You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?
- எழுதியவர், கேட்டி பௌவி
- பதவி, பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
"இது என் சமூக ஊடக பக்கத்தில் வந்தது. நான் தொடர்ந்து பல வீடியோக்களை பார்த்துக்கொண்டே இருந்தேன். பிறகு 'ஏன் இதை முயன்று பார்க்கக்கூடாது?' என நினைத்தேன்" என்கிறார் 21 வயதான மரியம் கான்.
இது கடினமான உடற்பயிற்சி அல்லது விலையுயர்ந்த சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பற்றியதல்ல. அவரும் மேலும் பலரும் முயற்சி செய்து வரும் இந்தப் பழக்கம் மிகவும் எளிமையானது. அதாவது தினமும் காலையில் வெந்நீர் அருந்துவதே அந்தப் பழக்கம்.
சுருக்கமாகக் கூறினால், இணையத்தில் உள்ள பலரும் இப்போது இந்த எளிய பழக்கத்தைப் பின்பற்றி, அதைப் பகிர்ந்தும் வருகின்றனர்.
வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை அருந்துவது உடல் நலனுக்கு நல்லது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இது பாரம்பரிய சீன மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக உள்ளது.
தற்போது, சமூக ஊடகங்களால் இந்தப் பழைய யோசனை மீண்டும் பிரபலமடைந்துள்ளது.
டிக்டோக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில், லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்ற வீடியோக்களில், மக்கள் வெந்நீர் அருந்துவது, சூடான காலை உணவை உண்பது, காலையில் லேசான உடற்பயிற்சிகளைச் செய்வது போன்றவை காட்டப்படுகின்றன.
இந்த வீடியோக்களில் பெரும்பாலும், "புதிதாக சீனராக மாறுதல்" (newly Chinese) மற்றும் "சீனமயமாதல்" (Chinamaxxing) போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், இந்த எளிய பழக்கவழக்கங்கள் உண்மையிலேயே ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றனவா அல்லது இது வெறும் தற்காலிகமான போக்குதானா என்பதே தற்போது எழக்கூடிய முக்கியமான கேள்வியாக உள்ளது.
'கி'யை பாதுகாத்தல்
சீனாவில் லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் ஒரு முக்கியக் கருத்து என்னவெனில், உடலில் 'கி' எனப்படும் ஆற்றல் உள்ளது என்பதாகும். இந்த ஆற்றல் உடல் முழுக்கப் பாய்கிறது. அதன் ஓட்டம் தடைபடும்போதோ அல்லது சமநிலையற்றதாக இருக்கும்போதோ நோய் ஏற்படுவதாக மக்கள் நம்புகிறார்கள்.
இந்தக் கருதுகோளை ஆதரிப்பவர்கள், வாய் அல்லது தொண்டையை எரிக்காத வகையில் சுமார் 40-60 டிகிரி செல்ஷியஸ் வரை குளிர்விக்கப்பட்ட வெந்நீரைக் குடிப்பது, இந்த ஆற்றலை (கி) பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறுகிறார்கள். இது ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மக்கள் நீண்ட காலம் வாழ உதவுமென அவர்கள் நம்புகிறார்கள்.
"இதை ஒரு வீட்டைப் போல கற்பனை செய்து பாருங்கள். இந்த அமைப்பில், குளிர்ச்சியான உணவை உண்பது என்பது உங்கள் வீட்டிற்குள் வரும் குளிர்ந்த காற்றைப் போன்றது" என்று விளக்குகிறார் பாரம்பரிய சீன மருத்துவம் குறித்து ஆராய்ந்து வரும் ஆய்வாளரான பேராசிரியர் ஷுன் ஆ.
காலையில் சூடான காலை உணவை உண்பது போன்ற பாரம்பரிய சீன மருத்துவத்தின் பிற பழக்கவழக்கங்களுக்குப் பின்னாலும் இந்தக் கருத்து உள்ளது.
லண்டனில் வசிக்கும் 21 வயதான கட்டடக்கலை உதவியாளரான மரியம் கான், டிக்டோக்கில் பாரம்பரிய சீன மருத்துவத்தைப் பார்த்த பிறகு, இந்த எளிய பழக்கவழக்கங்கள் மீது ஆர்வம் கொண்டார்.
அதைத் தொடர்ந்து இதில் ஈடுபாடு ஏற்பட்டு, மெதுவான அசைவுகள், ஆழ்ந்த சுவாசம், தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய 'தை சி' பயிற்சியைத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார். அவர் காலையில் காபி குடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வெந்நீர் குடிக்கத் தொடங்கியுள்ளார்.
"உடனடியாக காஃபின் உட்கொண்டதால் மிகவும் குமட்டலாக இருந்தது என்பதை நான் உணராமல் இருந்தேன். பிறகு நான் வெந்நீர் குடிக்கத் தொடங்கிய பிறகு, அதிலும் சில நேரங்களில் வெந்நீரில் புதினா, எலுமிச்சை சேர்த்துக் குடிக்கத் தொடங்கிய பிறகு, நான் மிகவும் புத்துணர்ச்சியாக உணர்ந்தேன்," என்கிறார் அவர்.
மக்கள் பாரம்பரிய மருத்துவத்தை நாடுவது ஏன்?
இணையத்தில் தாங்கள் காணும் பாரம்பரிய சீன வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில், தற்போது அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தின் இடைக்கால இயக்குநரான ஷ்யாமா குருவில்லாவின் கூற்றுப்படி, இதுவொரு பரந்த உலகளாவிய போக்கின் ஒரு பகுதி.
"ஐரோப்பாவில்கூட, மக்கள் தொகை சார்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, மக்கள் தொகையில் 70% அல்லது அதற்கும் அதிகமானோர், ஏதேனும் ஒரு வகையான பாரம்பரிய, துணை அல்லது ஒருங்கிணைந்த மருத்துவ முறையைப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் காட்டுகிறது. சீனா, இந்தியா போன்ற சில நாடுகளில், இந்த விகிதம் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
சிலர் நவீன மருத்துவத்தை முழுமையாக நம்புவதில்லை. கோவிட் பேரிடருக்குப் பிறகு இந்த மனநிலை அதிகரித்திருக்கலாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை, 2020இல் 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்குள் சுமார் 40 சதவிகிதமாகக் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
வேறு சிலருக்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் எளிதில் கிடைக்காமல் இருக்கலாம் அல்லது பாரம்பரிய மருத்துவத்திற்கான செலவு குறைவாக இருப்பதால் அவர்கள் அதைத் தேர்வு செய்யக்கூடும்.
அது ஒரு குறிப்பிட்ட உடல்நலப் பிரச்னையை மட்டும் அணுகாமல், ஒருவரை முழுவதுமாக, அதாவது அவரது மனம், உடல், சுற்றம் ஆகிய அனைத்தையும் ஒருங்கே கருத்தில் கொண்டு சிகிச்சை அளிப்பதே சிலர் பாரம்பரிய மருத்துவத்தின்பால் ஈர்க்கப்படுவதற்குக் காரணம். வெந்நீர் அருந்துவது போன்ற எளிய பழக்கங்கள், இத்தகைய் மருத்துவ முறையைப் பின்பற்றுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமையலாம்.
பாரம்பரிய மருத்துவம் அதன் வலுவான கலாசார, ஆன்மீக, வரலாற்று வேர்களின் காரணமாகவும், பல மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.
"பாரம்பரிய மருத்துவத்தை செய்பவர்களும் (மருத்துவர்கள்), பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்தவர்களும், 'நாங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மருத்துவ முறையைப் பயன்படுத்தி வருகிறோம். இது மக்களுக்குப் பெரிதும் உதவுகிறது என்பதை நாங்கள் கண்கூடாகக் கண்டுள்ளோம்' என்று கூறுவதாக" குருவில்லா குறிப்பிடுகிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம், பல்வேறு மருத்துவ முறைகள் குறித்த சான்றுகளை ஆய்வு செய்து சரிபார்க்கிறது. இதன் மூலம் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கும், நோயாளிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க முடிகிறது. ஆனால், இது மிகவும் சவாலான, மிகப்பெரிய பணி. உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில், ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான தொகையே பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிக்காகச் செலவிடப்படுவதாக குருவில்லா தெரிவிக்கிறார்.
"பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான அறிவியல் சான்றுகளின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை தற்போது நிலவுகிறது" என்று அவர் வலியுறுத்துகிறார்.
பாரம்பரிய மருத்துவ முறைகளை, முயன்று பார்ப்பதற்கு முன்னதாக, அவை தங்களுக்குப் பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில், மக்கள் தங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் குருவில்லா அறிவுறுத்துகிறார்.
வெந்நீர் அருந்துவது தொடர்பான விஷயத்தில், உலக சுகாதார நிறுவனம் எவ்விதமான குறிப்பிட்ட விதிமுறைகளையும் வகுக்கவில்லை. நீர் எந்த அளவுக்குச் சூடாக இருக்கிறது, ஒருவர் எவ்வளவு குடிக்கிறார், அவரது உடல்நலம் எத்தகைய நிலையில் உள்ளது ஆகிய காரணிகளைப் பொறுத்தே இது அமையும் என்று குருவில்லா கூறுகிறார்.
"இவையனைத்தும் அறிவியல் சான்றுகள், சமநிலை ஆகிய இரு முக்கியக் காரணிகளைச் சார்ந்துள்ளது" என்று அவர் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
அறிவியல் கூறுவது என்ன?
காலையில் வெந்நீர் அருந்துவதால் சிறிய அளவிலான சில நன்மைகள் ஏற்படலாம் என்கிறார் பொது மருத்துவரும் நீண்ட ஆயுள் குறித்த மருத்துவ நிபுணருமான ரோஸி ப்ரூக்ஸ்.
"செரிமானத்திற்கும் மலச் சிக்கலைப் போக்கவும் இது சிறிதளவு உதவுகிறது" என்கிறார் அவர்.
உணவுக் குழாயில் (தொண்டையையும் வயிற்றையும் இணைக்கும் குழாய்) ஏதேனும் தசைப்பிடிப்புகள் இருந்தால், அவற்றைத் தளர்த்த வெந்நீர் உதவும் என்பதற்குச் சிறிய அளவிலான அறிவியல் சான்றுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் மற்றபடி, "தண்ணீர் (குளிர்ந்த நீராக இருந்தாலும் சரி, வெந்நீராக இருந்தாலும் சரி) குடிப்பது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிப்பதற்கு மட்டுமே பயனுள்ளதாக அமைகிறது" என்று அவர் விளக்கினார்.
'டாக்டர் ஹெலன் மெடிக்கல்' நிறுவனத்தைச் சேர்ந்த பொது மருத்துவர் மற்றும் வாழ்க்கை முறை மருத்துவ நிபுணரான செலினா கிரே, குளிர்ந்த நீரும் அருந்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பானதுதான் என்று கூறுகிறார்.
"குளிர்ந்த நீர் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எவ்விதமான அறிவியல் சான்றுகளும் இல்லை" என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பரவும் சில தகவல்கள் உண்மையல்ல எனவும் அவர் எச்சரிக்கிறார். வெந்நீர் அருந்துவதால் உடலிலுள்ள கொழுப்பு கரையும், வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் அதிகரிக்கும், உடலில் 'நச்சு நீக்கம்' (detox) நடக்கும் என்பனவற்றுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்கிறார் அவர்.
மேலும், "ஒருவருக்கு வெந்நீர் அருந்துவது பிடித்திருந்து, அது அவர்களை அதிகளவு தண்ணீர் குடிக்கத் தூண்டுகிறது என்றால், அது மிகவும் சிறப்பான விஷயம்தான். ஆனால் இது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு குறுக்குவழியோ அல்லது மந்திரமோ அல்ல" என்றும் அவர் தெரிவித்தார்.
பாரம்பரிய சீன மருத்துவம் பரலாகப் பின்பற்றப்படும் சிங்கப்பூரில் வளர்ந்த மருத்துவர் கிரே, தனது தாயார் முன்பு கூறிய அறிவுரைகளை இன்றும் நினைவுகூர்கிறார்.
"உடலின் உட்பகுதிகளைச் சூடாக வைத்திருக்க வெந்நீர் அருந்துமாறு என் தாயார் எனக்குக் கூறிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றன" என்கிறார் அவர்.
மேலும் பேசிய அவர், "இத்தகைய பாரம்பரிய நடைமுறைகள், நமக்கு இயல்பாகவே உணரக்கூடிய சில பழக்கவழக்கங்களை வழங்குகின்றன. அவை பின்பற்றுவதற்கு எளிதாகவும், கலாசார ரீதியாகப் பொருள் பொதிந்ததாகவும் அமைகின்றன" என்றார்.
தியானம், தை சி ஆகியவற்றின் நோக்கம்
வெந்நீர் அருந்துவது குறித்து வலுவான அறிவியல் சான்றுகள் அதிகம் இல்லையென்றாலும், வேறு சில பாரம்பரிய பழக்கவழக்கங்கள் உதவியாக இருக்கலாம்.
உதாரணமாக, குளிர்ச்சியான தானியங்களை ஒரு கிண்ண அளவில் உண்பதைவிட, இயற்கையான, முழுமையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூடான காலை உணவை சாப்பிடுவது ஆரோக்கியமான தேர்வாக இருக்கலாம்.
பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பது நோயை உண்டாக்கும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், கதகதப்பாகவும் வசதியாகவும் உணர்வது, ஒருவர் ஓய்வெடுக்கவும் நன்றாகத் தூங்கவும் உதவும்.
தை சி, கிகோங் போன்ற பாரம்பரிய பயிற்சிகள் வலிமையை மேம்படுத்தவும், உடல் சிறப்பாக இயங்க உதவவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
"பெரும்பாலும் அன்றாட வாழ்வில் நமது மனம் வேகமாகச் செயல்படுகிறது. நம் உடலும் மனமும் இருவேறு இடங்களில் இருக்கின்றன. தியானம், கிகோங், தை சி ஆகியவற்றின் முழு நோக்கமும் இந்தச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைப்பதுதான்" என்கிறார் சீன மருத்துவ நிபுணர் ஷுன் ஆ.
வெந்நீர் அருந்துவதால் வலுவான உடல்நலப் பயன்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது மனரீதியாக உதவக்கூடும் என்கிறார் மருத்துவர் ரோஸி ப்ரூக்ஸ்.
"இது ஒரு வகையான வழக்கம், நமது பரபரப்பான உலகில் நாம் அடிக்கடி மறுந்துவிடும் நமக்கான அந்த நேரத்தை இது நமக்குத் தருகிறது" என்கிறார் அவர்.
இந்தப் பழக்கங்கள் தனது மன ஆரோக்கியத்திற்கு உதவியுள்ளதாக மரியம் கான் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, காலையில் வெந்நீர் அருந்துவது தனக்கான சிறிய ஓய்வை எடுத்துக் கொள்வதற்கான ஒரு வழி.
"நான் இதை, நிதானித்து, அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, ஒரு நோக்கத்துடன் என் நாளைத் தொடங்குவதற்கான வாய்ப்பாகப் பார்க்கிறேன்," என்று கூறுகிறார் மரியம் கான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு