இரான் போர் நீடித்தால் அதை முடிவுக்குக் கொண்டுவருவது ஏன் மேலும் கடினமாகும்?

பட மூலாதாரம், Reuters/Getty Images
- எழுதியவர், அமீர் அசிமி
- பதவி, பிபிசி பாரசீக சேவை
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கடந்த சில வாரங்களாக, இரானின் ராணுவத் திறன் கடுமையாகப் பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறி வருகின்றன.
தொடர்ச்சியான தாக்குதல்கள் இரானின் கட்டளை அமைப்பை முடக்கியுள்ளன என்றும், அதன் பதிலடி கொடுக்கும் திறனைக் குறைத்துள்ளன என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.
அவர்களது கணக்குப்படி, மோதல் ஏற்கனவே முடிவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டுத் தளமான டியாகோ கார்சியாவை நோக்கி இரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியது சனிக்கிழமை தெரியவந்தது. இது இரானிலிருந்து சுமார் 3,800 கி.மீ (2,300 மைல்கள்) தூரத்தில் உள்ளது.
ஏவுகணைகள் அந்தத் தீவை அடையவில்லை என்றாலும், இந்தச் சம்பவம் இரானின் திறன்கள் குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. இதுவரை, அதன் ஏவுகணைகளின் திறன் சுமார் 2,000 கி.மீ என்றுதான் பரவலாக நம்பப்பட்டது.
இது ஏற்கனவே வெளிப்படுத்தப்படாத ஒரு திறனா அல்லது தாக்குதல்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டதா என்பது முக்கியமல்ல; ராணுவ அழுத்தம் இரானின் முன்னேற்றத்தைத் தடுக்கவில்லை என்பதுதான் இதன் நேரடிப் பொருள்.
இரானின் அதிகார மையத்தில் நிலவும் மர்மம்
அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, மூத்த தலைவர்களான அலி லாரிஜானி, இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) தளபதிகள் மற்றும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட பல தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தால் மற்றும் முக்கிய ஏவுகணை உற்பத்தித் தளங்கள் அழிக்கப்பட்டிருந்தால், இந்தத் தாக்குதல்களை யார் இயக்குகிறார்கள், இவ்வளவு அழுத்தத்திற்கு மத்தியிலும் இரான் தனது திறன்களை எவ்வாறு தக்கவைத்துக் கொள்கிறது?
நிச்சயமற்ற தன்மை மிக உயர்மட்டத்திலிருந்தே தொடங்குகிறது. தனது தந்தை மற்றும் பல நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட தாக்குதலில் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் மொஜ்தபா காமனெயி, புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை. இரண்டு அறிக்கைகளைத் தவிர, அவரைப் பற்றி எதுவும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை.
அவரது உடல்நிலை மற்றும் தலைமை தாங்கும் திறன் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்பில் நிலவும் இந்த மௌனம், அந்த அதிகாரத்தின் மையத்திலேயே நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது.
இருப்பினும், இரானின் நடவடிக்கைகள் வீழ்ச்சிக்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.

பட மூலாதாரம், Reuters
சனிக்கிழமை அன்று, இஸ்ரேலின் (அறிவிக்கப்படாத) அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய நெகேவ் பாலைவனத்தில் உள்ள டிமோனா நகரை இரான் தாக்கியது.
இரானின் அணுமின் நிலையத்தைக் கொண்டுள்ள புஷெர் அருகிலுள்ள இரானிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.
இதன் செய்தி எளிமையானது: தாக்குதலுக்கு நிகராகத் தாக்குதல் நடத்தப்படும், இனி முக்கிய தளங்கள் எதற்கும் விலக்கு கிடையாது.
இந்த நடவடிக்கைகள் குழப்பத்தை விட ஒருங்கிணைப்பையே காட்டுகின்றன. இரானின் உயர்மட்டத் தலைவர்களை அகற்றுவது முடக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உத்தியின் பின்னால் உள்ள அனுமானம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
'அதிர்ச்சி மற்றும் அச்சத்தை' ஏற்படுத்துதல் என்ற கருத்து, முடிவெடுக்கும் கட்டமைப்புகள் விரைவாக வீழ்ச்சியடைவதைச் சார்ந்தது. ஆனால் அந்தக் கட்டமைப்புகள் எதிர்பார்த்ததை விட வலிமையுடையதாக இருந்தால் என்ன செய்வது?
அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மிக முக்கியமான பிரச்னை உருவாகிறது: பேச்சுவார்த்தை நடத்த இப்போது யார் மிஞ்சியிருக்கிறார்கள்?
இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் மிக அதிகமாக பொதுவெளியில் அறியப்படுவதில்லை. மோதலின் தொடக்கத்தில், இரானியத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் அவர் மன்னிப்பு கோரினார். இந்த நடவடிக்கை இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்குள் இருந்த சில பிரிவினரை ஆத்திரப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மொஜ்தபா காமனெயியின் எழுச்சிக்கு பிறகு அவர் மிகக் குறைவாகவே பேசியுள்ளார், இது ராஜீய வாய்ப்புகளை மேலும் குறைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
இரானின் பார்வையில், சமீபத்திய நிகழ்வுகள் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நம்புவதற்குப் போதுமான காரணத்தை அளிக்கவில்லை.
டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில், அணுசக்தி ஒப்பந்தத்தை நோக்கிய இரண்டு தனித்தனி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிப்ரவரி 27 அன்று ஜெனீவாவில் நடந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்காவின் பெரும்பாலான கவலைகளுக்குத் தீர்வு கண்டதாக இரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
வியன்னாவில் விவாதங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் பேச்சுவார்த்தைகள் நடக்கும் விதம் தனக்கு 'மகிழ்ச்சி அளிக்கவில்லை' என்று டிரம்ப் கூறியதோடு, மறுநாளே தாக்குதல்கள் தொடங்கின.
இரானிய தலைவர்களுக்குச் சொல்லப்படும் செய்தி தெளிவானது: பேச்சுவார்த்தை தாக்குதல்களைத் தடுக்காது, மாறாக அவை தாக்குதல்களை வரவழைக்கவும் கூடும்.
ஆனால் மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது என்பது இரான் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றல்ல, டிரம்பும் சனிக்கிழமை இரவு அதைச் செய்தார்.
உலகின் பரபரப்பான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணையை இரான் மீண்டும் திறக்க வேண்டும் என்று 48 மணிநேர இறுதி எச்சரிக்கையை அவர் விடுத்தார், தவறினால் இரானின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா 'அழித்துவிடும்' என்று எச்சரித்தார்.
இரான் இந்த கோரிக்கையை நிராகரித்ததுடன் இதேபோன்ற ஒரு அச்சுறுத்தலுடன் பதிலளித்தது. அதன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலும் ''பிராந்தியம் முழுவதுமான தாக்குதல்களால் எதிர்கொள்ளப்படும்.'' என கூறியது
பாரசீக வளைகுடாவின் சில பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் இரானின் உச்ச பாதுகாப்பு கவுன்சில் எழுப்பியது.

டிரம்ப் மிகக் குறைந்த விருப்பங்களே உள்ள ஒரு திசையை நோக்கி விரைவாக நகர்கிறார்.
தரையில் படைகள் இல்லாத நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழியாக மட்டுமே தாக்க முடியும், இது சேதத்தை ஏற்படுத்தும், ஆனால் 'முழுமையான சரணடைதல்' என்ற இலக்கை அடையும் வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். அதே நேரத்தில், இத்தகைய தாக்குதல்கள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்காமலேயே பரந்த அளவிலான பதிலடிக்கு வழிவகுக்கும்.
இந்த மோதல்கள் இரு தரப்பையும் போரின் மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கி நேரடிப் பாதையில் இட்டுச் செல்வது போல் தோன்றியது.
இருப்பினும், கெடு முடிவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, டிரம்ப் பின்வாங்கினார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் இட்ட பதிவில், இரானுடன் 'மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல்கள்' நடந்ததாகக் கூறிய அவர், இரானிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு ஐந்து நாள் இடைநிறுத்தத்தை அறிவித்தார்.
இந்த சமயம் மிகவும் முக்கியமானது. டிரம்பின் இறுதி எச்சரிக்கைக்கு பிறகு வந்துள்ள இந்த நடவடிக்கை, தற்போதைக்கு முடிவுக்கான ஒரு வழியை உருவாக்கியுள்ளது.
வர்த்தக சந்தைகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டன. ஓரளவு நிம்மதியைப் பிரதிபலிக்கும் வகையில் எண்ணெய் விலைகள் சரிந்தன, ஆனால் அந்த எதிர்வினை நிதானமாகவே இருந்தது.
இந்த அறிவிப்பு நடைமுறையில் இன்னும் சோதிக்கப்பட வேண்டும், மேலும் இந்த இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதோ அல்லது இது பேச்சுவார்த்தைகளை நோக்கிய உண்மையான நகர்வை இது பிரதிபலிக்கிறதா என்பதோ தெளிவாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
முக்கிய கேள்வி என்ன?
குறிப்பாக, ஒரு கேள்வி நீடிக்கிறது: இரானில் உண்மையில் யார் பேசுகிறார்கள், மற்றும் 'தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தலாம்' என்ற நிலைப்பாட்டில் செயல்படுவது போல் தோன்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் மீதான அதிகாரம் யாரிடம் உள்ளது?
இந்த நிலைமை நீடித்தால் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்தால், இரு தரப்பினரும் மீண்டும் தங்கள் அச்சுறுத்தல்களை முன்வைக்கக்கூடும், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கலாம்.
இரானில் உள்ள 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உட்பட பிராந்தியம் முழுவதும் சுமார் 170 மில்லியன் மக்கள் மின்சாரம் மற்றும் இதர அத்தியாவசிய சேவைகளில் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அதிபர் டிரம்ப்பின் விருப்பங்கள் குறுகி வருகின்றன. பதற்றம் மேலும் அதிகரிப்பது உத்திரீதியான ஆதாயமின்றி அழிவின் சுழற்சியாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் மிகவும் தீவிரமான தேர்வுகள் மட்டுமே பரிசீலனையில் எஞ்சி இருக்கும்.
இரானைப் பொறுத்தவரை, நிலைமை கடினமாக உள்ளது. ஏற்கனவே பொருளாதார அழுத்தம் மற்றும் பரவலான அமைதியின்மையை எதிர்கொண்ட நிலையில் அந்த நாடு இந்த மோதலுக்குள் நுழைந்தது.
இப்போதைக்கு இந்தப் போர் அந்த அழுத்தத்தைக் குறைத்து, உள்நாட்டுத் தணிக்கையைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு இடமளித்துள்ளது.
இது ஒரு கடினமான சமநிலையை உருவாக்குகிறது. இரானைப் பொறுத்தவரை, பதற்றத்தை அதிகரிப்பது என்பது வெளி அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிப்பதற்கும் உள்நாட்டு அமைதியின்மையைக் கையாளுவதற்கும் ஒரு வழியாக அமைகிறது.
ஆனால் அது, பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய தவறுகள் நிகழும் அபாயங்களையும் அதிகரிக்கிறது.
தற்போது இரு தரப்பினருக்கும் உள்ள தெரிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பலவீனமாகத் தோன்றாமல் இரானால் எளிதில் பின்வாங்க முடியாது, அதே நேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் மட்டுமே ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முடியாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































