டிரம்பின் புதிய 10% உலகளாவிய வரி எப்படி செயல்படும்? - 4 கேள்விகள், பதில்கள்

டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு,
    • எழுதியவர், கிரேஸ் எலிசா குட்வின்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த ஆண்டு உலகளாவிய வரிகளை விதித்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

IEEPA என அழைக்கப்படும் 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி, அதிபர் டிரம்ப் வரிகளை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 பேர் டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராகவும், 3 பேர் ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர்.

இந்தத் தீர்ப்பு, நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு வரிகளால் ஏற்பட்ட 130 பில்லியன் டாலருக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. ஆனால் நீதிமன்றம் இதில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் இவை மற்றொரு நீதிமன்றப் போராட்டத்தின் மூலம் முடிவடையும் வாய்ப்பு உள்ளது.

இந்த தீர்ப்பு வெளியான சற்று நேரத்திலேயே அனைத்து நாடுகளின் பொருட்களுக்கு தற்காலிகமாக 10 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வர உள்ளது

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? நீதிமன்றம் விதித்த தடை எதற்கெல்லாம் பொருந்தாது? இதுவரை வசூலிக்கப்பட்ட வரிகள் திருப்பி அளிக்கப்படுமா? என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

எந்த வரிகள் சட்டவிரோதமானவை?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, டிரம்ப் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதித்த வரிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தச் சட்டம் அவசரகாலத்தில் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்குகிறது.

டிரம்ப் முதன்முதலில் பிப்ரவரி 2025-ல் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரி விதித்தார். இதற்கு அந்த நாடுகளிலிருந்து ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிரான அவசரநிலை என்று அவர் கூறினார்.

சில மாதங்களுக்குப் பிறகு, டிரம்ப் "விடுதலை நாள்" என்று அழைத்த, ஏப்ரல் 2ம் தேதி தனது வரிகளை விரிவுபடுத்தினார். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வரி விதித்தார்.

தனது நடவடிக்கை வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என்றும் அமெரிக்காவுக்கான வருவாயை அதிகரிக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

ஆனால், புதிய வரிகளை விதிக்கும் அரசமைப்பு அதிகாரம் அதிபருக்கு இல்லை, நாடாளுமன்றத்துக்கே உள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் நோக்கம் வருவாயை அதிகரிப்பது அல்ல என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டில் டிரம்ப் விதித்த பல வரிகள், இந்த சட்டத்தின் கீழ் அவர் அறிவித்த அவசரநிலைகளின் ஒரு பகுதியாக இல்லை, எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவை தொடரலாம்.

அதாவது எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகள் மீதான தொழில்துறை சார்ந்த வரிகள் இதில் அடங்கும், இவற்றை 1962ஆம் ஆண்டு வர்த்தக விரிவாக்க சட்ட பிரிவு 232 இன் கீழ் தேசிய பாதுகாப்பு காரணங்களை கூறி டிரம்ப் விதித்தார்.

டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு,

புதிய வரியை எதன் அடிப்படையில் டிரம்ப் விதித்தார்?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புதிய 10% வரியை விதிக்க 1974 ஆம் ஆண்டு Trade Act-ன் பிரிவு 122-ஐ டிரம்ப் பயன்படுத்தினார். இது அதிகம் அறியப்படாத பிரிவாகும்.

இந்தப் பிரிவு அதிபருக்கு 150 நாட்களுக்கு 15% வரை வரிகளை விதிக்க அதிகாரம் அளிக்கிறது, அதன் பிறகு நாடாளுமன்றத்தால் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். அதாவது இந்தத் தீர்வும் தற்காலிகமானது.

அதே நேரம், நாடாளுமன்றத்தை தவிர்ப்பதற்கான வழியை டிரம்ப் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

வலதுசாரி சிந்தனைக்குழுவான கேட்டோ இன்ஸ்ட்டிட்யூட்டின் கூற்றுப்படி, புதிய அவசரநிலையை அறிவித்து மீண்டும் 150 நாட்களுக்கு வரி விதிப்பதை இந்தப் பிரிவு தடுக்கவில்லை.

வெள்ளை மாளிகை கூற்றுப்படி, டிரம்ப் பிரிவு 122 ஐ "அடிப்படை சர்வதேச கொடுப்பனவு சிக்கல்களைத் தீர்க்க" மற்றும் "அமெரிக்க வர்த்தகத்தை மறுசீரமைக்கப் பயன்படுத்துகிறார்" , அதே நேரத்தில் 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் அவர் வரிகளை விதிக்க முடியுமா என்பதையும் ஆராய்கிறார் என்றது.

அந்தச் சட்டம், ஜேமிசன் கிரேர் தற்போது வகிக்கும் "அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி" ( USTR ) பதவியின் மூலம், நாடுகளின் வர்த்தக நடைமுறைகளை விசாரிக்க அனுமதிக்கிறது. பின்னர், நடைமுறைகள் பாரபட்சமானதாகவோ அல்லது நியாயமற்றவையாகவோ இருந்தால் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி வரிகளை விதிக்கலாம் என்று சொகிறது.

1962 ஆம் ஆண்டு வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232 இன் கீழ் நிர்வாகம் தொடர்ந்து வரிகளை விதிக்க முடியும், இதை டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பெரிதும் பயன்படுத்தினார். இது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் இறக்குமதிகள் மீது வரிகளை விதிக்க நிர்வாகத்தை அனுமதிக்கிறது, ஆனால் விசாரணைக்குப் பிறகுதான் இதனை செய்ய முடியும் என்பதால், இது நேரம் எடுக்கக் கூடியது.

டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு,

சட்டவிரோத வரிகள் திரும்பப் கிடைக்குமா?

இந்த வரி அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் இதுவரை பில்லியன் கணக்கான டாலர்களை வசூலித்துள்ளதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. இந்தத் தொகை சுமார் 130 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் வசூலித்த தொகையை திருப்பி அளிப்பது குறித்து எதுவும் விளக்கவில்லை.

செய்தியாளர்களிடம் பேசும் போது பணத்தை திருப்பித் தரும் விவகாரம் பல ஆண்டுகால சட்டப்போராட்டத்தில் சிக்க கூடும் என டிரம்ப் கூறி இருந்தார்.

அமெரிக்க கருவூலத்துறை செயலர் ஸ்காட் பெசண்ட் கூறும் போது இந்த விவகாரம் பல ஆண்டுகளுக்கு இழுக்கப்படலாம் என்றார். ஏனெனில், வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரம், பணத்தைத் திரும்பச் செலுத்த உத்தரவிடப்பட்டால் அவை பெரும்பாலும் பெரிய நிறுவனங்களுக்கே செல்லும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய நிறுவனங்களிடம் இந்த சிக்கலான செயல்முறையை முடிக்க திறன் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு,

இப்போது நடைமுறையில் உள்ள வரிகள் என்ன?

பிப்ரவரி 24 ஆம் தேதி மதியம் 12:01 EST மணிக்குத் தொடங்கி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுக்கும், அவை எங்கிருந்து வந்தாலும், புதிய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்ட நாடுகள், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட, முன்னர் பேச்சுவார்த்தை நடத்திய வரி விகிதத்திற்குப் பதிலாக, பிரிவு 122 இன் கீழ் உலகளாவிய 10 சதவீத வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் அவர்கள் ஒப்புக்கொண்ட சலுகைகளை அந்த நாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

"அமெரிக்க பொருளாதாரத்தின் தேவைகள் காரணமாக" சில பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இவை முக்கிய வகைகளின் கீழ் வருகின்றன, இதனால் சில முக்கியமான கனிமங்கள், உலோகங்கள், எரிசக்தி பொருட்கள், இயற்கை வளங்கள், உணவுப் பயிர்கள், மருந்துகள், மின்னணுவியல், கார்கள் மற்றும் லாரிகள் மற்றும் விண்வெளிப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

மேலும், "புத்தகம் உள்ளிட்ட தகவல் பொருட்கள் , நன்கொடைகள் " ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படாது என்று வெள்ளை மாளிகையின் உண்மைத் தகவல் தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட பல வகைப் பொருட்களுக்கு, இந்தப் பிரகடனம் விரிவானது, ஆனால் எந்தெந்தப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்பதை குறிப்பாகக் கூறவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மற்றொரு முக்கியமான விலக்கு யூஎஸ்எம்சிஏ-வின் ஒரு பகுதியாக இருக்கும் பொருட்கள் - அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இடையேயான வர்த்தக ஒப்பந்தம்.

அந்தப் பொருட்களுக்கும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது, மேலும் USMCA விலக்கு காரணமாக உலகின் மிகக் குறைந்த வரி விகிதத்தைக் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று என்று பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.

இதேபோல், கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளிலிருந்து வரும் ஜவுளி மற்றும் ஆடைகள் டொமினிகன் குடியரசு-மத்திய அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதே நேரத்தில், குறைந்த விலை பொருட்களுக்கான வரிகளைத் தொடர்ந்து விதித்து வருவதாக டிரம்ப் கூறினார். கடந்த ஆண்டு, 800 டாலர் அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள பொருட்கள் எந்த வரியும் செலுத்தாமல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்த டி மினிமிஸ் விலக்கு என்று அழைக்கப்பட்டதை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு