You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'98 சிசிடிவி, 2574 செல்போன் எண்கள்' - தூத்துக்குடி மாணவி கொலையில் கைது நடந்தது எப்படி?
(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)
தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள் உள்பட அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெற்றோர், கடந்த 10-ஆம் தேதியன்று, 'பிளஸ் 2 படிக்கும் தங்கள் மகளைக் காணவில்லை' எனக் கூறி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகச் சென்ற அவர் திரும்பி வரவில்லை என காவலர்களிடம் தெரிவித்தனர்.
ஆனால், புகாரைப் பதிவு செய்யாமல் காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஊரில் உள்ள மக்களையெல்லாம் திரட்டிக் கொண்டு தனது மகளைத் தேடியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்பிறகும் மாணவியை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
மறுநாள் (மார்ச் 11) அதே காட்டுப் பகுதியில் மாணவியை அவரது குடும்ப உறவினர் ஒருவர் சடலமாக கண்டுள்ளார். இதன்பிறகே சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்ததாக கிராம மக்கள் குற்றம் சுமத்தினர்.
வழக்கில் தொடர்புடைய நபரைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டதால் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பத்து தனிப்படை
இந்த நிலையில், மாணவி கொலை வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் கண்டறிந்தது குறித்து, தூத்துக்குடி எஸ்.பி மதன் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.
"வழக்கில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில், நான்கு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆறு காவல் ஆய்வாளர்கள் உள்பட 150 பேர் இடம்பெற்றிருந்தனர்," எனக் கூறினார்.
"அறிவியல்பூர்வமாக புலன் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்து தனித்தனியாக அறிக்கை கொடுத்தனர்." எனக் கூறினார் மதன்.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறிய மதன், "சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லையென்றாலும் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்." என்கிறார்.
"அந்தவகையில், 98 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். சம்பவம் நடந்த நாளில் பதிவான 2574 செல்போன் எண்களை ஆராய்ந்தோம். சிறையில் இருந்து வெளியே வந்த நபர்கள் உள்பட குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் பட்டியலைச் சேகரித்து விசாரிப்பதற்கு குழுக்களை அமைத்தோம்." எனவும் மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.
'உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும்'
தொடர்ந்து பேசும்போது, "வழக்கின் விசாரணையில் குற்றப் பின்னணி கொண்ட 461 பேரை நேரடியாக விசாரித்தோம். அவர்கள் கூறும் தகவல்களை டிஜிட்டல் ஆதாரம் மூலமாக ஆய்வு செய்தோம். இவ்வளவு நாட்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ஒருவரைக் கைது செய்தோம்." எனக் கூறினார் மதன்.
"சூழ்நிலை சாட்சிகள், செல்போன் அழைப்புகள், சிசிடிவி கேமரா காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நபரை நெருங்கினோம். எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து கைது செய்துள்ளோம்," என்கிறார் அவர்.
கைதான நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறிய எஸ்.பி, "விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவருக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும். குற்றத்தில் கூடுதல் நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," எனத் தெரிவித்தார்.
"மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து அனுப்பியுள்ளோம். வழக்கு விசாரணையில் உள்ளதால் இதற்கு மேல் கூறுவது சரியாக இருக்காது." எனக் குறிப்பிட்டார்.
"ஒருவரைக் கைது செய்வதற்கு ஒன்பது நாட்கள் தேவைப்பட்டது ஏன்?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
"கிராமத்தில் உள்ளவர்கள் கூறுவது உண்மையா.. கிராமத்துக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுவது உண்மையா என தனித்தனியாக ஆய்வு செய்தோம்." என்றார்.
வரும் நாட்களில் கிராமங்களில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உள்ளதாகவும் காவல்துறை ரோந்து பாதுகாப்பை தீவிரப்படுத்த உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தெரிவித்தார்.
மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடலைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு