லை.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் மத சுதந்திரம் குறித்த அறிக்கைகளை அதன் நீண்டகால ஒருதலைப்பட்சமான போக்கைச் சுட்டிக்காட்டி இந்திய அரசு ஏற்கனவே நிராகரித்துள்ளது.
தற்போதைய அறிக்கையையும் நீண்டகாலமாகத் தொடரும் ஒருதலைப்பட்சமான போக்கின் ஒரு பகுதி என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளதுடன், கடந்த பல ஆண்டுகளாக இந்த கண்டுபிடிப்புகளை இந்திய அரசு நிராகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-சை தடை செய்ய கோரிக்கை
தனது சமீபத்திய அறிக்கையில், இந்தியாவை 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு' (சிபிசி- கண்ட்ரி ஆப்ஃ பர்டிகுலர் கன்சன்) என்று வகைப்படுத்துமாறு அமெரிக்க வெளியுறவுத் துறையை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் மத சுதந்திரத்தின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான 'ரா' மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஆகியவற்றுக்கு எதிராக மத சுதந்திர மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் முன்வைத்துள்ளதுடன், இந்திய உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் மீது அமெரிக்கா இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மத சுதந்திர சீர்திருத்தங்களுடன் அமெரிக்கா இணைக்க வேண்டும் என்றும், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இருப்பினும், இவை பரிந்துரைகள் மட்டுமே அன்றி, அமெரிக்க வெளியுறவுத் துறையால் இவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்பது என்ன?
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அல்லது யூஎஸ்சிஐஆர்எப்ஃ என்பது அமெரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சுதந்திரமான ஆணையம் மற்றும் அரசு அமைப்பு ஆகும்.
சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் 1998-ஆம் ஆண்டில் இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இது அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து தனித்து இயங்கும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
ஒவ்வோர் ஆண்டும், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது வருடாந்திர மத சுதந்திர அறிக்கையை வெளியிடுகிறது.
சர்வதேச அளவில் மத சுதந்திரத்தை மேம்படுத்த அதிபர் , வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்றத்திற்குக் கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்குகிறது.
மத சுதந்திரம் தொடர்பான மீறல்கள் தொடர்ச்சியாகவும், கடுமையாகவும், திட்டமிட்ட வகையிலும் நடைபெறும் நாடுகளை இந்த ஆணையம் கண்டறிகிறது.
இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அத்தகைய நாடுகளை 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடுகள்' (சிபிசி) மற்றும் 'சிறப்பு கண்காணிப்புப் பட்டியல்' (எஸ்டபுள்யூஎல்) என வகைப்படுத்துகிறது.
இந்த அறிக்கையில் இந்தியா தவிர, மியான்மர், கியூபா, சீனா, எரித்ரியா, இரான், நிகரகுவா, நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சௌதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை சிபிசி பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் ஏற்கனவே டிசம்பர் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சிபிசி பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
கடந்த அக்டோபரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மூலம் நைஜீரியா மீண்டும் சிபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்த முறை இந்தியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்க யுஎஸ்சிஐஆர்எஃப் பரிந்துரைத்துள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான இந்தப் பரிந்துரைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தியாவைப் பற்றி அந்த அறிக்கை என்ன சொல்கிறது?
2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து சீர்குலைந்துள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே, இந்தியாவை சிபிசி பட்டியலில் சேர்க்க அது பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் தேசிய மற்றும் மாநில அளவிலான சட்டங்கள் சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இலக்கு வைத்து இயற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்திய அரசு அகதிகளை வெளியேற்றி வருவதாகவும், இந்துத்துவா மற்றும் தேசியவாத அமைப்புகளால் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் உள்ள இந்துத்துவா குழுக்கள் சட்டத்திற்கு அஞ்சாமல் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"ஆண்டு முழுவதும், பல மாநிலங்களில் இந்து தேசியவாத கும்பல்கள் தண்டனைக்கு அஞ்சாமல் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக துன்புறுத்தல், தூண்டுதல் மற்றும் வன்முறையை நிகழ்த்தியுள்ளன" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"மார்ச் 2025-இல், 17-ஆம் நூற்றாண்டின் முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று தீவிர இந்து தேசியவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) கோரியதை அடுத்து மகாராஷ்டிராவில் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று அறிக்கை கூறுகிறது.
ஒடிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் குறிப்பிட்டு, "ஜூன் 2025-இல், ஒடிசாவில் இந்து மதத்திற்கு மாற மறுத்ததால் 20 கிறிஸ்தவ குடும்பங்களை இந்து தேசியவாத கும்பல் ஒன்று தாக்கியது. இந்தத் தாக்குதல்களின் போது காவல்துறை தலையிடவில்லை. எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்" என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
"அந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு தீவிரமடைந்தது" என்று அறிக்கை கூறுகிறது.
"உத்தரபிரதேசத்தில், காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப் போவதாக சபதம் ஏற்ற இந்து தேசியவாத குழுவின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள், இஸ்லாமிய உணவக ஊழியர் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது".
"மே 2025-இல், இந்திய அதிகாரிகள் 15 கிறிஸ்தவர்கள் உட்பட 40 ரோஹிங்கியா அகதிகளைத் தடுத்து வைத்து, அவர்களை சர்வதேச கடற்பகுதிக்குக் கொண்டு சென்று, உயிர் காக்கும் அங்கிகளை மட்டுமே கொடுத்து பர்மா கடற்கரைக்கு நீந்திச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர்" என்று அறிக்கை கூறுகிறது.
"ஜூலை 2025-இல், அசாமில் இருந்து வங்காள மொழி பேசும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்திய குடிமக்களாக இருந்தபோதிலும் அவர்களை இந்திய அதிகாரிகள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தினர்."என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறிப்பாக வக்ஃப் சட்டம் மற்றும் உத்தரகாண்டின் மாநில சிறுபான்மையினர் கல்வி அதிகாரச் சட்டம் (யூஎஸ்ஏஎம்ஈ) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
புதிய வக்ஃப் சட்டம், வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க அனுமதிக்கிறது. இதற்கிடையில், புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே உத்தரகாண்டில் உள்ள மதரஸா வாரியம் கலைக்கப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின் மூலம், இஸ்லாமியர்களின் மதரஸாக்களுடன், மாநிலத்தில் உள்ள சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளின் கல்வி நிறுவனங்களும் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
இந்திய அரசின் பதில் என்ன?
இந்த அறிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளதுடன், இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்று கூறியுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பற்றிய ஒரு 'திரிக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட' சித்திரத்தை முன்வைப்பதில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பிடிவாதமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை உறுதியான உண்மைகளின் அடிப்படையில் அமையாமல், சந்தேகத்திற்குரிய ஆதாரங்கள் மற்றும் கருத்தியல் விவாதங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இத்தகைய தொடர்ச்சியான தவறுகள் அந்த ஆணையத்தின் நம்பகத்தன்மையின் மீதே கேள்விகளை எழுப்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவைத் தேர்ந்தெடுத்து விமர்சிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவிற்குள் நடக்கும் தீவிரமான நிகழ்வுகளை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தனது பதிலில் இந்தியா கூறியுள்ளது.
மேலும் இதுகுறித்து இந்திய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்தியாவைத் தேர்ந்தெடுத்து விமர்சிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் இந்திய சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்," என்றார்.
அரசியல் கட்சிகளின் எதிர்வினை
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
"மக்களின் மத சுதந்திரத்திற்கு ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தலாக உள்ளது என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கூறுகிறது. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு அதிகரிப்பதற்கு இதுவே காரணமாகும்" என்று காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், "ஆர்எஸ்எஸ் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும்" என்று அப்பதிவு குறிப்பிட்டது.
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குத் தடை விதித்திருந்தார் என்பதையும் காங்கிரஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
"மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கக் கூடிய, அரசியலமைப்புக்கு எதிரான ஆர்எஸ்எஸ், நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்கு விஷம் போன்றது" என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸின் கருத்துக்குப் பதிலளித்த மத்திய அமைச்சரும், பிஹார் முன்னாள் முதலமைச்சருமான ஜித்தன் ராம் மாஞ்சி, "அவர்கள் எந்த அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி அல்லது அதற்குப் பின்னராக இருந்தாலும் சரி, ஆர்எஸ்எஸ் தனக்கென தனி இடத்தைப் பெற்று நேர்மறையான பணிகளைச் செய்து வருகிறது. அமைப்பு கெட்டது அல்ல, சில நபர்களே கெட்டவர்கள். அந்த நபர் தான் தடை செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு