வருங்கால வைப்பு நிதி : இனி உங்கள் 'டேக் ஹோம்' சம்பளம் குறையுமா? இது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா?

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நீங்கள் எங்காவது வேலை செய்பவர் என்றால் இரண்டு சொற்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஒன்று 'நிறுவனத்திற்கான செலவு', அதாவது உங்கள் நிறுவனம் ஒரு பணியாளராக உங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறது. இரண்டாவது சொல் 'டேக் ஹோம் சம்பளம்'. இது வழக்கமாக 'நிறுவனத்திற்கான செலவு' என்பதை விட சற்றே குறைவாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலும் சம்பளம் வெவ்வேறு பிரிவுகளில் குறைக்கப்பட்டே வருகிறது.

இதுவரை நாட்டில் 29 தொழிலாளர் நலச்சட்டங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவை அனைத்தையும் 4 சட்டங்களில் உள்ளடக்க அரசு தயாராகி வருகிறது.

இவற்றில் ஒன்று 'ஊதியம்' தொடர்பானது. இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் விதிமுறைகள், தற்போது ஒரு வரைவின் வடிவில் தயாராக உள்ளது. அடுத்த நிதியாண்டுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னர் இந்த விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த விதிமுறைகள் அறிமுகமான பின்னர், ஊழியர்களின் 'டேக் ஹோம்' சம்பளம் பாதிக்கப்படும். மேலும் 'நிறுவனத்திற்கான செலவும்' அதிகரிக்கும் என்பதே தற்போதைய விவாதம்.

எனவே எல்லா இடங்களிலும் இந்த விதிமுறைகள் பற்றிய பேச்சு அடிபடுகிறது.

இந்த விஷயம் உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும் என்பதால், அவற்றை எளிதான வார்த்தைகளில் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது எத்தகைய மாற்றம் ஏற்படும்?

ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்போது வரை உங்கள் சம்பளத்தில் 50% அடிப்படை சம்பளமாகவும், 50% அலவன்ஸ் அதாவது படிகளாகவும் பெறப்பட்டிருந்தால், புதிய விதிமுறைகளால் உங்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது.

ஆனால் உங்கள் சம்பளத்தின் அடிப்படை 50% க்கும் குறைவாக இருந்தால், உங்களின் டேக் ஹோம் சம்பளம் பாதிக்கப்படும்.

அது எப்படி நடக்கும்? இதை விளக்குகிறார் வருமான வரி நிபுணர் கெளரி சத்தா.

"உங்கள் சம்பளம் 100 ரூபாய். அதில் 40 சதவிகிதம் அதாவது 40 ரூபாய் அடிப்படை சம்பளமாகவும் 60 சதவிகிதம் அதாவது 60 ரூபாய் படிகளாகவும் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அரசின் புதிய வரைவின்படி, உங்கள் நிறுவனம் இந்த சம்பள கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கும். புதிய யோசனையின் படி, நிறுவனங்கள் இனி சம்பளத்தின் 50 சதவிகிதத்திற்கு மேல் படிகளாக அளிக்க முடியாது. இதன் பொருள் என்னவென்றால் அடிப்படை சம்பளம் இனி அதிகரிக்கும்," என்று அவர் கூறினார்.

இது முதல் மாற்றமாக இருக்கும். இரண்டாவது மாற்றம் அடிப்படை சம்பளத்துடன் தொடர்புடைய சம்பளத்தின் கூறுகளில் இருக்கும்.

அவற்றில் ஒன்று வருங்கால வைப்பு நிதி (PF), மற்றொன்று பணிக்கொடை (Gratuity). இது தவிர, மாறக்கூடிய பிற விஷயங்களும் உள்ளன.

வருங்கால வைப்பு நிதி

தற்போது இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எஃப்) , அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதத்தை வழங்குகின்றன. புதிய ஏற்பாட்டின் படி, அடிப்படை சம்பளம் அதிகரிக்கும. எனவே உங்கள் பிஎஃப் கணக்கில் அதிக பணம் டெபாசிட் செய்யப்படும் என்பது தெளிவாகிறது.

பழைய ஏற்பாட்டின் படி, நீங்கள் 40 ரூபாய் அடிப்படை சம்பளத்தைப் பெற்றிருந்தால், உங்கள் பி.எஃப் பிடித்தம் 12 சதவிகிதம் அதாவது 4 ரூபாய் 80 பைசா. ஆனால் புதிய ஏற்பாட்டின்படி, 50 சதவிகிதம் அடிப்படை என்றால், உங்கள் பிஎஃப் பிடித்தம் இப்போது 6 ரூபாயாக இருக்கும்.

பி.எஃப் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது - அதில் ஒரு பகுதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மற்ற பகுதி ஊழியர்களால் அளிக்கப்படுகிறது. அதாவது உங்கள் சம்பளத்திலிருந்து பி.எஃப் பிடித்தம் அதிகமாக இருக்கும். எனவே டேக் ஹோம் சம்பளம் குறைந்துவிடும்.

அதேபோல் ஊசியரின் பி.எஃப் பங்களிப்பு அதிகரித்தால், நிறுவனம் தனது பங்கையும் அதிகரிக்க வேண்டும். எனவே நிறுவனத்திற்கான செலவு அதிகரிக்கும். ஆனால் நிறுவனம் இந்த சுமையை உங்கள் மீது போடுமா அல்லது தனது சொந்தக் கணக்கிலிருந்து கொடுக்குமா என்பது நிறுவனத்தை பொருத்து இருக்கும்.

"அதே போல, ஊழியர்களின் பணிக்கொடையும் அதிகமாகும். ஏனெனில் உங்கள் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையிலேயே கிராச்சுட்டி தீர்மானிக்கப்படுவதால், உங்கள் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் பட்சத்தில், கிராச்சுட்டியும் அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த தொகையையும் உங்கள் சம்பளத்திலிருந்துதான் பிடிக்கின்றன. எனவே இதன் காரணமாகவும் உங்கள் டேக் ஹோம் சம்பளம் குறையும்.

பி.எஃப் மற்றும் பணிக்கொடையுடன் கூடவே உங்கள் நிறுவனத்தில் வீட்டு வாடகை படி மற்றும் விடுப்பு என்காஷ்மெண்டும் அடிப்படை சம்பளத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டால், இந்தப் புதிய விதிமுறை காரணமாக அவையும் பாதிக்கப்படும். "

இது ஒரு மோசமான செய்தியா?

ஆனால் இந்த முழு மாற்றத்திற்கு மற்றொரு பக்கமும் உள்ளது.

"இந்த புதிய விதிகளின் அறிமுகம், ஊழியர்களிடையே சமூக பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும்" என்று ஊழியர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொடர்பாக பணிபுரியும் டீம்லீஸ் அமைப்பின் இணை நிறுவகர் ரிதுபர்ணா சக்ரவர்த்தி கூறுகிறார்.

"பி.எஃப் மற்றும் பணிக்கொடையில் பணம் அதிகமாக பிடிக்கப்படும். எனவே வெளிப்படையாக உங்களின் டேக் ஹோம் சம்பளம் குறைவாக இருக்கும். ஆனால் அவை ஓய்வூதிய பலன்களாக பார்க்கப்படுகின்றன. டேக் ஹோம் சம்பளம் குறைந்தாலும், இப்போது, அந்தக் கணக்குகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்படும். இது உங்கள் ஓய்வூதிய பயனில் நல்ல விளைவை ஏற்படுத்தும். நிறுவனத்தின் ஊழியருக்கான செலவில் நிறுவனத்தின் பங்கும் அதிகரிக்கும்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

நிறுவனங்கள் மீதான கூடுதல் சுமை குறித்து கருத்து தெரிவித்த அவர் , 29 சட்டங்களை அகற்றுவதன் மூலம், நிறுவனங்களுக்கு நிறைய வசதிகளை மத்திய அரசு அளித்துள்ளது என்றும் ஒப்பீட்டளவில் இந்த சுமை அதிகம் இல்லை என்றும் அவர் கூறுகிறார். புதிய சட்டத்தின் மூலம் நிறுவனங்கள் நிறைய பணத்தை மிச்சப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் ஒரு விஷயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

"வருங்கால வைப்பு நிதி, அடிப்படை சம்பளத்தில் அல்லாமல் இன்னும் பல விஷயங்களைச் சேர்ப்பதன் மூலம் கணக்கிடப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெரிவிக்கிறது. 2020 மார்ச் மாதம் வெளியான தீர்ப்பின்படி பி.எஃப், அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (டி.ஏ) , மருத்துவ படி, பயணப்படி போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் படிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படவேண்டும். பி.எஃப் தொகையை நிர்ணயிக்கும்போது, போனஸ், வீட்டு வாடகை, மற்றும் ஓவர் டைம் ஆகியவை சேர்க்கப்படாது என்றும் நீதிமன்ற தீர்ப்பு தெரிவிக்கிறது." என்று ரிதுபர்ணா சக்ரவர்த்தி கூறுகிறார்.

அரசின் இந்த முடிவை பல நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளன. இந்த புதிய விதிகளுக்குப் பிறகு அந்த நிறுவனங்கள் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அதை செயல்படுத்தாத நிறுவனங்கள், புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவற்றை அமல் செய்யவேண்டும்.

படிகள் குறைந்தால் என்ன ஆகும்?

உங்கள் சம்பளத்தின் பெரும் பகுதி படிகளாக ஒவ்வொரு மாதமும் நீங்கள் சமர்ப்பிக்கும் பில்களின் அடிப்படையில் முழுமையாக வழங்கப்படுவதை பல நிறுவனங்களில் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் இந்த நடவடிக்கைகள் வரியை சேமிக்க மேற்கொள்ளப்பட்டன.

"புதிய விதிகள் அறிமுகமான பின்னர், உங்கள் படிகள் பாதிக்கப்படும். உங்கள் சம்பளத்தில் 50% க்கும் கூடுதல் தொகையை படிகளாக நிறுவனம் வழங்க முடியாது,"என்று கெளரி சத்தா குறிப்பிடுகிறார்.

அரசு அடைய விரும்புவது என்ன?

நிறுவனங்கள் ஒரு புறத்தில் சிறிய இழப்பை சந்திப்பதாக தென்பட்டாலும் மறுபுறம் 29 சட்டங்களை அகற்றி, அவற்றை 4 சட்டங்களில் உள்ளடக்குவது நிறுவனங்களுக்கு நிறைய ஆறுதலைத்தரும் என்று ரிதுபர்ணா சக்ரவர்த்தி கூறுகிறார். "அவர்களின் காகிதப் பணிகள் மிகவும் குறைந்துவிடும். இந்த பணிகளை முடிக்க பணியமர்த்தவேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை முறையும். நிறுவனங்கள் அந்தப் பணத்தை வேறு செயல்களுக்கு பயன்படுத்த முடியும். சமூகப் பாதுகாப்பு உணர்வு ஊழியர்களிடையே அதிகரிக்கும்," என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

மறுபுறம், கெளரியும் ஒரு நன்மையை சுட்டிக்காட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை, பி.எஃப் இல் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டால், அரசிடம் அதிக பணம் சேரும். சில காலத்திற்கு அரசு இந்த பணத்தை அதிக சிறப்பான வழியில் பயன்படுத்த முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: