'உன்னை அறிந்தால்' - டி.எம். சௌந்தரராஜனின் 10 பிரபல தத்துவ பாடல்கள்

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.

எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி விஜயகாந்த் வரை பல தலைமுறை நடிகர்களுக்கு பாடினார். தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள்.

அதை முன்னிட்டு டி.எம் சௌந்தரராஜன் மகனும், பாடகருமான டிஎம்எஸ் பால்ராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

டி.எம் சௌந்தரராஜன் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த தத்துவ பாடல்களை சொல்ல முடியுமா என்று டிஎம்எஸ் பால்ராஜிடம் கேட்டோம்.

''அந்த வரிசையில் ஏகப்பட்ட பாடல்கள் இருக்கிறதே, ஆனாலும், எனக்கு பிடித்த 10 பாடல்களை சொல்கிறேன்''

1) எங்கே நிம்மதி

''ஆயிரக்கணக்கான பாடல்களை அப்பா பாடியிருந்தாலும், நூற்றுக்கணக்கான தத்துவ பாடல்களை பாடியிருந்தாலும் இந்த பாடலை நான் மறக்கவே மாட்டேன். காரணம், அப்பா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்தார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்த பாடலை பாடிவிட்டு அழுதார்.

'இந்த மாதிரி எனக்கு எத்தனையோ பாடல்களை பாடி இருக்கீங்க அண்ணே.. உங்களை மாதிரி திறமைசாலியை இனி உலகம் பார்க்காது' என்று புகழ்ந்தார்.

புதிய பறவை படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை, ஒரு தடவை கேட்டு பாருங்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் ஏன் அழுதார் என தெரியும்.'' என்கிறார் பால்ராஜ்.

2) உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

''தத்துவ பாடல்கள் சோகமாக, அழுத்தமாக இருக்க வேண்டியதில்லை. உற்சாகமாக இருக்கலாம். எனர்ஜி கொடுக்கும் வகையில் இருக்கலாம் என்ற பாணியில் அமைந்த பாடல் இது. வேட்டைக்காரன் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்.

'மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்' என அப்பா பாடும்போது தியேட்டரில் அவ்வளவு கைதட்டல் கேட்கும்'' என்கிறார் பால்ராஜ்

3) அச்சம் என்பது மடமையடா

''மன்னாதி மன்னன் படத்தில் வரும் இந்த பாடலை கேட்காதவர்கள் உண்டா? எம்ஜிஆரின் கம்பீரமும், அப்பாவின் குரலும் சேரும்போது அப்படியொரு அழகான அனுபவம் கிடைக்கும். 'ஆறிலும் சாவு, நுாறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா' என்ற குரல் ஒலிக்கும்போது மெய்சிலிர்க்கும்.''

4) போனால் போகட்டும் போடா

''பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற பாடலை ஒரு தடவை கேட்டு பாருங்கள். அந்த இசை, குரல் மனதை பிழியும். துயரம், வலி, ஏமாற்றம் நிறைந்த நாட்களில் இந்த பாடலை கேட்டால் தெளிவு பிறக்கும்.

'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?' என்ற வரிகளை அவர் ரசித்து அர்த்தமுள்ளதாக பாடியிருப்பார்.

சிவாஜி கணேன், எம்.எஸ்.விஸ்வநாதன். கண்ணதாசன், டிஎம்எஸ் கூட்டணியி்ல் இந்த பாடல் ஒரு புத்தகம் என்பேன்.'' என்கிறார் பால்ராஜ்

5) சட்டி சுட்டதடா கை விட்டதடா

''ஆலையமணி படத்தில் இடம் பெற்ற இந்த பாடலின் தத்துவத்தை என்னவென்று சொல்வது?

'எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்

இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா' என்று அவர் குரலை கேட்கும்போது எத்தனையோ விஷயங்கள் மனதில் வந்துபோகும். சில பாடல்கள் நம் மமதையை குறைக்கும். அந்த வகை பாடல் இது''.

6) அந்த நாலு பேருக்கு நன்றி

''சங்கே முழங்கு படத்தில் ஒரு மரண இறுதி ஊர்வல காட்சியமைப்பு பின்னணியில் வரும் பாடல். இன்றைக்கு இந்த பாடலை கேட்டு, அப்பாவின் குரலை கேட்டு அழுபவர்கள் பலர். அந்த அளவுக்கு வாழ்க்கை தத்துவத்தை பாடியிருப்பார். எம்ஜிஆரின் உருக்கமான நடிப்பும் பாடலுக்கு பலம். இப்படிப்பட்ட வைர வரிகளை எழுதியவர் வாலி'' என்கிறார் பால்ராஜ்.

7) கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்

''வானம்பாடி படத்தில் வரும் இந்த பாடலை கேட்கும்போது காதலின் வலியை எப்படிப்பட்ட அழகான வரிகளில் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றும். கொஞ்சம் கடவுளை பழிப்பதாக தோன்றும். ஆனால், ஆசை, மோகம் என அனைத்தையும் அழுத்தமாக சொல்லியிருப்பார்கள். ஊஞ்சலை ஆடவிட்டு உயரத்திலே தங்கிவிட்டான் போன்ற வரிகள் அருமையாக இருக்கும்'' என்கிறார் பால்ராஜ்

8) உள்ளம் என்பது ஆமை

''இந்த பாடலில் அப்பாவின் குரல் அவ்வளவு மென்மையாக, உணர்வுபூர்வமாக இருக்கும். எவ்வளவு பெரிய தத்துவத்தை ஆமையை வைத்து சொல்லியிருக்கிறார்கள் என வியந்து இருக்கிறேன்.''

9) வந்த நாள் முதல் இந்த நாள் வரை

''பாவமன்னிப்பு படத்தில் வரும் இந்த பாடலை பிடிக்காதவர்கள் உண்டா? கண்ணதாசன் வரிகளில்

'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்' என டிஎம்எஸ் பாடும் அழகே தனி. அவ்வளவு தத்துவங்களை பொதிந்த இந்த பாடலை சைக்கிள் ஓட்டியபடி சிவாஜி பாடுவது இன்னும் சிறப்பு'' என்கிறார் பால்ராஜ்

10) படைத்தானே…. படைத்தானே…..

''நிச்சய தாம்பூலம் படத்தில் இடம் பெற்ற பாடல் இது. கண்ணதாசன் வரிகளுக்கு எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்தனர். தத்துவங்கள், மனித இயல்புகள், ஆசைகளை உயிரோட்டமாக சொல்லும் பாடல். டிஎம்எஸ் குரல், சிவாஜி கணேசன் நடிப்பு, இசை, பாடல் வரிகள் என நான்கும் கலந்த காம்பினேஷன் காலம் கொடுத்த கொடை என்பேன்'' என்றார் டிஎம்எஸ் பால்ராஜ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு