காணொளி: இரானிய எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா- இந்தியாவுக்கு லாபமா?

காணொளிக் குறிப்பு, காணொளி: இரானிய எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா- இந்தியாவுக்கு லாபமா?
காணொளி: இரானிய எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா- இந்தியாவுக்கு லாபமா?

இரான் போர் காரணமாக நெருக்கடியில் இருக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் அழுத்தத்தைக் குறைக்க அமெரிக்கா பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வரும் வேளையில், கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இதன் மூலம் இரான் அந்த எண்ணெயை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும். இரான் எண்னெய் விஷயத்தில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தற்காலிக தடை நீக்கத்தால் அதிகம் பயன்பெறக் கூடியதில் ஒரு நாடாக இந்தியா இருக்கலாம்.

இது தொடர்பாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெய் சர்வதேச சந்தையில் கிடைக்க வழிவகுக்கும்" என கூறி உள்ளார்.

அதே போல, இந்த தடை நீக்கம் ஏற்கனவே கடலில் போக்குவரத்தில் இருக்கும் எண்ணெய்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அமெரிக்கா கூறி உள்ளது.

தனது எண்ணெய்த் தேவையில் 90%-ஐ இறக்குமதி செய்யும் மற்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எண்ணெயை உடனடியாக வாங்கும் பின்னணியை கொண்ட இந்தியாவுக்கு, சிறிய தளர்வு கூட நிம்மதியையும் வாய்ப்பையும் வழங்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா அளித்துள்ள இந்த தளர்வு அதன் நீண்டகாலக் கொள்கையில் வியக்கத்தக்க மாற்றமாகும். அதே போல நிச்சயமற்ற மாற்றத்தையும் குறிக்கும் என்கிறார் பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸ்.

ஒருபுறம் இந்த நடவடிக்கை இரானிய எண்ணெய் விநியோகத்தை சீனாவை விட்டு திசைதிருப்பக் கூடும், இதனால் சந்தை விலைக்கு நெருக்கமான விலையை சீனா செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதே நேரத்தில் இந்த நகர்வு இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா உள்ளிட்ட பிற ஆசிய நுகர்வோருக்கு கச்சா எண்ணெயை கிடைக்க செய்யும் என முன்னர் ஸ்காட் பெசன்ட் கூறி இருந்தார்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60%-க்கும் அதிகமாக வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. இதில் பாதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே வருகிறது.

"சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் சேர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய தேவை மையமாக இந்தியா உருவெடுக்கக்கூடும் என கடல்சார் உளவு நிறுவனமான கெப்லரின் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் சந்தை ஆய்வாளர் சுமித் ரிடோலியா கூறுகிறார்.

வரலாற்று ரீதியாகவே இந்தியா இரானிய கச்சா எண்ணெயை வாங்கும் முக்கிய நாடாக இருந்தது. 2018-இல் தடைகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்பு இந்தியாவின் மொத்த நுகர்வில் இரானிய இறக்குமதி சுமார் 11.5% ஆக உயர்ந்தது.

இரானின் 'லைட்' மற்றும் 'ஹெவி' ரக கச்சா எண்ணெய்கள் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் பொருத்தமானவை. அதே போல பெரும்பாலும் விலை மற்றும் பணம் செலுத்தும் விதிமுறைகள் மிகச் சாதகமாக இருந்தன.

ஆனால், அந்த வரத்து 2019-இல் நின்றது. அதன் பிறகு அதற்கான மாற்றாக மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெய், பின்னர் மலிவு விலை ரஷ்ய எண்ணெய் அமைந்தன.

ரஷ்ய எண்ணெய் மலிவு விலையில் கிடைத்தபோது, களத்தில் இறங்கிய இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் இறக்குமதியை அதிகரித்தன.

இரானிய பேரல்கள் மீண்டும் சந்தைக்கு வரும் போது இதே போன்ற நிலை ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது சேமிப்பு மற்றும் போக்குவரத்தில் உள்ள சரக்குகள் உட்பட சுமார் 170 மில்லியன் பேரல் இரானிய கச்சா எண்ணெய் கடலில் இருப்பதாக கெப்லர் மதிப்பீடுகிறது.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கடலில் இருக்கும் எண்ணெய் எனும் போது அவை இரண்டு வகைப்படும். ஒன்று விற்பனைக்காக அனுப்பப்படும் எண்ணெய். மற்றொன்று சேமிப்பாக வைக்கப்பட்டுள்ளவை.

இரானிய எண்ணெய் ஏற்கனவே பெருமளவில் கப்பல்களில் உள்ளது. இந்த எண்ணெய் முழுவதற்கும் இன்னும் வாங்குபவர்கள் இல்லை. சிறிதளவு ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது, ஆனால் ஒரு பெரும் பகுதி இன்னும் விற்கப்படாமல் கையிருப்பில் உள்ளது.

"முந்தைய அனுபவம் மற்றும் வலுவான வர்த்தக கட்டமைப்பு உதவியுடன் குறைந்தபட்ச செயல்பாட்டு மாற்றங்களுடன் இரானிய எண்ணெயை பெறும் திறனை இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் கொண்டுள்ளன," என ரிடோலியா கூறுகிறார்.

அதே நேரம், இரானிய எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடர்ந்து நடைபெறுவது, சுத்திகரிப்புத் திறனை விட வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியலையே அதிகம் சார்ந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவசரகால கையிருப்பில் இருந்து மில்லியன் கணக்கான பேரல் எண்ணெயை விடுவித்தது, ரஷ்ய எண்ணெய் மீதான சில தடைகளை தளர்த்தியது என எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க அமெரிக்கா மேற்கொண்ட சில நடவடிக்கைகளை தொடர்ந்து இரான் எண்ணெய் மீதான இந்த தடை விலக்கம் வந்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு