"யார் ஹீரோ" மீண்டும் இணையும் ரஜினிகாந்த் , கமல் ஹாசன் - இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்

ரஜினி காந்த் , கமல் ஹாசன்

பட மூலாதாரம், Red Giant Movies

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் வீடியோ முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான முன்னோட்ட வீடியோ அந்நிறுவனத்தின் யூடியூப் சானலில் தமிழ் , தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குபின் ஒரு படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கப்போகிறார்கள். தமிழ் சினிமாவின் தலைமுறைகளைத் தாண்டி முன்னணி நட்சத்திரங்களாக இவர்கள் இருவரும் அறியப்படும் நிலையில், இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் இருவரும் இணைந்து நடித்த குறிப்பிடத்தக்க படங்கள் என்ன என்பது குறித்த பட்டியலை காணலாம்.

அபூர்வ ராகங்கள் (1975)

அபூர்வ ராகங்கள்

பட மூலாதாரம், Pyramid Talkies

இதற்கு முன்பு 13 படங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அதில் முக்கியமானது கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள். சென்னை பிலிம்சேம்பர் நடத்தி வந்த திரைப்படக்கல்லுாரியில் படித்து வந்த சிவாஜிராவ் (ரஜினிகாந்த்) இந்த படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார்.

கதைப்படி, ஸ்ரீவித்யாவை காதலிப்பார் கமல்ஹாசன். அவரின் காணாமல் போன கணவராக ரஜினிகாந்த் நடித்து இருப்பார். பாண்டியன் என்ற கேரக்டரில் கொஞ்ச நேரம் வந்தாலும் ரஜினியின் தோற்றம், அந்த கேரக்டர் மக்களிடம் பதிந்தது.

ஒரு கேட்டை திறந்து கொண்டு வருவது போல சென்டிமென்ட்டாக ரஜினியின் அறிமுக காட்சியை வைத்து இருப்பார் பாலசந்தர். இன்றைக்கும் அந்த காட்சி பேசப்படுகிறது. ஆனால், சில நிமிடங்கள் மட்டுமே இந்த படத்தில் கமலுடன் ரஜினி இருக்கிற காட்சிகள் வரும்.

மூன்று முடிச்சு (1976)

கமல் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ரஜினியை வில்லத்தனமான கேரக்டரில் நடிக்க வைத்தார் பாலசந்தர். ஒரே அறையில் வசிக்கும் நண்பர்களான இவர்கள் ஸ்ரீதேவியை காதலிப்பார்கள்.

கமலை ஸ்ரீதேவி காதலிப்பதை அறிந்த ரஜினி ஒரு ஏரியில் கமலை தள்ளிவிட, ஸ்ரீதேவி துடிப்பார். அதற்கு புதுவகையில் பழி வாங்குவார் ஸ்ரீதேவி என கதை செல்லும். தெலுங்கில் வந்த ஓ சீதா கதா என்ற படத்தின் ரீமேக் மூன்று முடிச்சு.

பிரசாத் என்ற கேரக்டர் ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்தது. குறிப்பாக, "வசந்தகால நதிகளிலே" என்ற அந்தப் பாடல் பெரிய ஹிட் ஆனது.

மூன்று முடிச்சு

பட மூலாதாரம், Raj Video Vision

அவள் அப்படித்தான் (1978)

ருத்ரய்யா இயக்கிய இந்த படத்தில் விளம்பர கம்பெனி நடத்துபவராக ரஜினிகாந்த்தும், விளம்பர படம் எடுப்பவராக கமலும் நடித்தனர். இரண்டுபேர் இருந்தாலும் இந்த படத்தில் பெயர் வாங்கியவர் ஹீரோயினாக நடித்த ஸ்ரீப்ரியாதான். அவருக்கு பல விருதுகள் கிடைத்தன. இன்றைக்கும் பெண்ணியம் பேசும் படங்களில் அவள் அப்படிதான் படத்துக்கு தனியிடம் உண்டு. பாக்ஸ் ஆபிஸில் படம் ஹிட் ஆகாவிட்டாலும் விமர்சன ரீதியில் படம் பேசப்பட்டது.

பதினாறு வயதினிலே (1977)

பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான இந்த படம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதிலும் பரட்டை என்ற வில்லத்தன கேரக்டரில் ரஜினி நடித்து இருப்பார். அப்பாவி சப்பாணி வேடம் கமலுக்கு. பாரதிராஜா, கமல், ரஜினி, ஸ்ரீதேவி, இளையராஜா என பலருக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படம். இந்த படத்தில் கமலுக்கு 27 ஆயிரம் சம்பளம், ரஜினி ரூ.5 ஆயிரம் கேட்க, ரூ.3 ஆயிரம் பேசி முடித்தார்களாம். அதிலும் இன்னமும் ரூ.500 பாக்கி என்று பாரதிராஜா பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

பதினாறு வயதினிலே

பட மூலாதாரம், 4K Cinemas

அவர்கள் (1977)

மீண்டும் பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த படம். கொஞ்சம் சிக்கலான கதை, ஹீரோயினாக சுஜாதா நடித்தார். அவர் காதலனாக ரவிகுமார், கொடுமைக்கார கணவனாக ரஜினிகாந்த், நண்பனாக கமல்ஹாசன் நடித்தனர். இவர்களில் யாருடன் சேர்ந்தார் சுஜாதா என்பது தான் கிளைமாக்ஸ். ரஜினி, கமல் இருந்தாலும் டைட்டிலில் கார்டில் முதலில் சுஜாதா பெயரைதான் கொண்டு வந்தார் பாலசந்தர். இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதை.

ஆடுபுலி ஆட்டம் (1977)

அந்த கால கமர்ஷியல் இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் ரஜினி, கமல் இருவருக்கும் பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும், இருவரையும் இணைத்து வைத்து எடுத்த ஒரே படம் இது. மகேந்திரன் கதை எழுதியிருந்தார். தெலுங்கிலும் ஏத்துக்கு பை ஏத்து என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரானது. திருடர்களாக ரஜினியும், கமலும் நடித்து இருப்பார்கள். ரஜினியின் கேரக்டர் பெயரே ரஜினிதான். படத்தில் அடிக்கடி இது ரஜினி ஸ்டைல் என்று சொல்லும் வசனம் பிரபலம். தமிழ், தெலுங்கில் வெற்றிப் படமாக அமைந்தது.

இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

தமிழ்சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரான ஸ்ரீதர், கமல், ரஜினியை இணைத்து எடுத்த படம். கமல், ரஜினி, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியாவை சுற்றி இந்த கதை நகரும். காதல், காமம், டுவிஸ்ட் என செல்லும் இந்த படம் ஹிட்டானது. குறிப்பாக, இளையராஜா இசையில், வாலி வரிகளில் 'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா' 'தண்ணி கருத்திருச்சு' பாடல்கள் ஹிட்டாகின. இந்த கதை பலரின் மனதில் இன்றும் ஊஞ்சலாடுகிறது. இதில் உதவி இயக்குனராக பணியாற்றிய பி.வாசு பிற்காலத்தில் ரஜினி நடித்த பல வெற்றிப் படங்களை இயக்கினார்.

இளமை ஊஞ்சலாடுகிறது

பட மூலாதாரம், PS Creations

நினைத்தாலே இனிக்கும் (1979)

தங்கள் குருநாதர் பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த பக்கா கமர்ஷியல் படம். கீதா, ஜெயசுதா ஹீரோயின்களாக நடிகத்தனர். சம்போ சிவ சம்போ, நம்ம ஊரு சிங்காரி, உட்பட பல பாடல்கள் ஹிட். இந்த படத்துக்கு கதை எழுதியவர் சுஜாதா. இசை எம்.எஸ்.விஸ்வநாதன். சிங்கப்பூருக்கு செல்லும் ஒரு இசைக்குழு பற்றிய கதை. கமல்தான் ஹீரோ என்றாலும், தனது குருநாதருக்காக நகைச்சுவை கலந்த இசைக்கலைஞராக வித்தியாசமான கெட்டப்பில் வருவார் ரஜினிகாந்த். படத்தில் அவர் சிகரெட் துாக்கி போட்டுப்பிடிக்கும் காட்சி பிரபலமானது.

அலாவுதீனும் அற்புத விளக்கும் (1979)

ஐ.வி.சசி இயக்கத்தில் உருவான மத்திய கிழக்கின் நாட்டுப்புற கதையை தழுவிய படம். அலாவுதீனாக கமலும், படைத் தளபதி கமாருதீனாக ரஜினிகாந்த்தும் நடித்தனர். ஜெயபாரதி ஹீரோயின். ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டர்தான். இந்த படத்துக்குபின் தமிழில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 47 ஆண்டுகளுக்குபின் இப்போதுதான் இணையப்போகிறார்கள்.

அலாவுதீனும் அற்புத விளக்கும்

பட மூலாதாரம், RajVideoVision

தப்புதாளங்கள், தில்லுமுல்லு

இதன் பின்னர் முழு நீள திரைப்படத்திலும் இணைந்து நடிக்காவிட்டாலும், கவுரவ வேடங்களில் ஒருவர் படத்தில் மற்றொருவர் தோன்றினர்.

ரஜினி நடித்த 'தப்புத்தாளங்கள்' படத்தில் கமல் கெளரவ வேடத்தில் நடித்தார். கமல் நடித்த 'தாயில்லாமல் நானில்லை' படத்தில், ரஜினி ஒரு காட்சியில் தோன்றினார். ரஜினியின் தில்லுமுல்லு படத்தின் கிளைமாக்சில் வழக்கறிஞராக கவுரவ வேடத்தில் வருவார் கமல்ஹாசன்.

அதேபோல் அமிதாப், கமல்ஹாசன் இணைந்து நடித்த கெராப்தார் என்ற இந்தி படத்தில் அமிதாப் நண்பராக கவுரவ வேடத்தில் நடித்தார் ரஜினிகாந்த்.

கமல் சீனியர், ரஜினி ஜூனியர்

சினிமாவை பொறுத்தவரையில் ரஜினியை விட கமல்ஹாசன் சீனியர். அவர் குழந்தை நட்சத்திரமாகவே நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஏவி.எம்.தயாரிப்பில் கமல் அறிமுகமான களத்துார் கண்ணம்மா 1960ல் ரிலீஸ் ஆனது. கூட்டி கழித்து பார்த்தால் கமல்ஹாசனின் சினிமா அனுபவம் 66 ஆண்டுகள். ரஜினிகாந்த் அறிமுகம் ஆன அபூர்வராகங்கள் 1975ல் வெளியானது. சினிமாவில் தனது 50வது ஆண்டை கொண்டாடி வருகிறார் ரஜினிகாந்த். கமல் நடிக்கும் 238வது படமாக, ரஜினிக்கு 174வது படமாக இவர்கள் இணையும் படம் வர உள்ளது

"ஆக்ஷன் படம்தான்"

பிரபல வினியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பிபிசியிடம் பேசுகையில் 'என்னை பொறுத்தவரையில் முன்னோட்டத்தை பார்த்தால் ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக தெரிகிறது. இன்றைய இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கிறது. அந்த பாணியை நெல்சனும் கையில் எடுக்கிறார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது' என்கிறார்

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு