You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி': த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்து, தமிழக அரசியலில் பேசுபொருளானது.
இதற்கேற்ப சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், ''நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.'' என்று பேசியுள்ளார்.
ஆனால் தவெக பெரிய கட்சி என்று காண்பித்துக் கொள்வதற்காக இதுபோன்ற ஒரு தகவலைப் பரப்புவதாகச் சொல்கிறார், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம். திமுக தூண்டுதலின் பேரிலேயே ஆதவ் அர்ஜுனா இப்படியொரு தகவலைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டுகிறார், அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சும் நிர்மல்குமாரின் பதிவும்
"நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்காததற்கு, திமுகவின் மிரட்டல்தான் காரணம்" என கடந்த வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பேசியிருந்தார். இந்த கருத்துக்கு திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ரஜினிகாந்தும் எதிர்வினையாற்றியிருந்தார்.
இந்நிலையில் சென்னை கொளத்தூாரில் மார்ச் 17 அன்று நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ரஜினி காந்த் பற்றிய கருத்துக்கு ஆதவ் மன்னிப்பு கோரினார்.
அதே கூட்டத்தில் ''நமது அண்ணனுக்கு (தவெக தலைவர் விஜய்) பல்வேறு ஆஃபர் கொடுத்தனர். 50–50, நீங்கள் 90 தொகுதிகள்– நாங்கள் 90 தொகுதிகள், நீங்கள் இரண்டரை வருஷம் முதலமைச்சர், நான் இரண்டரை வருஷம் முதலமைச்சர் என்று எல்லா ஆஃபரும் கொடுத்தனர்." என்று கூறியதோடு, "ஆனால், எதுவும் தேவையில்லை" என விஜய் மறுத்துவிட்டார் எனவும் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்தே போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 'முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிபவர் விஜய் அல்ல'. என்று கூறிய ஆதவ், "ஜனநாயகன் படம் இன்று வரை நிறுத்தப்பட்டதற்குக் காரணம் அரசியல்தான்." என்று குற்றம் சாட்டினார்.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு முந்தைய நாளில்தான், தவெக இணை பொதுச்செயலாளரும், தலைமைக்கழக முதன்மை செய்தித் தொடர்பாளருமான சிடிஆர் நிர்மல் குமார், தனது எக்ஸ் பக்கத்தில் ''வதந்திகளை நம்ப வேண்டாம்!'' என்று தலைப்பிட்டு ஒரு தகவலைப் பதிவிட்டிருந்தார்.
அதில், ''சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது சசிகலா, மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புப்படுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும், எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.'' என்று கூறியிருந்தார்.
இதற்கு முன்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புப்படுத்தி வெளியானதும் பொய்ச் செய்தி என்றும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன என்றும், பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும் அவர் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.
முதல் நாளில் எந்தக் கட்சியுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் தகவல் பதிவிட்ட ஒரு நாளுக்குள், அதே கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர், தங்கள் கட்சித் தலைவரிடம் '90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என்று பேரங்கள்' நடந்ததாகத் தெரிவித்தது, தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளானது.
இதில் யாருடைய கருத்து உண்மை என்ற விவாதம் ஒருபுறமிருக்க, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படியொரு பேச்சுவார்த்தையை பாஜக முன்வைத்ததா என்ற கேள்விகளையும் பலரும் எழுப்புகின்றனர்.
விஜய் பேசியது என்ன?
இந்நிலையில், சென்னையில் மார்ச் 18 மாலையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதில் பேசிய விஜய், ''நான் அரசியலுக்கு வந்ததிலிருந்தே, இவர் அந்த டீம், இந்த டீம் என்று சில வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் நான் மக்களுடைய டீம் என்று தெரிந்துவிட்டது. அதனால் வேறு அவதூறு பரப்ப நினைத்து, இந்த கூட்டணியுடன் அந்தக் கூட்டணியுடன் சேரப்போகிறார் என்று பரப்புகின்றனர். அதனால் குழப்பமாகி இருப்பீர்கள்.
மறுபடியும் வெளிப்படையாக, தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். நாங்கள் எப்போதும் மதச்சார்பற்ற, சமூகநீதி என்ற நிலைப்பாட்டில் சமரசம் வைத்துக்கொள்ளவே மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். அரசியலுக்காகவும் எதற்காகவும் நாம் சமரசம் வைத்துக்கொள்ளப் போவதில்லை. யார் அவதூறு பரப்பினாலும் அதை நம்பாதீர்கள்.'' என்று கூறியுள்ளார்.
இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை குறிப்பாக பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்ற தகவலுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும், ஆதவ் அர்ஜுனா கூறியபடி, தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்ததா என்பது குறித்து விஜய் எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை.
அதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையும், பேரங்களும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. கூட்டணி பேரம் குறித்து ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்து "உண்மையாக இருக்கக் கூடும்" என தான் நம்புவதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
பிபிசி தமிழிடம் இதுபற்றி பேசிய ப்ரியன் அதிமுக தலைமையிலான கூட்டணியில் த.வெ.க. வரும் வாய்ப்புகள் குறித்து தமது கருத்தை கூறினார். இதன்படி, "அதிமுகவின் சீட்டைக் குறைத்து, 117 தொகுதிகளில் மட்டும் அதைப் போட்டியிட வைத்தால் எல்லாவற்றிலும் அதனால் ஜெயிக்க முடியாது. பெரும்பான்மை இல்லாத சூழலில், கூட்டணி ஆட்சிக்கான சூழல் உருவாகக் கூடும். அப்படி வந்தால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்திய அரசியலை இங்கேயும் நடத்தலாம் என்பது பாஜகவின் திட்டமாக இருந்திருக்கலாம்" என்றார்.
''கூட்டணிக்குள் தவெக வந்தால் திமுகவைத் தோற்கடிக்க முடியுமென்று பாஜக நம்புகிறது. '' என கூறும் ப்ரியன், ஆதவ் கூறுவது போல, இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை பிரித்தால், யார் முதல் இரண்டரை ஆண்டுகளை எடுத்துக் கொள்வது என்பதிலும் சிக்கல் உருவாகக் கூடும் என்றார்.
எனினும் ஆதவ் அர்ஜூனா தமது பேச்சில் "கூட்டணிக்கான அழைப்பு" என்று மட்டுமே கூறினாரே தவிர, எந்த அரசியல் கட்சியையும் அவர் குறிப்பிடவில்லை.
தனித்து நிற்பதையே விஜய் விரும்புவதற்கு காரணம் இதுதானா?
விஜயகாந்த்தைப் போல ஒரு சட்டமன்றத் தேர்தல், ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று தனக்கான வாக்குவங்கியை அறிய வேண்டுமென்று விஜய் விரும்புவதாகச் சொல்லும் ப்ரியன், இப்போது கூட்டணியில் பங்கேற்று தவெக 10 இடங்களில் வென்றாலும் தங்கள் செல்வாக்கால்தான் ஜெயித்ததாக அதிமுக, பாஜக கூறவாய்ப்புள்ளதால் அதை விஜய் விரும்பமாட்டார் என்கிறார்.
தவெகவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது திமுகவால் கிளப்பிவிடப்பட்ட கற்பனைக்கதை என்று கூறும் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், ''எதிர்வரும் காலங்களில் என்ன வேண்டுமானாலும் அரசியலில் நடக்கலாம். ஆனால் இந்தத் தேர்தலில் தனித்து நிற்பதில் விஜய் திட்டவட்டமாகவுள்ளார் என்பதே உண்மை." என்கிறார்.
"90 சீட்டு, இரண்டரை வருஷம் முதல்வர் பதவி என்று பாஜகவே அழைத்துப் பேசியதாகக் கூறுவதன் மூலமாக தவெக பெரிய கட்சி என்று காண்பிக்கவும் முயற்சி செய்வதாகத் தெரிகிறது.'' என்கிறார் முருகானந்தம்.
ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென்ற திட்டத்தில்தான், ஆதவ் அர்ஜுனாவை வைத்து இப்படியொரு தகவலை திமுக பரப்புவதாகக் குற்றம்சாட்டுகிறார் அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம்.
பிபிசி தமிழிடம் பேசிய கல்யாணசுந்தரம், ''தங்களுக்கு ஆஃபர் கொடுத்தார்கள் என்று சொல்லும் ஆதவ் அர்ஜுனா, எந்தக் கட்சியிலிருந்து எந்த நபர் எங்கே வைத்து தங்களிடம் பேசினார் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். இவர் பேரம் பேசினார்கள் என்று கூறுவதற்கு முதல்நாளில்தான் எந்தக் கட்சியுடனும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று நிர்மல்குமார் கூறியுள்ளார். அதனால்தான் திமுகவின் திட்டப்படி ஆதவ் அர்ஜுனா இந்த கருத்தை வெளியிட்டிருப்பார் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. விஜயிடம் இந்த பேரத்தை ஒரு வேளை டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை நடத்தியிருக்கலாம்.'' என்றார்.
கிறிஸ்தவர்களின் வாக்குகள் திமுகவுக்கா, தவெகவுக்கா?
ஆனால் அரசியல் தலைவர்கள் யாரையும் வைத்து தவெகவுடன் பாஜக பேசியிருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.
''எடப்பாடி பழனிசாமியை விட தான் செல்வாக்கு மிக்கவர் என்று விஜய் நம்புகிறார். தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்க நினைக்கும் அவர், எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு தான் ஏன் உழைக்க வேண்டுமென்றும் யோசிக்கலாம். அதனால் இந்தத் தேர்தலில் மட்டுமின்றி, 2029ல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக தனித்து நிற்பதற்கே அதிக வாய்ப்புள்ளது.'' என்றார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.
தவெக இந்தத் தேர்தலில் தனித்து நிற்பதை திமுக விரும்பவில்லை என்று கூறும் ப்ரியன், அப்படி நிற்கும் பட்சத்தில் "திமுக கூட்டணிக்கு வரவேண்டிய சிறுபான்மையினர் வாக்குகளை விஜய் பிரிக்கலாம்" என்பதுதான் இதற்கான காரணம் என்கிறார்.
சிறுபான்மையினர் வாக்குகள் எப்போதுமே பாஜகவுக்கு எதிராகத்தான் போகும் என்ற கருத்தை மறுக்கும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், ''கோவா பனாஜி மாநகராட்சியில் இப்போது நடந்த தேர்தலில் 30ல் 27 இடங்களில் பாஜக வென்றுள்ளது. அவர்களில் 90 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள். வடகிழக்கு மாகாணங்களில் பாஜக தலைவர்களாக கிறிஸ்தவர்களே உள்ளனர். இந்த கருத்தியலை பாஜக உடைத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் இங்கேயும் அது உடையும்.'' என்கிறார்.
தவெகவுடன் "பாஜக பேரம் பேசியதாகப்" பரப்பப்பட்ட தகவல், இங்குள்ள சிறுபான்மையின வாக்காளரின் மனநிலையை உடைக்கும் திமுகவின் திட்டம் என்று கூறுகிறார் ஏ.பி.முருகானந்தம்.
இதை முற்றிலும் மறுத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ''இது அபத்தமான குற்றச்சாட்டு. விஜய்க்கு கிறிஸ்தவர்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்று நம்புவதே தவறானது. இப்படி ஒரு விஷயத்தை திமுக கிளப்பி, பாஜவுடன் தவெக கூட்டணி வைக்காவிட்டால், பாஜக பேசியே விஜய் கூட்டணி வைக்கவில்லை என்று கிறிஸ்தவ மக்கள் நம்பினால் அது தவெகவுக்குதான் பலமாகும். அதை எப்படி திமுக செய்யும்.'' என்று கேள்வி எழுப்பினார்.
''கடந்த 2016 தேர்தலில் மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணி நின்றதால்தான் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சி வாய்ப்பை இழந்தது. மூன்றாவது அணி என்பது ஆளும்கட்சிக்கே சாதகமாகும் என்ற நிலையில், பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்கிறது என்ற தகவலை திமுக பரப்ப வேண்டிய அவசியம் இல்லை. இத்தகைய குற்றச்சாட்டை வைப்பதன் மூலமாக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பதை பாஜகவே ஒப்புக்கொள்கிறது.'' என்றார் எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு