You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு இந்த 2 தொகுதிகள் காரணமா?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அப்பட்டியலில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.
அதேசமயம், "அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர் ஒரு தொண்டராக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவே விரும்புகிறார்" என மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வேட்பாளர் பட்டியல்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் (2021) அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 தொகுதிகளை வென்றது.
இம்முறை பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.
அதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூரிலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவிநாசி (தனி) தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விஜயதரணி விளவங்கோடு தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்தநிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை "2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
"ஒரு தொண்டனாக, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பிரசாரம் செய்வேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய நபரான அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை" என பியூஷ் கோயல் கூறினார்.
மேலும், "அண்ணாமலை ஒரு தொண்டராக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவே விரும்புகிறார்." என்றும் அவர் கூறினார்.
அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது ஏன்?
அண்ணாமலையின் பெயர் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது குறித்து பேசிய பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் (பெயர் குறிப்பிட அவர் விரும்பவில்லை), "அண்ணாமலை, கோவையின் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார், ஆனால் அத்தொகுதி அதிமுகவிற்கு என ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை வடக்கு தொகுதியைக் கேட்டார், ஆனால் அதை விட்டுக்கொடுக்க முடியாது என வானதி சீனிவாசன் உறுதியாக இருந்தார்" என்று கூறுகிறார்.
"பாஜக மேலிடம் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் நிற்கச் சொல்லியது, ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து சில தொகுதிகளை மாற்றிக்கொள்ள அதிமுகவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் அதில் வெற்றி கிடைக்காததால், போட்டியிட வேண்டாம் என முடிவுக்கு அண்ணாமலை வந்தார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பதில் பெற அண்ணாமலையை தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
'பாஜக செய்துள்ள மிகப்பெரிய தவறு'
"அண்ணாமலைக்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது பாஜக செய்துள்ள மிகப்பெரிய தவறு" என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
"தொடக்கத்திலிருந்தே அண்ணாமலை விஷயத்தில் பாஜக பல தவறுகளை செய்கிறது. அண்ணாமலைக்கு என பாஜக எளிதாக வெல்லக்கூடிய ஒரு தொகுதியை அடையாளம் கண்டு, ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாததன் காரணம், இந்த சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியில் அதிமுக தலைமையின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கட்டும் என்ற பாஜகவின் உத்திதான்" என்று கூறுகிறார் அவர்.
'எடப்பாடி பழனிசாமியை திருப்திப்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் பாஜகவில் எடுக்கப்படுகின்றன' என கூறும் ரவீந்திரன் துரைசாமி, "2029 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரம் அனைத்தும் பாஜக கையில் இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில் இதை செய்கிறார்கள்" என்று கூறுகிறார்.
ஆனால், "பாஜக எனும் கட்சி பொதுவாகவே தனிநபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒன்றல்ல" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"அவர்கள் தங்களது சித்தாந்தத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதுமட்டுமல்லாது, அண்ணாமலை ஒன்றும் தமிழக பாஜகவில் தவிர்க்க முடியாதவர் அல்ல என்பதால் கூட்டணியின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த முடிவை எடுத்திருப்பார்கள்" என்கிறார் அவர்.
"அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி கோபத்தில் இருப்பது தெரிந்த ஒன்றுதான். எப்படி, காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, திமுகவின் தலைமைக்கு நெருக்கமானவர் என்ற பிம்பம் உள்ளதோ, அதேபோல பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு நெருக்கமானவர் என்ற பிம்பம் பாஜகவில் உள்ளது. எனவே இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்" என்றும் அவர் கூறுகிறார்.
அண்ணாமலை இதற்கு முன்பாக 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால், இரண்டு தேர்தல்களிலும் அவர் வெற்றி பெறவில்லை.
இதைக் குறிப்பிடும் ப்ரியன், "சிங்காநல்லூர் அல்லது கோவை வடக்கில் தான் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அண்ணாமலைக்கு இருந்திருக்கலாம், ஆனால் அந்த தொகுதிகள் அவருக்கு கிடைக்கவில்லை. அப்படியிருக்க, மொடக்குறிச்சியில் நின்று தோற்றுவிட்டால் தனக்கு இருக்கும் 'பிம்பம்' சரியும் என்ற பயம் அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் இருந்திருக்கும். இதற்கு முந்தைய தேர்தல் முடிவுகளையும் கருத்தில் கொண்டால், இந்த முடிவு இரு தரப்புக்கும் சாதகமானதே" என்று கூறுகிறார்.
"அண்ணாமலை பாஜகவின் பிரசாரங்களுக்கு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்பதே பாஜக நிர்வாகிகள் மற்றும் அமித் ஷாவின் விருப்பம்" என்கிறார் ப்ரியன்.
பாஜக கூறுவது என்ன?
"அண்ணாமலை என்றுமே பாஜகவுக்கு முக்கியமான ஒருவர்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் எங்கள் கட்சியின் 'சூப்பர்ஸ்டார் பிரசாரகர்', அவருக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது." என்று கூறுகிறார் தமிழக பாஜகவின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
"வேட்பாளர் பட்டியல் என்பது பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு கட்சியின் தலைமை எடுக்கும் முடிவு. இதில் வேறு எந்தச் சிக்கலும் இல்லை" என்று கூறினார்.
அண்ணாமலைக்கு அவர் கேட்ட தொகுதி கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் குறித்து கேட்டபோது, "அது தவறான ஒன்று. அப்படி எதுவும் இல்லை. கூட்டணி என வரும்போது நாம் கேட்கும் அனைத்தும் கிடைத்துவிடாது. அனைவரது நலனைக் கருத்தில் கொண்டு, ஜனநாயக முறைப்படியே கட்சி மற்றும் கூட்டணிக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திருப்தியே." என்று கூறினார்.
அண்ணாமலை- அதிமுக தலைமை இடையிலான சர்ச்சைகள்
கர்நாடகா கேடரை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கே. அண்ணாமலை, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பா.ஜ.கவில் இணைந்தார். அடுத்த ஓராண்டிற்கு உள்ளாகவே, அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது அக்கட்சிக்குள் மட்டுமின்றி, கட்சிக்கு வெளியிலும் பலரது புருவங்களை உயர்த்தியது. இருந்தபோதும், அவரது தலைமையின் கீழ் கட்சி, மாநில அரசியலில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.
தி.மு.க அரசு ஊழல் செய்வதாகக் கூறி சில காணொளிகளை அவர் வெளியிட்டார். ஒருகட்டத்தில், 'அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்களைப் பற்றியும் பேசுவேன்' எனக் கூறினார்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது, அதிமுக வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் முறிவு ஏற்பட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-விடம் இருந்து பிரிந்து தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.கவுக்கு வெற்றியேதும் கிடைக்கவில்லை.
அதேபோல அதிமுக கூட்டணியும் போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.
இந்தநிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி மீண்டும் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி உருவானது. அண்ணாமலைக்கு பதில் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு