You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு
- எழுதியவர், பிராச்சி குல்கர்னி
- பதவி, பிபிசி மராத்திக்காக
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மத்திய கிழக்கில் நீடிக்கும் போரின் தாக்கம், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டின் மூலம் இந்தியாவையும் எட்டியுள்ளது.
பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டன. பல உணவகங்களின் மெனுக்கள் மாறின, தேநீர் மற்றும் காபி கூட கிடைப்பது அரிதானது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியா எல்பிஜியை அதிகம் சார்ந்திருப்பதே ஆகும்.
புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக (NCL - என்சிஎல்) விஞ்ஞானிகள், இந்தச் சார்பை ஓரளவிற்கு குறைக்கவும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் உதவும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
புனே தேசிய வேதியியல் ஆய்வகமானது, டைமெத்தில் ஈதர் (DME - டிஎம்இ) தயாரிப்பதற்கான முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த டிஎம்இ-ஐ ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் எல்பிஜியுடன் கலக்கலாம். தற்போது இந்தியாவில் 8% வரை டிஎம்இ-ஐ எல்பிஜியுடன் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.
இந்தக் கண்டுபிடிப்பை தொழில்முறை அளவில் விரிவுபடுத்தினால், இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்றும், இது கணிசமான அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
டைமெத்தில் ஈதர் தயாரிப்பதற்கான முற்றிலும் உள்நாட்டு முறையை உருவாக்க 20 ஆண்டுகால ஆராய்ச்சி தேவைப்பட்டது. விஞ்ஞானிகள் டிஎம்இ-ஐ எல்பிஜியுடன் கலந்து நடைமுறைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முறையையும் உருவாக்கியுள்ளனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயல்முறைகள், மூலப்பொருட்கள் மற்றும் அமைப்புகளைப் பயன்படுத்தி இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
இந்தத் தொழில்நுட்பம் பிற நாடுகளில் இருந்தாலும், இதற்கு முன்பு இந்தியாவில் கிடைக்கவில்லை. தற்போது விஞ்ஞானிகள் இதனை முழுமையான உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கியுள்ளதுடன், இதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளனர் என்று புனே தேசிய வேதியியல் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் திருமலைசாமி ராஜா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த எரிபொருளின் பயன்பாட்டைத் தொழில்முறை அளவில் எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்துத் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் டாக்டர் ராஜா குறிப்பிட்டார். இந்த எரிபொருள் எதிர்காலத்தில் எல்பிஜிக்கு முழுமையான மாற்றாக அமையுமா என்பதைத் தீர்மானிக்க மேலதிக ஆராய்ச்சிகள் தேவை என்றும் அவர் கூறினார்.
'டைமெத்தில் ஈதர்' என்றால் என்ன?
டைமெத்தில் ஈதர் அல்லது டிஎம்இ என்பது ஒரு செயற்கை எரிபொருளாகும். இந்த எரிபொருள் ஒரு வேதியியல் செயல்முறை மூலம் தயாரிக்கப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக, என்சிஎல்லின் அறிவியல் இயக்குநர்களான முனைவர் ஆஷிஷ் லெலே மற்றும் முனைவர் திருமலைசாமி ராஜா ஆகியோர் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய முனைவர் திருமலைசாமி ராஜா, "நாங்கள் நேரடி டிஎம்இ மற்றும் மறைமுக டிஎம்இ ஆகிய இரண்டையும் உருவாக்க முயன்றோம். இதற்கு வினையூக்கி (கேட்டலிஸ்ட்) மிக முக்கியமானதாக இருந்தது" என்றும், "இந்தியாவில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே இந்த வினையூக்கி உருவாக்கப்பட்டது. நான்கு வெவ்வேறு வகையான வினையூக்கிகள் உருவாக்கப்பட்டன, இறுதியில் இந்த வினையூக்கி உருவாக்கப்பட்டது" என்றும் கூறினார்.
ஆஷிஷ் லெலே கூறுகையில், "100 சதவிகித டைமெத்தில் ஈதர் உற்பத்தியில் உதவும் ஒரு ஊக்கியை உருவாக்குவதே எங்கள் முயற்சியாக இருந்தது. இதற்குத் தேவையான அனைத்து கூறுகளும் இந்தியாவில் கிடைக்கின்றன. எதையும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை." என்றார்.
செயல்முறை என்ன?
இந்த வேதியியல் செயல்முறையைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது என்று முனைவர் லெலே கூறுகிறார்.
இந்தச் செயல்முறையில் இரண்டு மெத்தனால் மூலக்கூறுகளை ஒன்றிணைத்து, அதிலிருந்து நீர் மூலக்கூறை அகற்றினால், எஞ்சியிருப்பது டைமெத்தில் ஈதர் அல்லது டிஎம்இ ஆகும்.
ஆனால் இந்தச் செயல்முறை மிகவும் சிக்கலானது.
முனைவர் லெலே கூறுகையில், "இதற்காக, முதலில் மெத்தனால் சேர்க்கப்பட்டு ஒரு வினையூக்கி சேர்க்கப்பட்டது, பின்னர் டிஎம்இ உற்பத்தி செய்யப்படும் ஒரு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் சிறிய அளவில் செய்யப்பட்ட இந்த செயல்முறை பெரிய அளவில் செய்யும்போது பலன் தருமா என்பது தான் கேள்வியாக இருந்தது.
இதற்காக, வெவ்வேறு அளவுகளில் டிஎம்இ தயாரிக்கப்பட்டது. இது வெற்றி பெற்ற பிறகு, இதனை இன்னும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழத் தொடங்கியது," என்றார்.
சுத்தமான எரிபொருள்
தற்போதுள்ள நிலையில் டிஎம்இ மிகவும் தூய்மையானது. இதனை பயன்படுத்தும்போது உங்களால் சுடரைக் கூட பார்க்க முடியாது. இது புகை, நைட்ரஜன் ஆக்சைடு, கந்தக ஆக்சைடு மற்றும் நுண்துகள்களின் வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்கிறது.
இதன் வெப்பத் திறன் வழக்கமான எரிபொருட்களுக்கு இணையானது என்பதால், இது ஒரு சிறந்த மாற்றாகவும் அமைகிறது. இந்த எரிபொருளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பதும் முக்கியமான விஷயம்.
முனைவர் லெலே கூறுகையில், "பொதுவாக நாம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு அடுப்பின் பர்னர்களில் கார்பன் படியும். அந்த கார்பனைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், டைமெத்தில் ஈதரில் இதுபோன்ற எதுவும் நடக்காது. இது மிகவும் தூய்மையாக எரியும். எந்த அளவுக்கு என்றால், இதன் சுடர் கூட கண்ணுக்குத் தெரியாது," என்றார்.
என்சிஎல் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதற்கான வினையூக்கியும் (கேட்டலிஸ்ட்) விலை மலிவானது தான்.
முனைவர் திருமலைசாமி ராஜா இந்த வினையூக்கிக்கான சோதனைகளை நடத்தியது மட்டுமல்லாமல், இதற்கான ரியாக்டரையும் (உலை) உருவாக்கியுள்ளார். இந்தத் தொழில்நுட்பம் தனித்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
தற்போதைய ஆலை 12 முதல் 13 கிலோ டிஎம்இ-யை உற்பத்தி செய்கிறது. தற்போது, ஒரு நாளைக்கு 250 கிலோ எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு
தற்போது டிஎம்இ குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், எல்பிஜி மீதான சார்பைக் குறைப்பதில் இது ஒரு பெரிய அளவில் பங்களிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தற்போது என்சிஎல்லில் உருவாக்கப்பட்டு வரும் முன்மாதிரி (ப்ரோடோடைப்), 100 சதவிகிதம் எல்பிஜி அல்லது டிஎம்இ ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடியது.
இது பெங்களூருவில் உள்ள எல்பிஜி உபகரண ஆராய்ச்சி மையத்தில் (எல்ஈஆர்சி) சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தால் வெறும் 10 பார் (10 bar) அழுத்தத்தில் டிஎம்இ-யை உற்பத்தி செய்ய முடியும் மற்றும் இதனை நேரடியாக எல்பிஜி சிலிண்டர்களில் நிரப்ப முடியும்.
முனைவர் லெலே கூறுகையில், "எல்பிஜி திரவமாவது போலவே, டிஎம்இ-யும் திரவமாகிறது. 7 பார் அழுத்தத்தில் டிஎம்இ திரவமாகிறது. இதனை எல்பிஜியுடன் முழுமையாகக் கலக்க முடியும்" என்றார்.
"தற்போது எல்பிஜியுடன் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலந்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்பிஜியுடன் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலந்தால், அதனை அடுப்புகள் மற்றும் சிலிண்டர்களில் பயன்படுத்த முடியும்."
"மொத்த எல்பிஜி நுகர்வில் 8 சதவிகிதம் என்று நாம் சொன்னால், அது இறக்குமதி அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் 8 சதவிகிதத்தில் தொடங்கி பின்னர் அதனை 20 சதவிகிதமாக அதிகரிக்கலாம்."
இந்தியா 2024-ஆம் ஆண்டில் 21 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்தது. இதில் வெறும் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 9500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி எரிவாயு இணைப்புகளுக்கு 8 சதவிகித டிஎம்இ பயன்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 1300 டன் டிஎம்இ உற்பத்தி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இது எல்பிஜியுடன் கலக்கப்படுவதால், இதற்கெனத் தனியாக அடுப்பு அல்லது சிலிண்டரைத் தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இத்தகைய டிஎம்இ பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், அந்தத் தொழில்நுட்பம் யாருக்கும் வழங்கப்படவில்லை.
தற்போது, இந்தியாவிலேயே வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இதற்கான திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
என்சிஎல் நிறுவனம், தற்போது ஒரு பொறியியல் கூட்டாளருடன் இணைந்து 6-9 மாதங்களுக்குள் நாளொன்றுக்கு 2.5 டன் திறன் கொண்ட ஒரு தொழில் செயல்முறை ஆலையை அமைக்கத் தயாராகி வருகிறது.
இந்தத் திட்டம் நாளொன்றுக்கு 500-1000 டன் திறன் கொண்ட ஒரு வணிக ரீதியான திட்டத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும்.
இந்த எரிபொருள் எல்பிஜிக்கு முழுமையான மாற்றாக அமையுமா?
இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான வினையூக்கி (Catalyst) ஆராய்ச்சிக்காக மொத்தம் ஐந்து காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. இந்தத் தயாரிப்பு முறைக்கே காப்புரிமை பெற்றுள்ளதாக டாக்டர் ராஜா தெரிவித்தார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய டாக்டர் ராஜா, "தொடக்கத்திலிருந்தே, இந்த ஆராய்ச்சி அதிகபட்ச மக்களுக்குப் பயனளிப்பதையும், தொழில்முறை அளவில் செயல்படுத்தப்படுவதையும் நோக்கமாகக் கொண்டு உழைத்தோம். பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருட்களின் இருப்பு வரம்புக்குட்பட்டது, எனவே இந்த முறை எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்றார்.
"இந்த மாற்றத்தைக் கொண்டு வர அரசின் அனுமதி அவசியம். எரிபொருளைச் சேமிப்பது, விநியோகிப்பது மற்றும் வழங்குவது போன்றவற்றை அரசின் ஆதரவுடன் மட்டுமே திறம்பட நிர்வகிக்க முடியும். இது தொடர்பாக ஒத்துழைக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது."
எல்பிஜியுடன் ஒப்பிடும்போது டிஎம்இ கலந்த எரிபொருளின் விலை குறித்துக் கேட்டபோது, இரண்டுமே ஒரே விலையில் இருக்கும் என்று டாக்டர் ராஜா தெரிவித்தார். இருப்பினும், டிஎம்இ ஒரு தூய்மையான எரிபொருள் மற்றும் அதிக செயல்திறன் கொண்டது என்பதுதான் இதன் முக்கிய சாதகமாகும். இது குறைவான மாசுபாட்டை ஏற்படுத்துகிறது மற்றும் மிகக் குறைந்த அளவு புகைக் கரியையே உருவாக்குகிறது.
எதிர்காலத்தில் எல்பிஜிக்கு முழுமையான மாற்றாக டிஎம்இ மாறுமா என்பது குறித்துப் பேசிய டாக்டர் ராஜா, 'அது சாத்தியம்தான், ஆனால் 100% டிஎம்இ-ஐ பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்னும் முழுமையான ஆராய்ச்சி செய்யப்படவில்லை' என்று கூறினார். சில குறிப்பிட்ட தொழில்முறைப் பயன்பாடுகளில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், இதற்கு முறையான ஒழுங்குமுறை அனுமதியும், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தக் கூடுதல் ஆய்வுகளும் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த முடியும் என்றும், அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் டாக்டர் ராஜா கூறினார். இந்தப் பணியைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு செல்லத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், இத்தகைய கூட்டாண்மைக்கான செலவு, தேவைப்படும் முதலீட்டு அளவு மற்றும் மனிதவளம் தொடர்பான கேள்விகளுக்கு இந்தப் பேட்டியில் பதில் அளிக்கப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு