உஸ்தாத் பகத் சிங் விமர்சனம்: பவன் கல்யாணின் நகைச்சுவை ஆக்‌ஷன் படம் எப்படி உள்ளது?

பவன் கல்யாண்

பட மூலாதாரம், Facebook/Mythri Movie Makers

படக்குறிப்பு, நகைச்சுவையையும் ஆக்‌ஷனையும் ஒன்றிணைக்கும் பவனின் 'ஒன் மேன் ஷோ'
    • எழுதியவர், ஜி.ஆர். மகரிஷி
    • பதவி, பிபிசிக்காக
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

'கப்பர் சிங்' திரைப்படத்திற்குப் பிறகு, ஹரிஷ் சங்கர் மற்றும் பவன் கல்யாண் கூட்டணியில் உருவாகியுள்ள அடுத்த படம் 'உஸ்தாத் பகத் சிங்'. இந்தப் படம் வியாழக்கிழமையன்று வெளியானது.

'கப்பர் சிங்' படத்தின் மேஜிக் மீண்டும் நிகழ்ந்துள்ளதா? பவன் கல்யாணுக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளதா ?

கதைக்குள் செல்வோம்... ஒரு பழங்குடியின பகுதியில் சந்திரசேகர் மூர்த்தி (கே.எஸ். ரவிக்குமார்) என்ற சிறந்த ஆசிரியர் ஒருவர் இருக்கிறார்.

அவரது சேவை மனப்பான்மையையும் அர்ப்பணிப்பையும் கண்டு, அவர் அரசியலுக்கு அழைக்கப்படுகிறார்.

அந்த ஆசிரியர் பகத் சிங்கை (பவன் கல்யாண்) குழந்தையாக இருக்கும்போதே தத்தெடுக்கிறார்.

பின்னர், அந்த ஆசிரியர் மாநிலத்தின் முதலமைச்சராகிறார். படத்தின் தொடக்கக் காட்சியில், ஒரு திருமணத்திற்காக அவர் வரும்போது அவரை கொல்ல முயற்சி ஒன்று நடக்கிறது.

ஃபிளாஷ்பேக் கதையில், நல்ல நாகப்பா (பார்த்திபன்) ஒரு ஊழல்வாதி. அவர் இடைக்கால முதல்வராக இருந்தார்.

ஒரு நாள், அவரது இளைய மகன் காட்டிற்குச் செல்கிறான். அவனும் அவனது நண்பர்களும் காவல் நிலையத்தைத் தாக்கும்போது, நாயகன் பகத் வந்து காவல்துறையைக் காப்பாற்றி, நாகப்பாவின் மகனைப் பிணைக் கைதியாகப் பிடிக்கிறார்.

இதனால், தனது மகனை விடுவிக்க நாகப்பா ஆட்களை அனுப்புகிறார்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது? பகத் உண்மையில் ஏன் காட்டில் இருந்தார்? பகத்தின் பின்னணி என்ன? இது தான் படத்தின் மீதிக் கதை.

' பவன் கல்யாண்

பட மூலாதாரம், Facebook/Mythri Movie Makers

பவனின் 'ஒன் மேன் ஷோ'

'உஸ்தாத் பகத் சிங்' திரைப்படத்தை பவன் கல்யாண் தனியே சுமந்திருக்கிறார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, அவர் நகைச்சுவையையும் ஆக்‌ஷனையும் ஒன்றாகக் கலந்து ஒரு திரைப்படம் கொடுத்துள்ளார்.

இரண்டாம் பாதியில் போலீஸ் உடையில் இருக்கும் பவன் கல்யாண், நமக்கு 'கப்பர் சிங்' படத்தை நினைவுபடுத்துகிறார். மற்ற கதைகளைப் போலவே, இதுவும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போராட்டமாகவே அமைகிறது.

அதிகாரத்திற்காகப் பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் ஒரு வில்லன், தான் கடவுளாகக் கருதும் வளர்ப்புத் தந்தையிடம் மிகுந்த பற்றுக் கொண்டு அவருக்காக எதையும் செய்யும் ஒரு நாயகன் என மற்ற எல்லா வணிகத் திரைப்படத்தைப் போலவே இதுவும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மோதல்தான்.

இருப்பினும், இயக்குநர் ஹரிஷ் சங்கர் கதையை ஒரு புதிய கோணத்தில் எழுதவோ அல்லது இயக்கவோ தவறியதால், அனைத்துக் காட்சிகளும் ஏற்கனவே எங்கோ பார்த்தது போன்ற உணர்வைத் தருகின்றன.

இந்தக் கதையின் ஆணிவேர் நாயகன்தான். ஒட்டுமொத்தப் படமும் பவன் கல்யாணின் தோள்களிலேயே பயணிக்கிறது.

அவரது சில வசனங்களும் காட்சிகளும் ரசிகர்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவத்தைத் தரும்.

அதிகாரத்திற்காகப் பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் ஒரு வில்லன், தான் கடவுளாகக் கருதும் வளர்ப்புத் தந்தையிடம் மிகுந்த பற்றுக் கொண்டு அவருக்காக எதையும் செய்யும் ஒரு நாயகன் என, மற்ற எல்லா வணிகத் திரைப்படத்தைப் போலவே இதுவும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மோதல் தான்.

பட மூலாதாரம், Facebook/Mythri Movie Makers

மற்றவர்களின் நடிப்பு எப்படி இருந்தது?

திரைப்படத்தின் முதல் பாதியும் இரண்டாம் பாதியும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பாதைகளில் பயணிக்கின்றன.

முதல் பாதி காட்டில் பவன் மற்றும் ராஷி கண்ணாவுக்கு இடையே நடக்கிறது. இரண்டாம் பாதி பவன் மற்றும் ஸ்ரீலீலாவுக்கு இடையில் நடக்கிறது.

பயங்கரவாதிகள் மற்றும் தேர்த்திருவிழா சண்டைக் காட்சிகள் கதையோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் திணிக்கப்பட்டது போல் தோன்றுகின்றன.

ராஷி கண்ணா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோருக்கு நடிப்பதற்கு பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லை.

கே.எஸ். ரவிக்குமார் முதலமைச்சராகவும், கௌதமி நாயகனின் தாயாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அவர்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை.

ராவ் ரமேஷும் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பவன் கல்யாண்

ஜிகாதி பயங்கரவாதிகள் மற்றும் தேர்த்திருவிழா சண்டைக் காட்சிகள் கதையோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் திணிக்கப்பட்டது போல் தோன்றுகின்றன.

பட மூலாதாரம், Facebook/Mythri Movie Makers

கதை மற்றும் பின்னணி இசையில் எந்தப் புதுமையும் இல்லை. ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இரண்டு பாடல்கள் சுமாராக உள்ளன.

பவன் கல்யாணின் நடிப்பைப் பற்றித் தனியாகக் குறிப்பிட வேண்டும். 'கப்பர் சிங்' படத்தில் இருந்த அந்த இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவை உணர்வு மீண்டும் இதில் தெரிகிறது. அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். ஸ்ரீலீலாவுடனான அவரது கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது.

இந்தப் படம் எடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இதுவும் கதை பழையதாகத் தெரிவதற்குக் காரணமாக இருக்கலாம்.

கதை மற்றும் பின்னணி இசையில் எந்தப் புதுமையும் இல்லை. ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இரண்டு பாடல்கள் சுமாராக உள்ளன.

பட மூலாதாரம், Facebook/Mythri Movie Makers

இது ரீமேக் படம் அல்ல

அனைவரும் நினைப்பது போல இது தெறி படத்தின் ரீமேக் அல்ல.

அந்த கதைக்கும் இந்தக் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நாயகன் ஒரு போலீஸ் அதிகாரி என்பது மட்டுமே இதில் உள்ள ஒரே ஒற்றுமை.

நீண்ட காலத்திற்குப் பிறகு, எல்.பி. ஸ்ரீராம் ஒரு உருக்கமான காட்சியில் தோன்றியுள்ளார்.

முதல் 45 நிமிடங்கள் நகைச்சுவை தடத்தில் கதை மெதுவாக நகர்கிறது.

படத்தில் பவன் கல்யாணின் நடன அசைவுகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் உள்ளது.

படத்தின் பிளஸ்

1. பவன் கல்யாண் திரையில் தோன்றும் காட்சிகள்

2. வசனங்கள்

3. பவன் கல்யாண் நடனம்

படத்தின் மைனஸ்

1. வழக்கமான கதை மற்றும் திரைக்கதை

2. முதல் பாதி

3.வில்லன் கதாபாத்திரம் போதுமான வலிமையுடன் இல்லை

சுருக்கமாகக் கூறவேண்டுமானால் பகத் சிங் திரைப்படத்தை பவன் கல்யாணின் ரசிகர்கள் கண்டிப்பாக விரும்புவார்கள்.

(இவை விமர்சகரின் தனிப்பட்ட கருத்துக்கள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு