அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, மார்ச் 12 அன்று முஹர்ரக்கில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. அதே நாளில் பஹ்ரைன், சௌதி அரேபியா மற்றும் ஓமனில் உள்ள எரிபொருள் நிலையங்களும் தாக்கப்பட்டன.
    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் ஒரு விரிவான பிராந்திய மோதலாக உருவெடுத்துள்ளது.

இரானிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் வளைகுடாவின் உட்பகுதி வரை சென்றடைகின்றன. அவை அமெரிக்கத் தளங்களைத் தாண்டிப் பல வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், எரிசக்தி தளங்கள், துறைமுகங்கள் மற்றும் பொதுமக்களின் இடங்களைக் குறிவைக்கின்றன.

இரானிய தாக்குதல்களை அரபு மற்றும் மேற்கத்திய தலைவர்கள் பரவலாகக் கண்டித்துள்ளனர். அதேநேரத்தில், பிராந்தியத்தின் முக்கிய நாடுகள் அதிகரித்து வரும் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியுறவு அமைச்சர்களும் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினர்.

அடுத்தகட்டத் தாக்குதல்கள் 'கூட்டுத் தற்காப்பு நடவடிக்கைகளை' தூண்டக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பிராந்தியத்தை ஒரு விரிவான போருக்குள் தள்ளுவதைத் தடுக்க பதற்றத்தைக் குறைக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பஹ்ரைனைச் சேர்ந்த டெராசாட் மையம், வளைகுடா நாடுகள் இரான் நாட்டுக்கு எதிராக எந்தவொரு விரோத நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும் இரானிய தாக்குதல்களில் குடிமக்களுக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதால் அவை மோதலில் சிக்கியுள்ளன என்றும் வலியுறுத்தியது.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் 51-வது விதியின் கீழ் கடுமையான சர்வதேசப் பொறுப்புக்கூறல் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பிராந்திய நெருக்கடி அதிகரித்து வருவதால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதனுடன் எதிர்கால உத்தி ரீதியான கூட்டணிகளின் தன்மையைக் கண்டறியவும், தங்கள் பாதுகாப்பு உத்திகளை மறுஆய்வு செய்யவும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் உறவு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2025 நவம்பரில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார் (நவம்பர் 18, 2025 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்)

அரபு பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் அமெரிக்கா குறித்த ஜிசிசி நாடுகளின் அணுகுமுறையை வெவ்வேறு விதமாகச் சித்தரித்துள்ளன.

சில ஊடகங்கள் ராய்ட்டர்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி, வளைகுடா நாடுகள் அமெரிக்காவிடம் 'ஹோர்மூஸ் நெருக்கடி தீவிரமடைவதால் இரான் நாட்டை முழுமையாக முடக்க' அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தன.

மறுபுறம், மற்ற ஊடகங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை விமர்சித்தன. மேலும் 'வளைகுடா நாடுகள் குறிவைக்கப்படும் அபாயத்தை அமெரிக்கா புறக்கணிப்பதாக' குற்றம் சாட்டின.

இதற்கிடையில், இந்தப் போர் அமெரிக்கப் பாதுகாப்பு குறித்த வளைகுடா நாடுகளின் பார்வையை அடிப்படை ரீதியாக மாற்றியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் மற்றும் அவர்களின் மூலோபாயக் கூட்டணியின் எதிர்காலத்தில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும்.

மார்ச் 16 அன்று 'ஏஹாத்தா' என்ற அரபு பாட்காஸ்ட், தற்போதைய மோதலில் இருந்து வளைகுடா நாடுகள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் குறித்து விவாதித்தது.

அந்தப் பாட்காஸ்ட்டில் நிபுணர்கள் கூறுகையில், வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக் கோட்பாடு 'பலவீனமடைந்துள்ளது' என்றும், பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பு 'பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தொடர்ச்சியான சுமையாக மாறி வருகிறது' என்றும் கூறினர். ஏனெனில், இரான் இப்போது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகளை தாக்குதலுக்கான இலக்குகளாகக் கருதுகிறது.

பதிலடி நடவடிக்கையாக அமெரிக்காவுடன் தொடர்புடைய பொருளாதார நலன்களைக் குறிவைப்பதாக இரான் எச்சரித்திருந்தாலும், டிரம்ப் நிர்வாகம் பதற்றத்தைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இது 'அமெரிக்கா தங்கள் பாதுகாப்பு கவலைகளைக் கண்டுகொள்ளவில்லை என்ற வளைகுடா நாடுகளின் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது'.

இதனால் வளைகுடா நாடுகளில் 'ஏமாற்றம் அல்லது துரோகம்' போன்ற ஆழமான உணர்வு ஏற்பட்டுள்ளதாக ஒரு நிபுணர் கூறினார்.

"அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது மற்றும் வளைகுடா நாடுகளை இரானிய பழிவாங்கலின் அபாயத்தில் தள்ளுகிறது என்ற எண்ணம் நிலவுகிறது. இருப்பினும், இந்த அதிருப்தி இருந்தபோதிலும், வளைகுடா அரசுகள் அமெரிக்கப் பாதுகாப்பு கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்துள்ளன. ஆனால் இப்போது இதற்கான 'அரசியல் விலை அதிகமாக' இருக்கும்," என்று அவர் கூறினார்.

ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்சமயம் வளைகுடா நாடுகள் சீனா மற்றும் ரஷ்யாவை முழுமையாகச் சார்ந்திருக்க வாய்ப்பில்லை (சித்தரிப்புப் படம்).

அமெரிக்காவுடனான கூட்டணியில் வளைகுடா நாடுகளின் 'ஏமாற்றம்' குறித்துச் சில நிபுணர்கள் கூறினாலும், தற்போது ரஷ்யா அல்லது சீனாவுடன் புதிய கூட்டணிகளை உருவாக்குவது குறித்து அவர்களின் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை.

ஏஹாத்தா பாட்காஸ்ட்டில் பேசிய நிபுணர்கள், அமெரிக்காவுக்குப் பதிலாக முழுமையாகச் சீனா அல்லது ரஷ்யாவுடன் கூட்டணி வைப்பது 'நடைமுறைக்குச் சாத்தியமற்றது' என்று கூறினர்.

இருப்பினும், வளைகுடா நாடுகள் புதிய கூட்டணிகளைத் தேடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அமெரிக்காவுடனான அவர்களின் உறவுகள் இனி 'தனித்துவமானவை அல்லது உத்திரீதியானவை என்று இருக்காது.

வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான கூட்டணியைத் தக்கவைத்துக்கொண்டு, பிராந்திய ராஜீய ரீதியிலான தன்னாட்சியை விரிவுபடுத்த முயலலாம். அதேநேரத்தில் மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான பன்முக உத்தியை அவர்கள் கடைப்பிடிக்கலாம்.

உதாரணமாக அமெரிக்கா-இரான் பேச்சுவார்த்தையில் கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளன. இது பிராந்தியத்தில் தங்கள் ராஜீய செல்வாக்கை வலுப்படுத்தும் அவர்களின் விருப்பத்தைக் காட்டுகிறது.

கத்தாரின் அல் ஜசீரா முபாஷெர் தொலைக்காட்சியும் போருக்குப் பிந்தைய வளைகுடா நாடுகளின் யதார்த்தங்கள் குறித்து விவாதித்தது. அதில் ஒரு நிபுணர் கூறுகையில், வளைகுடா நாடுகள் "அமெரிக்காவுடனான கூட்டணியை முழுமையாகக் கைவிடத் தயாராக இல்லை" என்றார்.

ஆனால் அதற்குப் பதிலாக இந்த அனுபவம், போருக்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் வெளிநாட்டுக் கூட்டணிகள் (அமெரிக்காவாக இருந்தாலும் சரி, பிற நாடுகளாக இருந்தாலும் சரி) வளைகுடா நாடுகளின் தன்னிறைவுக்கு மாற்றாக அமைய முடியாது என்ற புரிதலை வளர்க்கும் ஒரு படியாக அமைந்துள்ளது.

"அமெரிக்க தளங்கள் தங்கள் சிறிய மற்றும் பாதுகாப்பற்ற நாடுகளைப் பாதுகாக்கும் என்று வளைகுடா நாடுகள் நம்பி, அமெரிக்கத் தளங்களுக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தன. ஆனால் அனைத்து வளைகுடா நாடுகளின் தலைநகரங்களும் விதிவிலக்கின்றி குறிவைக்கப்பட்ட போது, இந்தத் தளங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் போர் நிரூபித்துள்ளது," என்று நிபுணர்கள் கூறினர்.

அவர்கள் மேலும் கூறுகையில், "இது அமெரிக்கப் பாதுகாப்பை மட்டுமல்லாமல், ஆறு ஜிசிசி நாடுகளை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற வல்லரசுகளுடன் இணைக்கும் பரந்த ஒப்பந்த நெட்வொர்க்கையும் விரிவான மறுமதிப்பீட்டுக்கு உள்ளாக்கியுள்ளது. பிராந்தியம் தாக்கப்பட்ட நேரத்தில் இத்தகைய ஏற்பாடுகள் பலனளிக்கவில்லை," என்றனர்.

வளைகுடா நாடுகளின் முன்னுரிமைகள்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போர்கள் இப்போது போர் விமானங்களைத் தாண்டி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வரை விரிவடைந்துள்ளன (சித்தரிப்புப் படம்)

வளைகுடா நாடுகளுக்குக் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தற்போது முதன்மையான முன்னுரிமையாக மாறியுள்ளது குறித்துப் பல செய்திக் கட்டுரைகள் விவாதித்துள்ளன.

எழுத்தாளர் அப்துல்லா அகமது அலி, பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வளைகுடா சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்தார்.

எமிரேட்ஸ் செய்தித்தாளான அல்-கலீஜில் வெளியான கட்டுரையில், "தற்போதைய நெருக்கடி, நவீனப் போரை இனி படைகள் அல்லது விமானங்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மாறாக, ஒரு நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற சிக்கலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும் திறனே முக்கியமானது," என்று அவர் எழுதியுள்ளார்.

வளைகுடா நாடுகள் "தற்காலிக வளைகுடா ஒருங்கிணைப்பில் இருந்து உண்மையான மற்றும் நிரந்தர ஒருங்கிணைப்பை நோக்கி நகர முடியுமா" என்ற கேள்வியை எழுத்தாளர் எழுப்பியுள்ளார்.

இதையே வலியுறுத்தி எழுத்தாளர் ஜாசிம் அல்-மாலிகி, வளைகுடா நாடுகளின் ராணுவ சக்திகளை ஒன்றிணைக்க வேண்டுகோள் விடுத்தார்.

கத்தாரின் அல்-ஷார்க் (Al-Sharq) செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், கூட்டு வளைகுடா ராணுவப் படையை நிறுவுவது என்பது ஒவ்வொரு நாட்டின் தேசிய ராணுவங்களையும் கொண்டு ஒரு ஒருங்கிணைந்த ராணுவத்தை உருவாக்குவது அல்ல, மாறாக ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

"நவீன பாதுகாப்பு சவால்கள் இனி முந்தைய காலங்களைப் போலப் பாரம்பரியமானவை அல்ல. இவற்றில் இப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்கள் அடங்கும். இவை ஒரு நாட்டின் திறன்களைத் தாண்டி கூட்டான எதிர்வினை தேவைப்படும் சவால்கள்," என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.

வளைகுடா நாடுகள் இரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு மே மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஆசியான்-ஜிசிசி கூட்டத்தின் போது குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா.

மோதல் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகள் தாங்கள் தொடங்காத ஒரு போருக்குள் இழுக்கப்படும் பயத்திற்கும், தங்கள் தற்காப்பு உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்திற்கும் இடையில் சிக்கியுள்ளன.

வளைகுடா நாடுகளின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று 'இரான் உடனான நேரடிப் போருக்குள் இழுக்கப்படுவதைத் தவிர்ப்பது' என்பதாகும்.

கடந்த சில வாரங்களாக, பல நிபுணர்கள் மற்றும் வளைகுடா அதிகாரிகள், வளைகுடா நாடுகள் "போரின் ஒரு பகுதி அல்ல" என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், இரான் எரிசக்தித் தளங்களையும் தனது இலக்குகளில் சேர்த்தவுடன், இரானிய தாக்குதல்களுக்கு ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கும் உரிமையை வளைகுடா நாடுகள் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

மார்ச் 19 அன்று செளதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான், தனது நாடு மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்வதற்கு ஒரு எல்லை உண்டு என்று இரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளிடம் 'மிக முக்கியமான திறன்களும் ஆற்றலும்' உள்ளன என்றும், அவற்றை அவர்கள் 'விருப்பப்படி' பயன்படுத்தலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இரானுக்கு எதிரான தாக்குதலில் வளைகுடா நாடுகளின் சாத்தியமான பங்களிப்புக்கான பல காரணங்களை அல் ஜசீரா பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சர்வதேசச் சட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளின் தற்காப்பு உரிமை, அமெரிக்காவுடன் வலுவான பாதுகாப்பு கூட்டணியின் சாத்தியக்கூறு மற்றும் வளைகுடா நலன்களுக்கு ஏற்ப ஒரு புதிய இரானிய அரசு அமைவதற்கு உதவும் திறன் ஆகியவை அடங்கும்.

இருப்பினும், வளைகுடா நாடுகள் இரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரான பிற வாதங்களும் இருப்பதாக அந்தச் சேனல் கூறியுள்ளது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, வளைகுடா நாடுகள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தாக்குதலில் ஈடுபடுவது, குறிப்பாக இஸ்ரேலுடன் நிற்பது, வளைகுடா நாடுகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற கவலை இதில் அடங்கும். இது அவர்கள் 'இஸ்ரேலின் நலன்களுடன் நிற்கிறார்கள்' என்ற வாதத்தை வலுப்படுத்தும்.

போரில் ஈடுபடுவது பிராந்தியத்தின் பொருளாதார முன்னுரிமைகளுக்கு எந்தப் பலனையும் தராது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

வளைகுடா நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டால், அமெரிக்கா-இஸ்ரேல் ஆகியவை இரானுடனான மோதலில் இருந்து பின்வாங்கக்கூடும் என்றும், இதன் மூலம் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக் கொள்வார்கள், பின்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் 'வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு' வந்த 'ரட்சகர்களாக' மாறிப் போரை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுப்பார்கள், அதற்குப் பதிலாகப் பெரிய சலுகைகளைக் கோருவார்கள் என வளைகுடா அதிகாரிகள் அஞ்சுவதையும் அந்தச் சேனல் சுட்டிக்காட்டியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு