வைபவ் சூர்யவன்ஷி: இந்த 15 வயது வீரரை கிரிக்கெட் உலகம் ஏன் இனி புறக்கணிக்க முடியாது?

    • எழுதியவர், ஆனந்த் வாசு
    • பதவி, கிரிக்கெட் எழுத்தாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உலகின் பெரும் பணக்கார கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சனிக்கிழமை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மீது அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும்.

அதே சமயம், பலரது கண்கள் ஒரு இளம் சிறுவன் மீதும் இருக்கும்.

ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 27 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது நிறைவடைந்தது. இத்துடன் இந்திய கிரிக்கெட்டின் மிகவும் சுவாரஸ்யமான கேள்விகளில் ஒன்றின் மீது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் குவிந்துள்ளது: வைபவ் ஒரு பெரிய மேடைக்குத் தயாராகிவிட்டாரா?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனது 12 வயதில் வைபவ் முதன்முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார். ஒரு போட்டியில் அவர் தனது தந்தையின் வயதுடைய பந்துவீச்சாளர்களை மிகக் கடுமையாகத் துவம்சம் செய்து கொண்டிருந்தார்.

அப்போதிருந்து அவரது பேட்டிங் தரம், குறிப்பாக அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் பெரிய ஸ்கோர்களை எடுப்பதில் அவருக்கும் இருக்கும் பசி ஆகியவை விவாதப் பொருளாக மாறியுள்ளன.

களத்தில் உறுதியாக நிற்கும் சூர்யவன்ஷி இயல்பாகவே ஒரு ஆக்ரோஷமான வீரர். அவர் பந்துக்காகக் காத்திருக்காமல், பந்தைத் தாக்குகிறார். அவர் தனது முழு ஃபார்மில் இருக்கும்போது, அவரது பேட்டிங்கை வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாபெரும் வீரரான கேரி சோபர்ஸுடன் பலர் ஒப்பிடுகின்றனர்.

ஐபிஎல் 2026-ன் முதல் போட்டி மார்ச் 28 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது.

சச்சினின் சாதனையை வைபவ் முறியடிக்கலாம்

2020 ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) "வீரர்களின் பாதுகாப்பு" என்ற பெயரில் குறைந்தபட்ச வயது வரம்பு விதியை அமல்படுத்தி ஒரு தெளிவான எல்லையை நிர்ணயித்தது. அண்டர்-19 மட்டத்திலும் செய்தி தெளிவாக இருந்தது: 15 வயதுக்குட்பட்ட எந்த வீரரும் சர்வதேச அரங்கில் நுழைய முடியாது.

ஐசிசி குறைந்தபட்ச வயதுத் தேவையைக் குறிப்பிட்டது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு பாகிஸ்தானின் ஹசன் ரசா 1996 இல் 14 வயது 227 நாட்களில் அறிமுகமாகி, மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய ஆண் வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார்.

ரசாவின் சாதனை இன்னும் பாதுகாப்பாக இருந்தாலும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சூர்யவன்ஷி இன்னும் முறியடிக்க முடியும். டெண்டுல்கர் தனது 16 வயது 205 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இந்தியத் தேர்வாளர்கள் சூர்யவன்ஷியைத் தேர்வு செய்வதில் தாமதம் காட்டினால் அது ஆச்சரியமாக இருக்கும். டெண்டுல்கருக்குப் பிறகு பல இளம் திறமையாளர்கள் வேகமாக முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர், ஆனால் சூர்யவன்ஷியின் விஷயம் தனித்துவமானது. அவர் திறமையானவராகத் தெரிவது மட்டுமல்லாமல், இந்திய அணிக்காகவே உருவாக்கப்பட்டவர் போலத் தோன்றுகிறார்.

தேர்வாளர்களின் பார்வையில் வைபவ் சூர்யவன்ஷி எப்படி வந்தார்?

சுவாரஸ்யமாக, 2023 ஆம் ஆண்டில் சூர்யவன்ஷி தேசிய அளவில் வேகமாக உயர்ந்ததில் அவரது திறமையுடன் தற்செயலான நிகழ்வும் ஒரு காரணமாக இருந்தது.

சண்டிகரில் வினு மங்கட் டிராபி போட்டி ஒன்று நடந்தது. இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உள்நாட்டு அண்டர்-19 போட்டியாகும். இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காகத் தேர்வாளர் திலக் நாயுடு நியமிக்கப்பட்டார், ஆனால் மழையால் அந்தப் போட்டி ரத்தானது.

பிகாரைச் சேர்ந்த ஒரு திறமையான சிறுவனைப் பற்றி நாயுடு ஏற்கனவே சில பேச்சுகளைக் கேட்டிருந்தார். எனவே, அவர் அதே தொடரின் மற்றொரு போட்டியைப் பார்க்க முடிவு செய்தார், அதில் சூர்யவன்ஷி விளையாடிக் கொண்டிருந்தார்.

அதுவே தீர்மானிக்கும் காரணியாக அமைந்தது. அந்தப் போட்டியில் சூர்யவன்ஷி 76 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அசாம் அணிக்கு எதிராக பிகார் முன்னேற உதவினார். அந்த இன்னிங்ஸ் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால், அதன் பிறகு பிகார் அணி வேகமாக முன்னேற வாய்ப்பு கிடைத்தது.

சூர்யவன்ஷியின் திறன் குறித்து நாயுடு உறுதியாக இருந்தார். சூர்யவன்ஷி எடுத்த இன்னும் சில அரைசதங்கள் அதை மேலும் உறுதிப்படுத்தின. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தலைவர் வி.வி.எஸ் லக்ஷ்மனுடன் பேசிய பிறகு, சூர்யவன்ஷியை உடனடியாக அணியில் சேர்த்தார்.

வைபவ் தன்னை நிரூபித்தார்

சூர்யவன்ஷி வெற்றி ஏணியின் ஒவ்வொரு படியிலும் தனது வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

அவர் நவம்பர் 2023 இல் அண்டர்-19 சேலஞ்சர் டிராபியில் ரன்களைக் குவித்தார். பின்னர் அதே மாத இறுதியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் அண்டர்-19 அணியின் சார்பாக சர்வதேச தொடரிலும் அதே ஃபார்மைத் தொடர்ந்தார்.

உண்மையான வித்தை ஒரு வருடம் கழித்து நிகழ்ந்தது. அக்டோபர் 2024 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யவன்ஷி, 58 பந்துகளில் சதம் விளாசினார். இந்த இன்னிங்ஸ் அவரது அடையாளமாக மாறியது.

அப்போது, இன்னும் காலூன்ற முயற்சிக்கும் ஒரு சிறுவனுக்கு ஐபிஎல் ஒரு பெரிய படியாக இருக்கலாம் என்றும், இவ்வளவு குறைந்த வயதில் உலகின் சிறந்த வீரர்களை எதிர்கொள்வது நன்மையை விடத் தீமையையே அதிகம் விளைவிக்கும் என்றும் வாதிடப்பட்டது.

2025 ஐபிஎல் சீசனில், சூர்யவன்ஷி அந்த கவலைகளைத் தகர்த்தார். அனுபவம் வாய்ந்த ஷர்துல் தாகூரின் முதல் பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்தார்.

அதன்பின் விரைவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அவர் மீது முதலீடு செய்த சுமார் 1.10 கோடி ரூபாயை நியாயப்படுத்தினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் அதிரடி சதம் விளாசி, மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஆனால், ஐபிஎல் உள்நாட்டு அளவில் தன்னை நிரூபிப்பதற்கான ஒரு தளம் மட்டுமே என்றும், திறமையை அடையாளம் காண இது சரியான தொடர் அல்ல என்றும் விமர்சகர்கள் வாதிட்டனர். இதே பார்வை 2026 தொடக்கத்தில் நடந்த அண்டர்-19 உலகக் கோப்பையிலும் சூர்யவன்ஷி மீது இருந்தது.

அதற்குள் இந்தியாவில் கிரிக்கெட் விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட்டன. ஒரு வீரர் எவ்வளவு இளையவராக இருந்தாலும், இந்தத் தொடரில் பங்கேற்க ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. வயது தொடர்பான மோசடிகளை ஒழிப்பது, தரத்தை உயர்த்துவது மற்றும் வீரர்கள் முதிர்ச்சியின்றி அல்லாமல் முழுத் தயாரிப்புடன் களமிறங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாக இருந்தது.

சூர்யவன்ஷி தொடரின் லீக் சுற்றுகளில் 72, 40, 52 மற்றும் 30 ரன்கள் எடுத்தார், இதன் மூலம் இந்தியா நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. பின்னர் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்துகளில் அரைசதத்தையும், 55 பந்துகளில் சதத்தையும் கடந்தார். இந்த இன்னிங்ஸில் சூர்யவன்ஷி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். இதில் 15 சிக்ஸர்கள் மற்றும் அதே எண்ணிக்கையிலான பவுண்டரிகள் அடங்கும்.

இந்த நேரத்தில், சூர்யவன்ஷியை வயதுப் பிரிவு கிரிக்கெட்டில் விளையாட விடுவதற்குப் பதிலாக, சீனியர் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

ஆனால் இந்திய கிரிக்கெட் ஐசிசி விதிகளால் கட்டுப்பட்டிருந்ததால், சூர்யவன்ஷியை சீனியர் அணியில் தேர்வு செய்ய முடியாமல் போனது.

கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு

சூர்யவன்ஷி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் எதிர்வினைகள் ஆச்சரியத்திற்கும் மலைப்பிற்கும் இடையில் உள்ளன.

ரவி சாஸ்திரி கூறுகையில், "அந்த வயதில் சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலி எவ்வளவு சிறந்த வீரர்களாக இருந்திருப்பார்கள்? இந்தச் சிறுவன் இவ்வளவு குறைந்த வயதில் இவ்வளவு சிறப்பாக இருந்தால், அவர் நான்கு நாள் கிரிக்கெட்டில் விளையாட முடியாததற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றார்.

ஏபி டி வில்லியர்ஸ், சூர்யவன்ஷி "தனது வயதிற்கு மிஞ்சிய முதிர்ச்சி கொண்டவர்" என்று கூறினார். மேத்யூ ஹெய்டன் அவரது ஐபிஎல் சதத்தை "அனைத்து விளையாட்டுகளிலும் உள்ள இளம் கனவுகளுக்கான உத்வேகம்" என்று விவரித்தார்.

டபிள்யூ.வி. ராமன், சூர்யவன்ஷியின் "பரபரப்பை ஏற்படுத்தும் திறமையால்" ஈர்க்கப்பட்டுள்ளார். மேலும் டெண்டுல்கர் அவரது "அச்சமற்ற அணுகுமுறை, பேட் வேகம் மற்றும் பந்தின் லெந்த்தை முன்கூட்டியே கணிக்கும் திறன்" ஆகியவற்றைப் பாராட்டினார்.

மார்ச் 27 அன்று சூர்யவன்ஷி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, கேள்வி அவர் தயாராக இருக்கிறாரா என்பது அல்ல, உலகம் அவருக்குத் தயாராக இருக்கிறதா என்பதுதான்.

இந்தத் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்கனவே மிகவும் விசேஷமானது.

1994 ஆம் ஆண்டில், ஆக்லாந்தில் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, நவஜோத் சிங் சித்துவுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. அதன் பிறகு முகமது அசாருதீன் டெண்டுல்கரை பேட்டிங்கில் முன்னிலைப்படுத்தி தொடக்க வீரராக அனுப்பினார்.

டெண்டுல்கர் 49 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார், அதன் பிறகு அவர் பின் திரும்பிப் பார்க்கவே இல்லை.

அதன் பிறகு, டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக 48.29 சராசரியுடன் 15,310 ரன்கள் எடுத்தார். அவரது 49 சதங்களில் நான்கு சதங்களைத் தவிர மற்ற அனைத்தும் தொடக்க வீரராக எடுத்தவைதான்.

27 மார்ச் 1994 இந்திய கிரிக்கெட்டின் திசையை என்றென்றும் மாற்றியது என்று சொல்வது முற்றிலும் சரியாக இருக்கும்.

இப்போது, 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் மற்றொரு முக்கியமான திருப்பம் ஏற்படப் போகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு