You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் மோதி பேசியது என்ன?
மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ''இன்று இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் நீண்ட காலப் போக்கில் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்'' என்று கூறினார்.
தொகுதி மறுவரையறை குறித்துப் பேசிய பிரதமர், "இன்று நான் பொறுப்புடன் கூற விரும்புவது என்னவென்றால், இந்த முடிவு எடுக்கும் செயல்முறை யாருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டாது. யாருக்கும் அநீதி இழைக்கப்படாது," என்று தெரிவித்தார்.
''இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் விகிதாச்சாரம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. அதன் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை நடைபெறும். இதற்கு உத்தரவாதம் தேவையென்றால், நான் உத்தரவாதம் அளிக்கிறேன்," என்றும் அவர் கூறினார்.
மகளிர் இடஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், " இது அவர்களின் உரிமை. பல தசாப்தங்களாக நாம் இதைத் தடுத்து வைத்துள்ளோம், இன்று அதற்குப் பரிகாரம் செய்து, அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது," என்று தெரிவித்தார்.
என்னென்ன மசோதாக்கள்?
முன்னதாக, மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ''இந்த செயல்முறைக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும்'' என்று கூறினார்.
அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து அதிகபட்சமாக 850 ஆக அதிகரிக்கப்படும், மேலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்' என மத்திய அரசு கூறுகிறது.
இவை 2023-இல் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. இச்சட்டம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்குகிறது. ஆனால் அதன் அமலாக்கத்தை எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைத்திருந்தது.
அதாவது, மக்களவை இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பின்னரே, பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசியலமைப்பு (131-வது திருத்தச் சட்டம்) மசோதா, 2026-ஐ அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளனர்.
இம்மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பை பதிவு செய்த உறுப்பினர்களில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். எம்.பி. ஓவைசி ஆகியோரும் அடங்குவர். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சி.பி.எம். (CPI-M) ஆகிய கட்சிகளும் இம்மசோதாக்களை எதிர்க்கின்றன.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றிய காங்கிரசின் கே.சி. வேணுகோபால், "மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் அமித் ஷா ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நான் எதிர்க்கிறேன். இந்த மசோதா இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான அடிப்படைத் தாக்குதலாகும். இந்த மசோதாவின் உண்மையான நோக்கம் என்ன? ஏற்கெனவே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் நிறைவேற்றியுள்ளது" என்று கூறினார்.
இதற்கு உடனடியாகப் பதில் கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மசோதாக்களை அறிமுகப்படுத்தும் கட்டத்தில் அதன் நன்மைகள் குறித்து வேணுகோபால் கேள்வி எழுப்ப முடியாது என்றும், தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளை எழுப்புவதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி உண்டு என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் "வலுவான பதிலடி" கொடுக்கும் என்றும் அமித் ஷா கூறினார்.
மேலும், "பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதன் தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்வதற்காக இந்த இரண்டு மசோதாக்களும் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டுள்ளன" என்று அமித் ஷா கூறினார்.
நகலை எரித்து ஸ்டாலின் போராட்டம்
தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
தேர்தல் பிரசாரத்திற்காக நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தார்.
இதனை தமது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டாலின்,"தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கும் மசோதாவின் நகலை எரித்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பு எழ காரணம் என்ன?
இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க 2 காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
- தொகுதி மறுவரையறைச் செயல்முறையின் மூலம், வட இந்தியா மற்றும் தான் வலுவாக உள்ள பிற மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் விரும்புகிறது. இது வட மற்றும் தென் இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி இடைவெளியை கணிசமாக விரிவுபடுத்தும்; இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி பயனடையும். மேலும், இது நாடாளுமன்றத்தில் தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பலவீனப்படுத்தும்.
- பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, தனது அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்துகொள்ள அரசாங்கம் முற்படுகிறது.
எனினும், பாரதிய ஜனதா கட்சி மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுக்கிறது; அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும், பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவே விரும்புவதாகவும் அது தெரிவிக்கிறது.
ராகுல் காந்தி கூறியது என்ன?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "பாஜக-வின் ஆபத்தான திட்டங்களில் ஒன்று என்னவென்றால், 2029 தேர்தல்களில் தனக்குச் சாதகமாக அமையும் வகையில், அனைத்து மக்களவைத் தொகுதிகளின் எல்லை மறுவரையறை செயல்முறையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அது விரும்புகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா, அரசாங்கத்தாலேயே நியமிக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஒரு 'எல்லை மறுவரையறை ஆணையத்திடம்' (Delimitation Commission) அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைத்துவிடும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மேலும் "பாஜக இதை எவ்வாறு செய்கிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் – அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற எல்லை வரையறை செயல்முறையானது, அவர்களுக்குச் சாதகமான வகையில் திரித்து மாற்றப்பட்டது. பாஜக-வை ஆதரிக்காத பகுதிகள் மற்றும் சமூகங்கள், தேர்தல் ஆதாயத்திற்காகப் பிரிக்கப்பட்டன." என குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவும் எதிர்ப்பு
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 'எக்ஸ்' தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார், "தற்போது பொதுவெளியில் கிடைக்கப்பெறும் 'எல்லை மறுவரையறை வரைவு மசோதா, 2026' (Delimitation Bill, 2026), மாநிலங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கையும், மக்களவையில் அவற்றுக்கான பிரதிநிதித்துவத்தையும் கணக்கில் கொள்ளாமலேயே, எல்லை மறுவரையறைச் செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல பாஜக தலைமையிலான மத்திய அரசு முனைப்புடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது."
அவர் மேலும் "இத்தகைய ஒரு செயல்முறை மிகவும் அநீதியானது; ஏனெனில், 'தேசிய மக்கள் தொகைக் கொள்கை, 1976'-ஐச் செயல்படுத்துவதில் நேர்மையான மற்றும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்ட கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். மறுபுறம், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் மந்தப்போக்கைக் கடைப்பிடித்த மாநிலங்கள், இதன் மூலம் வெகுமதிகளை அறுவடை செய்யும் நிலை ஏற்படும்." என கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரும் பிரதமர்
அதே வேளையில், தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) தொடர்பாகத் தமிழ்நாடும் எதிர்க்கட்சிகளும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.
அவர் செய்தி நிறுவனமான ஏ.என்ஐ-யிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே போகிறது. தென் இந்தியாவுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படாது. ஸ்டாலினுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், அவர் பிரதமருக்குக் கடிதம் எழுதலாம்; மேலும் அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். அவர்கள் தங்கள் ஆலோசனைகளையும் வழங்கலாம்," என்று கூறினார்.
இந்த மசோதா விஷயத்தில் அரசு அவசரப்படுவதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஜத் பூனாவாலா, "நாங்கள் அவசரப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது; ஏனெனில் பெண்கள் கடந்த 30 ஆண்டுகளாக இதற்காகக் காத்திருக்கிறார்கள்... 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இது அமலுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதன் மூலம் பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் சமூக உள்ளடக்கத்திற்கான உரிமைகளைப் பெற முடியும்," என்று தெரிவித்தார்.
இந்த திருத்தத்திற்கு ஆதரவு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோதி எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார். "இந்த நாட்டின் ஒவ்வொரு சகோதரியும் மகளும் விரும்புவது இதுதான். இதை ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள், பெண்கள் இடஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த ஆதரவு இருப்பதாக தெரிவித்தாலும், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு