காணொளி: சந்தைக்கு வரும் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய்- முழு தீர்வு தருமா?

காணொளிக் குறிப்பு, காணொளி: சந்தைக்கு வரும் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய்; முழு தீர்வு தருமா?
காணொளி: சந்தைக்கு வரும் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய்- முழு தீர்வு தருமா?

இரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்க சர்வதேச எரிசக்தி முகமையின் 32 நாடுகள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. தங்கள் அவசர கால கையிருப்பில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயை விடுவிக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். எவ்வளவு எண்ணெயை அவர்கள் விடுவிக்கிறார்கள், இதனால் ஏற்படும் தாக்கம் என்ன?

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரானுடன் நடத்தி வரும் போரால் ஹோர்மூஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் பெருமளவில் தடைபட்டுள்ளது. இது சந்தையில் அதன் விலையை உயரச் செய்திருக்கிறது.

இந்த நிலையில், விநியோக பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் விலைகளை சமாளிக்க அமெரிக்கா, பிரிட்டன் உட்பட சர்வதேச எரிசக்தி முகமையின் 32 உறுப்பு நாடுகள் 400 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க உள்ளன.

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து, சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் விடுவித்த முந்தைய அளவை விட இந்த விடுவிப்பு இரு மடங்கு அதிகமாகும்.

அதே நேரம், இந்த நடவடிக்கை குறுகிய கால தீர்வாக மட்டுமே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில், இது சுமார் மூன்று அல்லது நான்கு நாட்கள் அளவுள்ள உலகளாவிய விநியோகம் அல்லது ஹோர்மூஸ் நீரிணை வழியாக அனுப்பப்படும் இரண்டு வார அளவு எண்ணெயாக மட்டுமே இருக்கும்.

சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நாடுகள் உலகளாவிய எரிசக்தி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கையும், நுகர்வில் 80 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டின் எண்ணெய் பயன்பாட்டில் 90 நாட்களுக்கு தேவையான எண்ணெயை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில், ஒட்டுமொத்தமாக உறுப்பு நாடுகள் வசம் 1.2 பில்லியன் பீப்பாய்களுக்கு மேல் அவசரகால இருப்பு உள்ளது. இதற்கு மேலாக, அரசின் கட்டாய விதியின் கீழ் தொழில்துறை நிறுவனங்களிடம் மேலும் 600 மில்லியன் பேரல் கையிருப்பு உள்ளது.

இந்த கையிருப்பு எண்ணெய் என்பதும் ஒரே இடத்தில் இருக்காது. உதாரணமாக, ஷெல் மற்றும் பிபி (BP) போன்ற உற்பத்தியாளர்கள் பிரிட்டனைச் சுற்றியுள்ள முனையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் இருப்புகளை வைத்திருக்கிறார்கள்.

கையிருப்பு எண்ணெய் விடுவிக்கப்பட்டாலும் சுத்திகரிப்பு திறனில் பற்றாக்குறை இருப்பதாக எரிசக்தி ஆய்வாளர்கள் பிபிசியிடம் கூறினர்.

இருப்புகளை விடுவிப்பதில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், அதை மீண்டும் செய்ய முடியாது என்பதே.

ரைஸ்டாட் எனர்ஜியை சேர்ந்த எரிசக்தி ஆய்வாளர் ஜார்ஜ் லியோன் கூறும் போது, இந்த விடுவிப்பு உதவக் கூடும் என்றாலும் சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறை முழுமையாக ஈடுசெய்யாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அவசரகால இருப்புகள் விடுவிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விலைகள் எதிர்பார்க்கும் அளவு குறையவில்லை என்றும் கூறினார்.

கையிருப்பை விடுவிக்க இந்த நாடுகள் ஒப்புக்கொண்ட போதிலும் வியாழக்கிழமை எண்ணெய் விலை தொடர்ந்து உயரவே செய்தது.

ஆசிய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 9 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து பீப்பாய்க்கு 100 டாலரை எட்டியது.

ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான இரான் தாக்குதல் தீவிரமடையும் நிலையில், எண்ணெய் விலை பேரலுக்கு 200 டாலர் வரை உயரக்கூடும் என புதன்கிழமை இரான் எச்சரித்திருந்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது அவர்களின் நட்பு நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் குறிவைக்கப்படும் என இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருக்கிறது.

சர்வதேச எரிசக்தி முகமையின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறும் Singapore Institute of Technology-ஐ சேர்ந்த மார்ட்டின் மா, விநியோகத்துக்கு ஆபத்து இருக்கும் வரை எண்ணெய் விலைகள் அதிகமாகவே இருக்கும் என்றார்.

சமீபத்திய உயர்வு குறித்து கூறும் அவர், இது வர்த்தகர்கள் நீண்ட கால இடையூறு இருக்கும் என எதிர்பார்ப்பதை காட்டுகிறது என்கிறார்.

பிப்ரவரி 28ஆம் தேதி இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதில் இருந்தே சர்வதேச எண்ணெய் சந்தை நிலையற்றதாக உள்ளது. இந்த வார தொடக்கத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 120 டாலரை எட்டியது. இதனால் பல இடங்களில் எரிபொருள் விலை உயர்ந்தது.

குறிப்பாக, மத்திய கிழக்கிலிருந்து வரும் எரிசக்தியை பெரிதும் நம்பியுள்ள ஆசியாவின் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரம், உலகளாவிய எரிவாயு சந்தை மிக சவாலாக இருப்பதாக கூறும் சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக இயக்குனர் ஃபாடிஹ் பிரோல் (Fatih Birol), எண்ணெய் இருப்பை விடுவிக்கும் முடிவு எரிவாயு சந்தைக்கு உதவாது என்றார்.

திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள 20 சதவீத சரிவை சமாளிக்க குறைவான வழிகளே உள்ளதாகவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு