'சம்சாரம் அது மின்சாரம் முதல் மணல்கயிறு வரை' - விசுவின் மறக்க முடியாத 10 படங்கள்

'சம்சாரம் அது மின்சாரம்' - விசுவின் மறக்க முடியாத 10 படங்கள்

பட மூலாதாரம், AP International

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நாடகக்காரர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என பல துறைகளில் தடம் பதித்தவர் விசு.

தமிழ் சினிமாவில் குடும்பம் உறவுகள், சிக்கல்கள் சார்ந்த தனி பாணியிலான கதைகளை, படங்களை உருவாக்கி வெற்றி கண்டவர். சின்ன திரையிலும் விசு சாதனை படைத்தார்.

விசு, தனது 74வது வயதில் 2020 மார்ச் 22-ஆம் தேதி காலமானார்.

பிரபல 10 படங்கள்

விசு இயக்கிய படங்களின் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்படுகிற படங்கள் இவை.

சம்சாரம் அது மின்சாரம்

ஏவிஎம் நிறுவனத்துக்காக படம் பண்ண முடிவெடுத்த விசு பல கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்களோ உங்கள் பாணியில் குடும்ப கதை வேணும் என கேட்க இந்த கதையை சொல்லியுள்ளார்.

இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. வீட்டுப்பணிப்பெண்ணாக மனோரமா கலக்கினார். அவரின் நடிப்பு, வசனங்கள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. படம் வெள்ளி விழா கண்டது.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்த ரகுவரன், லட்சுமி, கமலாகாமேஷ், காஜா ஷெரிப் , மாதுரி, இளவரசி, திலீப் நடிப்பும் மக்களிடம் போய் சேர்ந்தது.

குறிப்பாக இதில் வந்த வசனங்கள் மக்களின் மனப்பாடம் ஆகின. தங்கள் வீடுகளிலும் மக்கள் அதை பேசி மகிழ்ந்தனர்.

 ஏவிஎம் நிறுவனத்துக்காக படம் பண்ண முடிவெடுத்த விசு பல கதைகள்

பட மூலாதாரம், AP International

திருமதி ஒரு வெகுமதி

இந்த படம் உருவானதும் வித்தியாசமானது. இந்த படத்தின் கதையும் விசுவின் நாடகம்தான். ஆனால், முன்பே துரை இயக்க, ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த் நடிக்க, சதுரங்கம் என்ற பெயரில் வெளியாகி தோல்வி அடைந்தது.

அதை நன்கு உணர்ந்தும் தனது இயக்கத்தில் கதைக்கு உயிர் கொடுத்தார் விசு. சில கேரக்டர்களின் தன்மையை மாற்றினார்.

எஸ்.வி.சேகர், கல்பனா, பாண்டியனை நடிக்க வைத்தார். படம் ஹிட். அதெப்படி தோற்ற கதை ஜெயித்தது என தமிழ்சினிமாவே ஆச்சரியப்பட்டது.

கவிதாலயா தயாரித்த இந்த படம் 1987ல் வெளியானது. அக்கா, தம்பி பாசம், தியாகம், ஏமாற்றம், குடும்ப உறவுகள், சிக்கல்களை இந்த படத்தின் கதையும் விவரித்தது.

மணல்கயிறு

விசு இயக்கிய முதல் படம் இது. மோடிமஸ்தான் என்ற தனது பிரபலமான நாடகத்தையே சினிமாவாக்கினார். எஸ்.வி.சேகர் ஹீரோ.

1982ல் வந்த இந்த படத்தில் சாந்திகிருஷ்ணா, மனோரமா, விசு நடித்தனர். கன்னடம், தெலுங்கிலும் ரீமேக் ஆனது.

8 நிபந்தனைகளுடன் பெண் தேடுகிறார் எஸ்.வி.சேகர். அத்தனையும் வித்தியாசமானவை. ஆனால்,அவரை ஏமாற்றி திருமணம் செய்து வைக்கிறார் விசு. என்ன நடக்கிறது என்ற ரீதியில் கதை செல்லும். நாரதர் நாயுடு என்ற கேரக்டரில் விசுவும் கலக்கியிருந்தார். திருமணத்துக்கான அந்த நிபந்தனைகள் திரைக் கதையில் படு சுவாரஸ்யமாக இருக்கும். முதல் படத்திலேயே நடிப்பு, எழுத்து, கதை, கருத்துக்காக விசு பாராட்டப்பட்டார்.

தமிழ்சினிமாவில் குடும்பம் உறவுகள், சிக்கல்கள் சார்ந்த தனி பாணியிலான கதைகளை, படங்களை உருவாக்கி வெ ற்றி கண்டவர்.

வேடிக்கை என் வாடிக்கை

எஸ்.வி.சேகர், ரேகா, பல்லவி நடித்த படம். வழக்கம்போலும் இதிலும் நடித்து இருப்பார் விசு. காவிசட்டை கந்தசாமியாக வருவார்.

அவர் தங்கை கேரக்டர் மனோரமாவுக்கு. தாய் மாமனான விசு மனோரமாவின் 3 குழந்தைகளின் திருமணத்தை எப்படி நடத்தி வைக்கிறார். வரும் பிரச்னைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்ற ரீதியில் கதை நகரும். மனோரமா கணவராக கிஷ்மு வருவார்.

இருவரும் ஒரு பிரச்னையால் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், விசு பேசியே காரியத்தை சாதிப்பார் என கதை நகரும். ஏகப்பட்ட நடிகர்கள் கூட்டம் நடித்து இருந்தது.

Pyramid

பட மூலாதாரம், Pyramid

நீங்க நல்லா இருக்கணும்

மதுவுக்கு அடிமையான ஒரு கணவருக்கு மனைவியாகும் ஒரு பெண்ணின் வேதனையான வாழ்க்கையை விவரிக்கும் படம். எப்படியாவது கணவனை திருத்தலாம் எனநினைக்கிறார் மனைவி.

கணவரின் மருத்துவத்துக்காக பிச்சை கூட எடுக்கிறார். ஆனால், அவனோ திருந்துவதாக இல்லை. அப்போது அந்த மனைவி என்ன முடிவெடுக்கிறார் என்ற ரீதியில் கதை நகரும்.

மதுவின் தீமை சொல்லும் படம் என்பதால் தமிழக அரசு நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.நிழல்கள் ரவி, பானுப்பிரியா, மனோரமா நடிப்பு அருமையாக இருக்கும்.

மீண்டும் சாவித்ரி

பொதுவாக விசு படங்களில் ஒரு சமூக பிரச்னை பேசப்படும்.

இப்படம் சரண்யா பொன்வண்ணன், ரேவதி, நிழல்கள் ரவி, ராஜா உட்பட பலர் நடிக்க, 1996ம் ஆண்டு வெளியானது. வரதட்சணை பிரச்னையால் ரேவதி திருமணம் தள்ளிப்போகும். கடைசியில் வரதட்சணை வேண்டாம்என்று சொல்பவரை திருமணம் செய்வார்.

ஆனால், அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும். அது என்ன? ரேவதி என்ன முடிவெடுத்தார் என்பது கதை. ரேவதியின் நடிப்பு, குறிப்பாக தாலி விஷயத்தில் அவர் எடுக்கும் கிளைமாக்ஸ் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது. ரேவதி அப்பாவாக விசு வருவார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிகாமணிரமாமணி

விசுவின் ஆஸ்தான நடிகர்களின் எஸ்.வி.சேகர், மனோரமா இப்படத்தில் நடித்து இருந்தனர். ஊர்வசி ஹீரோயின்

நடுத்தர குடும்பத்து ஆண் ஒருவர் பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சந்தர்ப்பத்தால் பணக்காரர் ஒருவரை சந்திக்கிறார். அப்போது அவர் எப்படியெல்லாம் மாறுகிறார். அவர் ஆட்டம் எதில் போய் முடிந்தது என்பது கதை. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குடும்ப கதை. மனோரமா, ஸ்ரீவித்யா நடிப்பில் கலக்கியிருப்பார்கள்.

சிகாமணியாக எஸ்.வி.சேகரும், ரமாமணியாக ஊர்வசியும் வருவார்கள். 2001ல் வெளியான இந்தபடம்தான் விசு இயக்கிய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சகாப்தம்

விஜயகாந்த் நடித்த படம். அம்பிகா ஹீரோயின். கார்த்திக்கு கவுரவ வேடம்.

திருமணம் முடிந்த கையோடு,கணவனை இழந்து மறுமணத்திற்குச் சம்மதிக்காத தன் மருமகளை, மறுமணத்திற்குச் சம்மதிக்கவைக்கப் போராடும், மாமனாரின் கதை இது.

மாமனாராக நடித்து இருப்பார். 1985ல் வெளியான இந்த படத்தின் கரு அந்த காலத்தில் விவாதிக்கப்பட்டது.

பெண்மணி அவள் கண்மணி

கவிதாலயா நிறுவனத்துக்காக 1988ல் விசு இயக்கிய படம். பிரதாப்போத்தன், சீதா நடித்து இருந்தனர். ரேடியோ மாமா என்ற ஆர்வக்கோளாறு கேரக்டரில் விசு நடித்து இருப்பார். வழக்கம்போல இதிலும் குடும்ப உறவுகள், சிக்கல்களை தனது பாணியில் சொல்லி இருப்பார்.

வரவு நல்ல உறவு

எஸ்.வி.சேகர், ரேகா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். நடுத்தர குடும்பங்களின் பொருளாதார பிரச்னையை பேசும் படம் . அதனால், குடும்பம் எப்படி பிரிகிறது. பின்னே எப்படி மீண்டும் சேர்ந்தது என்பதை விசு அழகாக சொல்லியிருப்பார் விசு. பணத்தின் மதிப்பை சொன்ன இந்த படத்தில் அம்பலவாணனாக விசு வருவார்.

அந்தகாலத்தில் விசுவின் நாடககம்பெனி, ரிகர்சல், ஸ்டேஜ் ரொம்ப கறாராக இருக்கும்.

55 ஆண்டுகளுக்கு மேலான நட்பு

விசுவின் நண்பரும், அவரின் முதல் பட ஹீரோவுமான எஸ்.வி.சேகரிடம் பிபிசி தமிழ் சார்பில் விசு பற்றி கேட்டோம்.

''எனக்கும், விசுவுக்கும் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு மேலான நட்பு, பாசம், பந்தம் இருந்தது. அவர் முதலில் இயக்கிய மணல்கயிறு படத்தில் நான்தான் ஹீரோ என்றாலும், எங்கள் நட்பு அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. விஸ்வசாந்தி என்ற நாடக கம்பெனியை விசு நடத்தி வந்தார். அந்த ட்ரூப்புக்கு சவுண்ட் எபக்ட்ஸ் நான் தான் பண்ணிக்கொடுப்பேன். நாடகம் தொடங்கு முன்பு என் வீட்டுக்கு வருவார், விடிய விடிய பேசுவோம். அடுத்து ரிகர்சல் நடக்கும்போது நானும் போய், என் பங்களிப்பை செய்துவிட்டு வருவேன்.'' என்றார்

''ஒரு கட்டத்தில் நாங்கள் வாடா, போடா என்று பேசிக்கொள்கிற நண்பர்கள் ஆகிவிட்டோம். 1974ல் நான் நாடகக் கம்பெனி தொடங்கியபோது விசுவின் பங்களிப்பு இருந்தது.உண்மையை சொன்னால் என் கம்பெனிக்கு முதலில் வெளியூர் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தது விசுதான்.'' என்றார் எஸ்.வி.சேகர்.

விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தை கொண்டாதாதவர்கள் இருக்க முடியாது.

மேலும் எஸ்.வி.சேகர் கூறுகையில், ''அவர் இயக்கிய 15க்கும் அதிகமான படங்களில் நான் ஹீரோவாக நடித்து இருக்கிறேன். நம்ம கூட்டணி வெற்றி கூட்டணி என்பார். விசு படங்களில் மணல்கயிறு, திருமதி ஒரு வெகுமதி, வேடிக்கை என் வாடிக்கை, குடும்பம் ஒரு கதம்பம், டெளரி கல்யாணம், ஊருக்கு உபதேசம், சிதம்பர ரகசியம், சிகாமணி ரமாமணி, மணல்கயிறு 2 ஆகிய படங்களை பிடிக்கும்.

மணல்கயிறு 2 படத்துக்கு டயலாக் எழுத ஒரு லட்சம் கொடுத்தேன். சில ஆண்டுகள் கழித்து அந்த படத்தை எடுத்தபோது கூடுதலாக 2 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவரோ நீ முன்பே ஒரு லட்சம் கொடுத்துவிட்டாயே என்று சொல்லி அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்தார்.அந்த மாதிரியான நேர்மையான மனிதர்களை சினிமாவில் பார்க்க முடியாது. '' என்றார்

'தனுஷ், செல்வராகவன், மகள்கள் பசியில்லாமல் சாப்பிட அவர்தான் காரணம்'

இயக்குநர் விசுவிடம் 10 ஆண்டுகளுக்குமேல் உதவி இயக்குனராக பணியை தொடங்கிய கிருஷ்ணமூர்த்தி, பிற்காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தார்.

அந்த கிருஷ்ணமூர்த்தி யாருமல்ல, இயக்குநர் கஸ்துாரிராஜாதான். அவரிடம் பிபிசி சார்பில் விசு பற்றிய நினைவலைகளை கேட்டோம்.

அவர் என் குருநாதர் மட்டுமல்ல, என் கடவுள் என்று உணர்ச்சிவசப்பட்ட கஸ்துாரிராஜா, ''சினிமா ஆசையில் தேனியில் இருந்து கனவுகள், கதைகளுடன் சென்னை வந்தேன். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் பணியாற்றி இருக்கிறேன் என பொய் சொல்லிதான் விசுவிடம் சேர்ந்தேன். உதவி இயக்குனராக தொடங்கி, இணை இயக்குநர் அளவுக்கு வளர்ந்தேன். அந்த 10 ஆண்டுகள் அவ்வளவு கற்றேன். சினிமா என்றால் என்ன? ஒரு இயக்குநர் எப்படி இருக்க வேண்டும். படப்பிடிப்புதளத்தை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்துகொண்டேன். அவர் மாதிரியான நல்ல மனிதர்களை பார்க்க முடியாது.'' என்றார்

''என் குழந்தைகள் தனுஷ், செல்வராகவன், மகள்கள் அந்தகாலத்தில் பசியில்லாமல் சாப்பிட அவர்தான் காரணம். மிகச்சரியாக சம்பளம் கொடுத்துவிடுவார். மிக மரியாதையாக, பாசமாக நடத்துவார்.ஒரு சமயம் அவரிடம் சண்டை போட்டுவிட்டு நான் வந்துவிட்டேன். உடனே என் மனைவிக்கு போன் செய்து, நான் கிருஷ்ணமூர்த்தியை அனுப்பவில்லை.அவரே வெளியேறிவிட்டார். ஆனாலும், குடும்ப செலவுக்கு, குழந்தைகள் படிப்புக்கு நான் உதவுகிறேன், என்னிடம் கேளுங்கள் என்றார். அந்த மனசு யாருக்கும் வரும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு