You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மாணவி மீது காலணியால் தாக்குதல்' - திருச்சி கல்லூரியில் ராகிங் நடந்ததா?
(குறிப்பு: இக்கட்டுரையின் சில பகுதிகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)
திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை சக மாணவர் ஒருவர் காலணியால் தாக்கும் காணொளி ஒன்று வியாழக்கிழமையன்று (19 ஆம் தேதி) இணையத்தில் வேகமாக பரவியது.
ராகிங் கொடுமை காரணமாக மாணவி தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், 'இது ராகிங் அல்ல' என மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மாணவிக்கு இதயநோய் பாதிப்பு இருப்பதால் இந்த தாக்குதலால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை பிபிசி தமிழிடம் கூறினார்.
தனது அக்காவை தாக்கிய இரண்டாம் ஆண்டு மாணவர் கிருபாகரன் தொடர்ந்து உருவக்கேலி செய்து வந்ததாகக் கூறுகிறார் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர். கிருபாகரனை காவல்துறை கைது செய்துள்ளது.
கல்லூரியில் என்ன நடந்தது?
பிபிசி தமிழிடம் பேசிய மாணவியின் சகோதரர், "கடந்த 9-ஆம் தேதியன்று கல்லூரி படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த என் அக்காவை, கிருபாகரன் இடித்துவிட்டார். இதனால் கோபப்பட்டு என் அக்கா அவரிடம் வாக்குவாதம் செய்தார்" என்கிறார்
இதுதொடர்பாக துறைத் தலைவரிடம் மாணவி புகார் செய்துள்ளார். அவரும் மாணவரை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
"துறைத் தலைவரிடம் புகார் அளித்ததால் கோபப்பட்ட கிருபாகரன், 'எங்கு பார்த்தாலும் அடிப்பேன்' என என் அக்காவை மிரட்டினார். சம்பவம் நடந்த நாளுக்கு முன்பு வரை தொடாமல் கேலி பேசி வந்த மாணவர், தொட்டு இடித்ததால் என் அக்கா தட்டிக் கேட்டுள்ளார். அப்போது என் அக்காவை அவர் அடிக்கச் சென்றுள்ளார்" என மாணவியின் சகோதரர் தெரிவித்தார்.
அந்த மாணவி தன் சகோதரனிடம் இதுபற்றித் தெரிவிக்க, அவர் கிருபாகரனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
காவல்நிலையத்திலும் கடந்த 10-ஆம் தேதியன்று மாணவி புகார் அளித்துள்ளார்.
"ஆனால், புகாரின் பேரில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார் மாணவியின் சகோதரர்.
'காலணியால் தாக்குதல்'
இந்தநிலையில், 18-ஆம் தேதியன்று கல்லூரிக்குச் சென்ற மாணவியிடம் கிருபாகரன் மற்றும் சக மாணவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர் என்கிறார் மாணவியின் சகோதரர்.
அக்காவும் தம்பியும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர்
"சுமார் 12 மணியளவில் கேண்டீனுக்கு என் அக்கா சென்றார். அப்போது அவரிடம் வம்பு இழுத்து அடிப்பதுபோல கிருபாகரன் கையை ஓங்கினார். என் அக்காவுடன் இருந்த நான் இதை தட்டிக் கேட்டேன்" எனக் கூறுகிறார் மாணவியின் சகோதரர்.
''அப்போது காலணியால் என் அக்கா மீது கிருபாகரன் தாக்கினார்''
'' இந்த தாக்குதலால் சம்பவ இடத்திலேயே என் அக்கா மயக்கமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்''
'மாணவிக்கு இதயநோய் பாதிப்பு'
மாணவியின் தந்தையிடம் பிபிசி தமிழ் பேசியது. தன் மகள் கடந்த ஏழு வருடங்களாக இதயநோய் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். இவர் தினசரி கூலி வேலை செய்து வருகிறார்.
"கடந்த ஆண்டு திருச்சியில் என் மகளுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு நன்றாக இருந்தார். இந்தத் தாக்குதலால் அவரால் நிமிர்ந்துகூட பேச முடியவில்லை" எனக் கூறுகிறார் அவர்.
தொடர்ந்து அவர் பேசும்போது, "ஒருமுறை கல்லூரியில் இருந்து வரும்போது சோகமாக இருந்தார். அதுகுறித்து விசாரித்தபோது, ஒரு பையன் ராகிங் செய்தபடி இடித்துவிட்டு கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதாகக் கூறினார். ஆசிரியர்களிடம் கூறுமாறு தெரிவித்தேன்" என்கிறார்.
"கல்லூரியில் என் மகளுக்கு பிரச்னை இருப்பதைப் பற்றி கல்லூரி நிர்வாகம் உள்பட வேறு யாரும் கூறவில்லை" என அவர் கூறினார்.
மாணவியை கைதான மாணவர் தொடர்ச்சியாக ராகிங் செய்து வந்துள்ளதாகக் கூறுகிறார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சூர்யா.
"கல்லூரிக்குள் மாணவி போகும்போதெல்லாம் சண்டையிடும் தொனியில் அவர் நடந்து வந்துள்ளார். இது முழுக்கவே ராகிங் தான். ஒரு மாணவியை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டாலே அது ராகிங்தான் எனக் கூறியும் காவல்துறை ஏற்கவில்லை" என அவர் குறிப்பிட்டார்.
"சம்பவ இடத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒருவரை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளது" எனவும் சூர்யா தெரிவித்தார்.
'இது ராகிங் அல்ல' - திருச்சி மாவட்ட காவல்துறை
"இது ராகிங் அல்ல" என திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், 'கேலி, கிண்டல் போன்ற சம்பவங்களில் மாணவர் ஈடுபடவில்லை. இது தற்செயலாக ஏற்பட்ட ஒரு சம்பவம் எனத் தெரியவருகிறது' எனக் கூறியுள்ளது.
மாணவி அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு மாணவர் அனுப்பப்பட உள்ளதாகவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
வழக்கு பதியப்பட்டுள்ள காவல் நிலைய ஆய்வாளர் கமல்ஹாசனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"முதலில் புகார் வந்த உடனே காவல்துறை விசாரித்தது. அவர்கள் மாணவர்கள் என்பதால் எச்சரித்துவிடுமாறு கல்லூரி தரப்பில் கூறப்பட்டது. புகாருக்கு ஆளான மாணவரிடம் விசாரணை நடத்துவதற்காக 18-ஆம் தேதி அழைத்திருந்தோம். அதற்குள், 'என் மேல புகார் கொடுப்பியா?' எனக் கேட்டு மாணவியை அடித்துள்ளார்" என்கிறார் அவர்.
"மாணவர் மட்டுமே தாக்குதலில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் ராகிங் எனக் கூறி சம்பவத்தை சிலர் மிகைப்படுத்துகின்றனர்" எனவும் காவல் ஆய்வாளர் குறிப்பிட்டார்.
'திடீரென நடந்த விஷயம்' - கல்லூரி முதல்வர்
இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த கல்லூரி முதல்வர், "இதனை ராகிங் என்பதாக பார்க்க முடியாது" எனக் கூறுகிறார்.
"இரு தரப்புக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்து என் கவனத்துக்கு வந்தது. இரு தரப்பிலும் பெற்றோரை அழைத்து வருமாறு கூறினேன். அதற்குள் மோதல் ஏற்பட்டுவிட்டது" என அவர் குறிப்பிட்டார்.
"இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே அவர்களை கல்லூரிக்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கவுள்ளோம்" என்கிறார்.
"கல்லூரிக்குள் ராகிங் போன்ற செயலில் ஈடுபடக் கூடாது எனத் தொடர்ச்சியாக கூட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததில்லை. இது திடீரென நடந்த விஷயம்" என அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு