கத்தாரின் எரிவாயு வயல்களைத் தாக்கிய இரான் - டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலைக் கொண்டுள்ள இரானின் சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரான் கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறைப் பகுதி மீது தாக்குதல் நடத்தியதில், கத்தாருக்குக் கணிசமான சேதம் ஏற்பட்டது.

புதன்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தனது முக்கிய எரிவாயு ஆலையில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தி, தீப்பிடிக்கச் செய்ததாக கத்தாரின் அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு இரானிய தூதர்களை கத்தார் வெளியேற்றியது.

சவுத் பார்ஸ் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பிற எரிசக்தி நிலையங்கள் மீது மேலும் மோசமான தாக்குதல்களை நடத்தப்போவதாக இரான் அச்சுறுத்தியுள்ளது. எரிசக்தித் துறை மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் கூறியுள்ளது.

இரானிய ஊடகங்களுக்கு புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், "இஸ்லாமிய குடியரசின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கியதன் மூலம் நீங்கள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள் என்று மீண்டும் ஒருமுறை எச்சரிக்கிறோம். இவ்வாறு மீண்டும் நிகழ்ந்தால், உங்களுடைய மற்றும் உங்கள் கூட்டாளிகளின் எரிசக்தி உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்படும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படாது" என்று கூறப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சவுத் பார்ஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், அமெரிக்கா இது குறித்து அறிந்திருந்தாலும், அதில் தங்களுக்குப் பங்கில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சௌதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி கட்டமைப்பை இலக்கு வைத்த ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்கள் ரியாத்திற்கு தெற்கே உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் விழுந்தன.

ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்படுவதற்கு முன்பே உயர்ந்திருந்த எண்ணெய் விலைகள், வியாழக்கிழமையன்று மீண்டும் அதிகரித்தன.

அமெரிக்க கச்சா எண்ணெயின் முக்கிய குறியீடு மூன்று சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

எரிசக்தி உள்கட்டமைப்புக்கு கணிசமான சேதம்

கத்தாரின் அரசுக்குச் சொந்தமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீயைக் கட்டுப்படுத்த அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன. இந்தத் தாக்குதல் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, ராஸ் லஃபான் மீதான தாக்குதலுக்குப் பின் ஏற்பட்ட தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'ராஸ் லஃபான் தொழில் நகரின் மீதான இந்த மோசமான ஏவுகணைத் தாக்குதல், தேசிய பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும் விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல்' என்று கத்தார் அரசாங்கம் கூறியுள்ளது.

கத்தார் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "இரானிய தரப்பு தொடர்ந்து பதற்றத்தை தீவிரப்படுத்தும் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது, இது பிராந்தியத்தை ஒரு ஆபத்தான நிலைக்குத் தள்ளுவதோடு, மோதலில் தொடர்பில்லாத நாடுகளையும் இந்த நெருக்கடிக்குள் இழுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் , "பதிலடி கொடுப்பதற்கான உரிமையை கத்தார் கொண்டுள்ளதுடன், தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்காது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்டை நாடுகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தியதன் மூலம், இரான் 'அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது' என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதல்

புதன்கிழமை அதிகாலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், இரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலில் அமைந்துள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது.

பார்ஸ் வயல் என்பது உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலாகும், இதில் இரானும் கத்தாரும் தங்களது ஆலைகளை இயக்கி வருகின்றன.

மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்டங்களில் உள்ள சில எரிவாயு இருப்புக்கள் மற்றும் கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஸாலுயே ஆளுநர் இஸ்கந்தர் பாசலர், "சவுத் பார்ஸின் பல பகுதிகள் எதிரிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார் என பிபிசி பெர்ஷியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இரானின் எரிசக்தித் துறையை இலக்கு வைத்ததை இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கண்டித்துள்ளார்.

மேலும், 'இந்த ஆக்கிரமிப்பு மனப்பான்மையால் அமெரிக்காவும் இஸ்ரேலும் எதையும் சாதிக்கப் போவதில்லை' என்றும் அவர் கூறினார்.

சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து "கட்டுப்பாட்டை மீறிய விளைவுகள்" ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சூழல் "கட்டுப்படுத்த முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும், இந்த மோதல் உலகம் முழுவதையும் ஆட்கொள்ளும் என்ற அச்சம் நிலவுகிறது" என்றும் பெசெஷ்கியன் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

பிரான்ஸ் விடுத்த வேண்டுகோள்

இரான் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தாம் டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் அமீருடன் பேசியதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்தார்.

" எரிசக்தி மற்றும் நீர் விநியோக நிலையங்கள் போன்ற சிவிலியன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது நமது பொதுவான நலன்களுக்கு உகந்தது.

பொதுமக்கள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளின் பாதுகாப்பும், அதே போல் எரிசக்தி விநியோகமும் ராணுவ மோதலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

வளைகுடா நாடுகளின் உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்

ஃபிராங்க் கார்ட்னர், பாதுகாப்புச் செய்தியாளர், தோஹா, கத்தார்

ராஸ் லஃபான் கத்தாரின் எரிவாயு உள்கட்டமைப்பின் மணிமகுடமாகத் திகழ்கிறது, எனவே இயல்பாகவே அந்நாட்டு அரசாங்கம் மிகுந்த கோபத்தில் உள்ளது.

சுமார் 18 நாட்களுக்கு முன்பு போர் தொடங்கும் வரை, கத்தாருக்கும் அதன் வளைகுடா அண்டை நாடான இஸ்லாமிய குடியரசுக்கும் (இரான்) இடையிலான உறவுகள் பொதுவாக நல்லுறவாகவே இருந்தன.

இரு நாடுகளும் சவுத் பார்ஸ் எரிவாயு வயலைப் பகிர்ந்துகொள்கின்றன, இது இந்த சிறிய வளைகுடா நாட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார செழிப்பைக் கொண்டு வந்துள்ளது.

கத்தார் அமைச்சர்கள் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளனர் மற்றும் போரை எதிர்த்த நாடுகளில் கத்தாரும் ஒன்றாக இருந்துள்ளது.

இரான் இப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. அரபு வளைகுடா நாடுகளுக்கும் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

வளர்ந்து வரும் மோதல்

இரான் போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகின்றன, இதுவரை இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை அன்று தெரிவித்தார். முன்னதாக, பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டிருந்தார்.

இரானிய மூத்த அதிகாரிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தாங்கள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்மாயில் கதிப்பின் கொலையை ஒரு "கோழைத்தனமான கொலை" என்று இரானிய அதிபர் பெசெஷ்கியன் வர்ணித்துள்ளார், அதே நேரத்தில் நாட்டின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி பழிவாங்கப்போவதாக சபதம் செய்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, மொஜ்தபா காமனெயி ஒரு எழுத்துப்பூர்வ செய்தியில், "சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு" என்று கூறியுள்ளார்.

போரின் ஆரம்பகட்டத் தாக்குதல்களில் தனது தந்தை அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா காமனெயி, இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.

கோம் நகரில் உள்ள ஒரு மதத் தலத்தில் லரிஜானி அடக்கம் செய்யப்படுவார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"எரிவாயு வயல் முழுவதையும் தகர்த்துவிடுவோம்" - இரானை எச்சரித்த அமெரிக்கா

புதன்கிழமை இரவு இரானின் சவுத் பராஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக இரான் கத்தாரின் ராஸ் லஃபான் எனும் தொழில் துறை பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அப்பகுதியில் தான் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

டிரம்ப் தன்னுடைய பதிவில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து "அமெரிக்காவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது" என்றும் இரான் மீண்டும் கத்தாரை தாக்கினால் நிலைமை தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.

"மத்திய கிழக்கில் நிகழ்ந்தவற்றின் மீதான கோபத்தினால்," இஸ்ரேல் "வன்முறையுடன் தாக்கியது" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இந்த குறிப்பிட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை; மேலும், கத்தார் நாடு இத்தாக்குதலில் எந்த வகையிலும், எவ்வித வடிவிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை — இத்தாக்குதல் நிகழப்போகிறது என்பது பற்றிய எவ்விதத் தகவலும் அந்நாட்டுக்குத் தெரிந்திருக்கவும் இல்லை."

ஆனால் கத்தாரின் ராஸ் லஃபான் மீதான அதன் பதிலடித் தாக்குதல்கள் "நியாயமற்ற முறையிலும் அநீதியாகவும்" மேற்கொள்ளப்பட்டன என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இரான் விவேகமற்ற முறையில் வேறொரு நிரபராதி நாட்டின் மீது (கத்தார்) தாக்குதல் நடத்தத் தீர்மானிக்காத வரையில்," இஸ்ரேல் இரானின் 'சவுத் பார்ஸ்' (South Pars) எரிவாயு வயல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரான் மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்தினால், "இரான் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராத அளவிலான வலிமையுடனும் ஆற்றலுடனும், சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் அமெரிக்கா மிகக் கடுமையாகத் தகர்த்துவிடும்" என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

இரானுக்கான "நீண்டகால விளைவுகள்" காரணமாக, "இந்த அளவிலான வன்முறை மற்றும் அழிவை" அங்கீகரிக்க தான் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ள அவர், "ஆனால், கத்தாரின் எல்என்ஜி எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் தாக்கப்பட்டால், அவ்வாறு செய்ய நான் தயங்கமாட்டேன்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு